சமூகம்பெண்ணியம்

மகளிர்தின வாசகர் கடிதம் – பாரதி

549 (1)

அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

எதைச் சொல்வது? எதை விடுவது?

பெண்களின் வாழ்க்கை வீடிலிருந்து தொடங்குகிறது. குழந்தை ஆணாக இருந்தால், தட்டில் கை கழுவலாம். ஆனால் பெண்ணாக இருந்தால், “நீ கழுவக்கூடாது” என்கிறார்கள். ஏதாவது கேள்வி கேட்டாலோ, வீம்பு பிடித்தாலோ, அல்லது சற்றுக் கோபமாக இருந்தாலோ, “இவ்வளவு ஆகுமா பொண்ணுக்கு? இங்கேயே இப்படியிருந்தால், போய்ட்டு புதன்கிழமையே வந்துடுவேன்!” என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

படிப்பில் மேன்மை அடைந்து, வேலைக்குச் சென்று உயர்ந்தாலும், சமையலறையில் நிற்கவில்லை என்றால், பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு இரண்டிலும் கடும் விமர்சனமே. சமையல் செய்தாலும் சரி, ஆகாய விமானம் ஓட்டினாலும் சரி — அவளுக்குத் தேவை என்றால், அவள் அதைச் சாதிப்பாள்.

பெண்களுக்குள் ஆதரவு இல்லை…

பெண்களை பெண்களே புரிந்துகொள்ளாமல் ஒடுக்குவது கவலைதருகிறது. பொருளாதார சுதந்திரத்திற்காக வேலைக்குச் சென்றாலும், “சமைக்க மாட்டியா நீ? வீட்டுக்காரர் ஏன் உன்னை இப்படித் தாங்குறார்?” என்று கேள்விக்குட்படுத்துவார்கள். படித்ததைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் டியூஷன் கட்டணம் குறையும், வேலைக்குச் சென்றால் வருமானம் கூடும். இருந்தாலும், “அவள் வீட்டு வேலை மட்டும் பார்க்காமல் வேறு வேலை செய்கிறாளே” என்று பாராட்ட மாட்டார்கள். குறைந்தபட்சம் பழித்துப் பேசாமல் இருந்தால் போதும்.

இல்லறமும் சமூகப் பார்வையும்…

ஆண்கள் வீட்டிலேயே இருந்தால் அதைக் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் பெண் தன் அம்மா, அப்பாவுடன் இருக்க வேண்டுமானால், அது பாவமாகவே பார்க்கப்படும். இது தவறான பார்வை என்பதை உணராமல், அவர்களது தீர்ப்புகள் தொடர்கின்றன. இதை மீறி தன்னம்பிக்கையுடன் வாழ, பிறரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தன் பாதையைத் தானே உருவாக்க வேண்டும்.

ஆண்களின் மீதான பொறுப்பாக்கம்…

சில ஆண்கள் தவறான செயல்களில் ஈடுபட்டால், “பொண்டாட்டி சரி இல்லை, அம்மா நல்லா வளர்க்கவில்லை” என்று பெண்களை மட்டுமே குற்றம் சொல்வார்கள். ஆண்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவை பெண்களின் பொறுப்பாகவே கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பும் பாலினப் பாகுபாடும்…

அலுவலகத்தில், ஆண்களுடன் சமமான வேலையைச் செய்தாலும், பெண்களுக்குக் குறைந்த சம்பளமே கொடுக்கப்படும். சென்னையில் இந்தப் பாகுபாட்டை எதிர்த்து நின்று, சமமாகச் சம்பளம் பெற்றேன். வெளிநாட்டில் இது பிரச்சினை இல்லை. எனது குழுவில் 15 பேர்; நான் மட்டும் பெண். பயந்து நடக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் என் பணியைப் பாராட்டுவதைவிட, “இவள் இரண்டு பிள்ளைகளின் தாயா?” அல்லது “யாரோ ஒருவரின் மனைவியா?” என்பதற்குப் பதிலாக, என் உடையைப் பாராட்டினார்கள். “வெளியில் போலாமா?” எனக் கேட்பதே அடுத்த கட்டமாகிவிடும்.

சமூகமும் பாதுகாப்பும்…

மற்ற மாநிலத்தவரோ என்னைச் சகோதரி என நினைத்தும், பக்கத்து வீட்டுப் பெண்ணாக நினைத்தும் பாதுகாத்தார்கள். ஆனால் பாலியல் சீண்டல்களைச் சிறு வயதிலிருந்தே கடந்து வந்ததாலேயே, மனச்சோர்வின்றி நம்பிக்கையுடன் வாழ முயன்றேன். ஆனால் சில மனிதர்களின் மிருக இயல்பை மாற்ற முடியவில்லை.

அண்டை வீடு, சாலை, பேருந்து, அலுவலகம், சமூக ஊடகம் — இவை அனைத்திலும் பழக்கமானவர்களும், தெரியாதவர்களும் தொந்தரவு தருவார்கள். இதற்கான ஒரே தீர்வு — நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஆண் துணை ஒருவர் இருந்தால், மேலே சொன்ன அனைத்து சவால்களும் எளிதாகக் கடக்க முடியும்.

இந்தப் பயணத்தில் என்னுடன் என் துணை இருப்பதால்தான், நானாய் நிற்கிறேன்… நிற்பேன்.

– பாரதி

Leave a Reply