அரசியல்இந்தியாதொடர்கள்

வாடகை வீட்டையும் விட்டுவைக்காத புல்டோசர் இடிப்பாளர்கள் (கட்டுரை – 6)

549 20250506 065139 0000

தமிழில்: காளிமுத்து

2022 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, ‘கலவரக்காரர்களை’ குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, கட்டகேரி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இடிக்க புல்டோசர்களை அனுப்பியது சஹாரன்பூர் மேம்பாட்டு ஆணையம் (SDA).

அதற்கு முந்தைய இரவு, வடக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் கலவரத்தைத் தூண்டியதாகவும், அதை வழிநடத்திச் சென்றதாகவும் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பிடி ஆணை கூட இல்லாமல் சட்டவிரோதமாக 17 வயதே ஆன முஸம்மில் சௌத்ரி என்னும் சிறுவன் கைது செய்யப்பட்டான். அச்சிறுவனைக் காவலில் வைத்திருந்தபோது, எந்த விதமான முன் அறிவிப்போ, எச்சரிக்கையோ, எந்தக் காரணமுமோ கூட இல்லாமல், அவனின் வாடகை வீட்டைக் குறிவைத்து அவன் வசித்த பகுதிக்கு புல்டோசர்களை ஏவி விட்டனர் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. முஸம்மிலின் வீட்டை இடித்துவிட்டு, அங்கிருந்து முகமது பிலால் என்கிற வேறொரு நபரின் வீட்டை நோக்கி புல்டோசர் நகர்ந்துவிட்டது. புல்டோசர் நகர்ந்தாலும், முஸம்மில் சௌத்ரியின் குடும்பத்திற்கு அந்தப் புல்டோசர் கொடுத்த பேரழிவு என்பது அவர்களுடனேயே தங்கிவிட்டது.

முகமது நபிகள் பற்றிய பா.ஜ.க. பேச்சாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சின் காரணமாக, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அதற்கு எதிரான பெரும் போராட்டங்கள் வெடித்திருந்தன. போராட்டங்கள் எவ்வாறு கலவரமாக மாறின என்பது புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள் அந்த ஊரில் வாழும் மக்கள். அதன் தொடர்ச்சியாக அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின்போது, மணிக்கூண்டு பகுதியில் சுற்றித் திரிந்ததற்காக, 17 வயது முஸம்மில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டான். இதை நேரில் கண்ட அப்பகுதி சிறுவர்களின் மூலமாக முஸம்மில்லின் குடும்பத்தினர் கைது பற்றி அறிந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, அவரது தாயார் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தார்.

முஸம்மில்லின் தாயார் காவல் நிலையத்தில் இருந்த அதே வேளையில், எவருக்கும் விளக்கமோ, முன்னெச்சரிக்கையோ கொடுக்காமல், முஸம்மில்லின் வீட்டின் முன்வாசல் சுவற்றை மிகப்பெரிய புல்டோசர் ஒன்று இடிக்கத் துவங்கியிருந்தது.

மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘அது முஸம்மில்லின் சொந்த வீடு அல்ல’ என்றும், ‘வீட்டின் உரிமையாளர் அதை அவர்களுக்கு வாடகைக்குத்தான் விட்டிருக்கிறார்’ என்றும் தெரிவித்தார். ஆனால், அவர் சொல்வதற்குள்ளேயே அந்த வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டு போதிய சேதாரங்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.

முஸம்மில்லின் குடும்பத்தினர் ஒரு வருடகாலமே அங்கே வசித்து வந்திருந்த போதிலும், அப்பகுதியின் சூழலுக்கு நன்கு பழகி இருந்தனர். அதிர்ச்சியிலிருந்து மீண்டிராத முஸம்மில்லின் தந்தை, அப்போது நடந்த அந்தத் துயரச் சம்பவத்தை எங்களிடம் நினைவுகூர்ந்தார். “எந்த விதமான முன்னறிவிப்புமின்றி வந்த புல்டோசர், எங்கள் மொத்த குடும்பத்திற்கும் நிரந்தரமான பெரும் அச்சத்தை விதைத்துச் சென்றுவிட்டது. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்கள் வழங்கிய ஆவணங்கள், பிணை ஆவணங்கள் எல்லாமே இப்பொழுதும் பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன்” என்றார். கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முஸம்மிலும் அவரது தந்தையும் இவற்றை விவரிக்கும்போது, அவரது 2 சகோதரிகள் வெறுமையுடன் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

தனது அச்சுறுத்தும் வகையிலான சட்டவிரோத செயலை நியாயப்படுத்துவதற்காக, முன்தேதியிடப்பட்ட ஒரு அறிவிப்பை சஹாரன்பூர் மேம்பாட்டு ஆணையம் (SDA) வெளியிட்டுத் தவறை மறைத்துத் தப்பிக்கப் பார்த்தது. முஸம்மில்லின் வழக்கறிஞர் பாபர் முதாசிர் இந்நிகழ்வைக் கண்டித்துக் கூறுகையில், “மக்களை அச்சுறுத்துவதற்காக அப்பாவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையான இச்செயல், ஒரு பயங்கரவாத நடவடிக்கையே” என்கிறார். மேலும், முஸம்மில்லின் குடும்பத்தினர் வாடகைக்குத் தங்கி இருந்ததை வலியுறுத்தி, இது போன்ற நீதிக்குப் புறம்பான தண்டனைகளுக்கு எவ்வித சட்டரீதியான அடிப்படையும் இல்லை என்றார். அத்துடன், 17 வயதே ஆன முஸம்மில் கலவரத்தை வழிநடத்திச் சென்றார் என்று காவல்துறை கூறுவதும் வேடிக்கையானது என்றும், அந்த பொய்ப்பரப்புரையை அப்படியே எடுத்துக்கொண்டு நாட்டின் பிரபல ஊடகங்களும் பத்திரிகைகளும் கூட அவரைக் கொடுங்குற்றவாளியைப் போல் சித்திரித்தது வேதனைக்குரியது என்றும் கூறினார்.

முஸம்மில்லின் குடும்பம் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடி வந்த சூழலில், அவர் மீதான பொய்க் குற்றச்சாட்டும், அவருடைய வீட்டின் மீதான புல்டோசர் தாக்குதலும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. அக்குடும்பமே இதனால் பாதிப்பிற்குள்ளாகித் தவித்தது. தாக்குதல் நடக்கும்போது வெளியூரில் இருந்த வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும், அதன்பின்னர் அங்கு வந்து ஆத்திரமடைந்ததோடு மட்டுமின்றி, முஸம்மில் குடும்பத்தை வீட்டைக் காலிசெய்யச் சொல்லிவிட்டனர்.

தன்னுடைய பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வீட்டின் உரிமையாளரின் மனைவி, பின்னர் அந்த நிகழ்வினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மன உளைச்சலையும் எங்களிடம் தெரிவித்தார். தானும் தன்னுடைய கணவரும் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தை முழுவதுமாக செலவிட்டுக் கட்டிய வீடு, புல்டோசர் தாக்குதலுக்குள்ளானதைக் கேள்விப்பட்டதும் ஏற்பட்ட பயத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
அவர்களுடைய வீடு முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டதா அல்லது சில பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்பட்ட அந்த வீட்டில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிடும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்பதோடு மட்டுமின்றி, மீண்டும் காவல்துறையினர் வந்து விடுவார்களோ என்கிற அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் சஹாரன்பூரில் அவர்களுடைய வீட்டிற்கே திரும்பிவிட்டனர்.

காவல்துறை அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகளாலும், வீட்டு உரிமையாளரின் அழுத்தம் காரணமாகவும், முஸம்மில்லின் குடும்பம் அப்பகுதியிலேயே வேறு வீட்டிற்குக் குடிபுக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியையும் மன உளைச்சலையும் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. இவ்வாறான பொருளாதார நெருக்கடியிலும், முஸம்மில்லின் குடும்பம், இடித்துத் தள்ளப்பட்ட பழைய வாடகை வீட்டின் முன்வாசல் படியை அந்த உரிமையாளருக்குச் சீரமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கலவரத்தின் தாக்கத்தினூடே, பொருளாதார ரீதியாகத் தாக்குப்பிடித்து வாழவேண்டிய கட்டாயத்தில் மட்டுமல்லாமல், தங்கள் மகனைச் சிறையில் இருந்து விடுவிக்கவும் அவனது பெற்றோர் போராடி இருக்கின்றனர். ஆறுமாத சிறைவாசத்திற்குப் பின்பு, இறுதியாக ஒருநாள் வீட்டிற்குத் திரும்பினான் முஸம்மில். அதைப் பற்றிக் கூறுகையில், “துயர்மிகுந்த இந்த அனுபவம் எங்கள் விதியின் சோதனை” என்றார் அவரது தந்தை.

“அல்லாஹ் மட்டுமே இந்தத் துயரத்திலிருந்து வெளிவர எங்களுக்கு உதவினார். வேறு யாரும் எங்களுக்குத் துணை நிற்கவில்லை. ஆனால் எங்களைப் போன்று வேறு எந்தக் குடும்பமும் இத்தகைய சூழலுக்கு ஆளாகவே கூடாது” என்றார். மனதளவில் இந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கம் என்பது அளவிட முடியாதது. அவர்களுடைய குடும்பம் முழுவதும் குழப்பத்துடனும் பயத்துடனுமே இப்போதும் வாழ்கிறது.

இரண்டு ஆண்டுகள் கடந்தும், அந்தச் சம்பவத்தின் கோரத்தன்மை இன்னும் அப்பகுதியில் நிலைத்திருக்கிறது. குறிப்பாக முஸம்மிலை இப்போதும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் சந்தேகம் கலந்த அச்சத்துடனேயே பார்க்கிறார்கள். முஸம்மில்லின் குடும்பத்தினருடன் பேசினாலே, தங்களையும் அவர்களுடைய குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் என்று அரசு சந்தேகப்பட்டு, அதனால் தாங்களும் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்று கட்டகேரியில் இருக்கும் அக்கம்பக்கத்தினர் அஞ்சினர்.


“இன்றைய சூழலில் இந்தியாவில் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றாலுமே கூட, ஒருவர் அரசால் குறிவைக்கப்படுவதற்கு முஸ்லிமாக இருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அதனால், மிகவும் கவனமாக எங்கள் குடும்பத்தை நாங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் மெதுமெதுவாக எங்கள் வாழ்க்கையில் கட்டியெழுப்பும் அனைத்தையும் பணயம் வைக்கவா முடியும்?” என்று முஸம்மிலின் தெருவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார். அக்கம்பக்கத்தினரின் புறக்கணிப்பின் காரணமாக, முஸம்மில் குடும்பத்தினர் தனிமையை அதிகமாக உணர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

தற்போது சட்டம் பயின்று வருவதால், தனது கைது மற்றும் அதன் பின் நடந்தேறிய சம்பவங்களை அந்தப் பின்னணியில் தீர்க்கமான பார்வையுடன் முஸம்மில் புரிந்துகொண்டிருக்கிறார். “நான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். அவர்கள் சொல்வதைப் போல அப்போராட்டத்தில் ஒருவேளை நான் கலந்துகொண்டேன் என்று வைத்துக்கொண்டாலுமே, அதற்காக அவர்கள் என்னைக் கையாண்ட விதமென்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. இந்த நாட்டில் சட்டங்கள் உள்ளன. எவ்விதக் காரணமோ, கைதுசெய்யத் தேவையான உத்தரவோ கூட இல்லாமல் நான் கைது செய்யப்பட்டேன். எங்களை எப்படியாவது சிறுமைப்படுத்திவிட வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே இப்படியான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்” என்றார் முஸம்மில்.

சிறு வயதிலேயே சிறை சென்று வந்திருந்தாலும், முஸம்மில் தவறான பாதைகளை அதன்பிறகும் தேர்ந்தெடுக்கவில்லை. நீதியை வென்று அடைவதற்கான போராட்டத்தில், தன்னுடைய சிறை அனுபவங்களும் பயன்படும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
“நம் அரசியலமைப்புச் சட்டம் நம்மைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எங்களுக்கு எதிராக, எவரும் சட்டங்களை மீண்டும் ஒருமுறை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது. அதனால்தான் நான் சட்டப்படிப்பு (LLB) படிக்க விரும்புகிறேன்” என்றார்.

முஸம்மிலைக் கைது செய்த தினத்தில், முஸ்லிம் குடும்பங்களை மட்டுமே குறிவைத்து, சட்டத்திற்குப் புறம்பான முறையில் வீடுகளை இடித்துத் தள்ளியது சஹாரன்பூர் காவல்துறை. முஸ்லிம் குடும்ப உறுப்பினர் ஒருவர் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்கிற காரணத்தைச் சொல்லியே, முஸம்மில் மற்றும் பிலால் ஆகியோரின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்துவிட்டு, அதே காரணத்தைக் குறிப்பிட்டு அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையானது, எந்த விதமான முன்னறிவிப்புமின்றி, தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான அவகாசத்தைக் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும், குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவருமே வீட்டில் இருக்கும்போதே இடிக்க முன்வருவதன் மூலம், இஸ்லாமிய மக்களை அச்சுறுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதைப் புரிந்துக் கொள்ள முடியும். சட்டத்தைப் பாதுகாப்பதற்காக எல்லாம் இந்த புல்டோசர் இடிப்பு நடைபெறவே இல்லை என்பதும் இதனால் உறுதியாகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக மக்கள் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை, சட்டப்பூர்வமாக அரங்கேறியதாக நிறுவுவதற்கான முயற்சிதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட முன்தேதியிடப்பட்ட இடிப்பு அறிவிப்பு. அரசின் அடக்குமுறைக் கருவிகளாக மட்டுமின்றி, மக்களை அச்சுறுத்தல் மூலம் கீழ்ப்பணிய வைக்கும் முயற்சியாகவும் இதை நாம் புரிந்துக் கொள்ளலாம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை நபர்களுக்கும் இது போன்றதொரு முன்தேதியிடப்பட்ட இடிப்பு அறிவிப்பு வழங்கியுள்ளதாகவும், அதை அம்மக்கள் ஏற்க மறுத்ததாகவும் முஸம்மில்லின் வழக்கறிஞர் பாபர் முதாசிர் கூறுகிறார். இந்த அறிவிப்புகளுக்கு சஹாரன்பூர் மேம்பாட்டு ஆணையம் (SDA) சார்பாக எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், அவைகளைத் திரும்பப் பெறவும் இல்லை.இத்தகைய அநியாயங்களுக்கு எதிராக, முஸம்மில் போன்ற போராடத் துணிந்தவர்களின் தீர்க்கமான முடிவையும், நிலையான மனவுறுதியையும் நாம் கவனிக்க வேண்டும்.
முஸம்மில் என்கிற ஒரு தனிமனிதரின் துயர் மிகுந்த கதை மட்டுமல்ல இது. மாறாக, அரசியலமைப்பையும் நீதியையும் உறுதியாகக் கட்டிக்காப்பதற்கான ஒரு முழக்கமாகவும் எதிர்ப்புக் குரலாகவும் இருக்கிறது.

தமிழில்: காளிமுத்து

Leave a Reply