மற்றவை

பகிரப்படாத அறிவு கரைந்து காணாமல் போகும்… -பி.அம்பேத்கர்

தமிழில்: வெ. ஸ்ரீஹரன்

ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘டீப் சீக்’ (DeepSeek), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்ட பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. டீப் சீக் செயலி  விரைவாக ஆப்பிளின் ஏப் ஸ்டோரில் அதிகளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, டீப் சீக் செயலியின் வளர்ச்சியை நிர்வகித்த சில கொள்கைகளான ‘பொதுமை அறிவு’ (Knowledge Commons) மற்றும் ‘திறந்த-மூலம்’ (Open-Source) பற்றிய பரந்த பொது விவாதத்தைத் தூண்டி இருக்கிறது.

ஏஐ வளர்ச்சிக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மேம்பட்ட, அதிகத் திறன்படைத்த கணினி சில்லுகள் (Computer Chips). இச்சில்லுகளை சீனாவிற்குக் கிடைக்கவிடாமல் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், ஆரம்பத்தில் ஏஐ-இல் ஆராய்ச்சி செய்யவிடாமல் தடுத்து அவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தின. ஆனால், பெரும்பாலும் இளம் முனைவர் பட்டதாரிகளைக் கொண்ட டீப் சீக்கின் குழு, பொருளாதாரத் தடைக்கு உட்படாத ஹெச்-800 சில்லுகளைப் பயன்படுத்தியது. இச்சில்லுகளைப் பயன்படுத்தியே, ‘ஓபன் ஏஐ’ (OpenAI) போன்ற முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியது டீப் சீக் குழு. அதிலும், அப்பெருநிறுவனங்கள் செய்யும் செலவுகளில் வெறும் 5 சதவீத அளவிற்கே செலவிட்டு டீப் சீக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முன்னேற்றம், தடைகளைத் தாண்டிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக டீப் சீக்கை மதிக்கத்தக்க வகையில் கொண்டுசென்றிருக்கிறது.

‘ஹேக்கிங் கேப்பிட்டலிசம்: தி ஃப்ரீ அண்ட் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் மூவ்மெண்ட்’ (Hacking Capitalism: The Free and Open Source Software Movement) என்ற நூலில், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் விவசாயிகள்தான் தொழில்நுட்பத்தின் முதல் ஹேக்கர்கள் (Hackers)  என்று ஜோஹான் சோடர்பெர்க் கூறுகிறார். கிரஹாம் பெல்லின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பமும், பெல் தொலைபேசி நிறுவனத்தின் ஏகபோகமும் சேர்ந்து, நகர்ப்புறப் பகுதிகளில் மட்டுமே தொலைபேசி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதவியது. கிராமப்புறப் பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் மறுக்கப்பட்டதால், விவசாயிகள் வேலி கம்பிகள் போன்ற மறுபயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தித் தங்கள் உள்கட்டமைப்பை உருவாக்கினர். 1902 ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளால் இயக்கப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட சுயாதீன தொலைபேசி இணைப்புகள் மற்றும் கூட்டுறவுகள் உருவாகின. இதேபோன்ற தகவல்களைப் பேசும் மற்றொரு நூல்தான் பிரபீர் புர்காயஸ்தா எழுதிய ‘நாலேட்ஜ் ஆஸ் காமன்ஸ்: டுவார்ட்ஸ் இன்க்ளூசிவ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ (Knowledge as Commons: Towards Inclusive Science and Technology). காப்புரிமை அமைப்புகள் எவ்வாறு உருவாகின என்பதையும், புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட படைப்பாளர்களோடு மறைந்துவிடாமல் இருப்பதற்காக, அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவதற்காக அரசாங்கங்கள் எவ்வாறு அக்கண்டுபிடிப்புகளின் உரிமைகளைப் பெற்றன என்பதையும் இந்நூல் பேசுகிறது. தொழில்துறை புரட்சியின் சின்னமாக பெரும்பாலும் கருதப்படும் ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பான நீராவி இயந்திரத்தை, நூலாசிரியர் பிரபீர் முன்னிலைப்படுத்துகிறார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திர வடிவமைப்புகளின் காப்புரிமைகள் அடுத்தடுத்து அதிலிருந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதைத் தடுத்தன. பொறியாளர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் நீராவி இயந்திரத்தின் திறனை மேம்படுத்த முயன்றனர். ஆனால் வாட் தனது ஏகபோக கட்டுப்பாட்டைக் கடுமையாகச் செயல்படுத்தினார், மாற்றங்களைச் சட்டபூர்வமாகத் தடுத்தார். ஆனால் அவரது காப்புரிமைகள் காலாவதியான சில ஆண்டுகளுக்குள்ளேயே, தொழிலாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் கூட்டு முயற்சியால் இயந்திரத் திறன் ஐந்து மடங்கு அதிகரித்தது. அறிவுசார் சொத்துரிமையை ஆதரிக்கும் ஆட்சிகள் பெரும்பாலும் தனியார் இலாபத்தைப் பாதுகாக்க முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்பதை இது வெளிப்படுத்தியது.

பொருளாதாரத் தடை அல்லது கார்ப்பரேட் விலக்கால் ஏற்படுத்தப்படும் தடைகள் எப்படி பெரும்பாலும் உள்ளூர் புதுமைகளைத் தூண்டுகின்றன, ஏகபோக நிறுவனங்களுக்குச் சவால் விடுகின்றன மற்றும் தொழில்நுட்பப் பரப்பை மறுவடிவமைக்கின்றன என்பதை இந்த உதாரணங்கள் வலியுறுத்துகின்றன. மேலும், காப்புரிமைகள் ஆரம்பத்தில் தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டன. இன்று பயன்படுத்தப்படுவது போல பெரிய கார்ப்பரேட்கள் பெரும் இலாபம் ஈட்டுவதற்காக அல்ல.

பொதுமை அறிவின் கதை

அறிவு எப்போதும் அதன் சொந்த நோக்கத்திற்காக மட்டுமே தேடப்படுவதில்லை. அதன் மதிப்பென்பது, கூட்டுச் சவால்களை வெளிப்படையாகவோ அல்லது நுட்பமாகவோ நிவர்த்தி செய்வதில்தான் உள்ளது. அறிவு “அதன் சொந்த நோக்கத்திற்காக” மட்டுமே உள்ளது என்று கூறுவது, தற்போதுள்ள அதிகாரக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் ஒரு நிலைப்பாடு. இது இயல்பாகவே ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. “அறிவு அறிவுக்காக” என்பது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும். மறுபுறம், பகிரப்பட்ட அறிவு எப்போதும் மனிதகுல முன்னேற்றத்தின் அடித்தளமாக இருந்துள்ளது. இருப்பினும், கூட்டு அறிவின் இந்தப் பாரம்பரியத்தை, முதலாளித்துவம் ஒரு பண்டமாக மாற்றுகிறது — ஒவ்வொரு யோசனையும் பொதியப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தனியார்மயமாக்கப்படுகிறது. பொதுமை அறிவின் கட்டமைப்பு அறிவை ஒரு பகிரப்பட்ட வளமாகக் கருதுகிறது. அறிவு அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்போது மட்டுமே, அது செழித்து வளரும் என்று அது நம்புகிறது. திறந்த அணுகல் (Open Access) என்பது இலட்சியவாதக் கருத்தியல் மட்டுமல்ல, நடைமுறைக்கும் மிகவும் உகந்தது. ஏனெனில், அறிவை அதிகமான மக்கள் பயன்படுத்தி, தழுவி, அதை அடிப்படையாகக் கொண்டு அதிலிருந்து அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும்போது, அறிவு அதிவேகமாக விரிவடைகிறது.

தி எஞ்சின் ரிப்போர்ட்டர் (The Engine Reporter) என்ற கூட்டு இதழில், பங்களிப்பாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைத் திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியபோது, நீராவி இயந்திரத் தொழில்நுட்பத்தில் புதுமைகள் எவ்வாறு அதிகரித்தன என்பதை நூலாசிரியர் பிரபீர் எடுத்துரைக்கிறார். குறிப்பாக, முதல் நீராவி இரயில் இயந்திரக் கண்டுபிடிப்பாளர் ரிச்சர்ட் டிரெவிதிக் இந்த இதழுக்கு அடிப்படை வடிவமைப்புகளை அளித்தார். ஆனால் அவற்றுக்குக் காப்புரிமை பெறவில்லை. ‘திறந்த பரிமாற்றம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துகிறது’ என்ற நெறிமுறையை அவர் உணர்த்தினார். இதேபோல், ஜோனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசிக்கான காப்புரிமை மக்களுக்கு உரியது என்று கூறினார். இது மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியம். எனவே இது உலகளாவிய பொதுவானவற்றில் (Global Commons) மனிதகுல அறிவாக நம் அனைவருக்கும் சொந்தமானது என்று அவர் கூறினார்.

அனைவருக்கும் அறிவை அணுகக்கூடியதாக்குதல்

ஆழமான பிரிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட சமூகங்களில், அறிவுக்கான அணுகல் மேல்தட்டினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக, இந்தியத் துணைக்கண்டம் போன்ற பகுதிகளில், மத ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சமூக விதிமுறைகள் கோலோச்சியது. அவ்விதிகளின் தொகுப்பான மனுஸ்மிருதி, ஒதுக்கப்பட்ட வகுப்பினரான சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் போன்றவர்களை, கல்வி மற்றும் அறிவுசார் பங்கேற்பிலிருந்து தடுத்தது. முதலாளித்துவ சமூகங்களில், இது போன்ற விலக்கு, பொருளாதார அணுகலுக்கான கட்டுப்பாடாக மாறுகிறது. பணத்திற்கான அணுகல், தனியார்மயமாக்கப்பட்ட கல்வி மற்றும் அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள் (நிறவெறி காலத்துப் பிரிவினை போன்றவை), அறிவை யார் பெற முடியும் அல்லது பெற முடியாது என்பதைத் தீர்மானிக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848 இல் பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்டது. அது உலகளவில் அடக்குமுறையின் சங்கிலிகளை உடைக்க அழைப்பு விடுத்த அதே சமயத்தில், இந்தியாவில் ஒரு இணைப் புரட்சி நிகழ்ந்தது. அதே 1848ஆம் ஆண்டு, சமூக நீதியில் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே, புனேவில் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தனர். அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த மாணவர்களைத் தைரியமாக வரவேற்றனர். தீண்டாமை மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிரான அவர்களின் முன்னெடுப்பு, “கூட்டு நடவடிக்கை மூலம் விடுதலை” எனும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சாரத்தை உணர்த்தியது. பூலேயின் பள்ளிகளிலிருந்து ஹேக்கர் கூட்டுறவுகள் வரை, வரலாற்றின் அனைத்து கலகக்காரர்களும் மேல்தட்டினரின் கட்டுப்பாட்டை நிராகரிக்கின்றனர். “திறந்த அணுகல் ஒற்றுமையையே நமக்கு உணர்த்துகிறது. அதற்குள் நுழைய எந்தத் தடுப்பு வாயில்களும் இல்லை, எந்தக் கடவுள்களும் இல்லை, எந்த முதலாளிகளும் இல்லை.” என்பதே அவர்களுடைய கோரிக்கைகளின் அடிப்பையாகும். உலகளாவிய தெற்கு நாடுகளில் (Global South) உள்ள சமூகங்கள் மற்றும் முறையான கல்வி நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டவர்களை முன்னுரிமையாகக் கொண்டு, ஒதுக்கப்பட்ட கல்வி கற்கும் மக்களுக்கான வாய்ப்புகளைத் திறந்த-அணுகல் வாதிகள் உருவாக்கியுள்ளனர். சை-ஹப் (Sci-Hub), லைபிரரி ஜெனீசிஸ் (Library Genesis) போன்ற இலவச டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் திறந்த-அணுகல் களஞ்சியங்கள் போன்ற முன்னெடுப்புகளைத் திறந்த-அணுகல்வாதிகள் எடுத்துள்ளனர். கட்டணத் தடைகள் மற்றும் நிறுவனக் கட்டுபாடுகளைத் தவிர்த்து, அறிவு என்பது மேல்தட்டு மக்களுக்காக மட்டுமே இருக்கும் ஒரு ஆடம்பரம் அல்ல என்பதை இவை உறுதி செய்கின்றன.

பிப்ரவரி 21 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படும் சிவப்புப் புத்தக தினம் (Red Books Day), கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் புரட்சிகரக் கருத்துக்களை நினைவுகூர்கிறது. அவை மட்டுமல்லாமல், மனதை அடிமைப்படுத்தும் ஆயுதமாக அறிவைப் பயன்படுத்தும் அடக்குமுறை அமைப்புகளால் நசுக்கப்பட்டவர்களையும், இந்தத் தினம் நினைவுகூர்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் டீப் சீக்கின் தொடக்கமானது, ஏஐ தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்குவதற்கும், தகவல் கட்டுப்பாட்டைத் தகர்ப்பதற்கான புதிய நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறது. திறந்த அணுகலுக்காகப் போராடி இறந்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட, “தி இன்டர்நெட்ஸ் ஓன் பாய்” (The Internet’s Own Boy) என்று அறியப்பட்ட செயற்பாட்டாளர் ஆரோன் ஸ்வார்ட்ஸ் இத்தருணத்தில் நினைவுக்கூரப்பட வேண்டியவர். JSTOR பதிவிறக்கங்கள் மூலம் கல்வி ஆராய்ச்சியை ஜனரஞ்சகமாக்கத் துணிந்ததற்காக அமெரிக்க நிறுவனங்களால் கொல்லப்பட்டார் ஸ்வார்ட்ஸ். அறிவின் மீதான கட்டுப்பாட்டுக்கு எதிராகச் சவால் விடுபவர்களை அதிகாரம் எவ்வாறு தண்டிக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கப் பேரரசால் இலக்கு வைக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் சோசலிச நாடுகள் இன்று தங்களது இருப்பைத் தக்கவைப்பதற்கான போராட்டங்களைப் பிரதிபலிக்கும் மகாத்மா ஜோதிராவ் பூலேயின் கவிதை வரிகள்:

“அறிவு பறிக்கப்பட்டதால் புத்தி இழக்கப்பட்டது,
புத்தி இல்லாமல் நன்னடத்தை இழக்கப்பட்டது,
நன்னடத்தை இல்லாமல் அனைத்து இயக்கமும் இழக்கப்பட்டது!
இயக்கம் இல்லாமல் பணம் இழக்கப்பட்டது,
பணம் இல்லாமல் சூத்திரர்கள் வீழ்ச்சியடைந்தனர்.
இந்தத் துன்பம் அனைத்தும் அறிவு பறிக்கப்பட்டதால் ஏற்பட்டது.”

கட்டுரை ஆசிரியர்: பி. அம்பேத்கர்

தமிழில்: வெ. ஸ்ரீஹரன்

https://thetricontinental.org/asia/newsletter-access-to-knowledge

Leave a Reply