அறிவியல்

இந்திய அறிவியல் துறைகளில் நிலவும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள்..!

549 (3)

இந்திய அறிவியல் துறைகளில் நிலவும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள்..!

இந்திய அறிவியல் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நீடிக்கும் பாலின அடிப்படையிலான இடைவெளிகளைக் காணும் போது, ஒரு பிரமிடின் (PYRAMID) உருவம் நினைவுக்கு வருகின்றது. அறிவியல் கல்வியைப் பொறுத்தவரை, பிரமிடின் அடிப்பகுதியில் உள்ளது போல் அதிக அளவிலான பெண்கள் துவக்கநிலையில் உள்ளனர். ஆனால் உயர்நிலைகளில்—அதாவது உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களோ அல்லது முக்கிய நிர்வாகப் பொறுப்பிலோ—பெண்களின் இடம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. அறிவியல் கல்வியில் ஆரம்ப நிலையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலையை அடைவதில், பெண்களுக்கு சமூக ரீதியான தடைகளோடு அரசு மற்றும் நிர்வாக அடிப்படையிலான தடைகளும் இன்னமும் நீடிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட UNESCOவின் அறிக்கை, உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் பெண்களின் பங்கேற்பு 29.1% சதவீதம் மட்டுமே உள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. அதுவும் இந்தியாவில் வெறும் 13.9% சதவீதமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள 37 நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியா மோசமான நிலையில் உள்ளது. உலகளவில் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ள நாடு நேபால்; வெறும் 7.8% என்ற அளவில் மட்டுமே பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக அந்நாட்டில் உள்ளனர் என்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அரசாங்க புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகள்:

2022 ஆம் ஆண்டு ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அப்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 16.5% பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உள்ளதாக அறிவித்தார். எந்த அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரத்தை அவர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. காரணம், 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட UNESCO புள்ளிவிவரம் இந்தியாவில் 13.9% என்ற எண்ணிக்கையில் பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர் என்ற செய்தியை வெளியிட்டது. எதுவாயினும், சராசரியாக 15% என்ற அளவில் தான் ஆராய்ச்சியாளர்களாக பெண்கள் இருப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் மிகக் குறைவுதானே?

பெண்களின் பங்கேற்பில் மெதுவான முன்னேற்றம்:

கடந்த பத்தாண்டுகளாக, அறிவியல் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு மெதுவாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2021 ஆம் ஆண்டு உலக வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்பில், முதுகலை அறிவியல் பட்டதாரிகளில் சுமார் 43% என்ற அளவில் பெண்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அனைத்திந்திய உயர்கல்விப் புள்ளிவிவரம் (AISHE – ALL INDIA SURVEY OF HIGHER EDUCATION) கொடுத்த தகவலின்படி, சுமார் 33% பெண்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தது. 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 40% என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டுகளில் அதிக முனைவர் பட்டம் பெற்றவர்களில், உலகளவில் அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முனைவர் பட்டம் பெறுவதில் பெண்களின் பங்கேற்பு உண்மையாகவே கணிசமான அளவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும், எங்கு தொடர்ந்து பாலின இடைவெளி நீடிக்கிறது அல்லது பெண்கள் நிராகரிக்கப்படுவது தொடர்கிறது என்பதை ஆராய்ந்துள்ளோம்.

இந்தியாவின் மூன்று பெரிய தேசிய அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் நிலை:

இந்தியா மூன்று பெரிய தேசிய அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது:

  1. பெங்களூரில் உள்ள INDIAN ACADEMY OF SCIENCES
  2. டெல்லியில் உள்ள INDIAN NATIONAL ACADEMY OF SCIENCES
  3. அலகாபாத்தில் உள்ள NATIONAL ACADEMY OF SCIENCES

இந்த மூன்று அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாக உள்ளது.

  • 2015 ஆம் ஆண்டு, பெங்களூரில் உள்ள INDIAN ACADEMY OF SCIENCES நிறுவனத்தில் 9.83% என்ற அளவில் பெண்களின் பங்கேற்பு இருந்தது. 2022 ஆம் ஆண்டு (7 ஆண்டுகளுக்குப் பிறகு), வளர்ச்சியை நோக்கிச் செல்லாமல், இது 9.6% என்ற அளவில் குறைந்துள்ளது. இந்தத் தகவல் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் கூடக் காணலாம்.
  • அதேபோல், டெல்லியில் உள்ள INDIAN NATIONAL ACADEMY OF SCIENCES நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு 6% பெண்களின் பங்கேற்பு இருந்தது. தற்போது குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லை.
  • அலகாபாத்தில் உள்ள NATIONAL ACADEMY OF SCIENCES நிறுவனத்தில் 2015 ஆம் ஆண்டு 8.1% என்ற நிலையில் இருந்தது. இங்கும் முன்னேற்றம் இல்லை.

பொதுவாக, இந்நிறுவனங்களில் ஒரு சில பெண்கள் உயர் பொறுப்புகளில் வந்திருக்கலாம். ஆனால், அறிவியல் உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிடக் குறைவாக உள்ளது. உயர்மட்ட அளவில் இந்தப் பாகுபாடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்படாமல் இருந்தால், மேலும் பல ஆண்டுகள் கல்வி நிறுவனங்களில் இதைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதி ஒதுக்கீடு:

அறிவியல் தொழில்நுட்பத் துறை (DEPARTMENT OF SCIENCE AND TECHNOLOGY – DST) என்பது ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறை. இத்துறை ஆராய்ச்சி செயல்பாடுகளுக்காக நிதி உதவி செய்கிறது. இத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பெண்களின் ஆராய்ச்சிக்காகச் செலவிடப்பட்ட தொகை குறைந்து கொண்டே வருவதை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.

  • 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையின்படி, 1330 பெண்களுக்கு அவர்களின் ஆராய்ச்சிக்காக முதலீடு செய்யப்பட்டது. அதாவது, இவர்கள் தான் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (2014), அந்த எண்ணிக்கை 1301 ஆகக் குறைந்துள்ளது.

பல்கலைக்கழகம் சாராத இதர ஆய்வுப் பணிகளுக்குச் செய்யப்படும் நிதி உதவி பற்றி, 2019 ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்ட மற்றொரு புள்ளிவிவரம், பெண்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படாத நிலையைப் பிரதிபலிக்கிறது.

  • 2017 ஆம் ஆண்டு பதிவான மொத்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை 4137. இதில் பெண்களின் பங்கேற்பு 31% சதவீதம் என்ற அளவில் இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு, இது 28% சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.

இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் நிலவும் நிலை:

DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION (DRDO), INDIAN COUNCIL OF AGRICULTURAL RESEARCH (ICAR), INDIAN COUNCIL FOR MEDICAL RESEARCH (ICMR) உள்ளிட்ட இந்தியாவின் பல ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களைக் கணக்கில் எடுத்தால், அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

  • 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 30% என்ற அளவில் பெண்களின் பங்கேற்பு இருந்தது.
  • 2016 ஆம் ஆண்டு, இது 24% சதவீதம் என்ற அளவில் குறைந்தது.
  • சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் தொடர்கிறது.

ஏன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெண்களுக்கு போதிய ஆதரவை வழங்கவில்லை?

மேற்கூறிய புள்ளிவிவரங்களிலிருந்து, ஏன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் போதிய ஆதரவை பெண்களுக்கு வழங்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

  • பெண்களுக்கு அறிவியல் திறன் குறைவாக உள்ளதா?
  • பெண்களுக்கு அறிவியல் மீதான ஆர்வம் குறைவாக உள்ளதா?
  • அல்லது இயற்கையாகவே ஆண்களுக்கு பெண்களை விட அறிவியல் திறன் அதிகமா?

இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதற்கான பதிலை 1999 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆலோசனைக் குழு (CSIR – COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தருகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் பொது புத்திக்கு மாறாக, அறிவியல் அடிப்படையில் உள்ளன:

“இயற்பியல், உயிரியல், பொறியியல் அறிவியல் சார்ந்த அறிவைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரியல் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், எதன் அடிப்படையில் இன்னமும் இந்தப் பாகுபாடு தொடர்கிறது?

நம் நாட்டில் இயங்கும் 36 மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள ஆய்வகங்களில், 4600க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதில்:

  • 18% சதவீதம் மட்டுமே பெண்கள்.
  • 82% ஆண்கள்.

பெண்களில் அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தாலும், ஆராய்ச்சி மையங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஏன் என்ற விடையைத் தேடியே இந்தப் புத்தகத்தை எழுதினோம். இது பற்றி அடுத்து வரும் பகுதியில் விரிவாக எழுதியுள்ளோம்.

எல்சீவர் அறிக்கை மற்றும் பொறியியல் துறையில் பெண்கள்:

எல்சீவர் (ELSEVIER) என்பது 1880 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு பதிப்பகம். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் ஒரு மருத்துவ-அறிவியல் பதிப்பகமாகப் பிரபலமாக அறியப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST), 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையே இந்திய ஆராய்ச்சி முடிவுகளின் எண்ணிக்கையை எல்சீவர் பதிப்பகத்திடம் கேட்டறிந்தது. இந்த ஆராய்ச்சிகளைப் பிற நாடுகளோடு ஒப்பிட்டு, அளவீடு செய்து, வித்தியாசமான முறையில் கணக்கிட்டது. அதாவது:

  • இந்தியர்களின் எத்தனை ஆராய்ச்சி முடிவுகள் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது?
  • எத்தனை முறை இது சர்வதேச சமூகத்தால் கவனிக்கப்பட்டது?

இதில், பொறியியல் துறை ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா கணிப்பொறி மற்றும் பொறியியல் துறையில் சிறந்த கட்டுரைகளை வெளியிடுகிறது என்ற முடிவும் கிடைத்தது. ஆனால், இவ்விரண்டு துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு குறைவாக உள்ளதையும் அந்த அறிக்கை கூறுகிறது.

பையாஸ் வாட்ச் (BIAS WATCH INDIA) அறிக்கை:

பையாஸ் வாட்ச் (BIAS WATCH INDIA) என்ற தனியார் அமைப்பு, அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு பற்றி ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் தெரிவித்த தகவல் என்னவென்றால்:

  • பொறியியல் துறையில் பெண் பேராசிரியர்கள் 9.2% மட்டுமே உள்ளனர்.
  • கணினித் துறையில் 12.2% பேர் மட்டுமே உள்ளனர்.

இது போன்ற முக்கிய துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைந்திருப்பது போல, படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.

முனைவர் பட்டங்களில் பெண்களின் பங்கேற்பு:

2017-18 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் வெளியாகும் முனைவர் ஆய்வுப் பட்டங்களில்:

  • இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு அடுத்தபடியாக,
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களில் தான் அதிக முனைவர் பட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில், 91% பேர் ஆண்களாக உள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை குறித்து ஆழமாக ஆராய வேண்டியதில்லை.

AASSA (ASSOCIATION OF ACADEMIES AND SOCIETIES OF SCIENCE) அறிக்கை:

இந்த அமைப்பு, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கேற்பு பற்றி 2015 ஆம் ஆண்டு ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. இந்தப் புள்ளிவிவரத் தரவுகளில் பங்கேற்றவர்களில் ஒருவரான ரோகினி காட்போல் (ஒரு இயற்பியலாளர் மற்றும் பாலின சமத்துவப் போராளி), இந்தியாவில்:

  1. மருத்துவ அறிவியல், உயிரியல் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக உள்ளது.
  2. ஆனால், இதே துறைகளில் தான் சர்வதேச அளவில் நாம் குறைவான பங்களிப்பைச் செலுத்துவதாக எல்சிவேர் அறிக்கை கூறுகிறது.

இது எப்படி? அதற்கான காரணம் என்ன?

இதற்கான காரணங்கள் பற்றி ரோகினி மூன்று முக்கிய முடிவுகளை வெளியிட்டார்:

  1. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், பெண்கள் அறிவியல் பாடங்களைப் படிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகிறார்கள்.
  2. முழுநேர அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக தங்களுடைய வாழ்க்கையை அமைப்பதில், பெண்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன.
  3. அறிவியல் மற்றும் பொறியியல் கற்பிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும், குறிப்பாக உயர்கல்வி அறிவியல் நிறுவனங்களில், பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும், அறிவியல் துறை சார்ந்த நிர்வாகப் பொறுப்புகளிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பெண்ணியத்தின் பார்வையிலிருந்து, மூன்றாவது முடிவு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது இந்திய அறிவியல் துறையில் ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அதிகாரமிக்க நிர்வாகப் பொறுப்புகள் ஆண்களுக்குச் சாதகமாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்த அமைப்பு எப்படி பெண்களைத் திட்டமிட்டு வெளியேற்றுகிறது என்பதையும் விவரிக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடுகள்:

அதிக நிதி உதவிகளையும், அதிக வளங்களையும் கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களாக நாம் நினைக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்தப் பாகுபாடுகள் நிலவுகின்றன.

CSIR, DRDO, DST, DAE போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும்:

  • பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம்
  • ஐதராபாத்தில் உள்ள டாட்டா ஆராய்ச்சி நிறுவனம்
  • டெல்லி பல்கலைக்கழகம்

உள்ளிட்ட உயர் அந்தஸ்துடன் கருதப்படும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, பல்வேறு உதவிகள் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலமாகக் கிடைக்கின்றன.

உதாரணமாக, பெங்களூரு இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (IISc), இந்தியாவின் சிறந்த 5 கல்வி நிறுவனங்களில் (INSTITUTES OF EMINENCE) ஒன்று எனப் பாராட்டப்படுகிறது. இது அமெரிக்காவின் ஐவி லீக் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பிடும் அளவிற்குத் தரமானது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. UGCயின் மூலமாக எந்தக் கண்காணிப்பும் இல்லாமலே, இது போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், 1000 கோடி வரை கூடுதல் நிதி உதவியையும் பெறுகின்றன. அத்துடன், முழுமையான கல்வி நிறுவனமாக சுய நிர்வாகத் திறனும், நிதியைச் செலவு செய்யும் சுதந்திரமும் இக்கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

புகழ்பெற்றது (EMINENT) மற்றும் சிறந்தது (EXCELLENCE) என அழைக்கப்படும் இது போன்ற கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய அரசு அதிக முதலீடுகளைச் செய்கிறது. ஆனால், அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு போகும் முறை இல்லாமல், பாகுபாடுகளோடு இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன.

2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் 8.6% சதவீதம் மட்டுமே பெண்கள். அதிக வளங்கள் நிறைந்த இது போன்ற நிறுவனங்களில் குறைவான பெண்களின் பங்கேற்பு இருப்பதுதான், அறிவியல் துறையில் பாலின அடிப்படையிலான இடைவெளிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ரோகினியின் ஆராய்ச்சி முடிவுகள்:

ரோகினியின் ஆராய்ச்சியில், அறிவியல் படிப்பில் அதிக அளவில் பெண்கள் ஆரம்ப நிலையில் தான் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பிரமிட் வடிவத்தை ஒப்பிடுகிறோம்.

  • மாநில பல்கலைக்கழகங்களிலும்
  • மத்திய பல்கலைக்கழகங்களிலும்
  • அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களிலும்

இந்த இடைவெளிகள் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில் பெண்களைப் பார்ப்பதே அரிது. தலைமைப் பொறுப்பிலும், விருதாளர் தேர்விலும் பெண்களின் பெயர்கள் இல்லை.

சாதி மற்றும் பாலின பாகுபாடு இந்தியாவின் முக்கிய சமூகப் பிரச்சனை என்பதால், அறிவியல் துறையிலும் இது பிரதிபலிக்கிறது.

ஐஐடி நிறுவனங்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகள்:

சமீபத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) படி, இந்தியாவில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பேராசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டது. இதில்:

  • 88.1% சதவீதம் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்.
  • 8.1% சதவீதம் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • 3.1% சதவீதம் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • 0.6% சதவீதம் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

2021 ஆம் ஆண்டு, இந்திய அறிவியலில் உள்ள சாதிப் பாகுபாடுகள் பற்றிய கட்டுரையில், ஐஐடி என்ற பெயரை “அக்ரஹாரம்” என்று குறிப்பிட்டிருந்தோம். அருகாமையில் உள்ள கிராமங்களில் பிராமணர்கள் கடைபிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள், சென்னை ஐஐடி நிறுவனத்திலும் நீடிக்கின்றன.

பிப்பின் விட்டில் என்ற சென்னை ஐஐடி பேராசிரியர், தம் சக பேராசிரியர்களால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டது பற்றி, தேசிய பிற்படுத்தப்பட்ட அமைப்பிற்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார். “சக பேராசிரியர்களால் தான் துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டது” என்பதை அக்கடிதத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சிறிய கல்வி நிறுவனங்களைக் காட்டிலும், இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய நிலையில் இல்லாத உயர்கல்வி அறிவியல் நிறுவனங்களில், மறைமுகமாக இது போன்ற பாகுபாடுகள் உள்ளன.

பெண்களைப் பொறுத்தவரை, அனைத்து சாதிப் பெண்களுக்கும் சமமாகவே பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. அறிவியல் துறையில் நாம் இதுவரை அறிந்து வைத்துள்ள பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் கூட, ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடமிருந்தே வந்தவைதான்.

அறிவியல் துறையில் முன்னேறி வந்துள்ள ஒரு சில பெண்களும்:

  • ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்
  • அல்லது பொருளாதார அடிப்படையில் உயர் நிலையில் உள்ளவர்கள்

நாங்கள் பாலின இடைவெளி குறித்து சில தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களிடம் உரையாடினோம். இந்திய கல்வித்துறைக்குள் அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றிய விவரிப்புகள் மௌனமாக்கப்படுகின்றன என்றும், சாதி அடையாளத்தைச் சுற்றியுள்ள உரையாடல்கள் அறிவியல் சூழலுக்கு வெளியே தள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.

பாலின இடைவெளிகள் அல்லது பாகுபாடுகள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளன. எல்லா தரவுகளும் புள்ளிவிவரங்களும், பாலின இடைவெளி சமூகத்தின் அடிமட்டம் வரை பரவியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

பாலின பாகுபாடு என்றால், அது ஆண் மற்றும் பெண் பாலினத்தை மட்டுமே குறிப்பதல்ல. மாற்றுப் பாலினம், திருநங்கை மற்றும் திருநம்பிகளும் இதில் அடங்குவர். ஆனால், இவர்களைப் பற்றிய எந்த விவாதமும் கேள்விகளும் இல்லை.

இதற்கான ஒரே காரணம்:

நமது பதிவுகள், புள்ளிவிவரங்கள், உரையாடல்கள் மற்றும் உலகப் பார்வை ஆகியவை பாலின இருமைவாதத்தில் (Gender Binary) சிக்குண்டுள்ளன.

இரு பிரிவாக மனிதர்கள் பிரிக்கப்படுவது, ஆதிக்கப் பிரிவினருக்கு நல்வாய்ப்பாக உள்ளது. இவ்வாறு பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவரை விலக்கி வைப்பதால், அதிகப் பாதிப்பு இந்திய அறிவியல் துறைக்கு ஏற்படுகிறது.

– ஆஷிமா டோக்ரா & நந்திதா ஜெயராஜ்
தமிழில்: மோசஸ் பிரபு

Leave a Reply