அரசியல்புத்தக அறிமுகம்

பத்திரிகையாளர்கள் நடுநிலையானவர்கள் என்பதை நிராகரித்தவர்  கௌரி லங்கேஷ்…!

549

ப்ரன்ட்லைன் இதழில் வெளியான நேர்காணல்

தமிழில்:மோசஸ் பிரபு

ரோலோ ரோமிக் என்பவர், அமெரிக்க பத்திரிகையாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர், சொல்யூஷன்ஸ் ஜர்னலிசம் நெட்வொர்க்கில்(SOLUTION JOURNALISM NETWORK) பணிபுரிகிறார் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இதழில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் குறித்து கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். அவர் எழுதிய முதல் புத்தகம், AM ON THE HIT LIST: MURDER AND MYTH-MAKING IN SOUTH INDIA என்ற பெயரில் வெளியானது. இதன் தலைப்பு மறைந்த சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷை மையப்படுத்தி வைக்கப்பட்டது. இந்து வலதுசாரிக் கும்பலால், தான் கொல்லப்படுவோம் என்று முன்கூட்டியே கௌரி லங்கேஷ் உணர்ந்திருந்தார்.   

செப்டம்பர் 5, 2017 அன்று நடந்த அவரது கொலையுடன் இப்புத்தகம் தொடங்குகிறது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு படுகொலை அது. மரணத்தையொட்டி வெளியான  அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின் மூலம், கௌரி லங்கேஷின் வாழ்க்கையைப் பற்றியும் படுகொலையின் பின்னணிப் பற்றியும் விசாரணைகள் குறித்தும் பத்திரிகையாளர் ரோமிக் விரிவாக பதிவு செய்துள்ளார். மேலும் 2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்திய அரசியலும் சமூகமும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை ஆராய்ந்துள்ளார்.  கௌரி லங்கேஷின் வாழ்க்கை மற்றும் மரணம் இரண்டையும் புரிந்துகொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும்.  முதல் முறையாக ஒரு இந்தியப் பத்திரிக்கைக்கு தனது  நேர்காணலின் வழியாக ப்ரண்ட்லைன்(FRONTLINE) பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்கு காணொலியில் ரோமிக் பதில் அளித்திருக்கிறார். 

கேள்வி – 1:

கௌரி லங்கேஷ் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். இந்தப் புத்தகத்தை எப்போது எழுத வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்…? 

நான் இந்தியாவிலும் குறிப்பாக பெங்களூருவிலும் தென்னிந்தியாவை மையமாக வைத்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக நிறைய நேரம் செலவழித்து வருகிறேன். ஏனென்றால் தென்னிந்தியா குறித்து ஊடக கவனம் குறைவாக இருப்பதாக நான் அவ்வப்போது உணர்ந்துள்ளேன். இதை சர்வதேச பத்திரிகைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். வட இந்தியாவை மையப்படுத்திய செய்திகள் அதிகளவில் ஊடகத்தில் இடம் பெறுகின்றன. மேலும் இந்தியாவின் தெற்குப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதையும், வட இந்தியாவோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தை கவர்ச்சிகரமாகவும் பொருத்தமானதாகவும் எது மாற்றுகிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்தேன். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதுவது என்றும் முடிவெடுத்தேன். நான் எவையெல்லாம் மிகவும் அசாதாரணமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது என்று  கருதியிருந்தேனோ அதையெல்லாம் முதலில் எழுத முயற்சி செய்தேன். ஆனால் திடீர் திருப்பமாக கௌரி லங்கேஷின் படுகொலை  பெரிய அதிர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியது, பெங்களூரில் அப்படியொரு வன்முறைப் படுகொலை  நடக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. பெங்களூர் வழக்கத்திற்கு மாறாக அமைதியானது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் பெருநகரம் என்றாலும், அந்தப் படுகொலை ஒட்டுமொத்த நகரத்தின் குணாதிசயத்தை பிரதிபலிப்பது போல் உணர நேரிட்டது. அதற்கு முன்புவரை பெங்களூரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக எவரும் கேள்விப்பட்டதே இல்லை.  சில சமயங்களில் ஒரு வருடம் முழுவதும் துப்பாக்கியை  பயன்படுத்தாமல் இருந்திருக்கிறோம் என பெங்களூரைச் சேர்ந்த ஒரு காவல்துறை  அதிகாரி என்னிடம் தெரிவித்திருக்கிறார். கௌரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் தனியாக, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது,  அதற்கு முன்பு வரை எனக்குள் பெங்களூர் பற்றிய சிந்தனையை அச்சம்பவம் உலுக்கியது. கௌரியின் படுகொலை பல புதிய கேள்விகளை, பல புரியாத மர்மங்களை வெளிக்காட்டியுள்ளது. யார் இந்தப் படுகொலையை செய்தது?  அதற்காக எந்த அமைப்பும் ஏன் பொறுப்பேற்கவில்லை.?  எதனால் இப்படுகொலை நடந்தது என்பதையும் யாரும் விளக்கவில்லை. இது முதலில் நம்பமுடியாத சம்பவமாக இருந்தது.  இதை யார் செய்திருக்கலாம் என்பது பற்றி மக்கள் வலுவான சில கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.  இந்த நம்பமுடியாத துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை ஒரு புத்தகத்தில் பதிவு செய்யும் அளவிற்கு பல கேள்விகளையும் தகவல்களையும் உள்ளடக்கியதாக எனக்குத் தோன்றியது. எனவே எழுதத் துவங்கினேன்.

கேள்வி – 2: 

கௌரி லங்கேஷை சந்திக்காமலேயே அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளீர்கள்.  ஒரு நபராக, ஒரு பத்திரிகையாளராக மற்றும் ஒரு சமூக ஆர்வலராக  அவரது பணிகளை நீங்கள் என்ன மாதிரியான உணர்வின் அடிப்படையில் உருவாக்கியுள்ளீர்கள்? 

இதுவரை சந்திக்காத ஒருவரை, குறிப்பாக கௌரி லங்கேஷ் போன்ற சிக்கலான ஒருவரைப் பற்றி எழுதுவது கடினமான விஷயம். அவர் கொலை செய்யப்பட்டபோது, ​கட்டுப்படுத்த முடியாத உணர்வு எனக்குள் வெளிப்பட்டது. மேலும் ஒரு கூடுதல் மர்மமும் என்னை ஆட்கொண்டது. ஏனென்றால் அவருக்கு மாநிலம் முழுவதும் பலதரப்பட்ட நண்பர்கள் இருந்துள்ளனர். மரணத்தையொட்டி  நடந்த வெகுமக்களின் போராட்டங்களுக்கு பிறகுதான் அவர் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு விதமான நபர்களை அவர் அறிந்திருக்கிறார் என்பதும், பலவிதமான சமூகக் குழுக்களுடன் அவர் இணைந்திருந்தார் என்பதும்  பலருக்கும் புரிந்தது.  இது மிகவும் அசாதாரணமானது, ஏனெனில் அவரது பத்திரிகை (GAURI LANKESH PATRIKEY) உண்மையில் சிறிய அளவிலானவை குறைந்த வாசகர்களை மட்டுமே கொண்டிருந்தவை. அவருடைய சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட, அவர் இவ்வளவு நண்பர்களை அறிந்து வைத்திருக்கிறார் என்பதை அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை. கௌரி லங்கெஷ் மிகவும் அமைதியான பெண்ணாக அறியப்பட்டார்.  அவருக்கு சமூகம் பற்றிய நிறைய கருத்துகள் இருந்தன, நிறைய கோபங்கள் இருந்தன, அவற்றிற்காக குரல் கொடுக்க தயங்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், கௌரி மிகவும் அமைதியான முறையில், எந்த எதிர்பார்ப்புமின்றி, சமூகத்தை ஆக்கப்பூர்வமாக கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார்.  மக்களுக்கு ஆதரவாக பலப் பணிகளை, விளம்பரம் இல்லாமல் செய்திருக்கிறார். யாரேனும் ஒரு தோழிக்கு ஒரு பிரச்சனை என்றால், அவர் என்னவிதமான வேலையில் இருந்தாலும் அவருக்கு உதவ முன்வருவார். எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வீட்டு வாசலில் வந்து நிற்பார். அவர் பொதுவாக உணவையும், உடனிருக்கும் மக்களையும் அதிகம் விரும்பினாள். அவதூறு வழக்குகளுக்காக கர்நாடகம் முழுவதும் உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தபோது, ​​மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார். கௌரி அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான நபராக இருந்தார். அவர் நீதிமன்ற வழக்கின் போது, வெவ்வேறு விதமான சமூக மக்களோடு பழகுவதற்கும் மற்றும் சுவையான உணவை உண்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகை துறையில் அவரது அணுகுமுறை வழக்கமான பத்திரிகையாளர் போல் இருக்காது. கன்னட இலக்கியம் மற்றும் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கிய தனது தந்தை பி.லங்கேஷிடமிருந்து தொழில் சார்ந்து அதிகம் கற்றுக்கொண்டார். கௌரியின் தந்தை திரு.லங்கேஷ் அவர்கள் “பத்திரிகே”(PATRIKE) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக  முத்திரை பதித்தவர். 2000 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு கௌரி  அப்பத்திரிகையின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அவர் தந்தையின் அணுகுமுறை உயர்ந்த எண்ணம் கொண்ட இலக்கிய உள்ளடக்கத்தையும் கூட கிசுகிசுக்களுடன் கலந்து எழுதுவார். இந்த எழுத்து முறை  சமூகத்தின் அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது. அவர் தந்தையைப் போலவே, குற்றங்களைப் பற்றி எழுதும் போது “குற்றம் சாட்டப்பட்டவர்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார். குற்றம் செய்தவரை குற்றவாளி  என்றுதான் அழைக்க வேண்டும் என்பார்.  இது அவருக்கு பிரச்சனையை உருவாக்கியது. அவர் ஒரு அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுக் சிறை தண்டனைக்கும் உள்ளானார். இது கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

கேள்வி – 3

அவருடைய பத்திரிகைப்பணி மற்றும் இதர சமூக செயல்பாட்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லையா..?

சமூக செயல்பாடு அவரின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. கௌரி தன் வாழ்நாளில் நிறைய மாறிக்கொண்டே வந்தார் வெவ்வேறு கட்டங்களில். அவரைப் பற்றி அறிந்தவர்கள் பேசும்போது  வேறு யாரோ ஒரு நபரைப்பற்றி விவரிப்பது போல் தோன்றும், இருப்பினும் கௌரியின் அரவணைப்பு, நகைச்சுவை உணர்வு மற்றும் ஈடுபாடு போன்ற குணங்களை அவர் தொடர்ந்து  பராமரித்து வந்தார்.  அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு முன்பு வரை, அவர் ஒரு வழக்கமான சாதாரண பத்திரிகையாளர் தான்.  அவர் பத்திரிகைப் பணி மற்றும் சமூக செயல்பாடுகள் இரண்டும் வெவ்வேறானது என புரிந்துகொண்டார். பத்திரிகைத்துறையில் நடுநிலை மற்றும் சார்பற்றநிலை ஆகியவை இருப்பதாக நம்பினார்.  ஆனால்  காலப்போக்கில் குறிப்பாக அவர் கன்னடத்தில் எழுதத் தொடங்கி மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளில் மூழ்கிய பிறகு அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகினார். கர்நாடகாவில் உள்ள மலை உச்சியில் இருந்த பாபா புதனகிரியுடன் அவர் தொடர்பு கொண்டபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.  இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்கும் அந்த இடம் புனிதமானது, அங்கு சடங்குகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு பிரிக்க முடியாதவையாக இருந்தது. இந்த ஒற்றுமை ஒரு கட்டத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது இந்த தனித்துவமான நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முயற்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் போது, ​​​​அவர் சிலவற்றை உணர்ந்தார். இந்த நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் அவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளதாக உணர்ந்தார். அதற்காக  போராட விரும்பினார். அவரது பத்திரிகையில் அதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பினார். இது மாற்றத்தின் துவக்கமாக இருந்தது. முதலில், அவர் தன்னை ஒரு பத்திரிகையாளர்-செயல்பாட்டாளர் என்று அழைத்துக்கொண்டார். பின்னர் அது மாறியது. அவர் ஒரு சமூக செயல்பாட்டாளர், பிறகுதான் பத்திரிக்கையாளர் என்ற நிலைக்கு வந்தார். ஒரு  பத்திரிகையாளர் என்பவர் நடுநிலையானவராக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை அவர் நிராகரித்தார். “நம் அனைவருக்கும் ஒரு சார்புநிலை உள்ளது. நான் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவள், நான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதற்காக அதைச் சொல்வதற்கு தயங்க வேண்டியதில்லை” என்றார். கௌரியைப்பற்றி ஆராயும் வேலையில் எனது சொந்த அணுகுமுறையைப் பற்றியும் சுயவிமர்சனமாக சிந்திக்க நேரிட்டது. அவரிடம்  நான் ஏற்றுக்கொள்ளாத சில விஷயங்களும் உள்ளன. செய்தியின் உண்மையை சரிபார்க்கும் தன்மையில் சில குறைகள் அவரிடம் இருந்தன. இது அவருடைய வழக்கறிஞரை  விரக்தி அடையச்செய்தது. ஆனால் நடுநிலை மற்றும் சார்பற்றநிலை என்ற வாதத்தில் அவர் என்னை சிந்திக்க வைத்தார். ஒரு பிரச்சனையில் சாத்தியமான ஒவ்வொரு கண்ணோட்டத்தையும் கேட்பது மிக முக்கியமானது என்றாலும், நடுநிலை என்ற கருத்து தவறான தேர்வாகும். ஒருவர் தன்னை நடுநிலையாகக் காட்டுவது உண்மையில் தவறுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்கு சமமாகும். எனவே நடுநிலை என்பது இல்லை என்றும் ஒருவர்  எப்போதுமே ஒன்றைத் தேர்வு செய்கிறார் என்றும் எனக்கு தெளிவாக புரியவைத்தார். இதைப்பற்றி சிந்திக்க எனக்கு உதவியதற்காக நான் கௌரிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

கேள்வி – 4

கௌரியின் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் நடைமுறை அம்சங்களைப் பற்றி உங்களால் விவரிக்க முடியுமா?

கௌரி கொலை செய்யப்பட்ட பிறகு, அதை யார் செய்தார்கள் அல்லது ஏன் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.  ஒரே நேரத்தில் பல காரணங்கள் தோன்றின.  அவரது நண்பர்கள் மற்றும் சகாக்கள் இது வலதுசாரிகளின் சில பிரிவினரின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறினர். அதுவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.  அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த அல்லது அவருடன் தகராறு செய்த அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக பார்க்கப்பட்டனர்.  சிலர் நிலத் தகராறுகளைப் பற்றி யோசித்தார்கள். அதே சமயம் வலதுசாரியைச் சேர்ந்த சிலர் அவர் நக்சலைட்களால் கொல்லப்பட்டதாகக் கூறினர். அவரது கொலை எழுத்தாளர்களின் கொலைகளின் வரிசையில் நான்காவது கொலையாகும். மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும், இதே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எம்.எம். கல்புர்கி. அதற்கு அடுத்தப்படியாக கௌரி லங்கேஷ். இப்படி கொலைகள் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்தன. அனைத்தும் ஒரே மாதிரியான வடிவங்களில் நடைபெற்றுள்ளன. மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்கள், ஒரே வகையான துப்பாக்கியைப் பயன்படுத்தி, முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட முதியவர்களான அவர்களை கொலை செய்துள்ளனர்.   விசாரணைகள் இன்னமும் முடியவில்லை  தபோல்கரின் வழக்கில், புனே போலீஸ் கமிஷனர் அவரது ஆவியைத் தொடர்பு கொள்ள ஒரு ஆவி ஊடகத்தை நியமித்தார்கள் இந்தக் கால இடைவெளியில், உண்மையான தடயங்கள் மறைந்துவிட்டன. ஆரம்பத்தில், கௌரியின் வழக்கும் அதே முறையைப் பின்பற்றும் என்று தோன்றியது.  ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையில் மறைமுகமாக சில முக்கியமான வேலைகளைச் செய்தார்கள்.  

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யத் தொடங்கினர்.  அவர்கள்  சாத்தியமான ஒவ்வொரு புலனாய்வு நுட்பத்தையும் பயன்படுத்தினர். தொலைபேசி அழைப்புகளைக் கண்டறிய இயந்திரக் கற்றல்(MACHINE LEARNING) முறையை பயன்படுத்தினர். கண்காணிப்பு காட்சிப் பகுப்பாய்விற்காக செயற்கை நுண்ணறிவு(ARTIFICIAL INTELLIGENCE) தொழில்நுட்பத்தையும், பல் துலக்கும் பிரஷிலிருந்து(TOOTH BRUSH) டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு, மற்றும் CCTVயில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஆறு வினாடி தோற்றத்தை சந்தேகப்படும் நபரின் நடையுடன் ஒப்பிடும் நடைப் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். நடைப்பயிற்சி நடந்த இடங்களில்  அவர்கள் எடாக்ஸ் இயந்திரத்தை (EDAX MACHINE) பயன்படுத்தி மரங்களில் இருந்த தோட்டாக்களின் தடயங்களை கண்டுபிடித்தனர், வழக்கமான துப்பறியும் பணியை மேற்கொண்டனர். பின்பு பதினெட்டு பேர்  குற்றம் சாட்டப்பட்டு, பதினேழு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.  விசாரணை 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் வழக்கு மெதுவாக நடைபெறுகிறது.  பெரும்பாலான சந்தேகப்படும் நபர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர் அவர்கள் விடுதலையானவுடன் வலதுசாரி அமைப்புகளால் கொண்டாடப்பட்டனர். வழக்கு விரைவாகக் கண்காணிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான சாட்சிகளுடன் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ஐந்து முறை மட்டுமே சந்திப்புகள் நடக்கும். சாட்சிகள் மறைந்து போகிறார்கள் அல்லது எதிராக மாறுகிறார்கள். கொலை நடந்து ஏழு வருடங்கள் ஆன பிறகும் இன்னும் முடிவிற்கும் வரவில்லை.

கேள்வி – 5 

குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?  அவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்களா..?

பெரும்பாலானவர்கள் சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் கிளை அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள்.  சனாதன சன்ஸ்தா என்பது கோவாவில் உள்ள ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு வலதுசாரி மத அமைப்பு.  அவர்களிடம் பல கிளை அமைப்புகள் உள்ளன. இது விசாரணை செய்யும் அதிகாரிகளை குழப்பும் நோக்கத்தைக் கொண்டது என்று நான் நினைக்கிறேன்.  அவர்களின் வெளித்தோற்றம் உயர்ந்த எண்ணம் கொண்ட, அமைதியான, ஆன்மீகவாதிகள் போல் தோன்றும்.  ஆனால் அவர்களது ஆசிரமத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள், அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டு மரபுகள் இருப்பதாக புகார் கூறுகிறார்கள். அவர்களின் உறுப்பினர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாகவும், இருக்கிறார்கள். அவர்களின் கொள்கைகள் இந்து மரபுகளுக்கே கூட விரோதமாக இருப்பதாகவும் தெரிகிறது. சனாதன சன்ஸ்தா ஒரு “குறுங்குழுவாத” அமைப்பு என்று விவரிக்கப்படுகிறது. சிறியதாகவும், உள்ளூர் அளவிலும் மற்றும் தீவிரத்தன்மையுடனும் இந்த அமைப்பு செயல்படும். அவர்களின் அரசியல் வேலைத்திட்டம் பாஜக கட்சியின் அரசியலில் இருந்து பிரித்தறிய முடியாதது.  இரு அமைப்புகளின் வேலைத் திட்டமும் நெருக்கமாக உள்ளது.  அவர்களின் மைய இலக்கு இந்துக்கள் முதல் தர குடிமக்களாகவும் பிற மத சமூகங்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும் கருதப்படும் ஒரு இந்தியாவை நிறுவுவதாகும். இந்த இலக்கை அடைவதற்கு திட்டம் தீட்டும் தலைவர்கள் பெரும்பாலும் அமைப்பில் உயர் பதவிகளைக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்கிச் செல்லும் போது அதற்கு முன்பாகவே தலைமறைவாகிவிடுகின்றனர். இது சனாதன சன்ஸ்தாவை நேரடியாக ஒரு வழக்கில் குறிப்பிட்டு சொல்ல போலீசாருக்கு கடினமாக இருந்தது. அவர்களின் தலைவர், பல ஆண்டுகளாக யாராலும் பார்க்கப்படாமல் இருந்திருக்கிறார். அவர் ஒரு கொலைக் கையேட்டையும் எழுதியுள்ளார். “இந்து நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்களை” தேடிக் கொல்லுமாறு உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக அறிவுறுத்துகிறார். இந்தப் புத்தகம் அவர்களின் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு முக்கிய உத்வேகமாக இருந்தது. அவர்களின் தலைவரை எளிதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே பார்க்க முடியாதவராக எப்பவும் இருக்கிறார். 

கேள்வி – 6

உங்கள் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட பேச்சின் காரணமாக கௌரி கொலை செய்யப்பட்டார் என்று எழுதியுள்ளீர்கள்.  நீங்கள் இதுப்பற்றி கூடுதலாக சொல்ல முடியுமா?

அவர் பொதுவாகவே கோபத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடியவர் தான்.  இந்த குறிப்பிட்ட உரையில், “இந்து மதம் தாய் தந்தை இல்லாத மதம்” என்று குறிப்பிட்டு, மற்ற மதங்களுடன் கடுமையாக ஒப்பிட்டுப் பேசினார். அவரது நண்பர்களில் சிலருக்கும் கூட இந்து மதத்தைப் பற்றி அவர் இவ்வாறு பேசியபோது தங்களுக்கு சங்கடமாக இருந்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால் கௌரி இந்து மதத்தின் மீது மரியாதையும் கொண்டிருந்தார். மற்றும் இந்து மற்றும் முஸ்லிம் மத விடுமுறை நாட்களை நண்பர்களோடு கொண்டாடியுள்ளார். இந்த பேச்சின் காணொலி மதவெறியர்களை தூண்டுவதற்காக திட்டமிட்டு மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வழியாக இது அதிகம் பரப்பப்பட்டது.

கேள்வி – 7

அரசாங்கத்தை விமர்சிக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இந்திய விமான நிலையங்களில் தடுக்கப்பட்டு  திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று உங்கள் புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள்.  இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பிறகு, இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்களை சந்திக்க நீங்கள் எப்போதாவது அனுமதிக்கப்படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா?  ஜனவரி 2025 இல் இந்த புத்தகத்தின் இந்தியப் பதிப்பு வெளிவருவதால், இதுப்பற்றி எழுதுவது ஏற்புடையதா?

கௌரியிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால்.  எழுத வேண்டியது என்று நாம் நினைக்கும் அனைத்தையும் எழுத வேண்டும். அவரது மரணத்திற்குப் பிறகு, குறிப்பாக 2020 இல் குடியுரிமைச் சட்டப் போராட்டத்தின் அவரது இந்த மேற்கோள் பரவலாக பகிரப்பட்டது. இதனை யாராலும் மறுக்கவே முடியாது.  

“என்னால் முடிந்ததைச் செய்வேன், என்னால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே சொல்வேன். நாடு முழுவதும் பரவியுள்ள சகிப்புத்தன்மையற்ற குரல்கள் நமது மௌனத்தில் தான் வலிமை பெறுகின்றன. எனவே அநீதிக்கு எதிரான நமது மௌனம் கலையப்பட வேண்டும். மிரட்டல்களுக்கு எதிராக வார்த்தைகளைப் பயன்படுத்தி வாதிடக் கற்றுக் கொள்ளவேண்டும்”

என்று கூறுவார். 

”நான் பொது மேடைகளில் கருத்துத் தெரிவிக்கும் வகையில் பேசும் ஒருவர் அல்ல.  அது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். கௌரி லங்கேஷின் வாழ்க்கையில் வேறு யாரும் என்னைப்போல் மூழ்கியிருக்க முடியாது, கடந்த சில வருடங்களாக நான் அவ்வாறு இருக்கும் பாக்கியம் கிடைத்தது. அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். அவர் சொன்னது  “உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் சொல்லுங்கள், அதன் விளைவுகள் எப்போதும் கணிக்க முடியாதவை.  நீங்கள் அவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டும்”.

ப்ரன்ட்லைன் இதழலில் வெளியான நேர்காணல்

தமிழில் – மோசஸ் பிரபு