தோழர் பரணிதரன்
தலைவர் UNITE
“ஐடி வேலை செய்றோம்” என்று சொல்பவர்கள் மேல், இந்த சமூகத்தில் உள்ள பலருக்கும் பலவிதமான பிம்பங்கள் உண்டு. ஒரு சில பேருக்கு, “அவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். நினைச்சா அமெரிக்கால போய் வேலை செய்வார்கள். நிம்மதியான வாழ்க்கை” என்று நினைப்பார்கள். இன்னும் சில பேரோ, “இந்திய சமூகத்தில் இருக்கும் அத்தனை ஏற்றத்தாழ்வுக்கும் ஐடியில் வேலை பார்ப்பவர்கள்தான் காரணம்” என்று நினைப்பார்கள். அவர்களில், இயக்குனர் ராம் போன்ற கதாசிரியர்களின் கதைகளால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களளின் எண்ணிக்கை அதிகம். வேறு சிலரோ, “இந்தியக் கலாச்சார சீர்கேட்டுக்கு ஐடி ஊழியர்கள்தான் காரணம்” என்று நினைக்கிறார்கள். இதை வளர்த்து விட்ட நவீன யூட்யூப் சேனல்களுக்கு நன்றி.
“நாங்கள் ஒரு ப்ரொபஷனல், அறிவுஜீவிகள், அறிவுசார் ஊழியர்கள், அதிகத் திறமை வாய்ந்தவர்கள், அதிக ஊதியம் பெறுபவர்கள், இலட்சியத்தை அடைய உழைப்பவர்கள் உயர் மத்தியதர வர்க்கம்”
இப்படியான பல மின்னோட்டங்களை நம் சமூகத்தில் சினிமா, கலை, இலக்கியம், சமூக ஊடகம், யூட்யூப் போன்று பல வழிகளில் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். இதே போன்று ஐடி ஊழியர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதிலிலும் தங்களைப் பற்றி ஏதோவொரு பிம்பத்தை அவர்கள் வளர்த்து வைத்திருப்பதைப் பார்க்கமுடியும்.
“நாங்கள் ஒரு ப்ரொபஷனல், அறிவுஜீவிகள், அறிவுசார் ஊழியர்கள், அதிகத் திறமை வாய்ந்தவர்கள், அதிக ஊதியம் பெறுபவர்கள், இலட்சியத்தை அடைய உழைப்பவர்கள் உயர் மத்தியதர வர்க்கம்” என இப்படியாக ஆளுக்கொன்றாக நிறைய வார்த்தைகளை அவர்கள் பிரயோகிப்பார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகள் எல்லாம், இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில், முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களின் வாயிலிருந்து எப்படி வர ஆரம்பித்ததோ தெரியவில்லை. தங்களைத் தொழிலாளர்கள் இல்லை என்றும், அதனால் தங்களுக்கு சங்கமெல்லாம் தேவைப்படாது என்றும் பேசக்கூடிய ஒரு பெரிய பகுதி இளைஞர்கள் ஐடியில் வேலை செய்கிறார்கள். நாங்கள் எல்லாம் திறமையாளர்கள் என்பதால், ஐடியில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பன போன்ற பிம்பங்களையும் மாயங்களையும் நிறுவனங்களும் மற்றும் இன்றைய நவீன நிறுவனங்களின் நிர்வாக முறைகளும் உருவாக்கி வைத்துள்ளன.
ஐடி துறையின் பிரச்சனைகள் குறித்து அத்துறையில் இருக்கும் தொழிலாளர்களும் பொதுசமூகமும் எப்படியாகத் தெரியாமலே இருக்கிறார்கள் என்பதை, கடந்த 12 ஆண்டுகளாக இத்துறையில் வேலை செய்துகொண்டு தொழிற்சங்கப் பணியை மேற்கொள்ளும் ஒரு நபராக, இந்தத் துறைசார்ந்த தொழிலாளார்களின் பிரச்சனைகளை ஒரு நீண்ட இயக்கத்தின் குறிப்பாக இந்தத் தொடரை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் எங்கள் இயக்க அனுபவத்திலிருந்து ஐடி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அதற்கான நீண்ட நாள் தீர்வுகளையும் எழுத இருக்கிறேன்.
தொடக்கம்:
1990களில் இந்தியாவில் ஏற்பட்ட அந்நிய செலாவணி கையிருப்புப் பிரச்சனையின் விளைவுகளாக இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக வந்த தாராளவாத, தனியார்மய, உலகமயமாக்கல் போன்ற பொருளியல் தத்துவங்களால், கடந்த 34 ஆண்டுகளாக இந்திய தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதே கொள்கைகளால் இந்தியாவுக்குள் வரத் தொடங்கிய அந்நிய முதலீடுகள் மற்றும் அந்நிய நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க ஆரம்பித்தனர். 90களின் இறுதிக் காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையுடன் கூடிய 2கே என்கிற புதிய பிரச்சனை ஒன்று வந்தது. கணினியில் இரண்டாயிரத்தை குறிக்க எண்கள் இல்லாத அந்த 2கே எனப்படுகின்ற கணிணிப் பிரச்சனை, உலகளாவிய மென்பொருள் வேலைகளை இந்தியா போன்ற குறைந்த கூலி மற்றும் படித்த பட்டதாரிகள் கொண்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு கை மாறியது. இப்படியாக ஒரு நாட்டின் பெரிய பணிகளில் சிலவற்றை மட்டும் வேறொரு நாட்டில் செய்வதற்கு வழங்கபடுகிற முறையினை அவுட்சோர்சிங் என்கிறோம். அதுவரையிலும், இந்தியாவில் 1970 தொடங்கி சிறுகுறு அளவில் கணினி மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதும், அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான மென்பொறியாளர்களை விமானம் ஏற்றி அப்படியே அனுப்பி அங்கே வேலைசெய்ய வைக்கும் ‘பாடி ஷாப்பிங்’ முறையையும் மட்டும்தான் பின்பற்றிக் கொண்டிருந்தோம். அன்றைய காலத்திலேயே அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் வேலைக்காக விசா பெரும் நபர்களில் இந்திய மென்பொருள் பொறியாளர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தனர். 1990 இல் சுமார் 243 மில்லியன் டாலர் அளவிற்கு நடைபெற்றுவந்த வர்த்தகம், இன்றைய நிலையில் ஆயிரம் மடங்காகப் பெருகி 245 பில்லியன் டாலர் அளவுக்கு ஐடி துறை சார்ந்த வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. இதில் 200 பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தகம் ஏற்றுமதி சார்ந்து நடக்கிறது.
மென்பொருள் உலகில் இந்தியாவின் மிகப்பெரிய வருகைக்கு உந்துசக்தியாக 90களில் நடைபெற்ற மாற்றங்கள் இருந்தன. அதன் விளைவுகளாக இரண்டாயிரம் துவங்கி அடுத்த பத்தாண்டுகள், இந்திய நிறுவனங்களுக்கு பல மேற்கத்திய நாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின. இந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில் இந்தியப் பெருநிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரத்தில் இருந்து, நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் பேர் அளவுக்கான ஆட்களை இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்து வேலைக்கு எடுக்க ஆரம்பித்தனர். 2000 ஆம் ஆண்டில் ஒரு சில இலட்சமாக இருந்த வேலைவாய்ப்பு, 2010 இல் 23 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் துறையாக அது மாறியது. இதன் விளைவாக இந்தியாவில் பொறியியல் படிப்பதற்கான பெரிய கனவுகளுடன் கல்லூரிகளுக்கு மாணவர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்கு இணையாக 2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,56,000 மாணவர்களை 663 பொறியியல் கல்லூரிகள் உருவாகின. இன்றைய நிலையில் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 8,500 ஆகவும், அவற்றில் இருந்து ஆண்டுக்கு 30 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிவருவதுமாக எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஐடிதுறையின் அசுர வளர்ச்சிதான்.
இதே வேளையில் இந்திய நிறுவனங்களும், அந்த நிறுவனங்களுக்கு வேலைதரும் மேற்கத்திய நாட்டின் நிறுவனங்களும் இணைந்து, அதுவரை இந்தியாவில் இருந்த நிர்வாக முறையிலும் உற்பத்தி முறையிலும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தன. அது பெரும்பான்மையான நேரத்தில் அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அணுகுமுறைகளையே கொண்டிருந்தன. அது ‘அமெரிக்கமயமாக்கல்’ என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்கப் பெரு முதலாளிகளின் சிந்தனைகளை ஒட்டிய உற்பத்திமுறைகள், இயக்கமுறைகள், நடைமுறைகள், கலாச்சாரங்கள், சிந்தனைகள், சினிமாக்கள், இலக்கியங்கள் என்று அனைத்தும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டன. இந்த அணுகுமுறைகள் தொழிலாளிகளை சுரண்டுவதற்கும் மிக அதிக இலாபத்தை ஈட்டுவதற்கும் வழிவகை செய்வதாக இருந்தன. இந்தக் காலகட்டத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு ஐடி வேலை என்பது ஒரு நல்ல வேலை, பணிக்கேற்ற ஊதியம், வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு மற்றும் நல்ல வாழ்வாதாரம் போன்ற எண்ணவட்டங்களைக் கொடுத்தது. 2000 ஆம் ஆண்டின் இறுதிக் காலங்களில் கல்லூரிப் படிப்புகள் படித்துக்கொண்டு இருந்தபோது, 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக, அது உலகம் முழுக்க உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது ஒரு விதத்தில் ஒரு சில வேலைகளை மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்ய வைத்தாலும், ஒரு பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளின் இழப்பும் ஏற்படத்தான் செய்தது. அதுவரை ஆண்டுக்கு பல இலட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஐடி நிறுவனங்கள், பல்லாயிரம் பேரை வேலைவிட்டு வீட்டுக்கு அனுப்புவதும், கல்லூரிகளில் மாணவர்களை வேலைக்கு எடுப்பதைக் குறைத்துக் கொள்வதும், ஏற்கனவே நேர்முகத் தேர்வெல்லாம் நடத்தி வேலை கொடுப்பதாக உறுதியளிப்பதாகக் கூறப்பட்ட மாணவர்களை வேலைக்கு அழைக்காமலும் இருக்கிற சுழல் உருவாகிற்று. இப்படியான பல புதிய சிக்கல்களை ஐடி தொழிலாளர்கள் சந்திக்கத் தொடங்கிய காலம். அதே காலகட்டத்தில் இந்தியாவின் பெரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான சத்தியம் நிறுவனத்தில் நடைபெற்ற நிர்வாக முறைகேட்டாலும், திட்டமிட்டே கணக்குவழக்கில் குழப்பமேற்படுத்தியதாலும், அந்த நிறுவனத்தின் நிறுவனர் இராமலிங்க ராஜு உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் வேலை இழக்க நேரிட்டது. இதே காலகட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டுகளில், கல்லூரிகளில் வேலைக்காக நேர்முகத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்த மாணவர்களை வேலைக்கு அழைக்காமல் இருந்ததுடன், அவர்களுக்கு வேலையையும் மறுக்கத் துவங்கின. இதை எதிர்த்து சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி Knowledge Professional Forum என்கிற பெயரில் ஒரு அமைப்பாக உருவாகி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அதுவே KPF அமைப்பின் தொடக்க நிகழ்வாகவும் அமைந்தது. அந்த ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட பெரும்பான்மையான நிர்வாகிகள் தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் இயக்க (Free Software Movement) செயல்பாட்டாளர்களாக இருந்தனர். இந்த இயக்கத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டவர்களை வேலைக்கு எடுக்காமல் மறுப்பு தெரிவித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தவறான வழிமுறைகுறித்து, அப்போதைய மேற்குவங்க சிபிஐ(எம்) எம்பியொருவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐடி துறையில் தொடக்க கால அசுர வளர்ச்சி என்பது, தொழிற்சங்கங்களின் தேவையையையும் அதன் பொருத்தப்பாட்டையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தின. ஆனால் 2008க்குப் பின்னரான காலகட்டத்தின் சூழலென்பது, தொழிற்சங்கத்தை நோக்கிய தொழிலாளர்களின் சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது. 2010ல் கேபிஎஃப் மற்றும் இதர அமைப்புகளின் தலையீட்டால், ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்களில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்களின் உரிமைக்கு குரல் எழுப்ப முடிந்தது. இதே காலகட்டத்தில் நானும் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். வேலைக்கு சேரும்போது ஆண்டு ஊதியமாக 3.12 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. “என்னடா இது, இவன் வேலைக்கு சேர்ந்ததையும், இவன் சம்பளத்தையும் குறிப்பிடுகிறானே” என்ற எண்ணம் இதனை வாசிக்கும்போது ஏற்படலாம். இந்த தொடர்க் கட்டுரையின் முடிவில் அதற்கான பதில் இருக்கும்.
ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்துடன் நிற்காமல், கேபிஎஃப் என்கிற பெயரில் ஒரு இயக்கமாகவே தொடர்ந்து இயங்கத் தொடங்கினோம். 2014 ஆம் ஆண்டில், சென்னை சிறுசேரி சிப்காட் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்த உமா மகேஸ்வரி என்கிற பெண் காணாமல் போனார். இதை ஒட்டி பலநாள் தேடுதலுக்கு பின்பு அதே சிப்காட்டின் நுழைவாயில் அருகே இருந்த புதரில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். உமா மகேஸ்வரி வேலை முடித்துவிட்டுத் திரும்பும் போது, ஒரு சில இளைஞர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது ஐடி ஊழியர்களின் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது.
ஐடி துறையைப் பொறுத்தவரையும் ஆரம்பகாலம் முதலே சராசரியாக 30 முதல் 40 விழுக்காடு வரையிலும் பெண்கள் பணியாற்றும் துறையாகவே அது இருந்து வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கான பணிப் பாதுகாப்பு எதுவும் உறுதி செய்யப்படுவதே இல்லை. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தக் கொடூர நிகழ்வு. இதே போன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும், சென்னையில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒரு அதிர்ச்சிகர சம்பவமாக இது இருந்தது. அது நடைபெற்ற நேரத்தில், நான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் அந்த பகுதியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது சென்னை யூத் சென்டர் ஆரம்பிப்பதற்கான கூட்டம் பெரியமேட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைப் பற்றிய தகவல் என் நண்பர்கள் மூலம் அறிந்தவுடன், அப்போதைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளிடம் தகவலைப் பகிர்ந்தேன். அவர்கள் அடுத்த நாள் மாலையே சோழிங்கநல்லூரில் போராடுவதற்கான அறிவிப்பை அப்போதே வெளியிட்டனர். திட்டமிட்டது போலவே, அடுத்த நாள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஐடியு உழைக்கும் பெண்கள், மாதர் சங்கம் ஆகியவை இணைந்து, சுமார் 100 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே நடைபெற்றது. அதே நாள் காலை சிறுசேரி சிப்காட் வாயிலில் ஆயிரக்கணக்கான டிசிஎஸ் ஊழியர்கள் மரணத்தைக் கண்டித்து தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்கள் பணி சார்ந்த போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2008 காலகட்டத்தில் தமிழீழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் தன்னெழுச்சியாக மனித சங்கிலியில் பங்கேற்றது போன்ற நிகழ்வுகள் இருந்தாலும், பணி சூழல் சார்ந்து நடக்கும் பிரச்சனையை ஒட்டி, முதல் முறையாகப் போராடிய தருணம் அது. இதே நேரத்தில் இந்தப் பிரச்சனையை அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாகவும் குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக, ஆறே மாதத்தில் துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறுசேரி சிப்காட்டில் அதுவரை தெருவிளக்குகளோ முறையான சாலை வசதியோ இல்லாமல் இருந்த வேளையில், அங்கு புதிதாக சாலை வசதிகளும் தெருவிளக்குகளும் பேருந்துகளும் உறுதி செய்யப்பட்டன. அதேபோன்று பெண்களை இரவு நேரத்தில் பணியமற்றினால் வேலை முடிந்ததும் அவர்களை வீட்டிலேயே கொண்டுபோய்விடும் வாகன வசதி செய்வதோடு, அந்த வானகனத்தில் ஒரு பாதுகாவலரும் உடன் பயணிக்கவேண்டும் என்பன போன்ற சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட நடைமுறைகள் தீவிரமாக்கப்பட்டன. இந்த மாற்றங்களை எல்லாம், முதல் முறையாக ஐடி துறையில் ஒரு போராட்டத்திற்கும் இயக்கத்துக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்க வேண்டும்.
எப்படி 20 ஆம் நூற்றாண்டின் துவக்கமென்பது சென்னை தொழிற்சங்க வரலாற்றுக்கு அடித்தளம் இட்டதோ, அதேபோன்று 2008 முதல் 2014ஆம் ஆண்டுகள் வரை நடைபெற்ற ஐடி துறையிலான இயக்கங்களும் செயல்பாடுகளும், ஐடி தொழிற்சங்கத்துக்கான அடித்தளமிட்டது என்றே சொல்லலாம்.
பயணம் தொடரும் ப்ரோ…. காத்திருங்கள்…
Write -Up is Good and Well presented the issue in a lucid manner and easily catch the Readers Thought Process.
Do it Well.