புத்தக அறிமுகம்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரு நூலோடு உரையாடுவோம் – வெ. ஸ்ரீஹரன்

549 (1)

ஸ்டீபன் ஹாக்கிங் – ஒரு அறிமுகம்

பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு உலகப் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரும் (Theoretical Physicist), பிரபஞ்சவியலாளரும் (Cosmologist) ஆவார். இயற்பியல் துறையின் ஜாம்பவான்களாக அறியப்படும் ஐசாக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றவர்களின் வரிசையில், சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கும் ஒரு வரலாற்று இடம் உண்டு என்று சொன்னால் மிகையில்லை. அவர் தன்னுடைய 21வது வயதிலேயே தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்ற குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக உடல் அசைவையும் பேச்சையும் இழந்தார். ஆனால் இந்த நோய் அவரின் உடலை முடக்கியதே தவிர, அறிவையும் மனத்தையும் முடக்கவில்லை. அவரால் கணினி மற்றும் மென்பொருள் உதவியுடன் மட்டுமே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே, தன் அறிவாற்றலால் பிரபஞ்சத்தின் தோற்றத்தை, அதன் எல்லையை, பிரபஞ்ச இயக்கத்தின் அடிநாதத்தை அறிய முற்பட்டார். அரிய நோயை எதிர்த்து அவர் வாழ்ந்த போராட்ட வாழ்வும், அறிவியல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், உலக மக்களிடையே அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரச் செய்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பேசிய திரைப்படம் தான் எடி ரெட்மேன் நடித்த ‘தியரி ஆப் எவரிதிங்’ (Theory of Everything).

சிக்கலான இயற்பியல் கோட்பாடுகளைக்கூட மிக எளிமையாக சாமானிய மக்களுக்கும் புரியும் வண்ணம் விளக்குவதில் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு வல்லவர் ஆவார். அவ்வகையில் அவர் வெகுஜன மக்களுக்காக எழுதிய முதல் நூல் தான் ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ (A Brief History of Time). இந்நூல் உலக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பொதுவாகப் பார்க்கும்போது, அறிவியல் கருத்துக்களை, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும், குறிப்பாகப் பார்க்கும்போது சமகால கோட்பாட்டு இயற்பியலை, பிரபஞ்சவியலைப் பற்றி சாமானிய மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும், இந்நூல் மகத்தான பங்காற்றி இருக்கிறது. இந்நூலைத் தொடர்ந்து வேறு சில வெகுஜன அறிவியல் நூல்களையும் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ளார். அவ்வகையில், கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றியும், மனித குலம் எதிர்கொள்ள இருக்கும் உடனடி சமூகப் பிரச்சனைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களையும் ஒரு நூலாகக் கொண்டு வந்துள்ளனர் மிக முக்கியமான 10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த பதில்கள் தான் ‘ஆழமான கேள்விகள், அறிவார்ந்த பதில்கள்’ (Brief Answers to the Big Questions). அவருடைய கடைசி நூலான இது, 2018இல் அவரின் மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

ஆழமான கேள்விகள்

பொதுவாக குழந்தைகள் கேள்விகள் கேட்பதைப் பெரியவர்கள் ஊக்குவிப்பதில்லை. கேள்விகள் பலருக்கு அசௌகரியத்தைத் தருகின்றன. கேள்விகளுக்கே இப்படியென்றால், பதில்களைத் தேடுவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலத்தின் முன் தொக்கி நிற்கும் 10 மிக முக்கியமான கேள்விகளை எழுப்பி, அதற்கு விடையளிக்கிறார்.

  1. கடவுள் இருக்கிறாரா?
  2. பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?
  3. பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் சிந்திக்கும் உயிரினங்கள் இருக்கின்றனவா?
  4. எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா?
  5. ஒரு கருந்துளைக்குள் (Black Hole) என்ன இருக்கிறது?
  6. நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் செல்வது சாத்தியமா?
  7. பூமியில் மனித குலம் தப்பிப் பிழைக்குமா?
  8. மனித குலம் அருகாமைக் கோள்களைக் காலனியாதிக்கம் செய்வது அவசியமா?
  9. செயற்கை நுண்ணறிவு மனித அறிவை விஞ்சுமா?
  10. நாம் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கப் போகிறோம்?

என்ற 10 கேள்விகளுக்கு, தனக்கே உரித்தான பகடியுடன் இந்நூலில் பதில் சொல்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ நூலோடு ஒரு ஒப்பீடு

கடவுளின் இருப்பை (இல்லாமையை)ப் பற்றிப் பகடி செய்வதில் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு வித்தகர் ஆவார். ஆனால் அந்தப் பகடியிலும் கூட தர்க்கமும் அறிவியலும் நிறைந்திருக்கும். அவ்வாறே இந்நூலிலும் நிறைய இடங்கள் இருக்கின்றன. ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ நூலில் கோட்பாட்டு இயற்பியலைப் பற்றியும், பிரபஞ்சவியலைப் பற்றியும், இவை இரண்டின் வரலாற்று வளர்ச்சிப் போக்கைப் பற்றியும் காலவரிசைப்படிப் பேசியிருப்பார். இந்நூலிலோ, ஒவ்வொரு கேள்விக்கும் தேவைப்படும் அறிவியல் கருத்துகளைப் பற்றி மட்டும் அந்தந்த விடைகளில் பேசுகிறார். அவருடைய முந்தைய புத்தகம் வெளியானதிலிருந்து இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலம் வரை கோட்பாட்டு இயற்பியலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய வண்ணம் அவருடைய பதில்கள் இருக்கின்றன. முந்தைய நூல் போலவே, தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைப் பற்றி இந்நூலிலும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.

இந்நூலின் சிறப்பம்சங்கள்

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) பயன்படுத்தி, ரோஜர் பென்ரோஸ் என்ற கோட்பாட்டு இயற்பியலாளரும், ஹாக்கிங்கும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தின் தொடக்க நிலையை விளக்க முற்பட்டார்கள் என்று விவரிக்கிறார். மானுடவியல் கொள்கையின் (Anthropic Principle) உதவியுடன் பிரபஞ்சத்தின் தற்போதைய நிலையை எப்படி எளிமையாக விளக்க முடிகிறது என்று பல உதாரணங்களை முன் வைத்துத் திகைப்பூட்டுகிறார். ‘எதிர்காலத்தை நம்மால் கணிக்க இயலுமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, குவாண்டம் இயங்கியலைப் (Quantum Mechanics) பற்றியும், நாம் பிரபஞ்சத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதிலிருந்து குவாண்டம் இயங்கியலின் விதிகள் எப்படி நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறார். கூடிய விரைவில், பிரபஞ்சத்தின் முழுமுதல் விதி (Theory of Everything) கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார். 

பிரபஞ்சத்தின் முழுமுதல் விதியைக் கண்டுபிடிப்பதில் முதற்கட்டமாக, பிரம்மாண்டமான ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டையும், நுணுக்கமான குவாண்டம் இயங்கியலையும் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த இணைந்த கோட்பாட்டை உருவாக்குவதில் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்றும் விளக்குகிறார். குறிப்பிட்ட நிறையை (Mass) கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம், தன் வாழ்நாளின் இறுதியில் எப்படி ஒரு கருந்துளையாக (Black Hole) மாறுகிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறார். கருந்துளைகளில் நிகழும் கற்பனைக்கும் எட்டாத அறிவியலையும், கருந்துளைகளை இயக்கும் முக்கியமான ‘பரப்பளவு தேற்றத்தை’ (Area Theorem) அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதையும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்குகிறார். “கருந்துளை” என்ற கருத்தாக்கத்துக்கே முரணாக, கருந்துளையிலிருந்து எப்படிக் கதிர்வீச்சு நடைபெறுகிறது என்றும், அந்தக் கதிர்வீச்சு எப்படி விஞ்ஞானிகளால் ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ (Hawking Radiation) என்று அறியப்படுகிறது என்றும் விளக்குகிறார். இப்படிப்பட்ட பல ஆச்சரியமூட்டும் அறிவியல் கருத்தாக்கங்களையும், கோட்பாடுகளையும் இந்நூல் கொண்டிருக்கிறது.

சில விமர்சனங்கள்:

அறிவியல் கருத்துக்களைத் தாண்டி, இந்நூலில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் சமூக-அரசியல்-பொருளாதார கருத்துக்களும் பிரதானமாக வெளிப்படுகின்றன. பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவதில், அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகள் மார்க்ஸிய-லெனினிய சித்தாந்தத்திற்கு ஏற்ப ஒரு விஞ்ஞான கோட்பாட்டை முன்வைத்ததாகவும், அறிவியல் என்பது சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு இடத்தில் விமர்சிக்கிறார். ஆனால், அவரது கூற்றுக்கே முரணாக, சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அவர் சொல்லும் தீர்வுகளில் முதலாளித்துவ சித்தாந்தமே பிரதானமாக வெளிப்படுகிறது.

சோவியத் ஒன்றியம் உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். வேறொரு இடத்தில், சோவியத் ஒன்றியம் ஒரு தோல்வியடைந்த முன்மாதிரி என்பதை அழுத்திச் சொல்கிறார். ஆனால், அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஒரு சில இடங்களில் மட்டும் “செல்லமாக” கடிந்து கொள்கிறார்! தற்போதைய அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள், ஆனால் வட கொரியாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்று வாசகர்களுக்கு திகிலூட்டுகிறார்.

சோசலிசத்தின் மீதும், சோவியத் ஒன்றியத்தின் மீதும், சோவியத் விஞ்ஞானத்தின் மீதும், சோவியத் விஞ்ஞானிகளின் மீதும் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு உள்ள ஒவ்வாமை அவ்வப்போது இந்நூலில் வெளிப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி என்பதாலோ என்னமோ, மனித குலம் பிழைக்க வேண்டுமானால் சந்திரனிலோ அல்லது செவ்வாயிலோ ஒரு ‘காலனி’யை வேண்டும் என்கிறார்! பேரண்டத்தின் புதிர்களுக்கான விடையை விண்வெளியில் தேடலாம். ஆனால், முதலாளித்துவத்தின் விளைவாக ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம், வருமானத்தில் சமத்துவமின்மை, செயற்கை நுண்ணறிவு போன்ற சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் பூமியிலேயே தேட வேண்டும்! இங்கேதான் அவற்றைச் சரி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, செவ்வாய் போன்ற வேறொரு கோளையோ அல்லது சந்திரனையோ ‘காலனியாக்கம்’ செய்து மனித குலத்தைத் தழைக்க வைக்கலாம் என்பது எலான் மஸ்க் போன்ற பெரும் முதலாளிகளுக்கான தீர்வாக இருக்கலாம். ஆனால், இது நடைமுறைக்கு உதவும் வெகுஜன உழைக்கும் மக்களுக்கான தீர்வாக இருக்க முடியாது! ஒட்டுமொத்த மனித குலத்துக்கான தீர்வாகவும் இருக்க முடியாது!

இறுதியாக:

“இரகசியம்” (The Secret) போன்ற போலி அறிவியல் நூல்கள் பிரச்சாரம் செய்யும் போலி அறிவியல் கருத்துக்களான, “நாம் உறுதியாக ஆசைப்பட்டால், ஈர்ப்பு சக்தியால் பிரபஞ்சம் அந்த ஆசையை நமக்கு நிறைவேற்றும்”, “பிரபஞ்சம் நமக்கு நல்லதையே தரும்” போன்ற அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத கருத்துக்களைச் சுக்கு நூறாகத் தகர்க்கிறது இந்நூல். பிரபஞ்சம் என்பது அவ்வளவு சாந்தமான இடம் அல்ல. பிரபஞ்சம் நம் கற்பனைக்கும் எட்டாத முரணியக்கங்களாலும், மோதல்களாலும், பௌதீக விசைகளாலும், ஆற்றலாலும், நிறைகளாலும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கொந்தளிப்பான இடம் என்று அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும்  வாசித்து, உள்வாங்கி, விமர்சித்து, விவாதித்து, பயன்பெற வேண்டிய நூல் இது. “காலத்தைப்” பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் சிந்திப்பதை நிறுத்திக்கொள்ளும் இறுதிக் காலத்துக்குள், நமக்காக இந்நூலைக் கொடுத்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை!

– வெ. ஸ்ரீஹரன்