புத்தக அறிமுகம்

நீங்களும் ஐன்ஸ்டீன்தான் – ஆதி. கமலேஷ் பிரகாஷ்

549 (2)

நவீன காலத்தில் உலகில் எவரிடமும் நவீன உலக மாமேதை யார்? என்று கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மனதில் தோன்றும் உருவம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான். 20 ஆம் நூற்றாண்டின் நவீன கண்டுபிடிப்புகளோடு அனைவராலும் ஒப்பிட்டுப் போற்றப்படுபவர் ஐன்ஸ்டீன். ஒற்றை மனிதனின் மாற்று சிந்தனை யுக்தி எப்படி (Thought Experiment) இந்த உலகத்தின் போக்கை மாற்றி அமைக்கும் என்பதற்கு உதாரணம் ஐன்ஸ்டீன். நவீன அறிவியல்-சமூக வரலாற்றில் ஐன்ஸ்டீனுடைய இடத்தை நாம் கோப்பர்நிக்கஸ், கலீலியோ, நியூட்டன் ஆகியோருடன் ஒப்புநோக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவான பண்பு கேள்வி கேட்பது. அவரவர் காலகட்டத்தில் இருந்த அறிவியலையும், சமூகக் கட்டமைப்பையும் பகுத்தறிவு (rational & lateral thinking) கொண்டு கேள்விக்கு உள்ளாக்கினர். “நீங்களும் ஐன்ஸ்டீன்தான்” என்ற புத்தகமே ஒரு மாணவர் எழுப்பிய கேள்வியினாலேயே உருவாக்கம் பெற்றது.

அப்படிப்பட்ட ஐன்ஸ்டீன் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான புத்தகமே ஆயிஷா இரா. நடராசன் எழுதிய “நீங்களும் ஐன்ஸ்டீன்தான்”. 32 பக்கம், 7 சிறு தலைப்புகள் மட்டுமே கொண்ட இப்புத்தகத்தில் ஐன்ஸ்டீன் பற்றிய முழு வாழ்க்கை விவரம், அவரின் அறிவியல் மனப்பாங்கு, சுயப் பண்புகள், கண்டுபிடிப்புகள், அரசியல் நிலைப்பாடு, உலக அமைதிக்காக சாகும் வரை அளித்த குரல், மக்களுக்கான அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பாடுபட்டது போன்ற அனைத்துத் தகவல்களும் மிகுந்த சுவாரஸ்யத்துடனும், தொய்வின்றியும், படிப்பவரைக் கவரும் வண்ணமும் ஈர்ப்புமிக்க புகைப்படங்களுடனும், ஆங்காங்கே வாசகங்களுடனும் எழுதப்பட்டுள்ளது.

தமிழைக் குறைந்த அளவு படிக்கத் தெரிந்த அனைவரும் 30 – 45 நிமிட வாசிப்பில் இந்தப் புத்தகத்தை முடித்துவிடலாம். இதில் உள்ள 7 தலைப்புகளையும் தலா ஒரு தலைப்பை 5 அல்லது 10 நிமிடங்களில் படித்துவிடலாம். பி.கு. ஒரு தேவையற்ற யூடியூப் ஷார்ட்ஸ் (வலையொளி) ஐ ஒரு மணி நேரம் பார்ப்பதை விட இந்தப் புத்தகம் வாசிப்பது உங்கள் சிந்தனைப் பார்வையை மாற்றும். இன்று நம்மைச் சிந்திக்க விடாமல் தடுக்க ஏராளமான சாதனங்கள், கேளிக்கைகள் திட்டமிட்டு நம்மிடையே நமது பிரக்ஞையின் அனுமதி இன்றி புறத்தில் இருந்து திணிக்கப்படுகிறது. சிந்தனைத் தடை செய்தல், அறிவைத் திணித்தல் ஆகிய இரண்டுக்கும் எதிரானவர் ஐன்ஸ்டீன் என்பதை நாம் இந்தப் புத்தகத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஐன்ஸ்டீன் அளித்த பெரும்பாலான அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் அவரது thought experiment மூலமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே நாம் சிந்தனை என்பதை வெறும் கற்பனை என்று சுருக்கிப் பார்க்கக்கூடாது. ஐன்ஸ்டீனுடைய கற்பனை என்பது பகுத்தறிவுக்கும், தர்க்கத்திற்கும், தற்கால அறிவியல் கோட்பாடுகளுக்கும் உட்பட்டது என்பதையும் இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

இப்போது “நீங்களும் ஐன்ஸ்டீன்தான்” என்ற புத்தகத்தின் 7 தலைப்புகளின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

  1. ஐன்ஸ்டீனா…யாராவர்? அனைத்தின் மீதும் அளவுகடந்த ஆர்வம் கொண்ட ஐன்ஸ்டீன் 5 வயது வரை பேச முடியாதவராக இருந்தார். அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autistic Spectrum Disorder – ASD) இருந்தது. அவர் ஜெர்மனியில் பள்ளி மாணவராக இருந்தபோதும் சரி, உலகப் புகழ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்த போதும் சரி, அவர் குழந்தை போல் கேள்வி கேட்கும் தன்மையை இழக்கவில்லை. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் ரூசோவின் கூற்றான “Man is born free” என்பதைப் போல ஐன்ஸ்டீன் எந்த ஒரு நாட்டின் அதிகாரத்திற்கும் உட்பட்டவர் அல்ல. இன்னும் சொல்லப் போனால், அவரது அறிவியல் வாழ்க்கை முழுவதுமே அதிகாரத்திற்கு எதிரானது. ஆகவேதான் அவர் சுயசிந்தனையின், சிந்தனைச் சுதந்திரத்தின் குறியீடாக உள்ளார்.
  1. பள்ளி மாணவர் ஐன்ஸ்டீன் – ஐன்ஸ்டீன் கணிதம், இயற்பியல் தவிர அனைத்திலும் ஜஸ்ட் பாஸ் தான். அவரைப் பொறுத்தவரை செய்திகளை மூளையில் சேமித்து வைப்பதை விட, நாம் படித்தவற்றை வைத்து அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவருக்கு இன்றைய மெரிட் தேர்வுகளை நாம் வைத்தாலும் அவர் பாஸ் வாங்க மாட்டார். வெறும் தேர்வுகளை வைத்து மட்டும் நாம் ஒருவரின் அறிவுத் திறனைத் தீர்மானிக்க முடியாது. அறிவாற்றல் எந்த மனிதனுக்கும் எந்த வயதிலும் வரலாம்.
  1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி வாழ்க்கை – 1896 இல் அவர் தனது முதலாவது கல்லூரி சேர்ந்தது முதல் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்ற போதும் அவர் பாடத்திட்டங்களைத் தாண்டிப் பயின்றார். மேக்ஸ்வெல், வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் போன்ற தனது முந்தைய தலைமுறை அறிஞர்களைச் சுயமாக ஆழ்ந்து படித்துப் புரிந்து கொண்டார். கல்லூரியில் அவர் ஸ்டார் மாணவராக இல்லாமல் போனாலும், தன் காலத்தில் இயற்பியல் உலகில் என்ன நடக்கிறது என்பதை அவர் முழுவதுமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதை இப்புத்தகம் கூறுகிறது. தான் 1902 இல் சுவிட்சர்லாந்தில் பெர்ன் (Bern) நகரில் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை அளிக்கும் அரசு அலுவலகத்தில் பணியாற்றிய போது, தனது ஓய்வு நேரத்தில் அறிவியல் கட்டுரைகளை வாசித்து ஆழ்ந்து கற்றார். இதன் மூலம் ஓய்வை நோக்கிய நமது பார்வையும் வேறுபடுகிறது. அண்ணாவின் “ஓய்வு” என்ற கட்டுரையும் நமக்கு இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

இதேபோல் மற்ற தலைப்புகள் ஆனா விஞ்ஞானியாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐன்ஸ்டீன் போல சிந்திப்பது என்றால் என்ன?, ஐன்ஸ்டீன் எனும் விஞ்ஞானியும் இந்தியாவும், நீங்களும் ஐன்ஸ்டீன் தான், முறையே 4,5,6,7 போன்ற தலைப்புகளும் நாம் இன்னும் ஐன்ஸ்டீனைப் புரிந்து கொள்ளவும், அவரைப் போல சிந்திக்கவும் உதவும். இன்று அல்ல என்றும் அவர் சிந்தனைக் குறியீடாக இருப்பார் என்பதை இச்சிறு புத்தகம் உணர்த்தும். இன்றைய காலத்தில் அனைவரின் வேட்கையும் பணம், அதிகாரத்தை நோக்கி இருக்கும் போது, இப்புத்தகத்தின் முதல் கட்டுரையில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை ஆச்சரியப்படுத்தும். ஒரு யூதரான ஐன்ஸ்டீனை இஸ்ரேல் நாடு தங்கள் நாட்டிற்கு அதிபராக ஆகும்படி அழைப்பு விடுத்தது. அப்போது ஐன்ஸ்டீன் அரசியலை விட, அறிவியல் தான் தன்னுடைய அடையாளம் என்று அறிவித்து, அப்படிப்பட்ட அதிகாரப் பதவியை மறுத்த மாமேதை ஐன்ஸ்டீன்.


ஆதி. கமலேஷ் பிரகாஷ்

Leave a Reply