தமிழில்: ரகுராம்
இதுவரை, மிகவும் திறன்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி அல்லது தளம் என்று பலராலும் அறியப்பட்ட OpenAI-க்கு நிகராக செயல்படும் விதமாக, அதே நேரத்தில் OpenAI மாதிரியை உருவாக்குவதற்கான முதலீட்டுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்டு, சீனாவைச் சேர்ந்த ஒரு பெரிதும் அறியப்படாத சிறிய நிறுவனமான DeepSeek, செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி அல்லது தளத்தை கடந்த ஜனவரி 20 ஆம் தேதி வெளியிட்டு, ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. DeepSeek செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மிகுந்த பரபரப்பை அடைந்துள்ளன. குறிப்பாக, பங்குச் சந்தையில் வர்த்தகர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் என்விடியா நிறுவனத்தின் பங்குகளை கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். DeepSeek-ன் அறிமுகத்தால், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை ஓரிரு நாட்களில் இழந்துள்ளன.
GPU (Graphics Processing Unit) என்று அழைக்கப்படும் உயர்தர படிம செயலகம், முதலில் படங்கள் மற்றும் கிராபிக்ஸ் சார்ந்த தரவுகளைக் கையாள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்த படிம செயலகங்கள் அனைத்து வகையான கணினி செயல்பாடுகளுக்கும், குறிப்பாக இணை செயல்பாடுகளுக்கு (Parallel Processing), பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இயல்பாக, இத்தகைய படிம செயலகங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அனைத்து வகையான கணினி செயல்பாடுகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பான DeepSeek, தற்போதைய செயற்கை நுண்ணறிவு மாதிரியான ChatGPT-ஐ விட செயல்திறன் மிக்கதாக இருப்பதோடு, மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இது OpenAI, Anthropic, Google, Meta போன்றவற்றின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கான செலவில் வெறும் 3-5% மட்டுமே செலவழித்து, மிகவும் மேம்பட்ட மாதிரியை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய அதிநவீன சில்லுகளை (Chip) சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்க அரசு ஏற்கனவே பல்வகையான வர்த்தக தடைகளை விதித்திருந்தது. இத்தகைய கடுமையான வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியில், சீன நிறுவனம் இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீனா வளர்ச்சியடைவதைத் தடுக்கும் பொருட்டு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கணினி மற்றும் அதன் வன்பொருட்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படும் மேம்பட்ட படிம செயலகம் (GPU) சில்லுகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்க நிறுவனங்களும் அரசும் தொடர்ந்து தடுத்து வந்துள்ளன. OpenAI நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஆல்ட்மன், கடந்த ஆண்டு தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் குறைந்த முதலீட்டில் போட்டியிடுவது “தேவையற்ற வீண் செயல்” என்றும், எந்தவொரு நாடும் அமெரிக்காவின் இத்தகைய நிறுவனங்களின் உட்கட்டமைப்புடன் போட்டியிடுவது இயலாதது என்றும் தனது வன்மமான கருத்தைத் தெரிவித்திருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனியும், இந்தியா எந்தவொரு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் பயன்பாட்டிலுள்ள செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தும் பயனாளர்களாகவே இருக்க வேண்டும் என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார். இது, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வகையான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் கையில் முற்றிலுமாக ஒப்படைத்துவிடுவதாக அமைந்துவிடும். இத்தகைய கருத்துக்களுக்கு எதிராக, செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Perplexity-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் சீனிவாசன், தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
DeepSeek நிறுவனம் மிகக் குறைந்த முதலீட்டில் இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியது மட்டுமல்லாமல், பல நூறு மில்லியன் டாலர் முதலீடுகளுடன் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டியிடக்கூடிய திறனுடன் நிற்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிகழ்ந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட திறன்குறைந்த சில்லுகளைக் கொண்டே, சீன நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு உகந்ததல்ல என்று கருதி, பிரத்தியேகமாக தயாரித்த திறன்குறைந்த H800 சில்லுகளையே சீனா சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும், முதலாளித்துவ நாடுகளும் வெறுமனே வர்த்தக கட்டுப்பாடுகள் மூலம் அனைத்து வகையான தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் ஒருமுகமாகக் கட்டுப்படுத்தி, தங்களுடைய ஏகபோக ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என்ற எளிய உண்மையை, மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகே உணர்ந்து கொண்டுள்ளன.
அரட்டை செயலிகள் (Chatbot) நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகச் சிறந்த பதில்களை அளிப்பதோடு, மிகப்பெரிய கட்டுரை அல்லது ஒரு புத்தகத்தின் சாரத்தையும் சிறப்பான சுருக்கத்தையும் தரவல்லது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகிள் தேடலின் ஒரு மேம்பட்ட வடிவமாகும். ChatGPT தளம் இதற்கு மேல் தரவுகளை ஆழ்ந்து பகுப்பாய்வு செய்வது சாத்தியமற்றது. இத்தகைய பின்னடைவுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, OpenAI மற்றும் பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பகுப்பாய்வு மாதிரிகளை (Reasoning Model) பெரும் மொழித் திரளுக்கு உள்ளீடாக (Large Language Model) கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவின் அடுத்த நகர்வான செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence) தொழில்நுட்பத்தை நோக்கி நகர முடியும். சாம் ஆல்ட்மன் மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், செயற்கை பொது நுண்ணறிவு என்பது அவ்வளவு அருகில் இல்லை என்று நம்மை நம்ப வைக்க முயல்கின்றனர். நாம் தற்போது விவாதிக்கும் புதிய முன்னேற்றங்கள் பகுப்பாய்வு மாதிரி தளத்தில் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் இதைச் செய்து முடிப்பதற்கு முன்னதாகவே, அந்நிறுவனங்களின் மாதிரிகளுக்கு இணையாக செயல்படக்கூடிய மாதிரியை DeepSeek உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத்தான், அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை சீனா நிறுவனம் முழுங்கிவிட்டதா? என்ற அடிப்படையில் பல கட்டுரைகளையும் செய்திகளையும் காண முடிகிறது.
ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது என்னவென்றால், ஒரு சீன நிறுவனம் அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்புகளுடன் சரிசமமாகப் போட்டியிடுகிறது என்பதல்ல, மாறாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாத, வெறும் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நிறுவனம், மிகக் குறைந்த முதலீட்டுடன் (அதாவது 6 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக) செலவழித்து, வெறும் இரண்டே மாதங்களில், என்விடியாவின் செயலிழக்கச் செய்யப்பட்ட H800 சில்லுகளைப் (சீனாவுக்கு வன்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அமெரிக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியில்) பயன்படுத்தி, OpenAI-க்கு இணையான ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி, அத்துறையில் இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிகழ்த்தியுள்ளது என்பதேயாகும். சீன நிறுவனத்தின் இந்த DeepSeek செயற்கை நுண்ணறிவு மாதிரியின் சாதனையைப் பற்றி தொழில்நுட்பம் சார்ந்து மிகுந்த சந்தேகங்களை வெளிப்படுத்தியவர்களுக்காக, DeepSeek நிறுவனம் தங்கள் குழு என்னென்ன செய்துள்ளது, என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டுள்ளது, இந்தச் சாதனையை எவ்வாறு நிகழ்த்தியுள்ளது என அனைத்தையும் விரிவாக ஆவணப்படுத்தி, அந்த ஆவணத்தையும் மூல நிரல்களையும் பொதுவெளியில் அனைவரும் அணுகும்படி வெளியிட்டுள்ளது.
DeepSeek-க்குப் பின்னால் உள்ள நிறுவனம் எது? அந்நிறுவனத்தை நிர்வகிப்பது யார்?
DeepSeek-க்குப் பின்னால் உள்ளவர்கள் நிதிச் சந்தையில் “Quants” என்று அழைக்கப்படும் ஒரு குழு. Quants என்பவர்கள் நிதிச் சந்தை உலகில் ஈடுபடும் கணிதவியலாளர்கள், மாதிரி உருவாக்கும் வல்லுநர்கள் மற்றும் நிரலாக்க வல்லுநர்கள் போன்றவர்கள் ஆவார்கள். அமெரிக்க நாட்டின் பங்கு வர்த்தகத்தின் தலைநகராகக் கருதப்படும் வால் ஸ்ட்ரீட்டில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரண கர்த்தாக்களும் இக்குழுவினரே ஆவார்கள். 2008-ல் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு, இக்குழுவின் ஒரு சிறு பகுதியினர் பங்குச் சந்தையில் தங்களது நம்பிக்கையை இழந்திருந்தாலும், இவர்களை முற்றாகத் தவிர்த்து நிதி மூலதன நிறுவனங்கள் ஒருபோதும் செயல்பட முடியாது என்பதே எதார்த்தம். சீனாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள், அமெரிக்க நிதி நிறுவனங்களைப் போலன்றி, மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சீன அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டே செயல்பட முடியும். 2012-ல் தனது மொத்த பங்கின் மூன்றில் ஒரு பங்கான 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கை இழந்த லியாங் வென்ஃபெங் என்பவரே DeepSeek நிறுவனத்தை நிறுவினார். தன்னுடைய பங்கின் ஒரு பகுதியைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட ஒரு குழுவையும் உருவாக்கினார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க, DeepSeek கணிதவியல் சார்ந்து எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தவில்லை. கணினி திறனை அதிகரிக்க பணத்தை விரையமாக்காமல், மாறாக தொழில்நுட்பம் சார்ந்த பகுதியில் திறன்மிக்க மாற்றங்களைச் செய்து, இரண்டு மாதிரிகளை உருவாக்கி வெளியிட முடிவு செய்தனர். இத்துறையில் நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப வல்லுநரான ஜெஃப்ரி இமானுவேல், “OpenAI மற்றும் Anthropic மாதிரிகளுக்கு இணையாக செயல்படும் விதத்தில் இந்த DeepSeek மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது மெட்டாவின் Llama3 மாதிரி மற்றும் சில திறந்த மூலநிரலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய மாதிரியான Mistral போன்றவற்றை விட அதிக திறன்கொண்டது” என தனது கட்டுரையில் எழுதியுள்ளார். இவ்விரு மாதிரிகளும் DeepSeek-V3 (GPT-4o மற்றும் Claude 3.5 Sonnet-க்கான மாற்றாகவும்) மற்றும் DeepSeek-R1 (OpenAI-ன் O1 மாதிரிக்கான மாற்றாகவும்) என பெயரிடப்பட்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் தங்கள் மாதிரியை உருவாக்க செலவழித்த அல்லது செலவழித்ததாகச் சொல்லக்கூடிய தொகையில் அதிகபட்சமாக 5% முதலீட்டளவில், DeepSeek மாதிரியை உருவாக்கியுள்ளனர். ஜெஃப்ரி இமானுவேலின் மதிப்பீட்டின்படி, DeepSeek மற்ற நவீன செயற்கை நுண்ணறிவுத் தளங்களை விட 45 முதல் 50 மடங்கு திறன்மிக்கது.
DeepSeek மாதிரிகள் பொது தளத்தில் வெளியிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், MIT உரிமத்தின் கீழ் திறந்த மூலநிரலாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த மாதிரிகளும் அதன் மூலநிரல்கள் அனைத்தும் GitHub தளத்தில் அனைவரும் அணுகும் விதமாக எளிதாகக் கிடைக்கின்றன. மேலும், DeepSeek உருவாக்கிய முறையினையும் ஒவ்வொரு படிநிலையும் விளக்கி, இரண்டு விரிவான தொழில்நுட்ப அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்கள். மாதிரிகள், அதன் கோட்பாடு, மற்றும் எவ்வாறு பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து தீர்வை அடைந்தனர் என அனைத்தையும் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிட்டுள்ளதால், நாம் இந்த மாதிரியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களுடைய சொந்த வழங்கியில் நிறுவி, நமக்குத் தகுந்தாற்போல் இயக்கவும் முடியும், மேற்கொண்டு பகுப்பாய்வு செய்யவும் முடியும்.
DeepSeek அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அது டிஜிட்டல் உலகில் மூன்று வகையான பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடையத் தொடங்கியதிலிருந்து, அதன் மூலம் பெரும் பயனை அடைந்தது சில்லுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள என்விடியா நிறுவனம். DeepSeek அறிமுகத்தினால், அந்நிறுவனத்தின் பங்கு பெருமளவு சரிந்துள்ளதை நாம் ஏற்கனவே கண்கூடாகக் காண முடிகிறது.
இரண்டாவதாக, மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் கூறிவந்தபடி, செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்க பெருமளவு முதலீடு தேவை என்னும் மாயையும் தகர்ந்துள்ளது. இதனால், இனி பல புதிய சிறிய நிறுவனங்கள் குறைந்த முதலீட்டில் இத்துறையில் ஈடுபடும் வாய்ப்பை DeepSeek திறந்துவிட்டுள்ளது.
இறுதியாக, தொழில்நுட்ப பரிமாற்றங்களை சில வர்த்தக ஒப்பந்தங்களின் வழியாகத் தடுப்பதன் மூலம், குறிப்பிட்ட துறையில் நிகழும் வளர்ச்சியையும் அதன் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட குழுமமோ அல்லது குறிப்பிட்ட நாடோ அதன் ஏகபோக உரிமைகளை என்றென்றும் அனுபவிக்கலாம் என்னும் கருத்து மீண்டும் தகர்க்கப்பட்டுள்ளது. இதை நம் நாட்டில் நிகழ்ந்த அணு ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறையில் நிகழ்ந்த வளர்ச்சியைக் கொண்டு அறிந்துகொள்ள முடியும். இதே போன்று, தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் சீனாவிலும் நிகழ்ந்துள்ளது.
இதன் தாக்கம் இத்தோடு நிற்கப்போவதில்லை. வெறும் வன்பொருட்களைக் கூடுதலாகச் சேர்ப்பதாலோ, பெருமளவு முதலீடு செய்வதாலோ, கணினிகளின் திறனை அதிகரித்து, அதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மாதிரியின் செயல்திறனை அதிகரித்து, அத்துறையில் முன்னிலை வகிக்கலாம் என்னும் கருத்தாக்கமும் தகர்க்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னிலை வகிக்க, மிகப்பெரிய தரவு மையங்களை அமைக்க வேண்டுமா? நுண்செயலிகள் மற்றும் கணினி வளர்ச்சியின் போக்கும், அவை ஏற்படுத்திய தொழில்நுட்பப் புரட்சியும் நாம் நன்கு அறிந்ததே. 1960 களில், ஒரு கணினியை உருவாக்கி பயன்படுத்த IBM நிறுவனம் எத்தகைய பெரும் கட்டிடங்களைக் கட்டியது என்பதும் நாம் அறிந்ததே. இதுபோன்ற பழைய நிகழ்வுகளின் தாக்கங்களின் பொருட்டே, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற இரண்டாவது நாளிலேயே, OpenAI-ன் StarGate என்னும் திட்டத்திற்கு 500 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்தப் பார்வையின் உள்ளார்ந்த எண்ணம் என்னவென்றால், பெரும்பாலும் என்விடியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த உயர்தர படிம செயலகங்களை (GPU) மிக அதிக எண்ணிக்கையில் கொண்ட மிகப்பெரிய தரவு மையங்களை அமைப்பதுதான் அடிப்படைத் தேவை.
DeepSeek தொழில்நுட்பத் துறையை மட்டும் புரட்டிப் போட்டது மட்டுமல்லாமல், மின்சக்தித் துறையிலுள்ள பிரச்சினையையும் கவனத்தில் கொண்டு வந்துள்ளது. ஏனெனில், மிகப்பெரிய தரவு மையங்களுக்கு பெருமளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இயற்கை எரிவாயுவைப் பெருமளவு மின்னாற்றலுக்குப் பயன்படுத்தும் தனது பார்வையை ஏற்கனவே முன்வைத்திருந்தார். இதனால், அமெரிக்கா வெளியிடும் பசுமை இல்ல வாயுவின் அளவு உயரும் அபாயம் உள்ளது. உடனடியாக நிலவிவரும் மின்னாற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய, சூரிய மற்றும் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்னாற்றலுடன், இயற்கை எரிவாயு ஆற்றல் துறையும் போட்டியில் இறங்கும் நிலையும் இருந்தது. இவற்றின் மின் உற்பத்தி செலவுகள், இயற்கை எரிவாயு உற்பத்தி செலவுக்கும் கீழே தொடர்ந்து குறைந்துவருகிறது. எனவே, எப்பொழுதும் பெரியது அல்லது பிரமாண்டமானது சிறந்தது என்ற கருத்து மீண்டும் ஒருமுறை பொய்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகரிப்பின் அச்சுறுத்தலையும் DeepSeek-ன் அறிமுகம் குறைத்துள்ளது.
புரட்சியாளர் லெனின் கூறியது போன்று, “எந்தவொரு நிகழ்வும் நிகழாத பல பத்தாண்டுகளும் உள்ளது; பல பத்தாண்டுகளுக்கான நிகழ்வுகள் நிகழும் ஒரு சில வாரங்களும் உள்ளது.” DeepSeek-ன் வருகை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிகழ்ந்த அத்தகையதொரு நிகழ்வாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
https://www.newsclick.in/deepseeks-deep-shock-ai-world
DeepSeek’s Deep Shock to the AI World
தமிழில்: ரகுராம்