புத்தக அறிமுகம்

உறுதி நாயகர்கள் யார்? – என்.சிவகுரு

549

வரலாறு இன்று வெவ்வேறு விதமாக மாற்றப்படும் அபாய சூழலில் இருக்கிறோம். காரணம், இந்திய வரலாற்றை முழுவதுமாக இந்துத்துவமயமாக்க ஆட்சியாளர்கள் பல வேலைகளை நம் கண்முன்னே செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் இருளை விலக்க, வரலாற்று ஆய்வுத் தரவுகளோடு கொடுக்கப்பட வேண்டியதுள்ளது. உண்மையான வரலாற்றைக் களத்தில் தரவுகளைத் தேடி நேர்மையாக வெளிக்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஒரு விதம். ஒரு சதம் கூட மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் இருக்கக்கூடாது எனக் கருதும் ஆய்வாளர்கள் மிகக் குறைவு. அதேபோல, ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வது என்பதும் சிலர் செய்யும் திட்டமிட்ட சதிவேலை. ஒரு ஆய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மதிப்பீடுகளில் குன்றென உயர்ந்து நிற்பவர் திரு. பி. சாய்நாத். இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களை, அதன் மாறிவரும் தன்மைகளை, அழிந்துவரும் விவசாயத்தைத் தன் ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர். அதன் மூலம் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர். விவசாயம் மட்டுமல்ல, நாட்டின் பல பிரச்சனைகளைத் தன் கள ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். அந்த வரிசையில், இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று, இந்திய சுதந்திரப் போராட்டம் எனும் பெரும் வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மகத்தான போராளிகளையும் அவர்களின் குடும்ப உறவுகளையும் சந்தித்துத் தொகுக்கப்பட்ட உன்னதப் படைப்புதான் “THE LAST HEROES”. அந்த அற்புதப் படைப்பு தமிழில் “இறுதி நாயகர்கள்” என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

ஏன் இந்த நூல்?

இந்த நூலின் ஆங்கில மூல நூலைத்தான் நான் முதலில் வாசித்தேன். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்துப் பழக்கமாகிப்போன எனக்கு, இந்தப் படைப்பு புதிய வெளிச்சத்தைத் தந்தது. இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் போராட்டம். பல்லாயிரம் பேரைப் பலிகொண்ட காலனி எதிர்ப்பு இயக்கம். அது எத்தனை பேரின் வாழ்வைப் புரட்டிப்போட்டது! படிக்க ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. அப்படித் தன்னலமற்ற முறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்ட 16 வீரர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கை அனுபவமே இந்தப் புத்தகம்.

23 பக்கங்கள் வரை இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பலதரப்பட்ட ஆளுமைகளின் கருத்துகள், இந்தப் புத்தகத்தின் நாயகர்கள் பற்றிய கண்ணோட்டங்களாக இருப்பதால், இந்நூலை வாசிக்கும் ஆர்வம் அதிகமாகிறது. அந்த 16 தீரர்களின் போராட்ட மெய்வாழ்வைச் சொல்லும் ஒரு பொக்கிஷம் என்றே இந்நூலை நான் கருதுகிறேன்.

இந்த நூலாசிரியர் சில காரணகாரியங்களோடுதான் 16 நாயகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு ஒரு சில தனிநபர்களின் சாகசங்கள் அல்ல; மாறாக, பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரெழுச்சி. இதில் சாமானியர்களின் மதிப்பிடமுடியாத பங்களிப்பும் உண்டு. அதன் தொகுப்பே இந்த நூல்.

ஏன் இந்த நூல் வாசிக்கப்பட வேண்டும்?

ஒரு மிகச் சிக்கலான அரசியல் சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை முதலில் உள்வாங்க வேண்டும். ஒரு தீவிர வலதுசாரி அரசியல்—அதாவது, ஒரு பாசிச அரசியலை இந்த நாட்டின் ஒவ்வொரு தளத்திலும் உள்செலுத்திட வேண்டும் என அதிகாரத்தோடு வேலை செய்யும் கூட்டத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இந்த அரசியல் மிக வேகமாகத் தன் வேர்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் காலமிது. இப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில், முதலில் வலதுசாரிகள் திருத்துவது வரலாற்றைத்தான். ஏன்? அவர்கள் குறிவைப்பதே அடுத்த தலைமுறையைத்தான். அதற்காக எதையும் செய்வார்கள் (தற்போது பிஜேபி செய்வது அனைத்தும்). அப்படி அழிக்கப்படும் வரலாற்று உண்மைகளை நாம்தான் மீட்டெடுத்து மக்களிடம் கடத்த வேண்டும்.

இந்த நூலில் பதிவாகியுள்ள இறுதி நாயகர்கள் ஒவ்வொருவரும் மிகவும் தனித்துவமான, வியத்தகு தியாகப் பணிகளைச் செய்தவர்கள். ஒவ்வொரு பக்கத்தைத் தாண்டும்போது மெய் சிலிர்க்கும். இந்த நாயகர்கள் 16 பேரையும் நேரிடையாகச் சந்தித்து, அவர்கள் வாழ்ந்த களமாடிய பகுதிகளுக்கே சென்று உரையாடிப் பதிவாக்கியுள்ளார் சாய்நாத் அவர்கள்.

“உலகின் புரட்சிகளுக்குப் பெருமைக்குரிய மனிதர்கள் காரணமெனத் தோன்றலாம். உண்மையில் மக்களே காரணம்.”
— மகாத்மா காந்தி, யெரவாடா சிறையில் (1931ல்) இருந்தபோது எழுதியது.

ஆம், அந்த மக்கள்தான் இந்த இறுதி நாயகர்கள்.

மல்லு ஸ்வராஜ்யம்… பபானி மகாதோ:

இந்த இரண்டு பெண் நாயகர்கள் (நாயகிகள்) பற்றிய இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்களை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. சுதந்திரப் போராட்டம் எனும் பெரும் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் களத்தில் நின்றனர் என்பதை அறிவோம். எப்படி அவர்கள் மனோதைரியத்தோடு பணியாற்றினர் என்பதே ஒரு ஆச்சரியம். இப்படியும் புதுமைப் பெண்களாக வீரசமர் புரிந்ததைப் படிக்கும்போது உத்வேகம் பிறக்கின்றது.

அன்றைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் ஒரு பகுதி ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அந்த நிஜாமின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர் பலதி மல்லு ஸ்வராஜ்யம். ஆயுதக் குழுக்களை உருவாக்கி, விவசாயிகளை அணிதிரட்டி, உணர்வூட்டி, நிலத்துக்கான உரிமையைப் புரியவைத்து, அவர்களின் அச்சத்தைப் போக்கி, பலம்கொண்ட ராணுவத்தை வெறும் கவண்கற்களால் முதல்தாக்குதல் நடத்தத் துவங்கி, பின்னர் துப்பாக்கி ஏந்தி நேருக்குநேராகச் சண்டையிடப் பயிற்சி கொடுத்து, நிலங்களை மீட்டெடுத்த பெரும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர். எப்பேர்பட்ட போராளி தெரியுமா? அவரை உயிரோடோ, பிணமாகவோ பிடித்துக்கொடுப்போருக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு சில கோடி ரூபாய். அந்த மிரட்டல் எந்தப் பாதிப்பையும் எங்களில் ஏற்படுத்தவில்லை… “காரணம், மக்கள் எங்களோடு நின்றார்கள்”. சத்தியமான வார்த்தைகள்.

5000 கிராமங்களில் நடந்த பேரெழுச்சி. அக்காலத்திலேயே 30 லட்சம் மக்களின் பங்களிப்பை வெவ்வேறு வடிவங்களில் பெற்றது. சுமார் 3 ஆண்டுகாலப் போராட்டம். நிஜாமின் படைகள் மட்டுமல்ல, இந்திய ராணுவமும் இந்தப் போராளிகளை அடக்கக் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், நிலத்திற்கான உரிமைப் போரில் மிகப்பெரிய தியாகங்களைச் செய்து முடிவுக்கு வந்தது. இப்படிப்பட்ட மகத்தான இயக்கத்தில் முன்னணிக் களப்போராளியாகச் செயல்பட்டவரின் அனுபவங்களைப் படித்துப் பாருங்கள். சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதாக நமக்குக் கிடைக்கவில்லை என்பது புரியும். உண்மையிலேயே, இப்போது ஆங்கிலத்தில் சொல்லப்படும் “GOOSEBUMP MOMENTS” இவரின் அத்தியாயத்தைப் படித்தால் கிடைக்கும்.

பபானி மகாதோ: உணவளித்த தியாகி

சமைத்து உணவளிப்பது ஒரு பெண்ணின் அன்றாடக் கடமைதானே என யோசிக்கும் ஆணாதிக்க சமூகத்தில் வாழும் நாம், யாருக்காகச் சமைக்கிறோம்—ஏன் அதை எல்லோருக்கும் பரிமாறுகிறோம் என்பதே தெரியாமல், தன் கணவர் கேட்டுக்கொண்டதின் பேரில், நித்தமும் தன் பெரிய குடும்பம் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் முகஞ்சுளிக்காமல் சமைத்து, அதோடு தன் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு, வறட்சியான மாவட்டமான புருலியாவில் (மேற்கு வங்காளம்) தான் செய்த அளப்பரிய தியாகத்தின் சுவடுகளைப் பற்றிக் கொஞ்சமும் தெரியாமல் இருந்த பபானி மகாதோ பற்றி நூலாசிரியரின் பதிவெல்லாம் நம்மை உலுக்கிவிடுகிறது.

தன் கணவர் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் முன்னணிப் போராளி என்பதுகூட அறிந்திடாதவர். பெரிய கூட்டுக் குடும்பம்—9 வயதிலேயே திருமணம்—எதிர்ப்பேச்சு என்பதற்கு இடமில்லை—4 மணிநேர உறக்கம், வாழ்வியல் தேவைக்கான தொடர்பணிச்சுமை—எனச் சக்கரம்போல் வாழ்க்கைமுறை. இதற்கு நடுவில், சுதந்திர வேள்வியில் போராடிய வீரர்களுக்குத் தினப்பணியாக உணவு தயாரித்தல்… ஏன் அது பெரிய வேலை? அந்தக் காலத்தில், போராட்ட வீரர்கள் ஆங்கில அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் பல வடிவங்களில் போராடினார்கள்—காந்திய வழியில் ஒரு பக்கம், புரட்சிகர வழியில் இன்னொரு பக்கம்.

அடர்ந்த வனங்களில் தங்கி, ஆங்கில அரசின் அலுவலகங்களைத் தாக்குவது, சட்டங்களுக்கு எதிராக மறியல் செய்வது, நிலச்சுவான்தார்கள் திருட்டுத்தனமாகச் சேமித்துவைத்த கிடங்குகளை உடைத்து மக்களுக்கு உணவைப் பிரித்துக்கொடுப்பது போன்ற புரட்சிகரப் பணிகள் செய்த வீரர்களுக்கு உணவளிப்பதே பிரதானப் பணி. இதைச் செய்த அந்த மகத்துவம் மிக்க மூதாட்டிக்கு இப்போதும் தெரியவில்லை.

எளிமையின் அடையாளங்கள்—மக்கள் தலைவர்கள்:

தமிழ்நாட்டின் இடதுசாரிக் கட்சிகளின் அடையாளங்களாக இருக்கும் தோழர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு ஆகியோரின் போராட்ட அனுபவங்கள் நம்மைச் சிலிர்க்க வைக்கும். நாம் இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக் காற்றுக்குப் பின்னால் இவர்களின் மகத்தான தியாகங்கள் இருக்கின்றனவா என நம்மைச் சிந்திக்க வைக்கும். மாணவப்பருவம் தொடங்கி “வெள்ளையனே வெளியேறு” இயக்கம், ஆங்கில அரசின் சதிவழக்குகள் என இவர்கள் இருவர் மீதும் வழக்குகள்… சிறைக் கொடுமைகள்… சிறைக்குள்ளும் உரிமைக்கான போராட்டம்… ஒயாத வாசிப்பு, தன்னலமற்ற மக்கள்்பணி—என இவர்களின் நீண்ட வரலாறு வாசிப்பவரின் ஆழ்மனதைத் துளையிடும். எப்பேர்பட்ட தியாகங்கள்!

ஒரு சம்பவம்: சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம்… அப்போதுகூட, தோழர் சங்கரய்யா “தாய்” நாவலைப் படித்து உருவேற்றிக்கொள்கிறார். எப்படி முடிந்தது? ஒரே எண்ணம் மட்டுமே—தாய்நாட்டின் விடுதலை. இந்தத் தலைவர்கள் செய்த தியாகத்தை வருங்காலத் தலைமுறைக்கு நாம் சொல்லித்தர வேண்டாமா?

காந்தியத்தின் அடிச்சுவட்டில்… பாஜி முகமது:

ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த உன்னதப் போராளி. மகாத்மா காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு இறுதிவரை தடம் மாறாமல் இருந்தவர். தன் இறுதிக் காலத்தில்கூட மதநல்லிணக்கத்துக்காகக் களங்கண்டவர்.

தன் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த சுதந்திர வேட்கை… அதை ஊட்டிய மகாத்மாவை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் எனும் அவா… தன் கிராமத்திலிருந்து தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகருக்குச் சைக்கிளிலேயே சென்று, அங்கிருந்து ரயிலில் மூன்றாம் வகுப்பில் சிரமங்களோடு பயணித்து, சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “எப்படி/எவ்வகையில் போராட வேண்டும், மக்களை எங்ஙனம் அணிதிரட்டுவது” என்பதை உள்வாங்கி, ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராடியவர். இவரோடு சமகாலத்தில் இணைந்து போராடியவர்கள் பின்னாட்களில் ஒடிசா மாநிலத்தின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் பாஜி முகமதுவை மறக்கவில்லை… இருவருமே அவர்கள் காலத்தில் பாஜி முகமதுவைத் தேர்தல் களத்தில் வரச்சொன்னார்கள். இவரோ உறுதியாக மறுத்தார்: “மக்கள் சேவையை நான் காந்திய வழியில் கிராமங்களிலேயே செய்வேன்” என இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாடெங்கும் நடந்த கலவரங்களை நாம் அறிவோம். அந்தப் பதட்டமான நேரத்தில்கூட, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சமூக நல்லிணக்கப் பணிகளைச் செய்தவர். இவர்கள்தானே உண்மையான தீரர்கள்!

இப்படி 16 பேரை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? நம் ஊரிலும், பகுதியிலும், மாவட்டத்திலும் இப்படியான தீரர்கள் நிரம்ப இருந்து மறைந்திருப்பார்கள். அவர்களின் வீர வரலாற்றைத் தேடிச்செல்வோம்! பதிவாக்குவோம்! மன்னிப்புக் கேட்டு, ஷூவை நக்கி அரசியல் செய்த ஒரு அரசியல் இயக்கத்தை அம்பலப்படுத்த வேண்டாமா?

இந்தப் புத்தகத்தைச் சலிப்புதட்டாமல் வாசிக்க மிக முக்கியமான காரணம் மொழிபெயர்ப்புதான். நூலாசிரியரின் எழுத்தில் இருந்த எல்லா எண்ணவோட்டங்களையும் உள்வாங்கி, ஒரு இடத்தில்கூட சிறுபிசிறில்லாமல், எளிய வழக்காற்று மொழிகளில் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழியாக்கம் செய்த தோழர் ராஜசங்கீதனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

உண்மை வரலாற்றை உரக்கச் சொல்லுவோம்!
இறுதி நாயகர்களின் புகழைப் பரப்புவோம்!

இறுதி நாயகர்கள்
பி. சாய்நாத்
தமிழில்: ராஜசங்கீதன்
பாரதி புத்தகாலய வெளியீடு

– என்.சிவகுரு

Leave a Reply