தமிழில்: சேதுசிவன்
வெறுமனே ஒரு கட்டிடமாக இருந்த இதனை, எங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் சொந்த வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையும் கழிந்து விட்டது – முகமது பிலால்

வடமேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் என்ற நகரம், மரத்தினால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். அங்குள்ள கட்டகேரி பகுதியின் மிகச்சிறிய தெருக்களில் மரப்பொருட்கள் செய்யும் மரப்பட்டறைகள் வரிசையாக அமைந்திருக்கும். மரம் இழைக்கும் சத்தமும், உளியின் ஓசையும், மரங்களை அறுக்கும் ஒலியும் காற்றில் எங்கும் நிறைந்திருக்கும்.
ஆனால், 2022 ஜூன் 11 அன்று அச்சுறுத்தும் வகையிலான மிகவும் மாறுபட்ட ஒலி, அப்பகுதி மக்களின் இதயங்களில் பயத்தை உருவாக்கியது.
முகமது நபிக்கு எதிராக மிக மோசமான வெறுப்புக் கருத்துகளை பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பேசிய காரணத்தால், அம்மாதம் முழுவதும் இடைவிடாத போராட்டங்களால் சஹாரன்பூர் நகரம் அமைதி இழந்து இருந்தது. நுபுர் சர்மாவின் வெறுப்புப் பேச்சைக் கண்டித்தும், அவரைக் கைதுசெய்ய வலியுறுத்தியும் ஜூன் 10 அன்று நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உத்தரப்பிரதேச நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டங்களில் மாநில அரசு வன்முறையை ஏவியது. இந்த நிகழ்வுகள் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து சஹாரன்பூரில் வசிக்கும் மக்களிடம் உரையாடியபோது, அன்று நடந்த நிகழ்வுகளை அவர்களால் சரியாக நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. அவர்களின் நினைவுகளில் அது தொடர்பாக பல்வேறு விதமான கதைகள் ஓடிக்கொண்டிருந்தன.
இருப்பினும், அந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வெளிப்படையான பதற்றத்தை மட்டும் அவர்கள் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார்கள்.
“அங்கு பயம் கவ்விய சூழல் நிலவியது” என அந்நகரில் வசிக்கும் ஒருவர் நினைவு கூர்ந்தார்.
‘நகரத்தில் வகுப்புவாதக் கலவரங்கள் வெடிப்பதாக’ ஆங்காங்கே அரசல்புரசலாகப் பேசப்பட்டன. ஆனால் அவையெல்லாம் ‘பயத்தைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட வதந்திகள்’ என பின்னாளில்தான் தெரியவந்தது. அந்த வதந்திகளால் எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையிலும், அவர்கள் வாழ்ந்த வீடுகளிலும் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
“புல்டோசர் நீதி” என்கிற பெயரில் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதச் செயலால் பல வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. வீடுகள் மட்டுமல்லாமல், அந்த வீடுகளை உருவாக்கியபோது அவர்கள் பெற்றிருந்த நினைவுகளும், அதன் மீது அவர்கள் கட்டி எழுப்பவிருந்த எதிர்காலமும் சேர்த்தே இடித்துத் தள்ளப்பட்டது. இது முகமது பிலால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்ட கதை. அக்குடும்பத்தில் பிலால் மட்டுமே தனது பெயரை வெளியிட ஒப்புக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிலால் ஒரு இளைஞராக வாழ்க்கையில் முன்னேறப் போராடிக் கொண்டிருந்தபோது, கட்டகேரியில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அது அவரது வாழ்க்கையின் ஒரு எளிய துவக்கம்தான். அப்போது பிலாலின் மூத்த மகனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். வளர்ந்து வரும் தங்களின் குடும்பத்திற்குப் பாதுகாப்பையும், நிலையான வாழ்க்கையையும் உறுதி செய்யும் வகையில் ஒரு வீட்டை உருவாக்கிவிட வேண்டும் என்று பிலாலும் அவரது மனைவியும் கனவு கண்டனர்.
பிலால் தனது சகோதரருடன் சேர்ந்து ஒரு சிறிய டீக்கடையை நடத்தி வந்தார். அந்தக் கடையில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை மட்டும் ஈடுசெய்யும் அளவுக்கே வருமானம் கிடைத்தது. அதிலிருந்து அவர்களால் சேமிக்க முடிந்த ஒவ்வொரு ரூபாயையும் வீட்டைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்தினர்.
தங்கள் வீட்டை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியெழுப்பினார்கள். முதல் மாடி வரை மட்டுமே இருந்த வீட்டை, இரண்டு மாடிகளைக் கொண்ட வீடாகக் கட்டி எழுப்பினார்கள். மகன்களுக்காகவும், அவர்களது எதிர்காலக் குடும்பத்திற்காகவும் தேவையான அறைகளுடன் வீட்டைக் கட்டினர். பிலாலின் இரண்டு மகன்களும் சிறிய அளவிலான உள்ளாடை விற்பனைத் தொழிலைத் தொடங்கினர். அவர்கள் கட்டகேரியில் உள்ள தங்கள் வீட்டில் இருந்தே இந்தத் தொழிலை நடத்தினார்கள். இது அவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை ஈட்ட உதவியது.
“வெறுமனே கட்டிடமாக இருந்த ஒரு வீட்டை, பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும் வகையில் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வசதியான வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையுமே சென்றுவிட்டது” என ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிதானமாக சிந்தித்து கவனமாகப் பேசினார் பிலால்.
“எப்படியோ, எங்களால் முடிந்த வேலைகளைச் செய்து, உழைப்பால் ஒரு வீட்டை எங்களால் வாங்க முடிந்தது. இங்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன; வீட்டின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு சுவரும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகத்தான் இருந்து வந்திருக்கின்றன.”
என்றார் பிலால்.
பிலாலின் வீட்டை நோக்கி நடக்கையில், தெரு முழுவதும் மரத்திலிருந்து வரும் வாசனை நிரம்பி இருந்தது. மரத்திலிருந்து வந்த மென்மையான மரத்தூள் எங்கும் படிந்திருந்தது. பிலாலுக்கும் அவரது மனைவிக்கும், பல ஆண்டுகால கடின உழைப்பையும் தியாகத்தையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சின்னமாக அவர்களது வீடு இருந்தது. அவர்கள் அவ்வீட்டை முப்பது ஆண்டுகளாக உழைத்து, சிறுகச் சிறுக காசு சேர்த்துக் கட்டியெழுப்பினார்கள். ‘இது எங்களுடையது’ என உரிமையுடன் குறிப்பிடக்கூடியதாக அவ்வீட்டை மாற்றுவதற்காக அவர்கள் மிகுந்த முயற்சி செய்த இடம் அதுதான். அங்குதான் அவர்களின் ஆறு மகன்களும் வளர்ந்தார்கள். அவர்களுடைய பேரக்குழந்தைகளையும் அந்த வீட்டில்தான் வளர்த்தார்கள்.
சஹாரன்பூர் எப்போதும் மாறுபட்ட நகரமாகவே இருந்து வருகிறது. அங்கு பல்வேறு கலாச்சாரங்களையும் மதங்களையும் பின்பற்றும் மக்கள் ஓரிடத்தில் அமைதியுடன் வாழ்கின்றனர். அதேவேளையில் பதற்றமும் அமைதியின்மையும் எப்போது வேண்டுமானாலும் வருவதற்கான வாய்ப்பும் கொண்ட நகரமாகவும் அது இருக்கிறது. எப்போதும் எந்தப் பிரச்சனைக்கும் போகாமல் அனைத்திலிருந்தும் விலகியே இருக்க முயற்சி செய்யும் பிலால் போன்றவர்களின் குடும்பத்திற்குப் பயத்தையும், வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும் இந்த அமைதியற்ற நாட்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.
“நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பிலால் கூறினார். கடந்தகால அனுபவத்தின் வெளிப்பாடே எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாக மாறியிருக்கலாம் என்பதை அவருடைய குரல் நமக்குத் தெளிவாக்கியது.
“எங்காவது சண்டை நடந்தால், நான் அங்கு நிற்கக் கூட மாட்டேன். அங்கு கூடும் கூட்டத்திற்கு நடுவில் கூட போய் நிற்க மாட்டேன். இப்போதெல்லாம் புகைப்படங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் விசாரணைகளே நடத்தப்படுகின்றன. புகைப்படத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குற்றத்திற்கோ குற்றவாளிக்கோ ஆதாரத்திற்கோ எல்லாம் விசாரணையில் இடமிருப்பதில்லை”
என்று வருத்தத்துடன் கூறினார் பிலால்.
சஹாரன்பூர் மசூதியில் ஜூன் 10 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, நுபுர் ஷர்மாவைக் கைது செய்யக் கோரி உள்ளூரில் ஒரு மணிக்கூண்டு இருக்கும் பகுதியை நோக்கி இளைஞர்களின் குழு ஒன்று அணிவகுத்துச் சென்றதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்தப் போராட்டத்திற்குப் பிறகு கற்கள் வீசப்பட்டு, அங்கே காவல்துறையினருடன் மோதல் உருவானதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், கைது செய்யப்பட்ட நபர்களில் சிலருக்காக ஆஜரான வழக்கறிஞர் பாபர் முடாசிரோ, செய்திகளில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளைக் காவல்துறை தவறாக சித்தரித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். காவல்துறை சொல்வது போன்று திட்டமிட்ட ஊர்வலமோ, போராட்டங்களோ எதுவும் நடக்கவில்லை என்கிறார் அவர். அரசு தரப்பில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிற ஒரு கதைதான் அது என்கிறார் வழக்கறிஞர் பாபர் முடாசி.
“சஹாரன்பூரில் இருக்கும் மசூதி மிகப்பெரியதாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே தொழுகை நடத்த வருவார்கள். அன்று முஸ்லீம்கள் ஆத்திரமாக இருந்ததாகவும், பெரிய போராட்டத்தை நடத்த விரும்பியதாகவும் உள்ளூர் காவல்துறை பொய்யாக ஒரு கட்டுக்கதையைச் சித்தரித்து வெளி உலகிற்கு காட்ட விரும்பியது. காவல்துறையினர் நிலைமையை மேலும் பதட்டமாக்க விரும்பினர். அப்போது முஸ்லிம்களைத் தூண்டி, ஒரு பெரிய கலவர சம்பவத்தை நிகழ்த்தவும் காவல்துறையினர் நினைத்தனர். முஸ்லிம்கள் தொழுகை முடிந்து மசூதியை விட்டு வெளியேறியபோது, அங்கிருந்த காவல்துறையினரும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சில உள்ளூர்வாசிகளும் முஸ்லிம்களைத் தூண்டி, போராடும் சூழலுக்குத் தள்ளினர். அதனைத் தொடர்ந்து, வேறுவழியின்றி காவல்துறையினரின் அட்டூழியத்தை எதிர்த்து முஸ்லிம்களிடையே தன்னெழுச்சியான ஒரு அமைதிப் போராட்டம் நடந்தது”
என்றார் பிலாலின் வழக்கறிஞர் பாபர் முடாசி.
மணிக்கூண்டு பகுதியில் வன்முறை ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உருவாக்கப்பட்டு, சுற்றுவட்டாரங்களில் வேகமாகப் பரப்பப்பட்டன. அந்த வதந்திச் செய்தி, கட்டகேரி பகுதியை அடைந்தது. கட்டகேரி பகுதியில் இருந்த மற்றவர்களைப் போலவே, பிலாலின் மனைவியும் கலவரம் குறித்தான அரசல் புரசலான தகவல்களைக் கேட்டவுடன் ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என்று பயப்படத் துவங்கினார். அவருடைய பதட்டத்தை உண்மையாக்குவது போல, மறுநாளே அவர்கள் வீட்டுப் பகுதியில் அந்த மோசமான நிகழ்வு நடந்தது. அந்த சுற்றுவட்டாரத்தில் எப்போதும் கேட்கும் மரப்பட்டறைகளின் இடைவிடாத இரைச்சலுக்குப் பதிலாக, அன்று காவல்துறையினரின் பூட்ஸ் சத்தமும் லத்திகளும் அத்தெருவுக்குள் அதிரடியாக நுழைந்தன.
தெருவில் உள்ள பட்டறைக்காரர்கள் தங்கள் மரப்பட்டறைகளை விரைவாக மூடிவிட்டு உள்ளே சென்று விட்டதை அம்மக்கள் நினைவு கூர்ந்தனர். அந்த நேரத்தில், பிலாலின் மூத்த மகன்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். மனைவி, இளைய மகன், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் வீட்டில் இருந்தனர். வீட்டில் நடப்பது எதைப்பற்றியும் அறியாமல் பிலால் தன் டீக்கடையில் இருந்தார்.
அன்று மதியம் 2 மணியளவில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, காவல்துறையினர் பிலால் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். பிலாலின் 19 வயது இளைய மகனைத் தெருவில் இழுத்துச் சென்றனர். வீட்டில் இருந்த பெண்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்து போயினர். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத பயத்தில் இருந்தனர். பிலாலின் மனைவி தனது மகனைப் பின்தொடர்ந்து ஓடியதையும், அவரைக் கண்டுகொள்ளாமல் அவரது மகனைக் காவலர்கள் இழுத்துச் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்தார். காவலர்கள் தங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது பெண் அதிகாரிகள் யாரும் உடன்வரவில்லை என்றும், பெண்கள் தங்களின் தலையை சேலையைக் கொண்டு மறைக்கக் கூட நேரம் கொடுக்கவில்லை என்றும் பிலாலின் மனைவி கூறினார்.
“அது மிக மோசமான நேரம். நான் எப்படிச் சொல்வது, எதைச் சொல்வது. நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்று கூட உங்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. அந்த செய்தியைக் கேட்டதும், என் கால் தரையில் நிற்காமலும் தலைசுற்றிக் கீழே விழுவதுபோலும் இருந்தது”
என்று வலி நிறைந்த தன் குரலில் பிலால் கூறினார்.
புல்டோசரின் பயங்கரமான சத்தம் அந்தத் தெருக்களில் எதிரொலிப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. புல்டோசர் அந்த சிறிய பாதையில் பெரும் சத்தம் எழுப்பிக்கொண்டே வந்தது. புல்டோசரின் கொடூரமான நகங்கள் தாக்கத் தயாராக இருந்தன. பிலால் வீட்டுப் பெண்கள், முதல் மாடியில் உள்ள ஒரு பின்பக்க அறையில், பயத்துடன் தங்கள் குழந்தைகளை இறுக அணைத்துக் கொண்டிருந்தனர். ‘வீட்டை எந்த அளவிற்கு இடிப்பார்கள்’ என்றோ, ‘வெளியேற அனுமதிப்பார்களா மாட்டார்களா’ என்றோ எதுவும் தெரியாமல் அவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். இதனை எவரிடமும் பகிரக்கூட விருப்பமின்றி வேண்டாவெறுப்பாகத்தான் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
அவர்களது வீட்டை புல்டோசர் இடித்துக் கொண்டிருந்தபோது அப்பெண்கள் ஒளிந்திருந்த அறையை பிலாலின் மருமகள் என்னிடம் காட்டினார்.
“எங்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்னுடைய தம்பியைக் காவல்துறையினர் இழுத்துச் சென்றதையும், ஒரு புல்டோசரை எங்கள் வீட்டை நோக்கி எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொன்னார்கள்”
என்றார் பிலாலின் மூத்த மகன்.
“காவல்துறையினர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. எந்த ஆவணத்தையும் காட்டவில்லை. நேரடியாக புல்டோசரைக் கொண்டு வீட்டை இடிக்கத் துவங்கிவிட்டார்கள். வீட்டை எந்த அளவிற்கு இடிக்கப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்றும் எங்களுக்கு எதுவும் புரியவில்லை”
என பிலாலின் மூத்த மகன் கூறினார்.
புல்டோசர் வீட்டின் முன்பக்க சுவரை இடித்துத் தள்ளியது. முப்பது வருடங்களாக வலுவாக இருந்த அவர்களது வீடு, புல்டோசரால் குலுங்கியது. வீட்டை வாசல் வழியில் இருந்து புல்டோசர் இடித்துக்கொண்டிருக்கையில், பெண்களும் குழந்தைகளும் அதே வீட்டின் மாடியில் இருந்திருக்கிறார்கள். பயத்தில் நிலை குலைந்து விட்டதாக அந்நிகழ்வை நினைவுகூர்கையில் அப்பெண்கள் கூறினார்கள். புல்டோசர் அடுத்து இடிக்கத் துவங்கும் நொடிக்கு முன் அப்பெண்களின் இதயங்கள் பயங்கரமாகத் துடித்திருக்கின்றன. பிலாலின் மனைவிக்கு, இது மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இப்போதும் கூட, யாராவது கதவைத் தட்டும் சத்தம் கேட்டால், பிலாலின் மனைவி பயத்தில் பதறிப்போய் துடித்து அதிர்வதாகக் கூறினார்.
“என் அம்மா அப்போதிருந்து மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் அவரால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. எங்கள் வீடு இடிப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு எனது தாயால் திரும்பவே முடியவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு நாங்கள் பல உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டுவிட்டோம். எதற்கெடுத்தாலும் எங்களுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையும் ஏற்பட்டுவிடுகிறது. சிறிய பிரச்சனை ஏதும் நடந்தாலும், நாங்கள் அதிகமாகப் பதற்றமாகி விடுகிறோம். கவலை எங்களை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது” என பிலாலின் 35 வயதான இரண்டாவது மகன் கூறினார்.
அவர்களுடைய வீட்டின் ஒரு பகுதியை இடித்துவிட்டார்கள். வீட்டின் முன் சுவரின் ஒரு பகுதியை அந்த புல்டோசர் இடித்துத் தள்ளிய பிறகுதான் காவல்துறையினர் நிறுத்தவே செய்திருக்கிறார்கள். அந்த குடும்பத்தின் 30 ஆண்டுகால கடின உழைப்பின் காரணமாக உணர்வுகளும் நினைவுகளும் நிறைந்த இல்லமாக மாறியிருந்த அந்த வீடு, தற்போது வன்முறையின் வடுவாக இடிபாடுகளுடன் அவர்களின் கண்முன் காட்சியளிக்கிறது.
“அந்த நாளில் ஒரு மிகப்பெரிய இடி எங்களுடைய தலையில் விழுந்துவிட்டதைப் போல நாங்கள் உணர்ந்தோம். ஒரு சிறிய பிரச்சனையைக் கூட எதிர்கொள்வது கடினமாக இருக்கும் ஒரு எளிய குடும்பம் எங்களுடையது. ஆனால் இதுவோ ஒரு பேரிடியாகும். ஒரு பேரழிவு எங்களைத் தாக்கியது போலத்தான் இருந்தது”
என பிலால் கூறினார்.
மேலும், “காவல்துறையினர் வந்தபோது அவர்களுக்கு முன்னால் அக்கம்பக்கத்தினர் யாரும் வந்து நிற்கவில்லை. காவல்துறைக்கு முன்னாலோ புல்டோசருக்கு முன்னாலோ யாரால் போய் நிற்க முடியும்? எங்களது பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல மனிதர்கள்தான். ஆனால் இது போன்ற நேரத்தில், காவல்துறையை எதிர்த்து அவர்களால் புல்டோசரின் முன்னால் போயா நிற்கமுடியும்?” என்றார் பிலால்.
வழக்கறிஞர் முடாசிரின் கூற்றுப்படி, “ஒரு மிரட்டல் செய்தியை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கடத்துவதற்காகத்தான், புல்டோசர் இடிப்புத் திட்டம் மூலமாக கண்ணில்பட்ட வீட்டையெல்லாம் இடித்திருக்கிறார்கள்” என்றார்.
வீட்டை இடித்த பிறகே, “பிலால் வீட்டின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது” என்று காவல்துறை ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. “ஜூன் 10 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்ட நபர்கள் அனைவரின் வீட்டையும் இடிக்க, ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியதாகவும் பொய்யாகக் கூறப்பட்டது” என்று எந்த சட்டவிதிகளையும் நீதித்துறை பின்பற்றாததைக் குறிப்பிட்டார் பிலால்.
“பேசாமல் இந்த நீதிமன்றங்களை எல்லாம் மூடிவிடுங்கள்” என்றார் பிலால். “புல்டோசரால் வீடுகளை இடிப்பதுதான் குற்றங்களைக் குறைப்பதற்கான தீர்வு என்றால், நீதிமன்றங்கள் எதற்காக அமைக்கப்பட்டன? நீதிமன்றத்தின் நோக்கமே குற்றத்தை நிரூபிப்பதும், குற்றமற்றவர்களை விடுவிப்பதும்தான். புல்டோசரால் வீடுகளை இடிப்பது தீர்வாகாது” என்றார் பிலால்.
புல்டோசரால் இடிக்கப்பட்ட அவர்களின் வீடு, இப்போது அக்குடும்பத்திற்குத் துன்பங்களின் சாட்சியாக உள்ளது. வீட்டின் கட்டமைப்பும் அக்குடும்பத்தின் பாதுகாப்பு உணர்வும் சிதைக்கப்பட்ட அந்த ஒரு நாளின் அடையாளங்களை பச்சை வண்ணம் கலந்த சுண்ணாம்பு பூசப்பட்ட அவர்களது வீட்டின் சுவர்கள் சுமந்து கொண்டு நிற்கின்றன.
பிலால் குடும்பத்தின் மீதான உளவியல் தாக்குதல் மிகத் தீவிரமாக உள்ளது. ஒரு காலத்தில் தங்கள் வீட்டின் சுவர்களுக்குள் ஆறுதலைக் கண்ட அக்குடும்பத்தினர், இப்போது நிரந்தரமாகத் தங்களுடனேயே தங்கிவிட்ட பயத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள். எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்விலும், எப்போது வேண்டுமானாலும் முன்பைப் போலவே ஏதாவது கொடூரமாக நடந்துவிடுமோ என்று பயந்துகொண்டே இருக்கிற நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படியான மன அழுத்தத்தில் இருந்து பிலாலும் அவரது குடும்பத்தினரும் கடந்து செல்லக் கூட முயன்றனர். தங்களால் இயன்ற வகையில் இடிக்கப்பட்ட சுவரை மீண்டும் கட்ட முயன்றார்கள். ‘இதுவும் கடந்துபோகும்’ என்பது போல ஏதோவொரு வகையில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. பிலால் இன்னும் தனது தேநீர்க் கடையை நடத்தி வருகிறார். அவரது மூத்த மகன்கள் அவர்களுடைய உள்ளாடைத் தொழிலைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். அவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். குடும்பத்தினருக்கு அக்குழந்தைகள் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கடத்துகிறார்கள். ‘நாம் எல்லாவற்றையும் இழந்துவிடவில்லை’ என அக்குடும்பத்திற்கு குழந்தைகளின் சிரிப்பு உணர்த்த முயற்சி செய்கிறது. “அல்லாஹ்வின் உதவியால்தான் இந்த சேதம் குறைவாக இருந்தது” என பிலால் கூறுகிறார்.
“மேலும் அல்லாஹ் எதிர்காலத்திலும் உதவி செய்வார். என் நிலைமை மோசமாகிவிட்டது. ஆனால் அல்லாஹ்தான் எனக்கு கருணை காட்டினார்”
என்கிறார் பிலால்.
தமிழில் : சேது சிவன்
தொடரும்…