– இ.பா.சிந்தன்
“மச்சி, போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணிருக்கேண்டா. அதான் இப்ப ஒரே பிரச்சனையா இருக்கு”
“சரி என்ன பிரச்சனைன்னு சொல்லு, சரிசெய்ய முடியுமான்னு பாப்போம்”
“அதெல்லாம் முடியாது மச்சி. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்”
“விதியை மதியால் வெல்லமுடியுமான்னு பாப்போம்டா.”
“அதெல்லாம் சும்மாடா. விதியால் மதியால் வெல்லலாம்னா, அதுவும் ஒரு விதிதாண்டா”
“ஓ அப்படியா சொல்ற? அப்போ இப்ப உன்னோட பிரச்சனையை சரிசெய்ய முடியாதுங்குற?”
“ஆமா மச்சீ. அதெல்லாம் உனக்குப் புரியாது.”
“சரி அதிருக்கட்டும். நீ கம்ப்யூட்டர் கம்பனிலதான் வேலை பாக்குற?”
“ஆமா மச்சீ, டீசண்டா பிக்டேட்டா அனலிஸ்ட்டுன்னு சொல்லுடா”
“அதுல என்ன பண்ணுவீங்க?”
“நீ நினைச்சுக்கூட பாக்கமுடியாத அளவுக்கு எக்கச்சக்கமான தகவல்களை எல்லாம் சேமிச்சு வச்சு அதை தேவைப்படும் விதத்தில் அலசுவோம்”
“ஓ சரி சரி. எனக்கு அதில் சில சந்தேகம் இருக்குடா”
“சொல்லு மச்சி, அக்குவேறா ஆணிவேறா பிரிச்சி மேஞ்சிப்புட்றேன்”
“ஒரு நிமிட வீடியோவை ஹார்ட் டிஸ்கில் சேமிச்சி வைக்க எவ்வளவு சைஸ் ஆகும்?”
“அதென்ன 720பிக்சல்னா தோராயமாக 100 எம்பி ஆகும். இதெல்லாம் ஒரு கேள்வியா?”
“சரி, அந்த ஒரு நிமிட வீடியோவில வரும் அத்தனை விவரங்களையும் டேட்டாவாக சேமித்து வைக்கனும்னா எவ்வளவு சைஸ் ஆகும்? அதாவது அதிலிருந்து பின்னாடி எந்தக் கேள்வின்னாலும் கேட்கமுடிகிற மாதிரி சேமிச்சு வைக்கனும்.”
“அடேய், அது எக்கச்சமா ஆகும்டா. ஒரு நொடிக்கு 25 ஃப்ரேம்களாவது இருக்கும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் பலர் அந்த வீடியோவில் இருப்பாங்க, அவர்களைப் பற்றிய தகவல்களை சேமிக்கனும், அவர்கள் அந்த ஃப்ரேமில் என்னமாதிரியான வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சேமிக்கனும், அந்த ஃப்ரேமில் வரும் இடம் குறித்த தகவல்களை சேமிக்கனும். ஒரு நொடிக்கு 25 ஃப்ரேம்கள் என்றால் அத்தனை அளவுக்கு சேமிக்கனும். அதோடு இல்லாமல் ஒரு ஃப்ரேமுக்கும் இன்னொரு ஃப்ரேமுக்கும் இடையிலான தொடர்புகள், மாற்றங்கள்னு எக்கச்சக்க டேட்டா இருக்குமே மச்சீ.”
“இருக்கட்டும். குத்துமதிப்பா 1 நிமிட வீடியோவை டேட்டா விவரங்களாக சேமித்து வைக்க எவ்வளவு சைஸ் ஆகும்னு சொல்லேன். ஆனா ஒன்னும் மனசுல வச்சிக்கோ, அந்த சேமிச்ச டேட்டாவுக்கிள்ளிருந்து தேவையான தகவலைத் தேடி எடுப்பதற்கும் எளிதா இருக்கிற மாதிரி சேமிக்கனும்”
“இதெல்லாம் சாதாரண விசயமல்லடா. இதுவரையிலும் யாரும் இந்தமாதிரி செஞ்சமாதிரி தெரிலடா. எப்படி குறைச்சி வச்சிப் பார்த்தாலும் வீடியோவைவிட ஒரு 1000 மடங்காவது ஆகும் மச்சீ”
“அப்ப ஒரு நிமிட வீடியோவுக்கு எவ்வளவு ஆகும்”
“அது 1 டெராபைட் கூட ஆகலாம்டா. இது ஒரு குத்துமதிப்பு தான் மச்சீ”
“சரி இருக்கட்டும். ஒரு நிமிட வீடியோவுக்கு ஒரு டெராபைட் என்றால், ஒரு மனிதன் சராசரியாக 50 ஆண்டுகாலம் வாழ்வான்னு வச்சிப்போமே. நீ சொல்றமாதிரி அவன் பல ஜென்மங்கள் வாழ்றான்னும் வச்சிப்போமே. ஒரு மனிதனின் 7 ஜென்ம ஆயுளை டேட்டாவாக சேமித்துவைக்க எவ்வளவு சைஸ் ஆகும் சொல்லேன்?”
“ஒரு மனிதனின் 7 ஜென்மங்களில் 50 ஆண்டுகால வாழ்க்கையை டேட்டாவாக சேமித்து வைக்க அப்படி இப்படி பெருக்கிப்பார்த்தால், கிட்டத்தட்ட 10000000000 டெராபைட் ஆகும்டா.
“அது என்ன நம்பர், கொஞ்சம் புரியறமாதிரி சொல்லு”
“அடேய், அது ஒரு இலட்சம் கோடி டெராபைட் டேட்டா டா”
“சரி, இன்னைக்கு உலகம் முழுக்க உள்ள ஒட்டுமொத்த இணையத்தின் டேட்டா சைஸ் என்னவா இருக்கும்?”
“அது கிட்டத்தட்ட 15 இலட்சம் டெராபைட் இருக்கும் மச்சீ”
“ஆக, ஒரு மனிதனின் டேட்டா மட்டுமே ஓட்டுமொத்த இணையத்தைவிடவும் 5000 மடங்குக்கு மேல் இருக்கும்னு சொல்ற? அப்படித்தான?”
“ஆமா மச்சீ.”
“சரி, நாம போட்ட கணக்கு ஒரு மனிதனுக்கு மட்டும்தான். இவ்வுலகில் தற்போது உலகில் 750 கோடிப்பேர் வாழ்கிறார்கள். இதற்கு முன்னர் இறந்தவர்களும் நம்ம கணக்கெடுப்புக்கு வேணும்தானே. ஏன்னா அவங்களும் திரும்ப பிறக்கலாம். இதுவரை உலகில் 10800 கோடி மனிதர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் அப்படின்னு வரலாற்று அறிவியலாளர்கள் சொல்றாங்க. அப்போ மனிதர்கள் ஒவ்வொருவரின் டேட்டாவையும் தனித்தனியாக சேமித்துவைக்க ஒரு இலட்சம் கோடி டேட்டா ஆகும்னா, ஒட்டுமொத்தமா 10000 கோடி மனிதர்களின் டேட்டாவையும் சேமித்துவைக்க எவ்வளவு சைஸ் ஆகும்”
“அதெயெல்லாம் கணக்கு போடவே இப்ப இருக்கிற கேல்குலேட்டர்களால் முடியாதே மச்சீ”
“இதுக்கே இப்படின்னா, மனிதர்கள் என்பது இந்த பூமியில் ஒரு சின்ன பங்குதானே. மற்ற மிருகங்களுக்கும் நீ சொன்ன அந்த விதியும் ஜென்மங்களும் இருக்கும்தானே. உலகில் வாழ்ந்த, வாழ்கிற எண்ணிக்கையில் அடங்காத மற்ற புழு, பூச்சி, மிருகங்கள் என எல்லாத்துக்கும் இதேமாதிரி கணக்குப்போட்டால் எவ்வளவு வரும்?”
“ஆத்தாடி, அதையெல்லாம் கணக்குக்கூடப் போடவே முடியாது, இதுல எங்கருந்து சேமிச்சு வைக்க”
“சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு இன்னொரு கேள்வி”
“இன்னொரு கேள்வியா, தலை சுத்துதுடா”
“உன்னால பதில் சொல்லமுடியும்டா, நீதான் பிக்டேட்டா அனலிஸ்ட்டாச்சே”
“சரிகேட்டுத்தொல”
“இவ்வளவு பெரிய டேட்டாவில் இருந்து தேவையான தகவல்களை பின்னாடி தேவைப்படும்போது சரியானதைக் கண்டுபிடித்து தேடி எடுக்கனும் இல்லயா. அதுக்கு ஏதாவது சாஃப்ட்வேர் உருவாக்கனுமே?”
“ஐயயோ, அதெல்லாம் இப்ப இருக்கிற எந்த சாஃப்ட்வேர் மொழிகளாலும் முடியாதுடா. இத்தாம்பெரிய நம்பரை சேமிக்கும் டேட்டாடைப் கூட வந்திருக்கான்னு தெரியல”
“சரி இருக்கட்டும். இதையெல்லாம் சேமிக்கவும், தேடி எடுக்கவும், சாஃப்ட்வேர் உருவாக்கவும் ஆட்கள் தேவைதானே. எவ்வளவு பேர் இருந்தா சமாளிக்கலாம்?”
“ஐயோ, அதுக்கெல்லாம் உலகத்துல இருக்கிற எல்லாரும் சாஃப்ட்வேர் இஞ்சினியரா ஆனாலும் கூட செய்யமுடியாதுடா”
“அப்படியே செய்றாங்கன்னு வச்சிப்போம். அதில் தவறே வராதுன்னு சொல்லமுடியுமா? நீ கூட வேலை செய்யிற. தப்பில்லாமலா செய்யிற?”
“அதெல்லாம் சர்வசாதாரணமா வரும். எக்கச்சக்க பக் ரிப்போர்ட் எம்பேர்ல கூட இருக்கு. நைட்டும் பகலுமா பிக்ஸ் பண்ண முயற்சிக்கிறேன். கண்டுபுடிச்சது கொஞ்சம்னா, கண்டுபுடிக்காத பக் இன்னும் நிறைய இருக்கும்”
“ஆக, கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத அளவிற்கான டேட்டாவை, கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவிற்கான அசாத்தியமாகத் தேவைப்படும் சாஃப்ட்வேரை, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குத் தேவைப்படும் ஆட்களின் உழைப்பை எங்கோ யாரோ விதி என்கிற பெயரில் செய்துகொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறாய்?”
“யோசிக்க வேண்டிய கேள்வியாத்தான் இருக்கு மச்சீ”
“கடவுள் உன்னை விட பெரிய பிட் டேட்டா அனலிஸ்ட்னு நினைக்கிறியா?”
“வாய்ப்பே இல்லன்னுதான் நினைக்கிறேன். இந்த விதி, ஜென்மங்கள் எல்லாம் சுத்த பேத்தல் போலத்தாண்டா இருக்கு. தேங்க்ஸ் மச்சீ”
“சூப்பர்டா. இப்ப சொல்லு உன் பிரச்சனை என்னன்னு. இங்க இருக்கிற உண்மையான மனிதர்களை வச்சி உன் பிரச்சனையைத் தீர்க்கமுடியுமான்னு பார்ப்போம்”
“மச்சீ, என்னோட பிரச்சனையைத் தீர்க்கமுடியும்ங்குற நம்பிக்கை வந்திருக்கு. அதுவே போதும்டா…. கெளம்புறேன்”..
“சரிடா நாளைக்கு பாப்போம்… பாய்”
“பாய்…