அரசியல்தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ – (பகுதி – 4) – பரணிதரன்

549

அண்மையில் டிராகன் படம் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட படம். அந்த படத்தில் மிகவும் சுவாரசியமாக, ஒரு இன்ஜினியரிங் முடிக்காத மாணவனும், அவனுக்கான தவறான வழிகாட்டுதலால் குறுக்குவழியில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, பின் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி கதை நகரும். வாழ்கையில் நேர்மையாக இருப்பதே வெற்றிக்கான வழி என்பது ஒரு கதையாக அருமை. ஆனால் அதில் பேசப்பட்ட சில விஷயங்களையும், அதற்குப் பின் உள்ள சில மையக் கருத்துகளையும் நாம் உற்று நோக்க வேண்டும். அதாவது, அந்தப் படத்தில் கூறுவது போன்று, நேர்மையாகப் படித்து முடித்து வேலை தேடும் எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா?

இன்றைய சமூகத்தில், நேர்மையாக இன்ஜினியரிங் படித்து முடித்து, கல்லூரியிலேயே நடைபெறும் கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேர்வாகி, “ஆஃபர் லெட்டர்” உடன் வெளியே வந்தவர்களை, நிறுவனங்கள் பல மாதங்கள் கழித்து வேலைகொடுக்காமல் ஏமாற்றிய கதைகளே இங்கு அதிகம். அப்படிப்பட்ட நிறுவனங்கள் பற்றியும், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகள் பற்றியும், இங்கு கருத்துள்ள படங்களும் வர வேண்டிய தேவை உள்ளது. ஐடி ஊழியர்கள் என்றால் பணம், சரக்கு, பாலியல் என்று சுருக்காமல், பரந்த பார்வையில் படம் எடுக்க வேண்டும். படத்தில் உள்ள “ஆஃபர் லெட்டர்” என்பதே சட்டவிரோதமான ஒன்று. அது நிறுவனங்கள் எந்த ஊதியமும் கொடுக்காமல், படித்து முடித்த மாணவர்களைத் தங்களுடைய தேவைக்கான மனிதவளம் என்கிற வகையில் பிடித்து வைத்துக் கொள்வதுதான். அடுத்துவரும் மாதங்களில் ஐடி நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கிற “மென்பொருட்கள் ஆர்டர்”களைப் பொறுத்து, “ஆஃபர் லெட்டர்” கொடுக்கப்பட்டவர்களை வேலைக்கு அழைக்கலாம் அல்லது மறுக்கலாம். இதனைத் தடுப்பதற்கும் வரைமுறைப்படுத்துவதற்கும் எந்தச் சட்டமும் தற்போது கிடையாது. இப்படிப்பட்ட அநீதி கடந்த 40 ஆண்டுகளாக ஐடி துறையில் நடைபெறுகிறது.

மென்பொருள் நிறுவனங்கள் பெரிய பணப் பலத்துடன் இருப்பதால் மட்டுமல்லாமல், அவுட்சோர்சிங் பிசினஸ் எல்லாரும் மேற்கத்திய நாடுகளில் இருந்து கணினி மென்பொருளுக்கான ஆர்டர்களை வாங்கிச் செய்து கொடுப்பதால், அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாக ஆட்களைக் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்து, “ஆஃபர் லெட்டர்” என்கிற சட்டவிரோத முறையில் அவர்களைப் பிளாக் செய்து வைத்துக் கொள்கின்றனர். இளைஞர்களும் சமூகத்தில் நிகழும் மிகப்பெரிய வேலையின்மை என்பதையும், மிகப்பெரிய போட்டியையும் அஞ்சி, அவர்களுக்கு ஆஃபர் லெட்டர் நம்பி பிற வேலைகளைத் தேர்வு செய்வதை விட்டுவிடுகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வெளிவருகின்றனர். அதில், வேலைச் சந்தை சரியாக இருக்கும்போது, அதிகபட்சமாக ஒரு சில லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது ஐடி துறையில். பிற எல்லோரும் வேலையின்மையால் பிற வேலைகளுக்கு நகர நேர்கிறது. இதில், ஊதியத்தைக் குறைக்க ஐடி நிறுவனங்கள் சில நேரங்களில் சயின்ஸ்/காமர்ஸ் படித்த பட்டதாரிகளையும் எடுத்து, பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஆஃபர் லெட்டருக்குச் சட்டக் கட்டுப்பாடு இல்லை. அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் கொடுத்தால் மட்டுமே வேலை உண்டு என்று அர்த்தம், அதற்குச் சட்டக் கட்டுப்பாடு உண்டு. ஆனால் ஆஃபர் லெட்டரை ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் சம்பளம் இல்லாமல் வேலையாட்களை நிறுவனங்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன. இன்று வரையும் கூட நாம் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு எடுக்கப்பட்ட இளைஞர்கள் வேலையில் தேர்வு எழுதி வெளியில் அனுப்பப்பட்டதைப் பார்க்கிறோம்.

அப்படி ஒரு பிரச்சனை 2016ல் நாலேட்ஜ் புரொஃபஷனல் ஃபோரத்திடம் வந்தது. டிசிஎஸ் பிரச்சனைக்குப் பின்பு, நாங்கள் பல கட்டங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டோம். மற்றும் பல நிறுவனங்களில் அதே காலகட்டத்தில் வேலை விட்டு ஆட்களை வெளியே அனுப்பினர். அதற்கு எதிராக வலுவான கண்டனங்களையும் அரசிடமும் முறையீடுகளையும் நாங்கள் செய்து கொண்டிருந்தோம். அதன் விளைவாக, இந்தக் காலகட்டத்தில் பெரும்பான்மையான ஊடகங்கள் எங்களின் செய்திகளை வெளியிட்டன. அதனால் பரவலாக இயக்கம் அறியப்பட்டது. அதன் விளைவாக, 2015-16 காலகட்டத்தில் எங்கள் இணையப் பக்கத்துக்கு ஒரு செய்தி பகிரப்பட்டது. அதில், எல்என்டி இன்போடெக் நிறுவனத்தில் பணிக்கான ஆஃபர் லெட்டர் மாணவர்களுக்குத் தரப்பட்டு, திடீரென ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்நிறுவனம் வேலைக்குத் தேவை இல்லை என்று கூறி, ஒரு தேர்வு மூலம் வெளியே அனுப்பியது.

அதில் பெரும்பகுதியான 1500 மாணவர்கள் இந்தியா முழுவதும் வாட்ஸ்அப்பில் அணி திரண்டு இருந்தனர். அதில் சென்னையில் இருந்த இளைஞர்கள் எங்களை அணுகியிருந்தனர். எங்களுக்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்று கூறினர். அதன் பின், அந்த இளைஞர்களிடம் நாங்கள் பேசினோம். இந்தியா முழுவதும் பல ஊர்களில் வாட்ஸ்அப் குரூப்புகளாக பல நூறு பேர் இணைந்து, எல்என்டி இன்போடெக்குக்கு எதிராகப் போராட தயாராக இருந்தனர். முதல் முறையாக, நாலேட்ஜ் புரொஃபஷனல் ஃபோரம் சார்பில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள் கையில் எடுத்தோம்.

இந்தியா முழுவதும் இருந்த மாணவர்களுக்கு, சென்னையிலிருந்து நாலேட்ஜ் புரொஃபஷனல் ஃபோரம் சார்பாக சீதாராமன், பாரதி, வில்க்கின் மற்றும் நான் அனைவரிடமும் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாம் களைந்து, அவர்கள் முன் இருந்த எல்லா சட்டபூர்வ வழிகளையும் விளக்கினோம். இவர்களைக் கூட்டுச் செயல்பாட்டிற்கு இட்டுச் சென்றோம். முதலாவதாக, இந்தியா முழுவதும் இருந்த பிற தோழமை அமைப்புகளுக்கும், அந்தந்த ஊர்களில் இருந்த இதுபோன்ற பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தகவல்களைப் பகிர்ந்தோம். பின்னர், அனைத்து மாநிலங்களும் உடனடியாக தொழிலாளர் துறையிடம் மனுவை அளித்தார்கள். இதுபோன்ற அநீதிக்கு எதிராக உடனடி முயற்சியாக, மத்திய தொழில்துறை அமைச்சகத்திற்கு லெட்டர் கொடுத்தோம். எல்லா ஊரிலும் மாணவர்கள் இடையே பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை அமைப்பு நிர்வாகிகள் எல்லோரும் கூட்டாகச் செயல்பட்டோம். ஒரு கருத்துக் குழு உருவாக்கினோம்.

பின்னர், இந்தியா முழுவதும் கூட்டாக எல்என்டி இன்போடெக்குக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நாங்கள் நான்கு பேர் தாண்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் போரூர் டிஎல்எஃப் முன்பு எல்என்டி இன்போடெக்குக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தோம். எங்களைத் தவிர, பிற மாணவர்கள் அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து, துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தார்கள். நம்ம சமூகத்தில் பலர் தொழிற்சங்கம் சேர்ந்தால் அல்லது இருப்பது தெரிந்தால் வேலை போய்விடும் என்ற பயம் இருந்த போது, தொழிற்சங்கத்தின் முதல் கடமை தன்னை நம்பி வந்த நபர்களை எல்லாவிதத்திலும் காக்க வேண்டும். அந்த வகையில், அவர்கள் அடையாளம் மறைத்துப் பிரச்சாரம் செய்யச் சொன்னோம். அப்படி ஆரம்பித்த ஐடி தொழிற்சங்க இயக்கம், இன்று பலர் வெளிப்படையாகத் தங்கள் அடையாளங்களுடன் தொழிற்சங்கச் செயல்பாட்டில் உள்ளனர். எப்போதும் இயக்கத்தில் அளவு மற்றும் நடக்கும் போது பண்பு மாற்றம் தவிர்க்க முடியாது.

எல்என்டி இன்போடெக் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினோம். பல செய்தியாளர்களுக்கு, “இப்படி ஐடி துறையில் நடக்குமா?” என்கிற அளவுக்கு எங்களிடம் கேள்வி கேட்டனர்.

பரவலாக ஆங்கில பிரைம் டைம் விவாத செய்தியாக இந்தப் பிரச்சினையை மாற்றினோம். இதன் விளைவாக, எல்என்டி இன்போடெக் நிர்வாகம், “நாங்கள் இந்த மாணவர்களைத் தகுதி அடிப்படையிலேயே எடுத்துக் கொள்ளவில்லை” என்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

இதைக் கண்டித்தும், மாணவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று முன்வைத்தும், அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டம் நாலேட்ஜ் புரொஃபஷனல் ஃபோரம் சார்ந்த நாங்களும், மற்றும் மாணவர்களும் கூட்டாக முடிவு செய்தோம். எப்போதும் தொழிற்சங்க இயக்கத்தில் கூட்டு முடிவு மட்டுமே. முடிவின் அடிப்படையில், சென்னையின் ஓஎம்ஆரில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் உண்ணாவிரதம் நடத்துவது என்றும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நாலேட்ஜ் புரொஃபஷனல் ஃபோரம் சார்பாக நாங்கள் நான்கு பேரும் முழு நாள் எங்கள் அலுவலக வேலை முடித்து, லெட்டர் பேட் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகளுக்கும் மற்றும் அவர் தொழிற்சங்கங்களுக்கும் நேரடியாக அலுவலகம் சென்று அழைப்பிதழ் அளித்தோம்.

எந்தக் கட்சி பேதம் இன்றி, பாஜக முதல் தேமுதிக வரை அனைத்துக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நாங்கள் சந்தித்து அழைத்தோம். சில கட்சி அலுவலகங்களில் அலுவலக செயலாளர்கள் அந்த அழைப்புகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் சில கட்சி அலுவலகங்களில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் எங்களுடன் அமர்ந்து உரையாடினர். முக்கியமாக இடதுசாரி கட்சிகள், விசிக உண்மையாக பிரச்சனை கேட்டிருந்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு சி.பி.எம், சிபிஐ, டிஒய்எஃப்ஐ, எஸ்எஃப்ஐ போன்ற அமைப்புகள் வருவதாக உறுதி அளித்தனர். பிற கட்சிகள், தாங்கள் பேசிச் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டனர்.

உண்ணாவிரத அனுமதி வாங்க, சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் அனுமதி லெட்டர் கொடுத்தோம். இன்ஸ்பெக்டர், “அது எப்படி ஐடி நிறுவனத்திற்கு எதிராக இங்கு உண்ணாவிரதம் இருக்கலாம்?” என்று சொல்லிவிட்டார். இதே காவல் நிலையம், 2015 ஆம் ஆண்டு டி.சி.எஸ்க்கு எதிரான போராட்டத்தில் அனுமதி கேட்டபோது இதேபோன்று சொன்னார். பின்னர் ஏசியிடம் சென்று அனுமதி பெற்றபோது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதில், “டி.சி.எஸ் நிறுவனத்திற்கு எதிராகப் பேசக்கூடாது” என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. போராட்டமே டி.சி.எஸ்க்கு எதிராகத்தான். ஆனால் டி.சி.எஸ்க்கு எதிராகப் பேசக்கூடாது என்பது முதல் நிபந்தனை. இதிலிருந்து, போலீஸ் யாருடைய நண்பன் என்பதைக் களத்தில் இருந்த எங்களால் உணர முடிந்தது.

ஏசியிடம் சென்றோம். ஏசி, “என்னால் அனுமதி கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் கமிஷனரைப் பார்த்துக் கொடுங்கள்” என்று கூறிவிட்டார். பின்னர், கமிஷனர் அலுவலகத்திற்கு நானும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரதிநிதியும் சென்றோம். அப்போது கமிஷனர் வேறு ஒரு கூட்டத்தில் இருந்ததால், இணை சட்ட ஒழுங்கு கமிஷனர் எங்கள் மனுவை வாங்கிக் கொண்டு, முழுமையாகப் படித்துவிட்டு, எங்களிடம் உள்ள ஆதாரங்கள் எல்லாம் பார்த்துவிட்டு, “நீங்கள் உண்ணாவிரதம் நடத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார். அதுவே முதல் முறை, ஐடி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஓஎம்ஆரில், முதல் முறையாக உண்ணாவிரதம் ஒரு ஐடி நிறுவனத்திற்கு எதிராக நடைபெறுவது.

போராட்ட அனுமதி பெற்ற உடன், ஆட்களை அணிதிரட்டினோம். பரவலாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத நிதி உதவி அளித்தனர். ஓஎம்ஆர் முழுவதும் உண்ணாவிரத போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. உண்ணாவிரத நாள் அன்று, சுமார் 200 மாணவர்கள் திரண்டனர். சிலர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். உண்ணாவிரதத்துக்கு சில நாட்கள் முன்னே, பலர் தங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பது மூலம் தங்கள் அடையாளங்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய பயத்தை வெளிப்படுத்தினர். அதனால், நாங்கள் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் அநாமதேய மாஸ்க் அணிந்து பங்கேற்கச் சொன்னோம். அதுவே விமர்சனம் ஆனது. “போராட்டத்தில் முகம் கூடக் கட்ட தைரியம் இல்லை என்றால் எப்படி?” அந்த 2010களின் கட்டத்தில், ஐடி நிறுவன முதலாளிகளின் சங்கமான நாஸ்காம் பராமரித்துவரும் ‘நேஷனல் ஸ்கில் ரெஜிஸ்ட்ரி’ இல் போராடும் தொழிலாளர்களின் பெயர்களை குறித்துவைத்து ப்ளாக்மார்க் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. தொழிலாளர் சங்கக் கூட்டு நடவடிக்கை என்பது ஒரு மூர்க்கத்தனமாக எதிர்வினை இல்லை, ஒரு திட்டமிடப்பட்ட தீர்வுக்கான செயல்பாடு. அந்த வகையில், போராட முதல் முறையாகக் களத்துக்கு வருவோர் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கூட்டம் தொடங்கும் முன்னே, ஓஎம்ஆர் சுற்றி  இருந்த நான்கு காவல் நிலையத்தில் இருந்து ஐஎஸ் எனப்படுகின்ற உளவுத்துறை அதிகாரிகள் செல்போனில் அழைத்து கூட்டத்தைப்பற்றி விசாரித்தனர். அது வரை ஓஎம்ஆர்-இல் இது போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை ஐடி ஊழியர்கள் நடத்தியதே இல்லை என்பதில் இருந்து அவர்கள் கேள்வி கேட்டனர். இந்தத் தகவலை அரசுக்கு அனுப்புவர். அதேசமயம், காவல்துறையில் நாங்கள் அனுமதி வேண்டிக் கொடுத்த கடிதத்துடன் ஒலிபெருக்கிக்கான அனுமதியைக் கோரி மற்றொரு விண்ணப்பத்தையும் இணைத்திருக்க வேண்டுமாம். அறியாமையில் அதனை இணைக்கவில்லை. அதாவது, கூட்டத்தில் மைக் செட் போட வேண்டும் என்றால், மைக் செட் போடும் நபரிடமிருந்து ஒரு விண்ணப்பத்தைப் பெற்று, அனுமதி விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மைக் செட் போலீஸ் அனுமதி கொடுக்கும். அதனால், போராட்டத்துக்கு காவல் இன்ஸ்பெக்டர் மைக் செட் போட உங்களை அனுமதி இல்லை என்றார். பல மணி நேரம் பேசிய பிறகும், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், உண்ணாவிரதம் வந்த அனைத்துத் தலைவர்களும் மைக் செட் இல்லாமலே தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

பயணம் தொடரும்……

– தோழர் பரணிதரன் (தலைவர் UNITE)

முதல் பகுதி: https://maattru.in/2024/12/sangam-eathuku-bro-1/

இரண்டாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-2/

மூன்றாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-3/

Leave a Reply