மற்றவை

திமுக அரசின் இந்துப்பெரும்பான்மைவாத அரசியலும் பாஜக வின் அடாவடி அரசியல் எழுச்சியும் 

thiruparangunram issue

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை விவாதிக்கும் முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

  • தர்காவில் ஆடு கோழி படைத்து வழிபடும் முறை, காலங்காலமாக நடைமுறையில் இருக்கிறது 
  • இஸ்லாமியர் மட்டுமல்லாது இந்துகளும் இத்தகைய வழிபாட்டைச் செய்கின்றனர் 
  • கார்த்திகைதீபம் ஏற்றும் மலைக்குன்றும், தர்கா இருக்கிற மலைக்குன்றும் மலையின் வேறுவேறு பகுதிகள். அந்தப் பிரச்சனைக்கும் இப்போதைய பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை.
  • முருகன் கோவில் மலையடிவாரத்திலும் தர்கா மலை உச்சியிலும், காசி விஸ்வநாதர் கோயில் மலையின் வலதுபுறத்தில் தனியாகவும் வெவ்வேறு பாதைகளைக் கொண்டிருக்கின்றன.
  • விஸ்வநாதர் கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்கப்படும் முன், இந்தக்கோயில் மற்றும் தர்காவுக்கு நெல்லித்தோப்பு வரை ஒரே பாதையும், அதை அடுத்து வெவ்வேறு பாதைகளும் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
  • நெல்லித்தோப்பு மற்றும் அதிலிருந்து தர்கா வரை, இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்று நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • நவாஸ்கனி சென்றபிறகே விவகாரம் பெரிதாகியது என்பது விசமப்பிரச்சாரம். விவகாரம் தொடங்கியபிறகே, வக்ஃப் வாரியத் தலைவரான நவாஸ்கனி அங்கே சென்றார்.
  • இஸ்லாமியர்கள் மலை முழுவதற்கும் ஒருபோதும் உரிமை கோரவில்லை. தங்களுக்குச் சொந்தமான இடத்தில் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக நிற்கின்றனர்.

பிரச்சனையின் பின்னணி :

இந்து முன்னணியின் புகாரைத் தொடர்ந்து, உள்ளூர் காவல் நிலையம், கந்தூரி கொடுக்கச்சென்ற மக்களைத் தடுக்கிறது. இந்துசமய அறநிலைத்துறையும், இதற்குத் தடையிட்டு, பிரச்சனையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளுமாறு தர்கா நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறது (தி இந்து செய்தி). இதைத் தொடர்ந்து ஜனவரி தொடக்கத்தில் இஸ்லாமியக் கட்சிகளும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தொடர்ந்து வக்ஃப் வாரியத்தின் உறுப்பினரும் எம்எல்ஏவுமான அப்துல் சமது மற்றும், வாரியத்தலைவரும் எம்பியுமான நவாஸ்கனியும் அடுத்தடுத்து வருகின்றனர். நவாஸ்கனி மலைப்படியில் அசைவ உணவு உண்கிறார். தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் வருகிறார்.  நவாஸ்கனியைச் செருப்பால் அடிப்பேன் எனப் பேசுகிறார். இந்து முன்னணி மற்றும் சங் பரிவாரங்கள், நவாஸ்கனி மலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார், அவர் தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்கின்றன. எச்.ராஜா, “மலையைச் சிக்கந்தர்மலை என்று மாற்றப் பார்க்கின்றனர். அது ஸ்கந்தமலை. சிக்கந்தர் என்பவன் கோயிலை இடிக்கவந்தவன், முருகபக்தர்களால் கொல்லப்பட்டவன், அங்கே தர்கா இருக்கக்கூடாது” எனப் பகிரங்கமாகப் பேசுகிறார். பிப் 4 ம்தேதி, இந்துத்வ அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கின்றன. ஜனவரி இறுதியில் மதுரையின் முற்போக்கு அமைப்பினர் மதநல்லிணக்கப் பேரணி அறிவிக்கின்றனர். அதை நிறுத்திவைத்துவிட்டு, ஆட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். ஊடகச் சந்திப்பையும் நடத்துகின்றனர்.

பிப் 3 மற்றும் 4 வரை மதுரையில் 144 தடை பிறப்பிக்கப்படுகிறது. சங் பரிவாரத்துக்குப், பழங்காநத்தத்தில் பிப் 4, மாலை ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

“இன்னொரு அயோத்தி அரசியல் இது, தர்காவை இடமாற்றம் செய்யவேண்டும்” என வெளிப்படையாக இந்துத்துவச் சக்திகள் ஆயிரக்கணக்கில்கூடி ஆர்ப்பரித்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டுத் தங்கள் கடமையினை முடித்துக்கொண்டன.

இந்துத்துவத்தின் வெறுப்பரசியலும் திராவிட அரசியலின் பெரும்பான்மைவாதச் சமரசமும்:

அரசியல் சாசனத்தை ஒருபோதும் மதிக்காத சங் பரிவாரம், நீதிமன்றத் தீர்ப்புகளையும், சட்டவழியிலான இஸ்லாமியர் உரிமைகளையும் மிகத்துணிச்சலாக மீறி வெறுப்பரசியலைச் செய்கிறது. ‘சிக்கந்தர்’ யார் என்று வரலாற்று ஆய்வுகளே இல்லாமல் கோரிப்பாளையத்தோடு முடிச்சுப்போட்டு, தர்காவை இடமாற்றம் செய்வதே ஒரே தீர்வு என்று கூச்சலிடுகிறது. மலை முழுவதையும் சொந்தம் என்று கூவி, இல்லாதனவற்றைச் சொல்லி, சாமானிய இந்து மக்களைத் தூண்டிவிடுகிறது. அடுத்த அயோத்தி எனக் கொக்கரிக்கிறது. இது சங் பரிவாரத்தின் வழமையான வெறுப்பரசியல் தந்திரம் என்று அரசியல் தெரிந்த அனைவருக்கும் புரியும்.

தமிழக அரசிற்கு மட்டும்  சங் பரிவாரத்தின் அரசியல் உக்கிரம் புரியவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

“யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தர்காவிற்குச் சென்ற இஸ்லாமியர்களைத் தடுத்தது, வழக்குப் பதிந்தது, இந்துசமய அறநிலைத்துறையின் மூலம்  தடைபோட்டது, வேலூர் இப்ராஹிம் முதல் எச்.ராஜா வரை யாரையும் கைது செய்யாதது, தனது ஆர்ப்பாட்டத்திற்காக சங் பரிவாரம் நீதிமன்றத்தில் வாதாடும்போது, வலுவற்ற வாதங்களை முன்வைத்து வழிவிட்டது” எனத் தமிழக அரசின் செயற்பாடு, நடவடிக்கைகள் அனைத்தும் விவாதத்துக்குரியன.

அமைச்சர் சேகர் பாபுவின் அரசியல் என்றோ, உள்ளூர் காவல்துறையின் நடவடிக்கை என்றோ, போலிஸ் துறையில் சங் ஊடுருவல் என்றோ இந்த விவகாரத்தைச் சுருக்கமுடியாது.

திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும், அமைப்புகளும் உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிற சித்திரிப்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக்கொண்டவை. இந்தியச் சுதந்திரப் போரிலேயே கருக்கொண்ட இந்துதேசியவாதத்தை இங்கே இருக்கிற கட்சிகள் பலவும் விவாதமின்றிச் சாதாரணமாக அணுகுகின்றன. ஐம்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி இந்துதேசிய அரசியலுக்குக் கால்கோளிட்டு, மதச்சிறுபான்மையினரின் வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படக் களம் அமைத்துக்கொடுத்தது.

சங் பரிவாரம் தன் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, கஷ்மீர் முதல் குமரி வரை மதவெறுப்பரசியலைச் செய்வது மட்டுமல்லாமல் அதற்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பையும் வாய்ப்புள்ள போதெல்லாம் ஏற்படுத்திக்கொள்கிறது. நேரு காலத்தில் தொடங்கிய ராமர் கோயில் விவகாரம் மோடி காலத்தில் வெற்றிபெற்றது. இம்மண்ணின் குடிகளான இஸ்லாமியர்கள் படிப்படியாக இரண்டாம்தரக் குடிகளாக்கப்படுகின்றனர். பாபர் மசூதி, ஞானவாஃபி, மதுரா என்று நீளும் அரசியல் திருப்பரங்குன்றம் வரை வந்துவிட்டது. மாட்டரசியல், தலாக் விவகாரம் என்று கலாச்சாரத் தளத்திலும், பொதுசிவில் சட்டம், குடியுரிமைச் சட்டம் என்று அரசியல் தளத்திலும் இஸ்லாமியர் வாழ்வியல் உரிமைகளை ஒடுக்கி இந்துதேசத்தைக் கட்ட சங் பரிவாரம் தொடர்ந்து முயற்சிக்கிறது. பாஜக அல்லாத காங்கிரஸ், பகுஜன், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பிற கட்சிகளும் இந்துப்பெரும்பான்மைவாத அரசியலையே செய்கின்றன.

திமுக பொதுவாகச் ‘சிறுபான்மையினக் காவலன்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், ஆழ்ந்து நோக்கினால் திமுகவின் இந்துப்பெரும்பான்மைவாத நிகழ்ச்சிநிரல் புரியவரும். நாடாளுமன்றத்தேர்தலில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தைக் கண்டுகொள்ளாதது, என்ஐஏ மசோதா ஆதரவு, என்ஐஏ அலுவலகங்கள் திறக்க அனுமதித்தது, பள்ளிகளில் பாராயணம், பிரமாண்ட முருகன் சிலை முன்னெடுப்பு என்று, திமுக அரசின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தால் அதன் இந்துப்பெரும்பான்மைவாத அரசியல் வெளிப்படையாகப் புரியும்.

இந்தத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கைகள் கவலையளிக்கக் கூடிய வகையில்தான் இருக்கின்றன.

சட்டப்பூர்வ உரிமை பெற்ற இஸ்லாமியர்களை வெறும் புகார் அடிப்படையில் தடுத்தது மட்டுமல்லாமல், சிலர் மீது வழக்குத் தொடுத்தது, இந்துசமய அறநிலையத்துறையின் தலையீடு, 144 தடை, நீதிமன்றத்தில் வலுவற்ற வாதத்தை முன்வைத்தது, வெறுப்பரசியல் பேச்சுகளுக்காக எச்.ராஜாவைக் கைது செய்யாதது என, தமிழக அரசு இந்த விவகாரத்தை மிகச்சாதாரணமாகக் கையாளுவது சங் பரிவாரத்திற்கு ஆதரவாகவே அமையும்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாகப் பேசி, தர்காவை இடமாற்றம் செய்வதே தீர்வு என்று பேசும் சங்கிகளைக் கைதுசெய்யத் தமிழக அரசை  எது தடுக்கிறது? 

தனது நான்காண்டுகால ஆட்சியின் தோல்விகளை, மக்கள் எதிர்ப்பை மடைமாற்ற நாதகவின் வெறுப்பரசியல் மற்றும் சங் பரிவாரத்தின் வெறுப்பரசியலைக் கொண்டு மடைமாற்றுகிறதா திமுக அரசு?

சங் பரிவாரத்தின் வெளிப்படையான இந்த அரசியல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடியது என்பது வரலாறு.

பழநி, சென்னிமலை என்று தொடங்கிய சங்கிகள், திருப்பரங்குன்றம் வரை தொடர்கின்றனர். வேல் எடுத்தாலும், கோல் எடுத்தாலும் மக்கள் இவர்களை நம்பப்போவதில்லை என்றாலும், இந்த அட்டூழிய அரசியலை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஆளுகின்ற திமுகவுக்கே  இருக்கிறது. மக்களைத் துண்டாடி லாபம் அடையத் துடிக்கும் சங் பரிவார அரசியலை தொடக்கத்திலேயே முற்றாக நிறுத்தவேண்டும்.

சங்கிகளை முறியடிக்கத் தெருக்களுக்குச் செல்லவேண்டும்

  • சங் என்ற சொல்லே இங்கு பாடாய்ப்படுகிறது. கருப்புச்சங்கி, பச்சைச் சங்கி, வெள்ளைச் சங்கி, நீலச்சங்கி, சிவப்புச்சங்கி என்று சங்கி என்ற சொல் சரளமாக எடுத்தாளப்படுகிறது. சங் என்பது இந்துத்துவவாதிகளைக் குறிக்கும் அரசியல் சொல். அச்சொல்லை பிறருக்கு, பிறவற்றுக்கு எடுத்தாளக்கூடாது என்பதை விளக்கவேண்டும்.
  • இஸ்லாமியர் அரசியல் விவகாரங்களை, உரிமைகளை மத அரசியலாகச் சுருக்கி, அவர்களுடைய அரசியலை இந்துத்வ அரசியலோடு சமப்படுத்தும் அரசியலைக் கைவிட்டு இஸ்லாமிய அரசியல் வெளியை அணுகவேண்டும்
  • பாஜகவை எதிர்க்கும் துருப்புச்சீட்டாக இஸ்லாமியர்களை அணுகாமல், அவர்களுடைய வாழ்வியல் உரிமைக்கு நிற்கவேண்டும்
  • இஸ்லாமியர்களைக் கஸ்டடி அரசியல் செய்யாமல், அவர்களுடைய அரசியல் உரிமைக்கு நிற்கவேண்டும்.
  • இஸ்லாமியர்களின் பண்பாட்டு உரிமைகளைப் பற்றிய புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில் முற்போக்குச் சக்திகளின் வேலைத் திட்டம் இருக்கவேண்டும் 

தமிழக அரசிற்குக் கோரிக்கை 

  • எச் ராஜாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்
  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளின் படி இஸ்லாமியர்களின் வழிபாட்டுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
  • சமயநல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி, அனைத்துத்தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும்
  • மலையைச் சுற்றி நடக்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.