தமிழில்: நீலாம்பரன்

“குரலற்றவர்கள் என்று எவரும் இல்லை. திட்டமிட்டு பேசவிடாமல் மௌனமாக்கப்படுபவர்களோ அல்லது குரல் எழுப்பியும் அது கேட்கப்படாமல் தவிர்க்கப்படுபவர்களோ தான் இருக்கிறார்கள்” – அருந்ததி ராய்.
இந்திய நாட்டில், ‘சட்டத்திற்குப் புறம்பான’ என்னும் சொல்லாடல் காவல்துறையின் திட்டமிட்ட என்கவுண்டர்களை விவரிக்க பொதுவாகப் பயன்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், மனித உரிமைகளை மீறியும், சட்டத்தை மதிக்காமலும் அரசுகளால் மேற்கொள்ளப்படும் மற்றொரு வகையான நிகழ்வினை வரையறுக்கவே அந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுகிறது. புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதே அந்தச் செயல். சட்டத்திற்கு உட்படாமலும், நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லாமலும் அரசுகளால் நிறைவேற்றப்படும் விதிமீறல்களே சட்டத்திற்குப் புறம்பானவை என அழைக்கப்படுகின்றன. நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் உறுதி செய்துள்ள பொறுப்புகளையும் நீதியையும் அத்துமீறுவதே இத்தகைய செயல்களின் முக்கிய அம்சமாக உள்ளது. நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்ட பொதுவான கட்டிட இடிப்புகள் கூட மனித உரிமைகளை மீறுவதாகப் பார்க்க வேண்டிய சூழலில், தவறிழைக்காதவர்களுக்கும் திட்டமிட்டு குறிவைத்து தண்டனை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சட்டவிரோத புல்டோசர் இடிப்புகளை இக்கட்டுரையில் கவனம் செலுத்திப் பார்ப்போம்.
சட்டவிரோதமாகவும் திட்டமிட்டு தண்டிக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் புல்டோசர் இடிப்புகளின் தாக்கத்தையும் விதிமீறல்களையும் மட்டும் இக்கட்டுரையில் ஆராய முற்படுகிறோம். ஒரு அரசு, விளிம்புநிலை மக்களின் மீது அதிகப்படியான தாக்குதல் நடத்திவிட்டு, அனைத்துத் தண்டனைகளில் இருந்தும் தப்பித்து விடுவதுடன், சட்ட வரையறைகள் அனைத்தையும் மீறிவிடுவதையும் நாம் காண முடிகிறது. இந்த ஆய்வின் தன்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, இந்தியாவில் வீடுகள் இடிப்பு தொடர்பான சட்ட விதிகள் எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியமாகிறது. சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே அவை எப்படித் தண்டனை வழங்கவும், விதிகளை மீறும் இடிப்புகளை அமலாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்க முயற்சி செய்கிறோம்.
புல்டோசர் இடிப்புகளை வரையறுக்கும் சட்டத் திட்டங்கள்
பல வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளும், இந்திய அரசின் சர்வதேச உறுதிமொழிகளும் ‘வீடு’ என்பதை அடிப்படை உரிமையாக வரையறை செய்துள்ளன. எனினும், மத்திய அரசும் பல மாநில அரசுகளும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாகவும், விதிகளை மீறி வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி, அங்கு வாழும் மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவதையும், வீடுகளை இடிப்பதையும் செய்து வருகின்றன. இந்த நிலைக்கு ஆளாகும் மக்களுக்கு, மாநில, தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பல்வேறு சட்டப் பாதுகாப்புகள் அமலில் உள்ளன.
வீடுகள் இடிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பாக இந்தியா முழுமைக்கும் பொதுவான சட்டம் ஏதும் இல்லை என்ற போதும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதற்குப் பின்னர் இணைக்கப்பட்ட பல்வேறு கூடுதல் சட்ட விதிகள் ஆகியவற்றின் மூலம், மக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான உறுதியை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பலவும் இருக்கின்றன. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-இன் படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், பிரிவு 21-இன் படி வாழ்வதற்கான உரிமை மற்றும் தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதோடு, ஏதேனும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில், அவை ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டத்திற்கு உட்பட்டே அமைந்திருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது. அதே போல், பிரிவு 21-இன் படி சமூகத்தில் எவ்வித அடையாளத்தைக் கொண்டும் மக்களைப் பாகுபடுத்துவதைத் தடுப்பதற்கும், பிரிவு 19-இன் படி இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாக எவரும் பயணம் செய்வதற்கும், தங்குவதற்கும், குடியேறுவதற்கும் முழு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 300(அ), ஒருவருக்குச் சொந்தமாகச் சொத்து வைத்திருப்பதற்கான உரிமையை வழங்குவதுடன், ஒருவரின் சொத்துக்களை அச்சட்டத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு மட்டுமே பறிக்க முடியும் என்றும் கூறுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றுதலையும், வீடுகள் இடிக்கப்படுவதையும் மேற்கூறிய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்படும் மக்களின் நியாயங்களைப் பேசவும், அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்கவும் அனுமதிக்கின்றன. வீடுகள் இடிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக மக்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பாதுகாப்புகளும் பல்வேறு சட்டங்களிலும் கொள்கை முடிவுகளிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
- பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய மலைவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006 அல்லது சுருக்கமாக வன உரிமைகள் சட்டம்,
- நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை மற்றும் நிலமெடுப்பில் வெளிப்படைத்தன்மை சட்டம், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம் 2013,
- மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993,
- குடிசைப் பகுதிச் (முன்னேற்றம் மற்றும் இடமாற்றம்) சட்டம் 1956,
- சாலை வியாபாரிகள் (வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2014,
- தேசிய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் வாழ்விடக் கொள்கை 2007,
- தேசிய வரைவு குடிசைப்பகுதிக் கொள்கை 2001 மற்றும்,
- பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் 2015 உள்ளிட்ட சட்டங்கள் ஏற்கனவே அமலில் இருக்கின்றன.
இந்த சட்டங்களும், கொள்கைகளும் சொத்து உரிமையாளர்களுக்குப் பல்வேறு உரிமைகளை உறுதி செய்கின்றன.
வீட்டைக் காலி செய்யவோ இடிக்கவோ அரசு நிர்வாகம் விரும்பினால், அங்கு வசிப்பவர்களுக்கு முன்னறிவிப்புக் கடிதங்கள் வழங்குவதையும், அவர்கள் தரப்பு நியாயங்களைக் கேட்பதையும், மறுகுடியமர்த்தலையோ அல்லது நியாயமான இழப்பீட்டையோ வழங்குவதையும் உறுதி செய்வதோடு, வீடுகள் இடித்தல் அல்லது அகற்றுதலை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் மக்களுக்கு முழு உரிமையை அச்சட்டங்கள் வழங்கியிருக்கின்றன.
ஆனால் தற்போது, சட்டவிரோதமாக புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடிப்பது, இந்த உரிமைகள் அனைத்தையும் மீறுவதோடு, எந்தச் சட்டப் பிரிவுகளையும் மதிக்காமலும், சட்டத்தால் நிறுவப்பட்ட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறுவதாகவே அமைந்திருக்கிறது.
மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிப்பதற்கு எதிரான பாதுகாப்பு வரைமுறைகள் அரசியலமைப்பின் மூலம் மாநிலங்களின் சட்டங்களிலும் இணைக்கப்பட்டுவிட்டன.
உதாரணத்திற்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயற்றப்பட்ட ‘நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு சட்டம் – 1973’, வீடுகள் இடிப்பிற்கு முன்னரே அதனால் பாதிக்கப்படப் போகிற அனைவருக்கும், வீட்டை இடிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுத் தனியான அறிவிப்பு அறிக்கையினை மேம்பாட்டு ஆணையம் வழங்குவதையும், பாதிக்கப்படுபவரின் நிலையை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதையும் உறுதி செய்வதோடு, மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யும் அதிகாரத்தை அம்மக்களுக்கும் வழங்கியிருக்கிறது. அச்சட்டத்தின் பிரிவு 27-இன் மூலமாக, வீடு இடிப்பால் சிரமத்திற்கு உள்ளாகும் நபர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் உரிமையையும் உறுதி செய்கிறது.
அதே போல், டெல்லியில் வீடுகள் இடிப்பு என்பது டெல்லி மாநகர சட்டம் 1957 மற்றும் டெல்லி மேம்பாட்டு முகமை சட்டம் 1957 ஆகிய சட்டங்களின் மூலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலோ, மத்தியப் பிரதேச மாநகர சட்டம் 1956 மற்றும் மத்தியப் பிரதேச நகராட்சிகள் சட்டம் 1976 ஆகியவை அம்மாநிலத்தில் வீடுகளை இடிப்பதையும், மக்களை அவர்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதையும் கண்காணிப்பதற்கான வரையறைகளையும் தெளிவாக விளக்கியிருக்கின்றன.
குஜராத் மாநிலத்தில், குஜராத் நகர திட்டமிடல் நகர்ப்புற மேம்பாடு 1976 மற்றும் குஜராத் மாநகர சட்டம் 1949 ஆகிய சட்டங்கள், வீடுகள் இடிப்பு தொடர்புடைய தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. இப்படியாக, மாநில அளவிலான சட்டங்களிலும் கொள்கைகளிலும், வீடுகள் இடிப்பு தொடர்பான வரைமுறைகளும் கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், எந்தவொரு வீட்டையும் இடிப்பதற்கான நியாயமான காரணத்தைத் தெளிவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் சம்பந்தப்பட்ட அரசு தெரிவித்தே ஆக வேண்டும்.
இந்தச் சட்டப் பாதுகாப்புகள் அனைத்துமே, வீடுகளை இடிப்பதையும், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று சொல்லி மக்களை விரட்டியடிப்பதையும் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதிபலிப்பாகும். சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பின்படி, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 மற்றும் பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை 1966 ஆகியவற்றின் மூலம், வசிப்பிடம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு சர்வதேசத் தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. வாழ்விட உரிமைக்கான ஐ.நா சபையினுடைய சிறப்புத் தூதரின் கூற்றின்படி, அனைத்துப் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாழ்விட உரிமை என்பது, அமைதியுடன் கூடிய கௌரவமான வாழ்வை மேற்கொள்ளவும், நிலையான வாழ்க்கையையும், பாதுகாப்பான வீட்டையும், சமூகத்தையும் பெறுவதை உறுதி செய்வதே அத்தீர்மானங்களின் குறிக்கோளாகும்.
ஐ.நா சபையின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் குழு, வாழ்விட உரிமை என்றால் என்னவென்பதைத் தெளிவாக விவரித்திருப்பதுடன், கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துதல், துன்புறுத்துதல் மற்றும் இதர அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட ஏழு பிரதானக் கொள்கைகளை வரையறை செய்திருக்கிறது. கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துவதை இக்குழு கீழ்கண்டவாறு விளக்குகிறது:
‘எந்தவொரு தனி நபரையோ அல்லது குடும்பங்களையோ அல்லது ஒரு சமூகத்தையோ, அவர்கள் வாழ்ந்துவரும் வீடு அல்லது நிலத்தில் இருந்து, சட்டம் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை உறுதிசெய்யாமல், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அப்புறப்படுத்துவது.’
ஆகவே, சட்டவிரோத வீடுகள் இடிப்பு மற்றும் கட்டாய அப்புறப்படுத்துதலில் இருந்து பாதுகாப்பு வழங்குவது ஒரு கடமையாகவும், சர்வதேச அழுத்தமாகவும் இதன் மூலம் உருவாகியிருக்கிறது. உண்மையில், சட்டவிரோதமாக வீடுகளையும் தொழில் நிறுவனக் கட்டிடங்களையும் இடிப்பது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு வாழ்விட உரிமைச் சட்டங்களை மீறுவதாகும். அது மட்டுமல்லாமல், பாதுகாப்பிற்கான உரிமை, கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் இழிவாகவும் நடத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கும் உரிமை, மீள் குடியமர்த்தலுக்கான உரிமை மற்றும் உரிய இழப்பீடுகள் ஆகியவற்றையும் சர்வதேச சட்டங்கள் உறுதி செய்கின்றன.
சட்டவிரோத இடிப்புகளை ஆவணப்படுத்துதல்
புல்டோசர் இடிப்புகள் குறித்த இந்த ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு நடைபெறும் இடிப்புகளை ஆவணப்படுத்துகிறோம். இதில், பாதிக்கப்படும் நபருக்கு அவரது நிலையை விளக்க வாய்ப்பளிப்பதற்கு முன்னரோ, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியால் அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்படுவதற்கு முன்னரோ, அல்லது நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான கால அவகாசம் வழங்காமலோ நடத்தப்படும் புல்டோசர் இடிப்புகள் எல்லாம் எங்கள் ஆய்வில் இடம்பெறும். இப்படியாக, எவ்வித வழிமுறைகளையும் பின்பற்றாத அனைத்துப் புல்டோசர் இடிப்பு நிகழ்வுகளும் சட்டவிரோதமானவையே! மேலும், தனி நபரையோ அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து அரங்கேற்றப்படும் புல்டோசர் இடிப்புகள் குறித்தும் நாங்கள் அதிகக் கவனம் செலுத்துகிறோம்.
எந்தக் குற்றத்தைச் செய்தாலும், அதிலிருந்து சிலருக்கு மட்டும் தண்டனை விலக்கு உண்டு என்கிற அடிப்படையில் இருந்துதான், சட்டவிரோதமாக புல்டோசரைக் கொண்டு மக்களின் வீடுகளை இடிப்பதே ஒரு அரசின் இயல்பான நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளும் போக்கு உருவாகியிருக்கிறது. வலிமையில்லாத நீதித்துறை கண்டும் காணாமல் இருப்பதே, இத்தகைய சட்டவிரோத புல்டோசர் இடிப்புகள் தொடர்கதையாக மாறுவதற்கு மிக முக்கியக் காரணமாகும். நீதிமன்றங்களால் இத்தகைய தவறுகளுக்கு அரசுகளைப் பொறுப்பேற்க வைக்க இயலாமலோ அல்லது அதனைச் செய்வதற்கு விருப்பமில்லாமலோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. இத்துடன், நீதிமன்ற நடைமுறைகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாலும், கைக்கு எட்டும் தூரத்தில் நீதியோ நீதிமன்றமோ இல்லாத காரணத்தாலும், நீதிபதிகள் பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாலும் மக்கள் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால், நீதித்துறையின் மீது ஏற்படும் அவநம்பிக்கையும், சட்டவிரோத வீடுகள் இடிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள அரசுகளுக்கு உத்வேகமும் அளிக்கிறது. இவை அனைத்தையும் செய்துவிட்டு, தண்டனை எதையும் பெறாமலும் அரசு நிர்வாகத்தினர் தப்பித்துக்கொள்கின்றனர்.
எனினும், முறையான வழிமுறைகளைப் பின்பற்றுவதைக் கோருவதற்குப் பாதிக்கப்படும் மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதனை அமலாக்குவது ஜனநாயக அரசுகளின் அடிப்படைக் கடமையாகும். நியாயமான சட்ட மற்றும் நிர்வாக வழிமுறைகளைப் பின்பற்றுவது நீதித்துறையின் கடமைகளில் ஒன்றாகும். ஒரு தனிநபரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதிக்கும் எந்த ஒரு அரசு நடவடிக்கையும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான முறையில் நடத்தப்பட வேண்டும். பாரபட்சமின்றி, அனைத்துத் தனிநபர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும். இவை அனைத்தையும் சட்டவிரோத புல்டோசர் இடிப்புகள் மீறுவதோடு, சட்ட உதவிகளும் மறுக்கப்படுவதால், அரசுடன் போராட ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் எந்த ஆயுதமும் இன்றிப் பரிதவிக்கும் நிலை உருவாகிறது.
ஆனால், நியாயமான நடைமுறை உரிமை மற்றும் அதை அமல்படுத்துதல் என்பன ஜனநாயக ஆட்சிக்கு அடிப்படையானவை. இயற்கையான நீதியின் கொள்கைகள் நியாயமான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. இது, ஒரு தனிநபரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதிக்கும் அரசு நடவடிக்கைகள், பாரபட்சமின்றி, நியாயமான, வெளிப்படையான மற்றும் சட்டபூர்வமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அனைத்துத் தனிநபர்களுக்கும் தங்கள் வழக்கை முன்வைக்கவும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது. ஆனால் அனைத்தையும் புல்டோசர் இடிப்புகள் தொடர்ந்து மீறுகின்றன. அத்துடன், சட்டரீதியான முறையீடு செய்யும் உரிமையை மறுப்பதென்பது, ஏற்கெனவே புறந்தள்ளப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரிக்கிறது, இது அவர்களை அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
சட்டவிரோத புல்டோசர் இடிப்புகள் என்பது நாட்டின் சமூக, அரசியல், நீதித்துறைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைகின்றன. நீதித்துறையின் பார்வைக்குப் படாமலும், அப்படியே பட்டாலும் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கின்றன.
இத்தகைய கடுமையான அரசியலமைப்பு விதிமீறல்களையும் மனித உரிமைகள் மீறல்களையும் அரசியல் தலையீடு இல்லாமல் ஆவணப்படுத்துவது, பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் கடமையாகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகச் சொல்லிக்கொண்டு வீடுகள் இடிக்கப்படும் போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றாலும், தற்போதைய புல்டோசர் இடிப்புகள் என்பது இஸ்லாமியர்களைத் திட்டமிட்டுக் குறிவைத்து, அப்பட்டமான பழிவாங்கும் நோக்கோடு அரங்கேற்றப்படும் ஒரு நடவடிக்கையாகவே மாறியுள்ளது. இந்தச் சட்டவிரோத புல்டோசர் இடிப்புகளையும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் எங்கள் செயல்பாட்டின் மூலமாக, இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லாம் எந்த அளவுக்கு விதிகளை மீறி அமல்படுத்தப்படுகின்றன என்பதை இந்தத் தொடரில் நாங்கள் ஆவணப்படுத்துகிறோம்.
தமிழில்: நீலாம்பரன்
தொடரும்…