பாலினப் பாகுபாடு மற்றும் சமூகம்
சமூகத்தில் நிலவும் பலவிதமான பாகுபாடுகளில் பாலினப் பாகுபாடும் ஒன்று. பாலின சமத்துவத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ‘குழந்தைகள் மத்தியில் இருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று ஆசிரியர் இந்த நூலை நமக்கு வழங்கியுள்ளார்.
நூல்: சாந்த நாயகம், ஆணா? பெண்ணா?
கதை: Camera – etc
தமிழில்: நர்மதா தேவி.
பால் மற்றும் பாலினப்படுத்துதல்
நாம் பல இடங்களில் பயன்படுத்தி வரும் இந்த இரண்டு சொற்களுக்கு என்ன வேறுபாடு இருக்கிறது?
- பால்: இயற்கையானது, உடல் ரீதியானது. இது வெளிப்படையாக தெரியக்கூடிய பால் உறுப்புகளின் வித்தியாசங்களையும், செயல்பாடுகளையும் குறிக்கிறது. இது உயிரியல் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.
- பாலினப்படுத்துதல்: இந்த சொல்லே பாலின சமத்துவத்தை தடைசெய்யும் சொல். இது வெறும் சொல்லால் அல்ல, அதன் பொருளாலும், கட்டுக்கதைகளாலும் தடைசெய்யப்படுகிறது. பாலினம் என்பது சமூக, கலாச்சார ரீதியானது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. காலத்திற்கு காலம், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம், குடும்பத்திற்கு குடும்பம் வேறுபடக்கூடியது. இந்த பாலினம்தான் பெண்மை, ஆண்மை போன்ற தன்மைகளைக் குறிப்பிடுகிறது.
பெண், ஆண், திருநர்கள் என்ற பால் அடிப்படையிலான வேறுபாடுகள் அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், பெண்மை, ஆண்மை என்ற பாலினப்படுத்தப்பட்ட சமூக மற்றும் கலாச்சார ரீதியான பாகுபாடுகள்தான் பிரச்சினையாக உள்ளன. இந்த பிரச்சினை இன்றோ நேற்றோ அல்லது கடந்த சில ஆண்டுகளில் தோன்றியதல்ல. இது அடிமை சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு மாறுவதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடங்கியது. தாய்வழி சமூகம் மறைந்து, தந்தைவழி சமூகம் உருவான காலத்தில் இருந்து, அதாவது வேட்டையாடும் சமூகத்தில் இருந்து வேளாண் சமூகத்திற்கு மாறிய காலத்தில் இருந்தே தொடங்கிய பாகுபாடுகள் இவை. சொத்து ஒரு இடத்தில் குவியத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த பாகுபாடுகள் தொடங்கின. அதன் நீட்சியாக, இன்று அனைத்து இடங்களிலும் பாலின பாகுபாட்டைக் காண்கிறோம். வீட்டில் ஆரம்பித்து, பிறந்த நொடியில் இருந்தே, ஆண் குழந்தை பிறந்தால் “சிங்கக்குட்டி பிறந்திருக்கிறான், ராஜா பிறந்திருக்கிறான்” என்றும், பெண் குழந்தை பிறந்தால் “தேவதை பிறந்திருக்கிறாள்” என்றும் கூறப்படுகிறது. “அண்ணனுக்கு இரண்டு தோசை, தங்கைக்கு (பாப்பாவுக்கு) ஒரு தோசை” என்று பாடல் பாடும் வரையிலும் இந்த பாகுபாடுகள் நீள்கின்றன.
வீட்டு வேலையில் உதவுவது பெண் குழந்தைகளுக்கானது என்றும், ஆண் குழந்தைகள் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வருவது என்றும் பிரிக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் கால் சட்டை, அவர்களுக்கு ஓடி ஆடி விளையாட ஏதுவாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கோ, ஓடினால் தடிக்கிவிடுமோ என்ற பயத்தைக் கொடுக்கும் கவுன், பாவாடை சட்டை போன்ற ஆடைகள்தான் அணிவிக்கப்படும்.
விளையாட்டுப் பொம்மைகளில் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு கார், பைக், ஏரோபிளேன் போன்ற சாகச விளையாட்டுப் பொம்மைகளும், பெண் குழந்தைகளுக்கு சொப்பு சாமான் போன்ற உட்கார்ந்து விளையாடும் பொம்மைகளும் தரப்படுகின்றன.
பள்ளிக்கு கொண்டு செல்லும் பைகளில் கூட, ஆண் குழந்தைகளின் பையில் ஸ்பைடர் மேன் படமும், பெண் குழந்தைகளின் பையில் பார்பி கேர்ள் படமும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பிறந்தநாள் கேக்குகள் கூட, ஆண் குழந்தைகளுக்கு ஒரு வகையிலும், பெண் குழந்தைகளுக்கு வேறு வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுபவை எல்லாமே விட்டுக்கொடுத்தல், கீழ்ப்படிதல், தியாகம், பொறுத்துக்கொள்ளுதல் போன்றவையாக இருக்கின்றன. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு வீரம், வேகம், முரட்டுத்தனம், அழக்கூடாது போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
வரலாற்று பின்னணி
ஆண்களை சமூகரீதியாக முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகள் ஆதிகாலத்தில் இருந்தே நடந்து வந்திருக்கின்றன. ஆண்கள் முரட்டுத்தனம் கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டதால், போர் புரியும் உரிமை ஆண்களுக்கே உரியதாக்கப்பட்டது. வேளாண் உற்பத்தி தொடங்கியபோது, ஆண்கள் கால்நடைகளை பாராமரிப்பது, அறுவடையை கவனிப்பது போன்ற பணிகளுக்கு வெளியே சென்றனர். பெண்கள் மறு உற்பத்தி, அதாவது பிள்ளை பெற்றெடுத்தல், அவர்களை பாராமரித்தல் போன்ற பணிகளுக்கு வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர். இப்படித்தான் வேலைப் பிரிவினை உருவானது. ஆண் உழைப்பிற்கு பண்டம், பொருட்கள், பணம் என வந்தன. பெண் உழைப்பிற்கு பண்டமும் இல்லை, பணமும் இல்லை. இலவச உழைப்பை மட்டுமே பெற்றுக்கொண்டார்கள். இன்றளவும் ஊதியம் இல்லா உழைப்பை பெண்கள் செய்து வருகிறார்கள். ஐ.நா கணக்கின் படி, 11 பில்லியன் டாலர் ஒரு ஆண்டுக்கு பெண்களின் உழைப்பு ஊதியம் இல்லா உழைப்பாக இருந்து வருகிறது.
கல்வி பெறுவது, அதிகாரத்திற்கு வருவது, சட்டங்கள் படிப்பது போன்றவை ஆண்களுக்கு இயல்பான உரிமைகளாக கருதப்பட்டன. பெண் குழந்தைகளைப் பார்த்து, “இன்னொருத்தர் வீட்டுக்கு கல்யாணமாகிப் போகிற பிள்ளை உனக்கு எதற்கு படிப்பு? இந்த படிப்பிற்கு ஏற்ற மாப்பிள்ளை உனக்குப் பார்க்க வேண்டும்” என்று பெற்றோர்கள் புலம்புவார்கள். இதனால் பெண் கல்வி தடைபட்டது.
இனி என்ன செய்ய வேண்டும்?
வீட்டு வேலைகளில் ஆண்களையும் பங்கெடுக்க வைக்க வேண்டும். கருவுறுதல் மட்டுமே பெண்களுக்கு உரியது. குழந்தை பராமரிப்பை ஆண்களும் செய்யலாம். இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வீட்டிலும், கல்வி நிறுவனங்களிலும் பாலின சமத்துவத்தைப் பற்றிய உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும்.
இந்த நூலின் ஆசிரியர், குழந்தைகள் மத்தியில் பாலின சமத்துவத்தை குழந்தைகளின் மொழியிலேயே பேச முயற்சி செய்துள்ளார். இது பல குழந்தைகள் வாங்கிப் படித்த நூல். இன்னும் பலரும் படிக்க வேண்டிய நூல்.
கதை சுருக்கம்
‘ஒரு ஊர்ல, ஒரு வீடு. அந்த வீட்ல ஆண் பிள்ளைகள் என்ன வேலை செய்ய வேண்டும், பெண் பிள்ளைகள் என்ன வேலை செய்ய வேண்டும்’ என்று எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்தது. அந்த வீட்டிற்கு உறவுக்காரக் குழந்தை ஒன்று விடுமுறைக்கு வருகிறது. அந்தக் குழந்தை வந்த பின், ஏற்கனவே அந்த வீட்டில் இருந்த சட்டங்களை தனக்கான இயல்பிலேயே அணுகுகிறது. அக்குழந்தை அணிந்திருந்த உடையும், அவ்வீட்டில் வழக்கப்படி இருந்த ஆண்களுக்கென்று பிரிக்கப்பட்ட வேலைகளை செய்ததும், ஆண் குழந்தை என்று வீட்டில் இருந்தோர் புரிந்து கொண்டனர். பழங்கள் மரத்திலிருந்து பறிப்பது, சந்தைக்கு மூட்டைகளை சுமந்து செல்வது போன்ற கடின வேலைகளை செய்தது. அவ்வீட்டில் ஒரு வழக்கம் இருந்தது, இரவில் குழந்தைகள் அனைவரும் ஒரே இடத்தில் குளிப்பார்கள். அப்படி குளிக்கும் போதுதான் அக்குழந்தை பெண் குழந்தை என்பது தெரிய வந்தது. ‘எப்படிடா, பெண் குழந்தை ஆண்களுக்கான வேலையை செய்தது?’ என்று மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். ‘ஆண் தனி வேலை செய்யனும், பெண் தனி வேலை செய்யனும்’ என்று சொல்வது எல்லாம் சும்மாதானா எனக் குழந்தைகள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள் கதையில். இதனை மிக இயல்பாக, பிரச்சார நெடியின்றி, கதையின் போக்கிலேயே சொல்வது போல எழுதியிருப்பது நூலின் சிறப்பு.
பெல்ஜியம் என்கிற நாட்டில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தயாரித்த குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்நூலை தமிழில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் நர்மதா.
– முத்துராணி