“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” – ஆல்டஸ் ஹக்ஸ்லி.

“இந்து-முஸ்லிம் என மக்களைப் பிரித்துப் பேச மாட்டேன்” என்று மே 14 ஆம் தேதியன்று அறிவித்தார் நரேந்திர மோடி. ஆனால், அந்த வாக்குறுதியை அவரால் அடுத்த மூன்று நாட்களுக்குக் கூடக் கட்டிக்காக்க முடியவில்லை. அதாவது, அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, மே 17 ஆம் தேதியன்று, பாரபங்கியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலும், எரிச்சலூட்டும் விதமாகவும் பேசுகிற அவரது இயல்பான பாணிக்கு மீண்டும் திரும்பினார். அங்கு பேசும்போது, “ஒருவேளை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால், இராமர் கோவிலைப் புல்டோசர் கொண்டு இடித்துவிடுவார்கள்” என்று மக்களை அச்சமூட்டும் விதமாகப் பேசினார். அதன்பிறகு, “புல்டோசர்களை எங்கே, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாடம் படிக்க வேண்டும்” என்று நையாண்டியுடன் கேலியும் கிண்டலுமாகப் பேசினார் நரேந்திர மோடி.
தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் மோடியின் பேச்சு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அதில், “கடவுளின் கோவிலை எதிர்க்கட்சிகள் இடிப்பார்கள்” என்று மோடி குறிப்பிட்டதை மட்டுமே முக்கியமான புகாராக காங்கிரஸ் தெரிவித்திருந்தது. ஆனால், முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்தது பற்றியெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நேரடியாகவே மிகப்பெருமையுடன் மோடி பேசியிருந்த போதிலும், அதனை அப்புகாரில் எதிர்க்கட்சியினர் அழுத்தமாகக் குறிப்பிடவே இல்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் “புல்டோசர் அரசியலை” பேசுவதிலிருந்து எதிர்க்கட்சிகள் ஏன் பின்வாங்கினார்கள் என்கிற கேள்வியைக் கேட்க வேண்டியதும் அவசியமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்டிருக்கிற புல்டோசர் இடிப்புகள் பற்றிய எங்களுடைய ஆய்வுகளை மட்டுமல்லாமல், இதே தலைப்பில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளையும், இன்னபிற அறிக்கைகளையும் எல்லாம் வைத்துப் பார்த்தால், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அதை ஒரு முக்கியப் பிரச்சனையாகத் தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் தவறியுள்ளனர். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இப்போது இயல்பானவையாக மாறியிருப்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. எனவே, ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் இப்பிரச்சனைக்குப் போதிய கவனம் இல்லாமல் குறைந்து வருவதை இது பிரதிபலிக்கிறது. ஊடகங்களில் அதிக கவனம் பெறத்தக்க புல்டோசர் இடிப்பு நிகழ்வுகளை, சமீபத்தில் அதிக அளவில் ஏதும் காண முடியவில்லை. இருப்பினும், “நேற்றுதான் எங்களுடைய வீடுகள் இடிக்கப்பட்டது போல இருக்கின்றது” என்று முன்னர் இடிக்கப்பட்ட வீடுகளின் குடும்பத்தினர் இப்போதும் நினைவுகூர்கிறார்கள்.
இன்றைய செய்திகளின் பரபரப்பில், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பலவிதமான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுவதால், ஒரு குறிப்பிட்ட ஒற்றைப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் இல்லாமல் போகிறது. இதன் விளைவாக, புல்டோசர் இடிப்புகள் நடைபெறும்போது ஊடகங்கள் மட்டுமல்லாமல், அவற்றை நேரில் பார்த்தவர்களும், அந்த நகரங்களில் வாழ்ந்து வரும் அக்கம்பக்கத்து மக்களுமே கூட, புல்டோசர் இடிப்புகளை மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு எளிதில் தாவிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீடுகளை இடிக்கும் இந்தப் புல்டோசர் திட்டத்தை வெறுமனே செய்திகளாக பொதுமக்கள் கடந்து போகிற நிலை இருக்கிற இன்றைய சூழலில், சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்படும் இந்த இடிப்புத் திட்டத்தின் சில முக்கியத் தாக்குதல்களைத் தேர்வு செய்து, அந்த இடிப்புகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் ஆவணப்படுத்தினோம்.
முகமது நபிக்கு எதிராக மிக மோசமான வெறுப்புக் கருத்துகளைப் பேசினார் பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா. அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராடிய கான்பூர், சஹாரன்பூர், அலகாபாத் (இப்போது பிரயாக்ராஜ்) உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து எங்களது ஆய்வைத் தொடங்கினோம். நுபுர் ஷர்மாவின் கருத்துகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, உத்தரப்பிரதேசத்தின் அம்மூன்று மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகள், புல்டோசர் இடிப்புகளுக்கு உள்ளாகின. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெற்ற எழுத்துப்பூர்வமான அறிவிப்புகளின்படி, மாவட்ட வளர்ச்சி அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனர் என்றும், சட்டவிரோதமாகவோ அல்லது ஆக்கிரமிப்பு செய்தோ கட்டப்பட்டதன் காரணமாகவே அவர்களின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன என்றும், போராட்டங்களுக்கும் அந்த இடிப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கும் நோக்கிலேயே திட்டமிட்டு அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன என்பதை யாராலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
நீதிமன்றத்திலும் அதிகாரிகள் இதே வாதங்களை முன்வைத்தனர். ஆனால், மாவட்ட அரசாங்க அதிகாரிகளோ கேமராவிற்கு முன்பாக, “இது கலவரக்காரர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கும் நடவடிக்கைதான்” என்று புல்டோசர் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒப்புக்கொண்டனர். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதியன்று, “குற்றவாளிகளுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை தொடரும்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த அறிக்கைக்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரே நாளில் நடத்தப்பட்ட இரண்டு புல்டோசர் இடிப்பு நிகழ்வுகளில் மூன்று கட்டிடங்கள் முழுமையாகவும், இரண்டு கட்டிடங்கள் பகுதியளவிலும் இடிக்கப்பட்டன. முகமது இஷ்தியாக் மற்றும் ரியாஸ் அகமது ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு கட்டிடங்களை இடித்ததாக கான்பூர் மேம்பாட்டு ஆணையமும் வெளிப்படையாக அறிவித்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று கான்பூரில் வன்முறை வெடித்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து குறைந்தது மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்வரூப் நகரில், முகமது இஷ்தியாக் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகக் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. பொதுச் சொத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி மூன்று புல்டோசர்களைப் பயன்படுத்தி அந்தக் கட்டிடத்தை கான்பூர் மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இது ஒரு “வழக்கமான” இடிப்புதான் என்றும், “நில மாஃபியாவிற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதிதான்” என்றும் கான்பூர் அதிகாரிகள் கூறிய அதே வேளையில், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளோ, “கான்பூர் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜாபர் ஹயாத் ஹஷ்மியின் நெருங்கிய உறவினர்தான் இஷ்தியாக்” என்று கூறினர். ஆனால் 2018 லேயே தன்னுடைய தந்தை இஷ்தியாக் இறந்துவிட்டதாகவும், அவருடைய உறவினர் என்று காவல்துறையினர் சொல்லக்கூடிய ஜாபர் ஹயாத் ஹஷ்மியைக் கண்முன்னே நிற்க வைத்தால்கூட, தன்னால் அவரை அடையாளம் காணமுடியாது என்றும் இஷ்தியாக்கின் மகனான இப்தேகார் அஹ்மத் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
ரியாஸ் அகமதுவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்கும் கட்டுமானப் பணியில்தான் இருந்தது. அதையும் வழக்கமான ஆக்கிரமிப்பு என்றே கூறி கான்பூர் அதிகாரிகள் இடித்தனர். ரியாஸ் அகமதுவுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஹஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறையினர் கூறினர். ஆனால், ஹஷ்மி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு கேட்டபோது, இஷ்தியாக்கையும் முகமது ரியாஸையும் தனக்கு யாரென்றே தெரியாது என்று மறுத்தார்.
இந்தப் புல்டோசர் இடிப்புகளை அடுத்து, நகரில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஒரே மாதிரியான அச்ச உணர்வுகள் கடத்தப்பட்டன. இந்த அரசு, தங்களைப் பயத்தில் வைத்திருக்க விரும்புகிறது என்கிற செய்தியைப் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளின் மூலம் ஏதோ ஒரு எச்சரிக்கை தங்களுக்குக் கடத்தப்படுவதாக உள்ளூர் முஸ்லீம் மக்கள் கூறினார்கள். பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர், “சட்டம் இருக்கிறது, நீதிமன்றம் இருக்கிறது. மாவட்ட அதிகாரிகளாகவே இருந்தாலும், அவர்களுடைய விருப்பப்படி எல்லாம் கட்டிடங்களை இடிக்க முடியாது. சட்ட நடைமுறையைப் பின்பற்றித்தானே ஆகவேண்டும். அதையெல்லாம் முறையாகப் பின்பற்றிவிட்டு, அதன்பிறகு ஒருவேளை கட்டிடங்களை இடிக்க சட்டம் அனுமதிக்குமெனில் இடிக்கலாம். ஆனால், இவர்கள் மோதலையெல்லாம் காரணமாகச் சொல்கிறார்கள். அதிலும், இவர்கள் கூறும் மோதலில் இந்து-முஸ்லிம் என இரு தரப்பும்தானே ஈடுபட்டது. இருப்பினும், இந்துக்களின் சொத்துக்கள் மட்டும் ஏன் அப்படியே எவ்விதத் தாக்குதலுக்கும் ஆளாகாமல் இருக்கின்றன? சட்டவிரோத சொத்துக்களைத்தான் இடிக்கிறோம் என்கிற அவர்களின் கூற்றுப்படிப் பார்த்தாலுமே, முஸ்லிம்களிடம் மட்டும்தான் சட்டத்திற்கு மாறான சொத்துக்கள் உள்ளனவா? இது நம்பும்படியாகவா இருக்கிறது? இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் எதுவும் இனி எப்போதும் எடுக்கப்படவே கூடாது. எது செய்வதாக இருந்தாலும் சட்டப்படியே அனைத்தும் செய்யப்பட வேண்டும். வெறுமனே சந்தேகத்தின் பேரில் மட்டுமே ஒருவரின் உழைப்பையும் வீட்டையும் அழிக்கக் கூடாது” என்று தெளிவாகக் கூறினார்.
முறையான நடைமுறைகளையும், கட்டிடங்களை இடிப்பதற்குத் தேவையான நீதிமன்ற உத்தரவுகளையும் அனுமதிகளையும் பெறாமல் அனைத்தையும் புறக்கணித்த போதிலும், ஆதித்யநாத் அரசாங்கத்தின் புல்டோசர் நடவடிக்கை பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்படுகிறது. அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சரானதும், அவரது “புல்டோசர் நீதி” கொள்கையானது, மாநிலம் முழுவதும் பிரபலமானது. அவருக்கு “புல்டோசர் பாபா” என்ற பட்டப்பெயரையும் அது பெற்றுத் தந்தது. இக்கட்டுரையை ஒரு கேள்வியோடு முடிக்க விரும்புகிறோம்:
“புல்டோசர் நீதி” என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே முன்னெடுக்கும் ‘கும்பல்’ (அ) நீதியின் வடிவமா?
– தமிழில்: மோசஸ் பிரபு