சமூக நீதிசமூகம்

ஆணவக் கொலைகளும்…! ஆணாதிக்க வக்கிரங்களும்…!!

honor-killing

– மதுசுதன் ராஜ்கமல்.

எந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை என்பது உண்மை.

சாதி பார்த்துத்தான் காவல் நிலையங்களில் வழக்கே பதியப்படுகிறது. அநேகமான வழக்குகள் பதியப்படாமலேயே கட்டப்பஞ்சாயத்தில் முடித்துவைக்கப்படுகிறது. ஆதிக்கசாதியினர் மீதான தலித்துகளின் அத்தனை வழக்குகளும் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே பதியப்பட்டதல்ல. குறிப்பிட்ட அக்கொலைக்குற்றம் விஸ்வரூபம் எடுத்து பொதுவெளியின் பார்வைக்கு வந்தபின்பு சூழலின் நெருக்கடியினால் வேறுவழியின்றி பதியப்பட்டவையே. ஆனால் தலித்துகளின் மீதான ஆதிக்கசாதியினரின் வழக்குகள் எடுத்த எடுப்பிலேயே பதியப்பட்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுகிறது.இந்திய சமூகம் அதன் இயல்பிலேயே நிலவியல் கூறுகளாலும் பலநூற்றாண்டுகால கருத்தியல் திணிப்புகளாலும் சாதியை நிலத்திலும் மனத்திலுமாக தகவமைத்து வைத்திருக்கிறது. அது நடைமுறையில் இப்படியான சம்பவங்கள் நடைபெறும் போது தனக்கான வக்கிரத்தை, சாதிய பாகுபாட்டை சட்டத்தின் துணைகொண்டே நிறைவேற்றிக்கொள்கிறது. அதிகாரத்தில் யாரார் இருக்கிறார்களோ, அவர்களின் கருத்துதானே சட்டமாகவும் நடைமுறையாகவும் இருக்கமுடியும்.

ஒரு உதாரணத்திற்காக எடுத்துக்கொண்டாலுமே கூட, ஒரு வருடத்திற்கு நடைபெறும் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை எத்தனை என்று பார்க்கப்போனால் கடந்தமூன்று வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை மட்டும் 81 (சராசரியாக வருடத்திற்கு 27) என்று கள செயற்பாட்டாளர்களால் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பதியப்படாமல் வெளியுலகிற்கு தெரியாமல் அல்லது ஊர் கட்டுப்பாட்டில் அதாவது சாதியக் கட்டுப்பாடு என்கிற பேரால் மூடிமறைக்கப்பட்ட ஆணவக்கொலை எத்தனையெத்தனையோ!

புள்ளிவிவரங்கள் எப்போதுமே முன்பின் சற்று கூடுதலாகவும், குறைச்சலாகவும் இருக்கும்.ஆனால் அதன் சராசரி சரியானது. அதைப்போல ஆதிக்க சாதியினர் மீதான தலித்துகள் தாக்குதலும் கொலைகளும் எத்தனையெத்தனை ஆண்டொன்றுக்கு எத்தனை சதவிகிதம் என்று ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இப்படியான கொலைச்சம்பவங்களில் ஆதிக்க சாதியினரையும் தலித்துகளையும் ஒன்றாக ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியுமா என யோசிக்கவேண்டும்.

வெறுமனே போகிற போக்கில் நம் அறிவின் மேன்மையைக் கொண்டு, சாதிக்கெதிரான களத்தில் இருக்கிறோம் என்பதற்காகவே எல்லாக் கொலைகளையும் குற்றச்சம்பவங்களையும் ஒன்றுபோல பார்க்கக்கூடாது. அப்படி பார்ப்பது சமூக நீதியும் இல்லை. இந்திய சமூகத்தின் நூற்றாண்டு கால வரலாற்றில் உழைப்புச்சுரண்டலில் இருந்து பாலியல் சுரண்டல் வரை பாதிப்பிற்கு உள்ளானவர்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்களும் தலித்துகளே தவிர ஆதிக்கசாதியினர் அல்ல. அந்த ஒடுக்குமுறையையும் பாலியல் சுரண்டலை அதிகார-ஆதிக்க திமிர் செய்பவர்களே அவர்கள் என்பதை கொஞ்சமேனும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வள்ளியூரில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த  இளம்பெண் தலித் இளைஞனால் படுகொலை செய்யப்பட்டார் என்றால் அது ஆணாதிக்கத் திமிரில் செய்யப்பட்டது. அல்லது ஒருதலைக் காதலால்  செய்யப்பட்டதாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கலாம். அக்கொடூர கொலையை செய்த தலித் இளைஞன் தண்டிக்கப்படவேண்டியவன் என்பதில் யாருக்கும் மாற்று கருந்து இருக்கமுடியாது. அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே. ஆனால் இதுபோன்ற ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்தே தலித்துகள் செய்யும் கொலைகளையும் ஆதிக்கசாதி திமிரில் பெற்ற மகளை / மகனை துள்ளத்துடிக்க கொல்லும் சாதிய வக்கிரம் நிறைந்த ஆணவக்கொலைகளையும் ஒன்றாக இனைத்துப் பேசலாமா. நூற்றாண்டு ஒடுக்குமுறையும் ஒடுக்கப்பட்டோர் செய்யும் வன்முறையும் எப்படி ஒன்றாகமுடியும்.

ஆணவப்படுகொலைகள் நடைபெறும் போதெல்லாம் பேரமைதியில் இருக்கும் சாதியவாதிகளும் கொஞ்சமாக பேசும் சாதிய மனம்கொண்ட மிகச்சில முற்போக்குவாதிகளும் இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நடைபெறும் ஆதிக்கசாதியின் மீதான தலித்துகளின் வன்முறையையும், பாலியல் சுரண்டல்களையும், படுகொலைகளையும் ஊதிப்பெரிதுபடுத்தி இப்போது பேசமாட்டீங்களே மானங்கெட்ட முற்போக்குவாதிகள் என கொதித்தெழுவதும், பக்கம் பக்கமாக ஸ்டேட்டஸ் போடுவதும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சாதியவாதியைத்தான் அடையாளம் காட்டுகிறதே ஒழிய சமூகநீதியை நிலைநாட்ட ஆவேசப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஒன்றிரண்டு கொலைகளுக்கும் பாலியல் சுரண்டலுக்குமே கொதித்தெழுகிறீர்களே, நூற்றாண்டு காலமாக எங்கள் மீது சுமத்தப்பட்ட எல்லா கருமத்தையும் எருமைமாட்டின் மீது மழைபெய்தது போல இன்னும் கூட அரசியல் விழிப்புணர்வற்று சுயமரியாதை ரோஷமற்று அடுக்கிய மூட்டையில் அடிமூட்டையாக எதிர்த்தடிக்கமுடியாமல் தலித்துகள் கடந்து வந்திருக்கும் படுகொலைகளும் பாலியல் சுரண்டல்களும் எத்தனையெத்தனை! ஒன்றிரண்டு சம்பவங்களுக்கு ஆதிக்கசாதியினருக்கு இப்படி வருகிறது என்றால் குறிப்பாக முற்போக்கு பேசும் சாதியவாதிகளுக்கு கோவம் வருகிறதென்றால் தலித்துகளுக்கு எந்த அளவிற்கு கோவம் வந்திருக்கவேண்டும். அதன் எதிர்வினை என்னவாக இருந்திருக்கவேண்டும்.

ஆனால் அப்படியெல்லாம் நடந்திருக்கிறதா, இல்லையே.மாறாக இப்படி யோசித்துப்பார்ப்பதை விட்டுவிட்டு பொதுநீதி பேசுகிறேன் என்கிற பேரில் ஆதிக்கசாதியினரையும் தலித்துகளையும் ஒன்றுபோலவே இப்படியான குற்றச்செயல்களில் பார்ப்பது அபத்தம் மட்டுமல்ல அயோக்கியத்தனம் மட்டும் அரசியல் புரிதல் இல்லாதவர்கள் என்றும் அர்த்தம்.