– ஆங்கிலத்தில்: கார்த்திகேயன் சண்முகம் (நன்றி thewire.in)
– தமிழில் : விக்னேஷ்
சிஸ்கோ நிறுவனத்தில் தலித் ஊழியர் ஒருவர் சந்தித்த சாதிப் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டின் காரணமாக, அந்நிறுவனத்தின் மீது கலிபோர்னியா குடிமை உரிமைகள் துறை (CRD) கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், இந்த வழக்கு சாண்டா கிளாரா நகரத்தில் உள்ள கலிஃபோர்னியா மேல்நிலை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள இந்து மேலாதிக்கக் குழுக்கள், சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை எதிர்க்கின்றன. இத்தகைய பாதுகாப்புகள் அவர்களின் மத உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதிக்கின்றன என்று வாதிடுகின்றனர். சிஸ்கோ வழக்கில் CRD-யின் தலையீட்டிற்கு எதிர்ப்பின் உச்சமாக, அமெரிக்க இந்து அறக்கட்டளை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உலகளாவிய இந்து மேலாதிக்க இயக்கங்களின் முக்கிய அமைப்பாக அமெரிக்க இந்து அறக்கட்டளை (Hindu American Foundation – HAF) அறியப்படுகிறது.
அமெரிக்க இந்து அறக்கட்டளையின் இந்த வழக்கு, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாகப் பதியப்பட்டது. பின்னர், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த வழக்கு தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து, 2023-ம் ஆண்டு செப்டம்பரிலும், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டிலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கு CRD-யை இரண்டு முக்கிய அடித்தளங்களில் எதிர்க்கிறது:
- மத சுதந்திரத்திற்குள் தலையீடு: சாதிப் பாகுபாடு இருப்பதாக சிஸ்கோ நிறுவனத்தின் மீது CRD தொடுத்த வழக்கு, இந்து அமெரிக்கர்களின் மத சுதந்திரத்திற்குள் தலையிடுவதாக வாதிடுகிறது. இந்து மதத்துடன் சாதியத்தின் தொடர்பைக் குறிப்பிடும் புகாரின் ஆரம்பகால குறிப்புகள் நீக்கப்பட்ட பின்னரும், இந்த வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
- வருங்கால வழக்குகளைத் தடுத்தல்: சாதிப் பாகுபாடு குறித்த வழக்குகளை வருங்காலத்தில் CRD பதிவு செய்வதைத் தடுக்கவும் அமெரிக்க இந்து அறக்கட்டளை கோரியுள்ளது.
நவம்பர் 15 அன்று, CRD தனது பதிலில், அமெரிக்க இந்து அறக்கட்டளை தொடுத்த இந்த வழக்கில் உருப்படியான வாதங்கள் இல்லை என்று குறிப்பிட்டு, வழக்கை முழுமையாக நிராகரிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. CRD-யின் புகார் எவ்விதத்திலும் மதச் சுதந்திரத்தை மீறவில்லை; மாறாக, பணியிடத்தில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டுக்கு எதிராக இந்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் பாதுகாப்பதோடு, அவர்களின் உரிமைகளை உறுதி செய்கிறது.
அமெரிக்க இந்து அறக்கட்டளை, சிஸ்கோவிற்கு எதிரான CRD-யின் வழக்கு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற பணியிட பாகுபாட்டு நடவடிக்கைகளிலிருந்து CRD-யை விலக்கி வைக்கவும் உச்சநீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த அபாயகரமான குற்றச்சாட்டை CRD விரிவாக எதிர்க்கிறது.
அமெரிக்க இந்து அறக்கட்டளை தொடுத்த இவ்வழக்கை, முக்கியமாக Younger abstention doctrine-ஐ முன்வைத்து CRD எதிர்த்தது. இந்தக் கொள்கை, கடந்த 1971-ம் ஆண்டில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க “Younger v. Harris (1971)” வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது, அமெரிக்க மாகாணங்களின் அரசு நிர்வாக உறுப்புகளின் சார்பாக முன்னெடுக்கப்படும் வழக்குகளில், மாகாண அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முடிவடையும் வரை உச்சநீதிமன்றம் தலையிடுவதைத் தடுக்கிறது. அமெரிக்காவின் கூட்டாட்சி முறையை இக்கொள்கை உறுதிப்படுத்துகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில், சம்பந்தப்பட்ட வழக்கு “அரசு நடவடிக்கை” எனும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாநில அரசு நடத்தும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தனியாக வழக்குத் தொடுக்க முடியாது. நடைபெற்று வரும் அரசு தரப்பு வழக்கின் மீது தனி வழக்குகள் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதால், இத்தகைய கட்டுப்பாடு இருக்கிறது.
சிஸ்கோவிற்கு எதிரான இவ்வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கான தனியொரு வழக்கறிஞராகவே CRD செயல்பட்டது என்றும், இது அரசு வழக்காக எடுத்துக்கொள்ளத் தகுதியற்றது என்றும் அமெரிக்க இந்து அறக்கட்டளை வாதிட்டது. தனது பதில் வாதத்தில், அமெரிக்க இந்து அறக்கட்டளை கூறியது:
“அரசு நடவடிக்கையில் (கலிபோர்னியா உயர்நீதிமன்றத்தில் நடக்கும் சிஸ்கோ வழக்கில்), முறையீட்டாளருக்கு வெறுமனே ஒரு வழக்கறிஞராக மட்டுமே CRD செயலாற்றுகிறது. சிஸ்கோ வழக்கில் பாதிக்கப்பட்டவர், அரசின் தலையீடு இன்றி, தாமே ஒரு தனியார் வழக்கறிஞரை அமர்த்தி முன்வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளையே CRD முன் வைத்திருக்கிறது. அது இரு தரப்பினருக்கு இடையே தீர்வுகளையே கோருகிறது. இத்தீர்வுகளை அரசின் தலையீடு இல்லாமல், முறையீட்டாளரே தன்னளவில் பெற்றுக்கொள்ள முடியும்.”
அமெரிக்க இந்து அறக்கட்டளையின் இந்த வாதம், CRD-யைப் பரந்துபட்ட மக்கள் நலனின் பிரதிநிதி என்ற பாத்திரத்திற்கு மாறாக, வெறுமனே தனியார் சட்டப் பிரதிநிதியாகவே காட்ட முயற்சிக்கிறது. இதன் மூலம், CRD-யின் அதிகாரத்தைக் குறைத்துக் காட்டுகிறது.
திருத்தப்பட்ட புகாரில், இந்து மதத்தையும் சாதியையும் இணைக்கும் குறிப்புகள் நீக்கப்பட்ட பின்னரும், சிஸ்கோ வழக்கின் ஆரம்பகால பிரதிவாதிகளான சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகியோரை அது பாதித்ததாக அமெரிக்க இந்து அறக்கட்டளை தனது வாதத்தை முன்வைத்தது. மேற்குறிப்பிட்ட இருவரின் கோரிக்கையின் அடிப்படையில், எதிர்வாதி தரப்பிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களது பெயர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டாலும், அவர்களது பெயர்கள் புகாரில் நீடிப்பதாகவும், மாநில நீதிமன்றத்தில் அந்த வழக்கின் அரசியல் சாசனத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அமெரிக்க இந்து அறக்கட்டளை தனது வாதத்தில் முன்வைத்தது.
மேலும், வழக்கின் நடப்பு அமர்வுகளில் தமது தலையீட்டுக்கு எதிராக மாநில நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தனது வாதத்தில் முன்வைத்துள்ளது. மேற்கூறியவையே, அமெரிக்க இந்து அறக்கட்டளை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தின் உட்கருவாகும்.
இதற்குப் பதிலளித்த CRD, மாநில நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேல் முறையீடு செய்ய அமெரிக்க இந்து அறக்கட்டளைக்கு வாய்ப்பிருந்ததாகவும், ஆனால் அதனை மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
அதேபோல, சுந்தர் ஐயர் மற்றும் ரமணா ஆகியோர், கலிபோர்னியா சட்டப்படி, பாகுபாடு குற்றச்சாட்டுகளில் தனிப்பட்ட ரீதியில் மேலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் “Reno v. Baird (1998)” வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தங்களை சிஸ்கோ வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதையும், அதனால் சிலரைத் துன்புறுத்துவதையும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அங்கு பணிபுரியும் மேலதிகாரிகளும் கண்காணிப்பாளர்களும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைக் கலிஃபோர்னியா சட்டங்கள் மேற்பார்வையிடுகின்றனவா என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
கலிஃபோர்னியா சட்டத்தின்படி, மேலாளரின் பணிகளான வேலைக்கு ஆட்களை எடுத்தல், ஏற்கனவே வேலை செய்பவர்களைப் பணிநீக்கம் செய்தல், பணியில் இருப்பவர்களுக்கு வேலைப் பிரிவினை செய்தல் ஆகிய அலுவலகப் பணி நடவடிக்கைகளில்தான் வழமையாக பாகுபாடுகள் எழுகின்றன.
அதேசமயம், மேலாளரின் அலுவலகக் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, மோசமாகவும் ஒருவர் மனதைப் புண்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்பவை குறித்து ஆய்வு செய்வது எல்லாம் கண்காணிப்பாளர்களின் பொறுப்பாகும்.
The Fair Employment and Housing Act (FEHA) என்பது, பணியிடத்தில் நிலவும் பாகுபாட்டுச் சூழலுக்கு, பணியமர்த்தும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதன் மூலம், அமைப்புரீதியான பணியிடப் பாகுபாட்டைத் தீர்ப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுவாக, அலுவலக ரீதியிலான பணியமர்த்தல், நீக்கல் தொடர்பான முடிவுகளுக்கு மேலாளர்கள் பொறுப்பாக்கப்பட மாட்டார்கள். அதே சமயம், அவர்களது இயல்பான பணி எல்லைக்கு அப்பாற்பட்டதான துன்புறுத்தல்கள்/வன்கொடுமைகள் உள்ளிட்ட நடத்தைகளுக்குத் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் பொறுப்பாக்கப்பட முடியும்.
சுந்தர் ஐயரும் ரமணாவும், தங்களது பெயர்களை சிஸ்கோ வழக்கிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையை வெற்றிகரமாக முன்வைத்த அதேசமயம், அவர்கள் மீதான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் எதிர்வினையாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர்களது பெயர்களும் நடவடிக்கைகளும் புகாரில் நீடிக்கின்றன என்று CRD சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் தங்கள் மீதான அவதூறாக அவர்கள் கருதுவதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக மட்டுமல்லாமல், “சம பாதுகாப்பு விதியை”ப் பிரயோகிப்பதன் மூலம், சிஸ்கோவுக்கு எதிரான CRD-யின் வழக்கிற்கு எதிராகவும், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க இந்து அறக்கட்டளையின் வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க இந்து அறக்கட்டளையின் வாதத்திற்கு CRD அளித்துள்ள பதிலில், “அரசு நடவடிக்கையில் CRD பொறுப்பேற்பதன் மீதான உடன்பாடின்மைதான், சுந்தர் ஐயர் மற்றும் ரமணா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ‘சம பாதுகாப்பு விதி’யின் கீழ் முன்வைக்கும் கோரிக்கைகளின் மையமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தக் கோரிக்கைகள் அரசு நடவடிக்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால், ‘யங்கர் விலகியிருத்தல்’ கொள்கையின்படி உச்சநீதிமன்றத்தில் அவர்களால் புதிய வழக்கைத் தொடுக்க முடியாது என்றும் CRD தனது வாதத்தை வைத்துள்ளது.
சிஸ்கோ வழக்கில் CRD ஒரு தனியார் வழக்கறிஞராக செயல்பட்டதாக அமெரிக்க இந்து அறக்கட்டளை முன்வைக்கும் வாதத்திற்கு, “அரசு நடவடிக்கையில் CRD-யின் பாத்திரம் குறித்த தவறான அடிப்படைப் புரிதல் இது” என்று விளக்கமளித்துள்ளது. கலிஃபோர்னியா அரசாங்கத்தின் சட்டப்பிரிவு 12965, உட்பிரிவு (a)(1)-ன் அடிப்படையில், CRD-யே பொது நலனின் அடிப்படையில் ஒரு முறையீட்டாளராகச் செயல்படுகிறது. அமெரிக்க இந்து அறக்கட்டளை குறிப்பிடுவது போல, தனியார் தரப்பாக செயல்படவில்லை.
மேலும், “அந்தப் பாத்திரத்தில் CRD வெறுமனே தனிநபருக்கான நிவாரணத்தை மட்டும் கோரவில்லை. தற்போதோ அல்லது வருங்காலத்திலோ சிஸ்கோவில் பணியாற்றக்கூடிய அனைத்து தனிநபர்களுக்கும், இது போன்ற பாகுபாடுகள் எக்காலத்திலும் நிலவாத நிலையை ஏற்படுத்தக்கூடிய விரிவான தவறுகளைத் தடுக்கக்கூடிய நிவாரணத்தையே கோருகிறது. FEHA-வின் அமலாக்க நடவடிக்கைகளுக்கான பொது அமைப்பாகவே CRD இருக்கிறது. FEHA நடவடிக்கைகளுக்காக வழக்காடுகையில், CRD சுதந்திரமாக செயல்படுவதோடு, ஒரு பணியாளர் பெறத்தக்க நிவாரணங்களைத் தாண்டியும் பல உரிமைகளைப் பெற முடியும்” என்று CRD அழுத்தமாகக் கூறியுள்ளது.
விரிவான நிவாரணங்களைப் பெற்றுத் தர, தனிப்பட்ட வழக்குகளுக்கு அப்பால் செல்வதன் மூலம், அமைப்புரீதியான பணியிடப் பாகுபாடுகளைக் கையாளுவதற்கான தனது பொறுப்பை CRD உறுதிசெய்கிறது. சிஸ்கோவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் பாகுபாட்டு நடைமுறைகளில் இருந்து பாதுகாப்பதோடு, நியாயமான சூழலை மேம்படுத்தும் வகையிலும் இந்த நிவாரணங்கள் இருக்கின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக, சிஸ்கோவிற்குள் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களில், சாதி, நிறம், தீண்டாமை, இழிசாதி, தலித், இந்தி, இந்து, பிராமின், சத்திரியன், வைசியன், சூத்திரன் உள்ளிட்ட குறிப்பான பதங்களை உள்ளடக்கிய தகவல் பரிமாற்றங்களைத் தருமாறு CRD கோரியுள்ளது. நிறுவனத்திற்குள் சாதி எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டே இதனைக் கோரியுள்ளது. பாகுபாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் தகவல் பரிமாற்றங்கள், மனிதவள அதிகாரியின் பொதுவான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புகார்களில், ஜனவரி 2012 முதல் நடப்பு வரையிலான தரவுகளை வழங்குமாறு CRD கோரியுள்ளது.
CRD-இன் ஆரம்பகட்ட கோரிக்கை, 21 பதங்களைக் கொண்ட விரிவான பட்டியலை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தப் பதங்களைக் கொண்ட சுமார் 3,48,000 ஆவணங்களையும் CRD-இடம் ஒப்படைப்பதற்கு முன்னர் பரிசீலனை செய்வதற்கு சுமார் 1.45 மில்லியன் டாலர் செலவாகும் என்ற வாதத்தை சிஸ்கோ நிறுவனம் முன்வைத்தது. கடந்த நவம்பர் 15, 2024 அன்று, நீதிமன்றம் தேடுதலுக்கான பதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மேலே குறிப்பிடப்பட்ட பதங்களை உள்ளடக்கிய ஆவணங்களை மட்டும் பகிருமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, சிஸ்கோ வழக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றைத் தடுப்பதற்கான மேம்பட்ட கொள்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் வகுத்துக் கொள்ள ஊக்குவிப்பதற்கான முன்மாதிரியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான சட்டப் பாதுகாப்புக்கு எதிராக, இந்து மேலாதிக்கவாதிகள் அவதூறாகவும் இழிவாகவும் பரந்துபட்ட பரப்புரையில் ஈடுபட்டு வரும் அதே வேளையில், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மை தனிநபர்கள் சாதிப் பாகுபாடுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்காத நிலைமையும் இருக்கையில், (நியாயமான பணிச்சூழல்) நிலைமைகள் சவாலானதாகவே இருக்கின்றன.
நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தனிநபர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை பணியிடங்களில் குறைந்துகொண்டே வருகிறது. இத்தகைய கட்டமைப்பில், சட்ட அமலாக்கத்தால் மட்டுமே பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
– கார்த்திகேயன் (நன்றி thewire.in)
– தமிழில் : விக்னேஷ்