
"மனிதர்கள் தங்களது முகங்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்போதும், இருமிக்கொண்டே, தடுமாறியபடி, அடுத்த பாதையைத் தேடிக்கொண்டும் கண்டுபிடித்துக்கொண்டும் முன்னேறுகிறார்கள். மனிதர்கள் எப்போதும் என்னை வியப்படையச் செய்துகொண்டே இருக்கிறார்கள்" - மார்கஸ் சுசாக்
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு புல்டோசர் இடிப்புகளின் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். எங்களது ஆய்வுப் பணிகளின் தொகுப்பாகத்தான் இக்கட்டுரைத் தொடரை எழுதி இருக்கிறோம்.
இந்த புல்டோசர் இடிப்புத் திட்டத்தினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை களத்திற்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறோம். தங்களுடைய சொந்த வீட்டின் மீதான மக்களின் உரிமை, புல்டோசர் இடிப்புகளால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள், நீதித்துறைக் கட்டமைப்புகளின் பங்கு, இடப்பெயர்வு, விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் சமூக-அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்திருக்கிறோம். இஸ்லாமிய மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்த புல்டோசர் இடிப்புத் தாக்குதல்களின் மூலமாக அம்மக்களது இருப்பும் அடிப்படை உரிமைகளும் முழுமையாகப் பறிக்கப்பட்டு விடுவதையும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறோம். முஸ்லிம்களாக இருக்கிற காரணத்தினாலேயே அம்மக்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்கிற கோணத்திலும் ஆய்வு செய்துள்ளோம். முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இந்த சமூகத்தில் நிராயுதபாணிகளாக ஆக்கப்படுவதால், அம்மக்களுக்கு ஏற்படுகிற அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முயன்றுள்ளோம். இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படும் குரலற்ற மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க வைப்பதுதான் இந்த ஆய்வின் முதன்மையான நோக்கமாகும். அது மட்டுமல்லாமல், அவர்களுடைய குரல்களை இந்த ஒட்டுமொத்த சமூகமும் உரக்கக் கேட்கும்படி செய்வதற்கு இந்த ஆய்வு உதவும் என்கிற நம்பிக்கையோடும் இம்முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
தி போலிஸ் ப்ராஜெக்ட் – ஓர் அறிமுகம்
சமீப காலங்களில் தொடர்கதையாகிப் போயிருக்கும் இந்த புல்டோசர் இடிப்புத் திட்டங்கள் என்பது, சட்டத்திற்குப் புறம்பாகவும், நீதிக் கட்டமைப்புக்கு எதிராகவும் நிகழ்த்தப்படுகிற ஒரு கொடூர நடவடிக்கையாகவே மாறியுள்ளது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி நடைபெற வேண்டிய ஒரு ஜனநாயக நாட்டில், கட்டிடங்களை இடித்துத் தள்ளும் இந்த புல்டோசர் தகர்ப்புத் திட்டத்தினால் சட்டத்தின் ஆட்சிக்கு அவமதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஏராளமான எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால் இன்றைய இந்தியாவில், ‘சட்டத்தின் ஆட்சி’ எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த புல்டோசர் இடிப்புத் திட்டம் ஒரு மிகப்பொருத்தமான உதாரணமாகத் திகழ்கிறது. இந்த புல்டோசர் திட்டம் உருவாக்கப்பட்டதே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை அழிப்பதற்கும், குற்றம் செய்யாவிட்டாலும் அவர்களை தண்டிப்பதற்கும்தானே தவிர, குற்றங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவோ, அவர்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்வதற்கோ அல்ல. சட்டப்படி பார்த்தால், புல்டோசரைக் கொண்டு இப்படியாக ஒரு கட்டிடத்தை இடிக்கும் புல்டோசர் இடிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால், அதற்கென்று முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நம்பவைக்கப்பட்டாலும், நடைமுறையில் அதிகாரத்தில் உள்ளவர்களின் கையில் சிக்கிய ஆயுதமாகவே இது மாறியிருக்கிறது. இஸ்லாமிய மக்களின் அமைதியான வாழ்வை அழித்து, எந்தத் தவறும் செய்யாத அவர்களை தண்டனைக்குரியவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மேலும், அது சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களை பாரபட்சமின்றி ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்குகிறது. அத்துடன், முதலாளிகளின் நலன்களுக்காக சட்டமும், அரசின் கட்டமைப்புகளும் வளைந்து கொடுக்கும் சலுகைசார் முதலாளித்துவத்தை (Crony Capitalism) அமல்படுத்தி, ஏற்கனவே ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களை மேலும் பாதிப்படைய வைக்கிற இந்த புல்டோசர் இடிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொதுவாக நமக்குத் தெரிந்த எழுதப்பட்ட ‘சட்டத்தின் ஆட்சி’யின் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த புல்டோசர் இடிப்புகளெல்லாம் செயல்படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக, ‘புதிய இந்தியா’ என்றழைக்கப்படுகிற புதுவிதமான அடக்குமுறையைக் கையிலெடுக்கும் சட்டத்தின் ஆட்சிதான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்படியானதொரு மாற்றத்தினால், ‘இடிப்பு’, ‘புல்டோசர் நீதி’ மற்றும் ‘புல்டோசர் பாபா’ போன்ற வார்த்தைகளெல்லாம் இந்திய அரசியல் மற்றும் சட்டப்பூர்வ சொற்களஞ்சியத்தின் புதிய அடையாளங்களாகவும் மந்திரச்சொற்களாகவும் மாறியிருப்பது தெளிவாகவே தெரிகிறது.
ஆனால் நன்றாக உற்று நோக்கினால், இந்த வார்த்தைகளெல்லாமே அடிப்படையில் ஒடுக்குமுறையையும், பிரிவினைவாதத்தையுமே பொருளாகக் கொண்டிருக்கின்றன. சட்டத்திற்குப் புறம்பான இந்த “புல்டோசர் இடிப்புகள்”, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளன. அது மட்டுமல்லாமல், சர்வதேச சட்டங்களின்படியும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், சர்வதேச வீட்டு உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இந்த புல்டோசர் இடிப்புத்திட்டம் முழுமையாக மீறுகின்றது.

இந்தியா முழுவதும் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்படும் இப்படியான புல்டோசர் இடிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியல் மற்றும் அரசின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகளால், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டின் எழுதப்பட்ட சட்டதிட்டங்களை நேர்மையாகப் பின்பற்றுவதற்கு பதிலாக, இந்திய சட்ட அமைப்புமுறையின் மீதே சந்தேகமும் அச்சமும் கொள்ள வைப்பதாகவும் இந்த புல்டோசர் இடிப்புகள் இருக்கின்றன. சட்டத்தைப் பின்பற்றுவதெல்லாம் இந்த புல்டோசர் திட்டத்திற்கு முதன்மையான நோக்கமாக இல்லை. அதற்கு மாறாக, இந்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே கவனமாக உள்ளது. எனவே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் இந்த கூட்டமைப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கோ அல்லது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கோ கட்டுப்பட்டு நடக்கத் தவறியிருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவ அரசியலை நிலைநாட்டுவதில் இத்தகைய இடிப்புகள் பெரும் வெற்றியடைந்திருக்கின்றன.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையோ, சொத்துக்களையோ இடிப்பதற்குத்தான் இந்த புல்டோசர் இடிப்புத் திட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ‘குற்றவாளிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டும், ‘வன்முறையாளர்கள்’ என்று புனையப்பட்டும் தண்டனைக்குள்ளாவது இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இது போன்ற அநீதிச் செயல்கள், மதவாத அரசியலை ஊக்குவிக்கத்தான் உதவுகின்றன. அது மட்டுமல்லாது, இதைப் பின்பற்றும் அரசு மற்றும் அரசு சாரா (தனிநபர்) அமைப்புகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் இந்த “புல்டோசர் இடிப்புகளால்” பலிகடாவாக்கப்பட்ட மக்களின் வலியே மதவாத அரசியலின் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அநீதிகளை நியாயப்படுத்த ஒரு அரசு தன் ஒட்டுமொத்த நிர்வாக பலத்தையும் பயன்படுத்துகிறது. மாவட்ட வளர்ச்சி அதிகாரிகள் முதல் மாநில அரசு அதிகாரிகள் வரை ஒன்றிணைந்து, அரசின் இந்த தன்னிச்சையான புல்டோசர் இடிப்புத்திட்டத்தை ஆதரிப்பது அதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
எந்தவொரு நிகழ்விலும், யார் தவறு செய்தார்கள் என்றோ, அது தவறுதானா என்றோ முறையாக விசாரிக்காமல் எல்லாவற்றுக்கும் அதிரடியாக உடனுக்குடன் தண்டனைகள் வழங்கிவிட வேண்டும் என்று மக்களின் பொதுப்புத்தியில் ஒரு விஷக்கருத்து தொடர்ச்சியாக விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படியான கருத்துருவாக்கத்திற்கு ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த “புல்டோசர் இடிப்பு” திட்டமும் அப்படியாக தவறு செய்கிற யாருக்கோ கொடுக்கப்படுகிற அதிரடி தண்டனை என்கிற பார்வையில் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது.
“கலவரக்காரர்கள்” அல்லது “குற்றவாளிகள்” என்று முத்திரை குத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பாக அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றன. அதுவே மக்களின் பொதுப்புத்தியிலும் நுழைந்து, புல்டோசர் இடிப்பைப் பாராட்டி மகிழும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

புல்டோசர் இடிப்பு என்கிற இந்த படுபாதக செயலை நியாயப்படுத்தும் வகையில், இடிக்கப்படும் வீடுகளெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள்தான் என்றும், அவற்றிற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும் நீதிமன்றங்களில் அரசு வாதாடுகிறது. இதனால் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிற நியாயமான தண்டனையாகவே அரசின் இந்த புல்டோசர் இடிப்புத் திட்டத்தை பெருவாரியான பொதுமக்கள் பார்க்கின்றனர். இதனால், ‘முறையாக சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், வீடுகளைத் தகர்த்து தரைமட்டமாக்குவது தவறு’ என்றுகூட மக்களை இயல்பாக நினைக்க விடாமல், ‘அதெல்லாம் சரிதான்’ என்று மக்களின் பொதுப்புத்தியில் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. அரசின் இந்த சட்டவிரோத திட்டத்தால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிய எந்தத் தெளிவும் பொதுமக்களிடத்தில் இல்லை.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு தண்டனை வழங்குவதாக சொல்லிக்கொண்டு வேண்டுமென்றே முஸ்லிம்களின் வீடுகளை மட்டுமே திட்டமிட்டு இலக்காக்கி இடிப்பதென்பது, முஸ்லிம் மக்களை ஒடுக்குவதற்கான மற்றுமொரு வழிமுறையாகத்தான் இருக்கிறது. இதன் மூலம் தனது பிரிவினைவாதத்தாலும், சனாதனக் கொள்கையாலும், எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிற இந்து வாக்காளர்களை இந்துத்துவ அரசியலை நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம். ‘இந்துக்களே இந்த நாட்டில் மேலானவர்கள்’ என்கிற படிநிலையை உறுதிப்படுத்தி, சமத்துவமின்மையை சமூகத்தில் வளரச் செய்வதே அவர்களின் திட்டமாக இருக்கிறது. அதனை அவர்கள் சிறப்பாகவே செய்கின்றனர் என்பதே நிதர்சனம்.
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரசால் நிர்பந்திக்கப்படுகிற இந்தக் கட்டாய இடப்பெயர்வு என்பது, அவர்களுக்கு எதிரான தண்டனை மட்டுமல்லாமல், அடிப்படை இந்திய சட்டத்திற்குமே புறம்பானது ஆகும். இந்த தகர்ப்புகள் யாவுமே எவ்வித சட்ட வழிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி நடத்தப்பட்டவை அல்ல. எவ்வித நீதி விசாரணையும் இன்றி, முன்னறிவிப்பும் இன்றி குற்றவாளியாக பொய்யாக முத்திரை குத்தப்பட்ட ஒருவரின் (இஸ்லாமியரின்) வீட்டினை அவருடைய கண்ணெதிரே புல்டோசரால் தகர்க்கும் கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது இந்த அரசு. பின்னர், வீடிழந்து, சொத்திழந்து, ஆதரவின்றி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், குடும்பத்தோடு நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இடிபாடுகளில் இருந்து கிளம்பி வரும் புழுதி ஆர்ப்பரித்து அடங்கி ஒடுங்கிப் போவதைப் போல், அந்தக் கட்டிடங்களில் வாழ்பவர்களும் ஓய்ந்துபோய் நிரந்தர மன அழுத்தத்திற்குள் சிக்குண்டு விடுகிறார்கள். இது போதாதென்று, அத்தனையும் இழந்த அவர்கள், குடும்பத்தோடு இடம்பெயர்ந்து வேறெங்கோ போகும் அவலநிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஒருவரின் வீடு அநியாயமாக இடிக்கப்பட்ட பின்னர், உடலாலும் மனதாலும் காயப்பட்டு தாங்கள் செய்யாத தவறுக்காக வழங்கப்பட்ட, மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத தண்டனையில் இருந்து வெளிவர முடியாமல் வாழ்நாள் முழுவதும் தவிக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
அவர்கள் மக்களிடமும், அதிகாரிகளிடமும், ஊடகங்களிடமும், தங்களுக்குள்ளேயுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்வி ஒன்றுதான்,
“எது எப்படி இருந்தாலும், ஒருவரின் வீட்டை இடித்துத் தள்ளுவதற்கு உங்களால் எப்படி முடிகிறது?”
யார் தண்டிக்கலாம்? யாரை தண்டிக்கலாம்? இந்த தண்டனை எதனைக் குறிக்கிறது? ஒருவருக்கு தண்டனை கொடுப்பதாக சொல்லிவிட்டு, அவர் சார்ந்திருக்கும் சமூகத்தையே தண்டிப்பதன் மூலம் என்ன செய்தியைக் கடத்த விரும்புகிறார்கள்? ஒருவரின் வீடு இடிக்கப்படுவதால் அவருக்கு என்ன விதமான பாதிப்பை எல்லாம் அது ஏற்படுத்துகிறது?
இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடைவதே இந்தக் கள ஆய்வுக் கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.

இந்தியாவில் நடைபெறும் இந்த சட்டவிரோத புல்டோசர் இடிப்புகளின் பின்னால் இருக்கும் வரலாறு, அரசியல், சட்டக் காரணிகள் போன்ற அனைத்தையும் இந்தக் கட்டுரைத் தொடர் ஆவணப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்தத் தகர்ப்புகள் எல்லாம் எதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றன என்பதையும், எந்த அடையாளங்களையும் வழிமுறைகளையும் இடங்களையும் தேர்வு செய்து நடத்தப்படுகின்றன என்பதையும் தேடிக் கண்டறிந்து புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் மூலமாக முயன்றிருக்கிறோம். குரலற்றவர்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கவும், கேட்கப்படாத அவர்களின் கதைகளை உலகிற்கு உரக்கச் சொல்வதும் இக்கட்டுரைத் தொடரின் முக்கியமான நோக்கமாகும்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
The Polis Project மூலம் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை, வெகுஜன ஊடகங்களால் மறைக்கப்பட்ட அல்லது பெரிதும் கண்டுகொள்ளப்படாத புல்டோசர் இடிப்புத் திட்டம் பற்றிப் பேசுகிறது. புல்டோசர் இடிப்புத் திட்டம் என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்நியமான ஒன்று. இந்த மொழிபெயர்ப்பிற்காக, இது பற்றித் தமிழில் வெளியான கட்டுரைகளைப் படித்துப் பார்க்க இணையத்தில் தேடியபோது, பெரிய அளவில் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.
நாம் வாழும் இந்தச் சமூகத்தில், நம்முடன் வாழும் மக்கள் எத்தகைய இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் இது விளக்குகிறது. இந்தப் பாசிச ஆட்சியின் அவலங்களை வேறொரு கோணத்தில் இருந்து சொல்ல முற்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் சொந்தத் துயர அனுபவங்களை, அவர்களின் வாய்மொழிக் கதைகள் மூலம் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. மதவாதம் எப்படி மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படை உரிமைகளையும் சிதைக்கிறது என்று எழுதப்பட்ட, வலிநிறைந்த அவர்களுடைய வார்த்தைகளின் வாக்குமூலமே இந்தக் கட்டுரை.

– தீபா சிந்தன்
தொடரும்…