தமிழில் : நந்தினி

கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும், அதன் நோக்கத்திலும் செயலாக்கத்திலும் அத்தீர்ப்பு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இக்கட்டுரையில், இத்தீர்ப்பையும், புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக அது முன்வைத்த கருத்துகளையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தத் தவறிய பாதிப்புகளையும் விரிவாக ஆராய்வோம்.
இந்திய நீதித்துறையில் அடிப்படைத் தூண்களாகக் கருதப்படும் சட்டத்தின் ஆட்சி , அதிகாரப் பகிர்வு மற்றும் பொதுமக்களின் கடமை ஆகியவை குறித்து நீதிமன்றம் விவாதித்தது. அதன் அடிப்படையில், மேற்கூறிய ஒவ்வொரு கூறுகளையும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் மீறிவருவதாக உறுதிப்படுத்தியது. புல்டோசர் இடிப்புகளை அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், ஒரு “ஒழுங்கற்ற” சமூகத் தன்மைக்கு ஒத்ததான கூட்டுத் தண்டனையாகவும் கருதி நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து அந்த நடவடிக்கையையே ஏற்கமறுத்து முற்றிலுமாக நிராகரித்தது. அத்துடன், “இத்தகைய அரசு நடவடிக்கைகள் எல்லாம் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு கையாளப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பளித்தது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பாக இருந்தது.
இருப்பினும், நீதித்துறையின் நியாயமான நோக்கத்தையும் மீறி, புல்டோசர் இடிப்புகள் நிகழும் சமூக-அரசியல் யதார்த்தங்களை இத்தீர்ப்பு முழுமையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றோ அல்லது புறக்கணித்துவிட்டது என்றோ தோன்றியது. அதனால், இந்த வரவேற்கத்தக்க தீர்ப்பின் அமலாக்கத்தையே அது கேள்விக்குள்ளாக்கியது.
“புல்டோசர் நீதிக்கு” எதிரான கண்டனம்
நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, இந்திய அரசியல் உரையாடல்களில் பெரிதும் பரவியுள்ள “புல்டோசர் நீதி” என்ற செயல்பாட்டைக் கண்டித்தது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அது ஒரு சரியான தண்டனை முறையாக முன்னிறுத்தப்படுவதையும் கண்டித்தது. இவ்விரு மாநிலங்களும், குறிப்பிடத்தக்க வகையில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரான திரு. துஷார் மேத்தாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. அரசு நிர்வாகிகள் நீதிபதிகளைப் போலச் செயல்பட்டு, முறையான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் எவரையும் தண்டிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதை அத்தீர்ப்பு வலியுறுத்தியது.
புதிய வழிகாட்டுதல்களும் சவால்களும்
இந்த பிரச்சினைக்குத் தீர்வாக, கால வரையறை, நீதித்துறையின் மேற்பார்வை மற்றும் அதிகாரிகளின் பொறுப்புடைமையை ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தும் வழிகாட்டுதல்களை நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. புல்டோசர் இடிப்புகளுக்குப் பிறகு முன்தேதியிட்ட அறிவிப்புகள் வழங்கப்படுவதையும் கருத்தில் கொண்ட அங்கீகரித்த நீதிமன்றம், இடிப்புகள் குறித்தான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு டிஜிட்டல் தளத்தை (portal) நிறுவவும் ஆணையிட்டது. மேலும், சட்டத்தை மீறும் அதிகாரிகளுக்கு நிதி அபராதம் விதிப்பதையும், அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதையும் கூட இத்தீர்ப்பு முன்வைக்கிறது. இவற்றையெல்லாம் மீறி பல மாநிலங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட உரிய செயல்முறைகளைப் பின்பற்றாமல் புல்டோசர் இடிப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியுள்ளன.
ஆனால், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் ஒரு மோசமான அமைப்பில், இம்மாதிரியான வழிகாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் சவாலாக அமையும். புல்டோசர் இடிப்புகள், விளிம்புநிலை சமூகத்தினரை, குறிப்பாக இசுலாமியர்களைக் குறிவைக்கும் அரசபயங்கரவாதம் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பது தெரியவருகிறது. புல்டோசர் இடிப்புகள் சட்டத்திற்கு வெளியே நீதிக்குப் புறம்பான ஒரு நடவடிக்கை என்பதை நீதிமன்றம் அங்கீகரித்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மட்டும்தான் குறிவைக்கப்படுகின்றன என்றும், அந்த வீடுகளின் அக்கம் பக்கத்து வீடுகள் சேதப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டு, அதன் அடிப்படையிலேயே இதனை நியாயப்படுத்தியுள்ளது. ஆனால், அமைதி வழியில் போராட்டம் நடத்தியதற்காக ஆதாரமற்றதாகவும் போலியாகவும் சித்தரிக்கப்பட்டவர்களுக்கு எதிராகத்தான் அப்படியான குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள்
- காலக்கெடு குறித்த தெளிவின்மை: உச்ச நீதிமன்றம், அதன் செயல்முறை வழிகாட்டுதல்களில் கூட உண்மையான கள நிலவரத்தை எடுத்துக்கொள்வதில் தோல்வியடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 15 நாட்கள் அல்லது அந்தப் பகுதியின் நகராட்சி சட்டத்திற்குட்பட்ட காலக்கெடு – இவற்றில் எது அதிக நாட்களை உடையதோ, அந்தக் காலக்கெடுவைப் பின்பற்றி, விளக்கம் கேட்கும் அறிவிப்பு (show-cause notice) வழங்காமல் புல்டோசர் இடிப்புகள் நடத்தப்படக் கூடாது என்பதை நீதிமன்ற வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. உத்தரப் பிரதேச மாநில நகராட்சிச் சட்டங்கள் 30 நாட்கள் காலக்கெடுவாக வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றம் அதனை மேற்கோள் காட்டி, 30 நாட்களை நாடு தழுவிய அளவில், அறிவிப்பு வழங்க வேண்டிய குறைந்தபட்சக் காலக்கெடுவாக அறிவிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது. 30 நாட்கள் கெடு என்பதே குறைவாக இருந்தாலும், அது பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சட்ட உதவிகளையும் பொருளாதார உதவியையும் நாடவும், புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படைத் தகவல்களைச் சேகரிக்கவும் நடைமுறையில் சற்றே கூடுதலான அவகாசத்தை வழங்கும்.
- குறுகிய மேல்முறையீட்டு அவகாசம்: அதே போல, கடைசியாக வழங்கப்படும் புல்டோசர் இடிப்பு குறித்தான அறிவிப்பிற்கும் அதனைச் செயல்படுத்துவதற்கும் இடையே வெறும் 15 நாட்களைத்தான் அவகாசமாகக் கட்டாயமாக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தக் கால அளவு, வீட்டின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றவோ அல்லது நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கோ வழங்கப்படுகிறது என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம், ஒரு பாதிக்கப்பட்ட நபர், சட்டம் வழங்கியிருக்கிற உதவிகளையும், வசதிகளையும் பயன்படுத்திக்கொள்வதில் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், இந்த 15 நாட்கள் மட்டுமே அவர் இடிப்பு ஆணைக்கு எதிராகப் போராடப் போதுமானதாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருதலைபட்சமாகவே கருதியிருக்கிறது.
- டிஜிட்டல் தளம் – வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுமா?: அறிவிப்புகள், நீதிமன்ற விசாரணைகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்ற டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கவும் இந்த வழிமுறைகளில் ஆணையிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வெளிப்படைத்தன்மை என்பது தானாகவே நடைமுறைக்கு வந்துவிடாது. இந்த டிஜிட்டல் தளத்தை யார் கண்காணிப்பது? போலியாகப் பதிவேற்றப்பட்ட அறிக்கையை எதிர்த்து முறையிட, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிமை கிடைக்குமா? இந்தத் தகவல் திரிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய சுயாதீனத் தணிக்கைகள் நடக்குமா? ஒரு சரியான மேற்பார்வை இல்லை என்றால், உண்மையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், புல்டோசர் இடிப்புகளைச் சட்டப்பூர்வமானதாக்கி, எதற்கும் பயன்படாத வெறுமனே ஒரு அதிகாரத்துவச் செயல்பாடாகத்தான் இந்த டிஜிட்டல் தளம் மாறிவிடும்.
டிஜிட்டல் தளம் குறித்த தற்போதைய நிலை
நீதிமன்றத் தீர்ப்பும் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை, மாநில அரசுகளும் இவை குறித்த விதிகளையோ அல்லது அறிவிப்புகளையோ இதுவரை வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நகராட்சி அதிகாரிகளுக்கு இந்தப் போர்ட்டல்களை அமைக்க விதித்த மூன்று மாதக் காலக்கெடு இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தண்டனை நோக்குடன் புல்டோசர் இடிப்புகளை மோசமாக மேற்கொள்ளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் ஹரியானா மாநிலங்கள், இந்தப் போர்ட்டலை இன்னமும் அமைக்கவே இல்லை.
அதிகாரிகளின் பொறுப்புடைமை மற்றும் முரண்பாடுகள்
- மேற்பார்வையில் உள்ள முரண்பாடு: ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும், புல்டோசர் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு முன்னர் தொடர்புடைய அதிகாரி ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும் என்பதையும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கட்டாயமாக்கியுள்ளன. ஆனால், புல்டோசர் இடிப்புகளுக்குத் துணைபோகும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம்தான், இவ்வழிகாட்டுதல்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது பெரும் முரண்பாடாக அமைந்துள்ளது. நடுநிலையாக இருந்து சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக இல்லாமல், பலமுறை புல்டோசர் இடிப்புகளை அரசியல் உந்துதலின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நடத்தி உள்ளனர். மேலும், காவல்துறை அதிகாரிகளும் புல்டோசர் இடிப்புகளை வழிநடத்தி, மேற்பார்வையிட்டு, செயல்படுத்தியும் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- நம்பகத்தன்மையற்ற எதிர்பார்ப்பு: இம்மாதிரியான அதிகாரிகள், பாரபட்சமற்றவர்களாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது நம்புவதற்கில்லை என்பதுடன், வழிகாட்டுதல்கள் மீறப்படுவதற்கும் வழிவகுக்கும். புல்டோசர் இடிப்புகளை ஆணையிடும் நகராட்சி அதிகாரிகளேதான், தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதையும் அறிக்கை தயாரிப்பதையும் செய்கிறார்கள் என்றால், இது விதிமீறல்களை மூடிமறைக்கும் அல்லது இடிப்புகள் நடைபெற்ற பிறகு அதனை நியாயப்படுத்தும் ஆவணங்களைத் தயாரித்துவிடும் தன்னிச்சையான அமைப்பாக மாறிவிடும். சுயாதீனமாக செயல்படும் ஆய்வு அமைப்புகள் அல்லது நீதித்துறை அதிகாரிகள் இவ்விசாரணைகளையும், ஆவணங்களையும் மேற்பார்வையிடுவதைக் கட்டாயமாக்குவது, அரசியல் மற்றும் வகுப்புவாதப் பாரபட்சங்களற்ற முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் சிறந்த வழிமுறையாக அமையும்.
- நிரூபிக்கும் பொறுப்பு யார் மீது?: மேலும், இத்தகைய வழிகாட்டுதல்கள், எந்தவொரு புல்டோசர் இடிப்பும் நியாயமானது என்பதை, அது செயல்படுத்தப்படுவதற்கு முன்பே நகராட்சி அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் என்ற பொறுப்பை நிலைநாட்ட வேண்டும். அப்படியில்லையெனில், இந்தப் பொறுப்பு, அரசுப் பயங்கரவாதத்தால் குறிவைக்கப்படும் தனிநபர்கள் மீது சுமத்தப்பட்டு, அவர்களே அந்த உத்தரவை எதிர்த்து முறையிட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மிகவும் சிக்கலானதும், அதிக செலவு பிடிக்கக்கூடியதும், நேரத்தை வீணடிக்கக்கூடியதுமான சட்ட வழிமுறைகளை, பெரும்பாலும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள் வெறும் 15 நாள் கால அவகாசத்திற்குள் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பு, சாமானியர்கள் சட்ட உதவிகளை அணுகுவதில் உள்ள அமைப்பு ரீதியான தடைகளைப் புறக்கணிக்கிறது.
அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் – நடைமுறைச் சாத்தியக்கூறுகள்
சட்டத்திற்குப் புறம்பான புல்டோசர் இடிப்புகளில் ஈடுபடும் அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்கி, அவர்களுக்கு நிதி அபராதம் விதிக்கவும், அவர்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரவும் இந்த நீதிமன்ற வழிகாட்டுதல்கள் வழிவகை செய்துள்ளன. இது அவர்களைப் பொறுப்பாளியாக்கும் முயற்சியின் ஒரு படி என்றாலும் கூட, இதனை அமல்படுத்துவதென்பது, நீதித்துறையின் திறனையும் அதன் நோக்கத்தையுமே சார்ந்திருக்கும். குறிப்பாக, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தண்டனை இல்லாத் தன்மை என்ற இங்கே ஆழமாக வேறூன்றிப் போயிருக்கிற கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டால், அந்த அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கு உட்படுத்துவதற்கேற்ப கடினமான நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டாலொழிய அது சாத்தியமில்லை. நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலும் அரசியல் அழுத்தத்தில்தான் புல்டோசர் இடிப்புகளைச் செயல்படுத்துகிறார்கள். அதனால், மாநில அரசு அதிகாரிகள், அவர்கள் வழங்கிய அந்த உத்தரவுகளைச் செயல்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க அவர்களது அதிகாரிகளை அவர்களே பணிக்கப் போவதில்லை.
புல்டோசர் இடிப்புகளுக்கான அரசியல் ஆதரவுகளை நீதிமன்றம் அங்கீகரிக்கவோ அல்லது கண்டறியவோ தவறியிருக்கிறது. அதனை, அது வகுத்துள்ள வழிகாட்டுதல்களில் யாருக்கு எதில் பொறுப்பிருக்கிறது என்பதை சரியாகக் குறிப்பிடப்படாமல் இருப்பதிலேயே தெரியவருகிறது. அரசியல் படிநிலைகளில் மேலே உள்ள அதிகாரிகளை உள்ளடக்காமல் நகராட்சி அதிகாரிகளுடனேயே லஞ்சம் வாங்குவதெல்லாம் நின்றுவிடுகிறது என்ற தவறான புரிதலின் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்கள் செயல்படுகின்றன. உயர் மட்டத்தில் இவற்றுக்கு உடந்தையாக இருப்பவர்களை விசாரணைக்குட்படுத்த வழிமுறைகள் இல்லாதது, முதலமைச்சர் அல்லது மூத்த அதிகாரிகள் போன்றவர்கள் வழங்கும் உத்தரவுகளைப் பின்பற்றும் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும்தான் பொறுப்பாளிகளாக்கும். ஆனால், உண்மையான அதிகாரம் பெற்றவர்களை அது பாதுகாக்கும்.
மேலும், தங்களது சொந்த செலவில் அதிகாரிகள் அபராதத்தைச் செலுத்துவது என்பது இயல்பாக நடக்காத ஒன்றாகும். அரசே அதனை ஏற்றுக்கொண்டுவிடும். அத்துடன், அரசே அதிகாரிகளின் சட்டச் செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை இன்னமும் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒரு சுயாதீன அமைப்பை மேற்பார்வை செய்யவும், ஏற்கனவே நடந்த மற்றும் இனி எதிர்காலத்தில் நடக்கும் புல்டோசர் இடிப்புகளை ஆய்வு செய்யவும் முறையான விதிகளை உருவாக்க வேண்டும். அதனைக் கட்டாயமாக்குவதன் மூலமாக, புல்டோசர் இடிப்புகள் வகுப்புவாதம் மற்றும் அரசியல் பாரபட்சங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய முடியும். இதனுடன், சட்டத்திற்குப் புறம்பான புல்டோசர் இடிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களுக்கான இழப்பீடுகளை மாநில அரசிடம் கோருவதற்கு, சட்டப்படி சரியான வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதிரியான ஏற்பாடுகள் இல்லாமல், தவறுகளுக்கு சரியான நபர்களை பொறுப்பாக்குவதாக நீதிமன்றம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
கடந்தகால அநீதிகளும் தற்போதைய மௌனமும்
சட்டத்திற்குப் புறம்பாக, தண்டனை நோக்கில் இந்தியாவில் சில ஆண்டுகளாக நடந்துவரும் புல்டோசர் இடிப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி தொடர்பாக எந்த விவாதமும் அத்தீர்ப்பில் இடம்பெறவில்லை. அது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையான இழப்பீடு வழங்குவது குறித்த எந்த வழிமுறையையும் வகுக்காமலும், முந்தைய சட்டவிரோத புல்டோசர் இடிப்புகளில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பொறுப்பாக்காமலும் உள்ளது. வருங்கால வழக்குகளில் மட்டும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில் ஒருதலைபட்சமான அக்கறை காட்டுவதும், ஆனால் கடந்தகால அரசு வன்முறையைப் புறக்கணிப்பதும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கை மேலும் வலுப்படுத்துகிறது. இது, நகராட்சி அதிகாரிகளையும் சட்ட அமலாக்கத் துறையினரையும் ‘ஆட்சி நடத்துகிறோம்’ என்ற பெயரில் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தொடர்ந்து செய்யத் தைரியமூட்டுகிறது.
ஒருவேளை, நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, இந்தியாவில் நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் முக்கியமாக அரசியல் ஆதாயங்களுக்காகவும், கூட்டுத் தண்டனையாகவும், முறையற்ற வகையில் இஸ்லாமிய சமூகத்தை நோக்கியே நடத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தவறியிருக்கலாம். அரசியல் போராட்டங்கள் அல்லது வகுப்புவாத பதட்டங்களின்போது, இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் “சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பு” அல்லது “அனுமதியற்ற கட்டுமானம்” என்கிற பெயரில் இடிக்கப்படுகின்றன. மேலும், அதே போன்ற செயல்கள் மற்ற சமூகத்தினரால் நடந்தேறினால் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை (அல்லது அவற்றின் மீது அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை). மனித உரிமை அமைப்புகள், சுயாதீன ஊடகவியலாளர்கள், சட்ட உதவிக் குழுக்கள் ஆகியோரின் அறிக்கைகள் தொடர்ச்சியாக இம்மாதிரியான இடிப்பு நடவடிக்கைகள் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக இயல்பாகச் செயல்படுத்தப்படுபவை அல்ல என்றும், மாறாக இஸ்லாமியர்களின் வீடுகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பைக் குலைக்கும்விதமாக செய்யும் விதமாக அவை அனைத்தும் “சட்டவிரோதமானவை” என்பது போன்று திட்டமிட்டே சித்தரிக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகின்றன.
முஸ்லிம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தொடரும் இந்த புல்டோசர் இடிப்புகள் குறித்து நீதிமன்றம் மௌனம் சாதிப்பதும், அதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்று சுட்டிக்காட்டாமல் விடுவதும், அரசு ஒருதலைபட்சமாக நடத்தும் வன்முறைக்கு அது மறைமுக அங்கீகாரம் அளிப்பதாகவே ஆகிறது.
நீதித்துறையின் தயக்கமும் அதன் விளைவுகளும்
இவ்வாறு, பாதிக்கப்படுவோர் யார் என்று பெயர் குறிப்பிடாமல் விடுவது தற்செயலானது அல்ல; அரசு திட்டமிட்டு நடத்தும் முஸ்லிம் விரோத வன்முறையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள நீதித்துறை பொதுவாகவே தயக்கம் காட்டுவதையே இது வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற அரசு நடவடிக்கைகளின் அரசியல் தன்மையைப் புறக்கணிப்பதற்காக, நீதித்துறை நீண்டகாலமாக வெறும் சட்ட நுணுக்கங்களையே காரணம் காட்டி வருகிறது. இதனால், ‘சட்டத்தின்படி நடுநிலையாகச் செயல்படுகிறோம்’ என்ற போர்வையில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைக்கும் செயல்பாடு தொடர்ந்து நடைபெற இது வழிவகுக்கிறது.
அரசுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகள் எழும்போதோ, அல்லது அரசு கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும்போதோ, இந்திய முஸ்லிம்களைத் தண்டிக்கும் ஒரு உத்தியாக இந்த இடிப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவது பலமுறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த உண்மையை மறைப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
பாதிக்கப்பட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட மறுப்பதன் மூலம், இந்தத் தீர்ப்பு அரசின் மதப்பாகுபாட்டிற்கு மறைமுகமாகத் துணைபோவது மட்டுமல்லாமல், முஸ்லிம் குடும்பங்களின் துயரங்களை நாட்டின் சட்டப் பார்வையில் இருந்து அகற்றிவிடுகிடுகிறது. இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டே பெயர் குறிப்பிடாமல் விடுவதால், அரசு தன் செயல்களை ‘சட்டத்தின்படி சரியானது’ என்று நியாயப்படுத்திக்கொண்டு தொடர்ந்து செய்ய முடிகிறது. இதனால், இந்த இடிப்புகள் ஒரு திட்டமிட்ட அரச வன்முறையாகப் பார்க்கப்படாமல், வெறும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்களாகக் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.
தீர்ப்பின் நிச்சயமற்ற தன்மையும் தொடரும் சவால்களும்
2018 ஆம் ஆண்டு, கூட்டு வன்முறை குறித்த தெஹசீன் பூனாவாலா வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு, வெறுப்புக் குற்றங்களைக் கையாள்வதில் ஒரு முக்கிய வழிகாட்டுதலாக அமைந்தபோதிலும், அது நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. அது போலவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த புல்டோசர் இடிப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் எந்த அளவிற்குப் பயனளிக்கும் என்பதில் ஐயத்தையே எழுப்புகின்றன.
புல்டோசர் இடிப்புகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள மற்றொரு முக்கியமான, கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், நீதிமன்ற ஆணைகளையும் மீறி இன்றைக்கும் களத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் புல்டோசர் இடிப்புகளாகும். உதாரணமாக, சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் உள்ள மதனி மசூதியின் ஒரு பகுதியை இடித்ததற்காக அம்மாநில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பைக் குறிப்பிடலாம். அரசு அதிகாரிகள் தொடர்ந்து தண்டனை நோக்கில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும், இத்தகைய மீறல்களைக் கையாண்டு, நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணக்கத்தை உறுதிசெய்ய நீதித்துறைக்கு எந்தளவிற்குத் திறன் உள்ளது என்பது குறித்தும் இந்தச் சம்பவம் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
வெறும் வாய்ப்பேச்சா? அல்லது உண்மையான தலையீடா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இதுபோன்ற புல்டோசர் இடிப்புகளுக்குச் சில செயல்முறை ரீதியான சவால்களை முன்வைத்திருந்தாலும், அது புல்டோசர் இடிப்புகளைக் கருவிகளாகப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதத்தை அனுமதிக்கும் அடிப்படைக்கட்டமைப்பைத் தகர்ப்பதாக இல்லை. ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக இது முன்வைக்கப்பட்டாலும், இந்தத் தீர்ப்பு இறுதியில் அரசை ஆழமான ஆய்விலிருந்து பாதுகாக்கும் ஒரு நீதித்துறை சமரசமாகவே செயல்படுகிறது.
சுயாதீனமான மேற்பார்வை இங்கு இல்லை. அதுமட்டுமின்றி, பாரபட்சமாகச் செயல்படக்கூடிய நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமே முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. மீறல்களுக்குத் தெளிவான தண்டனைகளும் இல்லை. இந்தக் காரணங்களால், இந்த முயற்சிகள் நடைமுறையில் பயனற்றுப் போகவே வாய்ப்புள்ளது. இந்தத் தீர்ப்பு, ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்துத் தாக்குவதிலிருந்து தெளிவான பாதுகாப்பை வழங்கவில்லை. கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நீதி கிடைக்க வழி செய்யவில்லை. அரசின் தன்னிச்சையான முடிவுகளைவிட நீதிமன்றக் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சட்டக்கட்டமைப்பையும் இது உருவாக்கவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பு அரசு வன்முறைக்கு எதிரான ஒரு உண்மையான தலையீடாகத் தெரியவில்லை. மாறாக, இது வெறும் மேம்போக்கான ஒரு சரிசெய்தல் போலவே இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்துத் தாக்குவதிலிருந்து தெளிவான பாதுகாப்பு இல்லாமல், கடந்த காலப் பாதிப்புகளுக்கு நீதி வழங்காமல், அல்லது அரசின் தன்னிச்சையான முடிவுகளைவிட நீதிமன்றக் கண்காணிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டக்கட்டமைப்பு இல்லாமல், இந்தத் தீர்ப்பு அரசு வன்முறைக்கு எதிரான ஒரு உண்மையான தலையீடாக இல்லாமல், வெறும் மேம்போக்கான சரிசெய்தல் போலத்தான் இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, தெளிவான நிலைப்பாடின்றி, நீண்ட சட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக முன்பு செய்ததைப் போலவே எதையும் தடையின்றித் தொடரலாம் என்பதைக் குறிப்பதாகத்தான் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இருக்கிறது. நீதியானது நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டுமென்றால், அது அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இருக்கிற நடைமுறைப் பாதுகாப்பு அதிகாரத்தைத் தாண்டியும், வன்முறையை நிகழ்த்துவதற்கான வழிமுறைகளை உடைத்தெறிய வேண்டும்.
தமிழில் : நந்தினி