தினேஷ் ஷர்மா
தமிழில்:மோசஸ் பிரபு
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆய்வுக்கூடங்கள், அரசு நிதி உதவியோடு செயல்படும் ஆய்வகங்கள் மற்றும் தேசிய அறிவியல் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை பற்றி நம் ஊடகங்கள் அடிக்கடி பெருமிதத்துடன் செய்திகளை வெளியிடுவதை நாம் காண்கிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு பின்னால் உள்ள விஞ்ஞானிகளைப் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு ஏவுகணையும் விண்ணில் ஏவப்படும் போது, இஸ்ரோ விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டு அறைகளைக் காட்டும் காணொளிகளில், புடவை அணிந்த ஒரு பெண்ணைப் பார்க்க முடிகிறது. சில சமயங்களில் “ஏவுகணைப் பெண்” என்று அழைக்கப்படும் டெஸ்ஸி தாமஸ், விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் பற்றிய செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம். இவ்வாறு, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பெண்களின் அறிவியல் பங்களிப்புகள் மதிப்பிடப்படுகின்றனவா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது.
அறிவியல் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களுமான ஆஷிமா டோக்ரா மற்றும் நந்திதா ஜெயராஜ் ஆகியோர் இணைந்து எழுதிய “LAB HOPPING: A JOURNEY TO FIND INDIA’S WOMEN IN SCIENCE” என்ற புத்தகத்தில், அறிவியல் துறையில் பெண்களின் நிலை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில், நாடு முழுவதும் பயணம் செய்து, நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் ககந்தீப் காங், இயற்பியல் ஆராய்ச்சியாளர் ரோகினி காட்போல், உலகப் புகழ்பெற்ற உயிரித் தொழில்நுட்பவியல் அறிஞர் கிரண் மசூம்தார்-ஷா, வானியல் அறிஞர் பிரஜ்வல் சாஸ்திரி உள்ளிட்ட பல ஆராய்ச்சியாளர்களை சந்தித்து, அவர்களின் ஆராய்ச்சி அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
மஞ்சு சர்மா, சௌமியா சுவாமிநாதன், ரேணு ஸ்வரூப், நல்ல தம்பி, கலைச்செல்வி போன்றவர்கள் அறிவியல் துறையில் உச்சத்தை எட்டிய பெண்களில் சிலராவர். இவர்கள் கல்வி நிறுவனங்களில் இயக்குநர்களாகவும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்த நிலைமை ஒருபுறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், மறுபுறம் இந்தியாவில் பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவு நிலவுகிறது.
முதலாவதாக, நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் 34% என்ற அளவில் பெண்களின் பங்கேற்பு உள்ளது. இருப்பினும், பாலின பாகுபாடு, ஆணாதிக்க சூழல், புறக்கணிப்பு மற்றும் துறை சார்ந்த துன்புறுத்தல்கள் காரணமாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது புதிய செய்தியும் அல்ல; இது இந்திய சமூகத்தின் பிற்போக்குத்தனத்தின் விளைவாகும். இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானியான நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. ராமன் கூட, துவக்கத்தில் இந்த பிற்போக்குத்தனத்தை கடைபிடித்தவராக இருந்தார். இது வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்வாகும். இந்தியாவின் “வானிலைப் பெண்” என்று அழைக்கப்படும் அன்னா மணி மற்றும் அறிவியல் துறையில் இந்தியாவில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற கமலா சோஹனி ஆகிய இருவருக்கும் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்க முதலில் மறுத்துவிட்டார். பின்னர் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனுமதி வழங்கினார். இந்த நிகழ்வு 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்தது. ஆனால், 21ஆம் நூற்றாண்டிலும் இந்த பாகுபாடுகள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்வதைக் காண்கிறோம்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் அவர்கள் வாழும் இடங்களில் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். மேலும், கழிப்பறை வசதிகள் கூட ஆரோக்கியமான முறையில் பெண்களுக்கு இந்நிறுவனங்களில் கிடைக்கவில்லை என்பதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் பல பெண்கள் அறிவியல் பாடங்களை படித்தாலும், உயர்கல்விக்கு குறைவான எண்ணிக்கையிலேயே நுழைகின்றனர். மேலும், ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த புத்தகம், அனைத்து மட்டங்களிலும் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் நேர்காணல் செய்து, அவர்களின் அனுபவங்களை பதிவு செய்துள்ளது. ஆஷிமா மற்றும் நந்திதா ஆகியோரின் முயற்சி 2015ஆம் ஆண்டு தொடங்கி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகால தொடர் முயற்சியின் விளைவாக இந்த புத்தகம் உருவாகியுள்ளது. இந்திய அறிவியல் துறை ஆணாதிக்கம், சாதி மற்றும் பாலின பாகுபாடுகள், மேல்தட்டு மனோபாவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிரான செயல்பாடுகளை இந்த புத்தகம் பதிவு செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், அறிவியல் என்பது ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் ஆதிக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு தொழிலாக மட்டுமே செயல்படுகிறது.
ஒவ்வொரு பெண் விஞ்ஞானியையும் நேர்காணல் செய்யும் போது, ஆய்வகங்களிலும், பட்டம் பெறுவதிலும், வாழ்விடங்களிலும் அவர்கள் ஆணாதிக்கத்தால் பல்வேறு வகையான ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தடைகளுக்குப் பிறகும், அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பை கண்டறியும் போது, அவர்கள் எந்த வகையிலும் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல என்பது நிரூபணமாகிறது.
பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் போது, இடைநிறுத்தப்பட்ட பெண்கள் மீண்டும் அறிவியல் கல்விக்கு திரும்புவதில் சிரமங்கள் உள்ளன. இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கும் சிக்கல்கள் உள்ளன. சமீபத்தில், இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான விவாதங்கள் பொது தளங்களில் நடைபெற்றாலும், பெண்களின் மீது காலம்காலமாக சுமத்தப்பட்டுள்ள தாய்மை மற்றும் குடும்பப் பொறுப்புகள் பற்றிய உரையாடல் முற்றிலுமாக மாறவில்லை. அரசும் அறிவியல் தலைமையும் பெண்களின் இந்த பிரச்சினையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. எதையாவது சாதிக்கும் போது மட்டுமே பெண் விஞ்ஞானிகள் பற்றி கேள்விப்படுகிறோம். ஆனால், அந்த சாதனையை அடைய அவர்கள் எத்தனை இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றி நாம் அக்கறை காட்டுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் போதுதான் பாலின பாகுபாடுகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த புத்தகம், அறிவியல் துறையில் தொடரும் ஆணாதிக்க முறையை அசைத்து, மாற்றம் ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தினேஷ் ஷர்மா
தமிழில்:மோசஸ் பிரபு