அரசியல்இந்தியா

புல்டோசர் இடிப்புகள் – புதிய முயற்சி, புதிய தொடர்

549

செல்வந்தர்களுக்கு நகரங்களைத் தாரைவார்ப்பதற்காக ஆண்டாண்டு காலமாக அங்கே வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களின் குடிசைகளை இடித்துத் தள்ளுவதென்பது உலகெங்கிலுமுள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் ஒரு நடைமுறையாகும். மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரத்தின் அடுத்த கட்டமாக மற்றொரு தளத்திற்கு பாசிச பாஜக அரசு நகர்ந்து சென்றிருக்கிறது. 

சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை எப்போதும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்க விரும்பும் இந்துத்துவ ஆட்சியாளர்கள், அம்மக்களின் சிறுபான்மை மத அடையாளத்திற்காகவே அவர்களது வீடுகளை இடித்துத் தள்ளி வருகின்றனர். மதங்களையும், இனங்களையும், மொழிகளையும், மாநில அடையாளங்களையும் கடந்து அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று ஏதோவொரு வகையில் ஒடுக்கப்படும் மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சம உரிமைகளைக் கேட்டு கேள்விகளே எழுப்ப முடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறார்கள் ஆட்சியாளர்கள். “உனக்கான அடிப்படை உரிமையான குடியுரிமையையும் நில உரிமையையும் அடித்து நொறுக்கிவிட்டால், நீ அந்தப் பிரச்சனையிலேயே சிக்கிக் கொள்வாய்தானே. பிறகெப்படி சமத்துவம், சம உரிமை எல்லாம் உன்னால் பேச முடியும்?” என்பது போலத்தான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

இதுவரை இந்தியா முழுவதும் எத்தனை வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் என்கிற அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எங்கும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பல்வேறு அமைப்புகள் வெளியிடும் தகவல்களின்படி, 2024 ஆம் ஆண்டின் மத்தியிலேயே சுமார் 1.5 இலட்சம் வீடுகளுக்கும் மேலாக இடித்திருப்பதாகத் தெரிகிறது. அந்த எண்ணிக்கை இந்த நொடி வரையிலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் சுமார் பத்து இலட்சம் மக்களையாவது வீடற்றவர்களாக ஆக்கியிருக்கிறார்கள் இந்த இந்துத்துவ ஆட்சியாளர்கள். உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் வாழ்வதற்கு வீடுகள் உருவாக்கப்பட வேண்டிய காலத்தில், ஏற்கனவே இருக்கிற வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளும் இவர்கள் மனிதர்கள்தானா என்கிற சந்தேகமே நமக்கு வருகிறது.

இந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமாக குஜராத்தில் தொடர்ச்சியாக செய்து பார்த்த பல்வேறு பரிசோதனைகளில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் காரணமே இல்லாமல் முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு, பெரும்பான்மையான இந்துக்களிடம் அதற்கு ஆதரவு கிடைக்கிற வகையில் பிரச்சாரமும் செய்து வருகிறது யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசு. உத்தரப் பிரதேசத்தில் இருந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் இக்கொடூரத் திட்டம் எடுத்துச் செல்லப்படுகிறது.

உலகின் ஒரு பகுதியில் பாசிசம் வளரும்போது, நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணியே, அதனை அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவவிடாமல் தடுப்பதுதான். இந்துத்துவமும் புற்றுநோயைப் போலத்தான். தென்னிந்தியாவில் இந்துத்துவம் வரவே முடியாது என்று இனிமேலும் நாம் வீண் பெருமை பேசி எந்தப் பலனும் இல்லை. ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா, புதுவை என தமிழ்நாட்டையும் கேரளாவையும் சுற்றிவளைத்து வந்துவிட்டார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தலா 19% வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றிருக்கிறது. அதுவும் அந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதானமாக இருக்கும் கட்சிகளின் உதவியும் இல்லாமலே இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் 79 இலட்சம் பேர் பாஜக கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது எளிதில் கடந்து செல்லக்கூடிய தகவல் அல்ல. நாம் அவசரமாகவும் அவசியமாகவும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் அவர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அட்டூழியங்களை பாஜக ஆட்சிக்கு வராத மாநில மக்களிடம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிச் சொல்ல வேண்டிய கடமை ஜனநாயக அமைப்புகளுக்கு இருக்கிறது.

அந்த வகையில் ‘தி போலிஸ் பிராஜக்ட்’ என்கிற அமைப்பு, புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் இந்திய மண்ணின் மாந்தர்களுடைய கதைகளையும் கண்ணீரையும், துணிந்து களத்திற்கே நேரடியாகச் சென்று உண்மைத் தகவல்களைப் பெற்று ஆவணப்படுத்தி வருகிறது. அவற்றை நாடெங்கிலும் ஒவ்வொரு மாநிலத்து மக்களிடமும் அவரவர் மொழியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மக்களுக்கு அரசியல் புரிதலை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் ‘மாற்று’ இணையதள அமைப்பினராகிய நாங்கள், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

பாஜகவும் அதன் அடிப்படைக் கொள்கையான இந்துத்துவாவும் புல்டோசரைக் கொண்டு இடித்துத் தள்ளும் வீடுகளின் கதைகளை நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்கிற நோக்கத்துடன் எங்களுடன் பல மொழிபெயர்ப்பாளர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். முதல் கட்டமாக ஆறு கட்டுரைகளை ஆறு வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறோம். அவர்களுக்கே இது புதுவிதமான அனுபவமாக இருந்தது. மொழிபெயர்ப்புப் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு கண்ணீர் விட்டு அவர்கள் அழுத நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. ஒரு ஓரமாக உட்கார்ந்து தனித்தனியாக அழுவதால் மட்டும் எந்தப் பலனும் இல்லை என்றும், பெருவாரியான மக்களிடம் இந்த உண்மைகளை எல்லாம் கொண்டு சென்றே ஆக வேண்டும் என்கிற புரிதலுடன் கண்ணீரைத் துடைக்காமலே மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்து செய்து கொடுத்திருக்கிறார்கள். எளிமையான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலமுறை நாங்களே எங்களுக்குள்ளாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரைகளை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்தோம். பல கட்ட திருத்தங்களுக்கும் வாசிப்புக்கும் பிறகு இப்போது ஓரளவுக்கு நல்ல நிலையில் அக்கட்டுரைகள் வந்திருப்பதாக எங்களுக்கே நம்பிக்கை வந்திருப்பதால், உங்கள் முன் கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம்.

இக்கட்டுரைகளை வாசிக்கிற நீங்கள், நிச்சயமாக எக்காரணம் கொண்டும் இந்துத்துவ பாசிசத்தை மனதிற்குள்ளும் மாநிலத்திற்குள்ளும் வரவிடாமல் தடுத்தே ஆக வேண்டும் என்கிற உறுதியான ஒரு முடிவை நீங்கள் எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அத்துடன் புல்டோசர்களால் இடிக்கப்பட்ட, இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளில் வாழ்ந்த மனிதர்களுக்காக நம் ஒவ்வொருவரால் முடிந்த வழிகளில் குரல் கொடுக்கவும் இக்கட்டுரைகள் தூண்டும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.

இனி தமிழில் வெளியாகப் போகும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பான கட்டுரைகளை வாசகர்களாகிய நீங்கள்தான் எண்ணற்ற மக்களின் வாசிப்பிற்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு, உங்கள் அனைவரின் உதவியையும் நாடுகிறோம். நிச்சயமாக நீங்களும் வாசித்து, உங்களுடைய நட்பு மற்றும் இன்னபிற அனைத்துத் தொடர்புகளுக்கும் இக்கட்டுரைகளைப் பகிர்ந்து வாசிக்கச் சொல்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன் உங்கள் முன் வைக்கிறோம். நன்றியும் மகிழ்ச்சியும்…

– இ.பா.சிந்தன்

1 Comment

Leave a Reply