இந்திய சினிமாசினிமா

பொய்யும், புரட்டும், வெறுப்பை விதைக்கும் சூழ்ச்சியுமே Chhaava திரைப்படம் – கார்த்திக்

549 (5)

“Chaava” படம் நாக்பூரில் வன்முறை எனப்படும் மதவாதத் தீயைப் பற்றவைத்துள்ளது. “யானை வரும் பின்னே ஓசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப, திரைப்படங்கள் முன்னின்று விஷப் பிரச்சாரத்தை முன்னிறுத்துகின்றன. அதன் பின்னணியில் வன்முறைகளும் கலவரங்களும் தூண்டப்படுகின்றன. கலையின் பணி மக்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், ஆனால் அது தவறான கைகளில் சிக்கியுள்ளது. “எந்திரன்” படத்தில் வரும் வில்லன் ரோபோவாக கலை கொலையாக மாறிவிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், திரைப்படம் என்ற ஊடகத்தைத் தனது அரசியல் நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்றே தோன்றுகிறது.

“காஷ்மீர் ஃபைல்ஸ்” படம் இதற்கு ஒரு சிறந்த சான்றாகும். இந்திய அளவில் பெரிய வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலானவை ராஜவம்சக் கதைகளே. ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரசர்களைப் பற்றிய படங்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் சனாதனக் கருத்துகள் உள்ளடக்கமாக நுழைக்கப்படுகின்றன. அப்படி சனாதனத்துடன் கதையில்லை என்றாலுமே, பழைய பெருமையை ரசிகன் தனக்குள் உணரும் போது, அது எளிதாக சாதியுடனும், மதத்துடனும் சேர்ந்துவிடும். “பாகுபலி” படத்தின் இரண்டு பாகங்களின் திரைக்கதை எழுத உதவிய இயக்குநர் ராஜமௌலியின் தந்தை ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். இப்படங்களில் “காலகேயர்கள்” என்ற கதாபாத்திரங்கள் மூலமாக அப்பட்டமான இனவெறியை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

காலகேயர் என்று ராஜமௌலி படத்தில் காட்டுவது களப்பிரர்கள், அவர்கள் வந்தபோதே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள், தொல்காப்பியமெல்லாம் வந்தது களப்பிரர்கள் காலம் தான் தமிழ்நாட்டின் சாதி மறுப்பின் , முற்போக்கின் வேர் களப்பிர காலகட்டத்தில் இருந்தது. கல்வியின் வேர்களும் அவர்கள் காலகட்டத்தில் இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழன் என்னும் பார்ப்பன அடிமையே தமிழகத்தின் முக்கியமான மன்னராக ஊடங்கங்கள், புதினங்கள் சித்தரிக்கின்றன. ராஜ ராஜ சோழன் சனாதனியாக இருந்ததோடு, “அருள்மொழி வர்மன்” எனும் பெயரை “ராஜராஜ சோழன்” என மாற்றிவிட்டார். கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக மணிரத்தினம் இயக்கினார். 

இந்தியத் திரைப்பட வரலாற்றில் இஸ்லாமிய வெறுப்பை  முதன்முதலாக பதிவு செய்த படம் மணிரத்னம் இயக்கிய “ரோஜா”. படம் வெளிவந்த ஆண்டு 1992  ஆகஸ்ட் 15 , அவ்வாண்டில் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 

வன்முறை என்னும் தீ தொடர்ஓட்டமாக இருக்கிறது. ஒரு படைப்பாளர் இன்னொரு படைப்பாளரிடம் அந்தத் தீயை ஒப்படைக்கிறார். அப்படியே இப்போது அந்தத் தொடர் ஓட்டம் “Chaava” இல் வந்து நிற்கிறது. இப்படத்தின் கதை அவுரங்கசீப்புக்கும் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜிக்கும் நடக்கும் போராட்டம். அதாவது முகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையிலான யுத்தங்கள். இது சமகாலத்தில் மராட்டிய இனவாதமாக திரிக்கப்பட்டு, இந்து முஸ்லீம் பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது.

“ரோஜா” படம் 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இஸ்லாமியர்களை மோசமாக சித்தரித்த படங்களில் ரோஜா ஒரு முக்கியமான படமாகும். இவ்வாறு சித்தரித்த பின்னர், வன்முறைகள் பரவத் தொடங்கியபோது, இந்தியாவில் இந்து மக்களின் குற்றவுணர்ச்சி மழுங்கடிக்கப்பட்டு, வெறி மட்டுமே ஊட்டப்பட்டது.

இதே இயக்குனர் மணிரத்தினம் முக்கியமான பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்வதோடு, இல்லாத பிரச்சினைகளை ஆளும் வர்க்கத்தின் சார்பாக உருவாக்கவும் உதவுகிறார். “பம்பாய்”, “உயிரே”, “ராவணன்” போன்ற சமூக அடிப்படையிலான படங்கள் எடுக்கும்போதெல்லாம் அவை வலதுசாரிப் படங்களாகவே மாறியுள்ளன.

இன்று பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற “அமரன்” பான் இந்திய வெற்றிபெற்றதற்கு விதை போட்டவரே மணி “சார் ” தான். ஒன்று ராஜ வம்சக் கதைகள் என்ற பெயரில் பழைய சாதிய மத விழுமியங்கள் தோற்றுவிக்கப்படும். இல்லையென்றால், சமகால வன்முறையை இயல்பானதாக மாற்றும் படங்கள் தரமான படங்களாக முன்னிறுத்தப்படும். துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பறக்கும். கேஜிஎஃப், விக்ரம், மார்க்கோ போன்ற படங்கள் பான் இந்திய வெற்றி பெறுவதற்கு முன்னே மறைமுக நோக்கம் இருக்க வாய்ப்புண்டு.

வரலாற்றின் பக்கங்களைத் தேடிப்போனால், சத்ரபதி சிவாஜியின் படையிலே 60000 இசுலாமியர்கள் வேலை செய்துள்ளார்கள். அப்படிப்பார்த்தால் சிவாஜியின் மகன் சம்பாஜி படையிலும் இசுலாமியர்கள் இருந்திருக்கவே செய்வார்கள். அதேநேரம் அவுரங்கசீப் படையில் இந்துக்களே பெரும்பாலும் ஜெனரல்களாக இருந்திருக்கிறார்கள். அரசு வேலைகளில் பெரும்பாலும் இந்துக்களே இருந்திருக்கிறார்கள் என்று வரலாறு சொல்கிறது. அப்படியிருக்க, அப்போது சம்பாஜிக்கும், அவுரங்கசீப்க்கும் நடந்த யுத்தம் இரண்டு அதிகாரவர்க்கத்துக்கும் நடந்த யுத்தமாகவே இருக்கமுடியும். அது இரண்டு இனத்திற்கோ அல்லது இரண்டு மதங்களுக்கோ இடையில் உண்டான யுத்தமாக எப்படி இருக்க முடியும்?

அங்கு அரசர்கள் இந்துக்களாக, இசுலாமியர்களாக இருந்தார்களே தவிர, அவர்களுக்குக் கீழ் வேலை பார்த்த எளிய மக்கள் இரண்டு மதத்தையும் சேர்ந்தவர்களாக கலந்தே இருந்திருக்கிறார்கள். அதைத்தாண்டி, இன்னும் ஆழமாக கவனித்துப் பார்த்தால், தனக்கு எதிரான இசுலாமியர்களை அவுரங்கசீப் சிறை வைத்திருக்கிறார். அரச பதவிக்கு போட்டியாக வந்தவர்களைக் கொன்றிருக்கிறார். தனது அப்பாவான ஷாஜஹானை அவுரங்கசீப் சிறை வைத்திருக்கிறார். தனது தம்பி அரச பதவிக்குப் போட்டிக்கு வந்தபோது கொன்றிருக்கிறார். அவர் தம்பியும் அப்பாவும் இசுலாமியர்கள் தானே. இதில் இசுலாம் முதலில் வந்ததா? அல்லது, அதிகார வெறி முதலில் வந்ததா?

அப்படியே சம்பாஜி கதைக்கு வருவோம், சம்பாஜிக்கும் அதிகார வெறி இருந்தது என்பது வரலாறு. அவரது சித்தி சொய்ராபாய் செயல்படுகிறார். அவர் சிவாஜியின் இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஒரு மகன் உண்டு அவர் பெயர் ராஜாராம். ராஜாராமை அரசனாக ஆக்கவேண்டும் என்று அதற்காக சதித்திட்டம் தீட்டுகிறார் சித்தி. அதனை முறியடிக்க, தனது சித்தியை யானையை வைத்து மிதித்துக் கொன்றுவிடுகிறார் சம்பாஜி. தனது தம்பியை சிறையும் வைக்கிறார். இங்கு சித்தியும் தம்பியும் இந்துக்கள் தானே? ஆனாலும் சம்பாஜி அவர்களை ஏன் கொன்றார்? இங்கு மதமென்பதைத் தாண்டி, யாரெல்லாம் அதிகாரத்துக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை வேரறுப்பது தான் அரச மரபு என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

படத்தில் இந்த வரலாறு இப்படிப்பதியப்படவில்லை. மக்களுக்காவே வாழ்ந்த சுத்த வீரனாக சம்பாஜி காட்டப்படுகிறார். சித்தியை மன்னிப்பதாகவும், தம்பியிடம் அன்புடன் நடந்துகொள்வதாகவும் காட்டப்படுகிறார். “வரலாற்றை சொல்கிறேன்” என்கிற பெயரில், ஒருபுறம் அவுரங்கசீப்பை மிகவும் கெட்டவனாகவும், அதிகார வெறியால் மற்றவர்களை இரக்கமின்றி கொல்பவனாகவும் காட்டுகிறது. மறுபுறம் சம்பாஜியை கருணையின் வடிவமாகவும், ஸ்வராஜ்யத்திற்காக மட்டுமே அரச பதவியில் இருப்பவனாகவும் சித்தரிக்கிறது.

படத்தில் மராட்டிய ரத்தம் பற்றிய கருத்துகள் முன்னிறுத்தப்படுகின்றன. மராட்டிய ரத்தம் கொண்டவர்கள் துரோகம் செய்யமாட்டார்கள், அன்பானவர்கள் என்று காட்டப்படுகிறது. அவுரங்கசீப்பின் பக்கத்தில் இத்தகைய நல்ல பண்புகள் கொண்ட ஒருவர் கூட இல்லை என்ற காட்சியமைப்பு உள்ளது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது ரத்தத்தில் பிறந்தவர்களுக்கே சில பண்புகள் உண்டு என்ற தூய இனவாதக் கருத்து பரப்பப்படுகிறது. இந்துத்துவம், இனவாதத்தின் போர்வையில் பதுங்கிக்கொள்கிறது. இதை, தூய தமிழ்த் தேசியத்தின் பின்னால் மறைந்திருக்கும் சாதியவாதத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம்.

சம்பாஜியின் காதல் தூய்மையானதாக சித்தரிக்கப்படுகிறது. அவர் ஒரு சிறந்த காதலனாக காட்டப்படுகிறார். போர்க்களத்தில் மரணப் படுக்கையில் கூட மனோதத்துவ ரீதியாக மனைவியுடன் உரையாடுகிறார். அவரது மனைவியும் அரசவையில் இருந்துகொண்டே மனதால் அவருடன் உரையாடுகிறார்.

காதல் என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கு இருக்கிற ஒரு இயல்பான உணர்வுதான். அப்படி இருக்கையில் சம்பாஜிக்கு காதல் இருக்கக்கூடாதா? இருக்கலாம்தான். ஆனால் சம்பாஜியைப் போல தூய்மையானவரைப் பார்க்க முடியுமா என்பது போலவும், அந்த ஒரேயொரு பெண்ணை மட்டுமே மானசீகமாக காதலிப்பதைப் போலவும் காட்டுவதால் இயக்குநர் என்ன சொல்லவருகிறார்? 

வரலாறு சம்பாஜியைப் பற்றி என்ன சொல்கிறது. சம்பாஜி ஏற்கனவே திருமணமான பார்ப்பன பெண்ணுடன் உறவு கொண்டதால் கோபம் கொண்ட சம்பாஜியின் தந்தை சத்ரபதி சிவாஜி, தன்னுடைய மகனான சம்பாஜியை சிறை வைக்கிறார். 

அப்படியிருக்க, திரைப்படத்தில் காட்டப்படும் தூய்மையான மகத்துவமான காதலை கட்டமைக்க இயக்குநரின் தேவைதான் என்ன? 

தன்னுடைய ஒரே(?) மனைவியை இந்தளவுக்கு காதலிப்பவன் பெண்களை மதிப்பவனாகவே இருக்க முடியும் என்று காட்டுவதற்குத்தானே? 

சரி, இந்தப் பக்கமாக சம்பாஜியை அப்படிக் கட்டமைத்துவிட்டு, அந்தப் பக்கம் முகலாயர்களோ பெண்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள், போர்க்களத்தில் பெண்களை சூறையாடுகிறார்கள் என்று காட்டும்போது, இங்கு மராட்டிய இன ரத்தம் சூடு பிடிக்குமல்லவா. அதைத்தான் இயக்குநரும் செய்கிறார்.

இவ்வளவு அழகான ராஜா, இவ்வளவு அழகான குடும்பம், இத்தகைய காதல் என்று காட்டிவிட்டு எதிர்முகாமை அப்படியே மாற்றிக்காட்டும் போது ஒரு ரசவாதம் உருவாகும். மணிரத்தினம் ரோஜாவிலிருந்து, அமரன் வரை இதுதான் இவர்கள் கையிலெடுக்கும் கலை உத்தி. எதிரியின் கொடூரத்தைக் காட்டிவிட்டு, எதிர் முகாமில் இருக்கும் நாயகனின் காதலையும் அதன் புனிதத்தையும் காட்டும்போது தான் அந்தக் கதை அழுத்தமடையும். சம்பாஜியின் வீரத்தை விட சம்பாஜி சிந்தும் ரத்தத்தை விட சம்பாஜி மனைவியின் கண்ணீரே ரசிகனை ஒன்றிணைய வைக்கின்றன. “ரோஜா ” படத்தில் வரும் ரோஜாவின் கண்ணீரும், அமரன் படத்தில் வரும் ரெபேக்கா வர்கீஸ் கண்ணீரும் இப்படித்தான். எதிரே நிற்பவர்களை மோசமானவர்களாக சித்தரிக்கவே பயன்பட்டு இருக்கிறது. எதிரே நிற்பதென்னமோ சிறுபான்மையான இசுலாமியர்கள். 

இந்த மூன்று திரைக்கதைகளிலும் எதிரே இருக்கும் முகாமில் எளிமையான இயல்பான மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்றும் எல்லாரும் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள் என்றும் காட்டுவது தற்செயலானது அல்ல. நம்மூரில் ரோஜாவாகவும் அமரனாகவும் இருக்கும்படம், ஆந்திராவில் ஆர்ஆர்ஆர் என்கிற பெயரில் வேறு வடிவமெடுக்கும். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இராம பக்தர்களாக மாறுவது இப்படித்தான். ஒருபக்கம் இந்துக் கடவுள்கள், இந்துக் குறியீடுகள் நாயக பிம்பத்துடனும், இன்னொரு பக்கம் எதிரே இருப்பவர்கள் குரூரத்தின் குறியீடாகவும் தொடர்ந்து காட்டப்படும் போது, இங்கு சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகள் இயல்பாக்கப்படுகின்றன.

‘சாவா’ திரைப்படத்தில் வரலாறு ஒரு பக்கச் சார்பாகவும் திரித்தும் காட்டப்பட்டிருக்கிறது. இந்துப் பெண்களுக்கு அதிகமாக துன்பங்கள் நடந்தது அவுரங்கசீப் ஆட்சியில் என்று காட்டப்படுகிறது. மனுதர்மத்தை விட பெண்களைக் கொடுமைப்படுத்திவிட முடியுமா? காஷ்மீரில் ஒரு சிறு இசுலாமியக் குழந்தை இந்துத்துவ குண்டர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதே? இன்றும் பெண்களுக்குண்டான கொடுமைகள் நடந்துகொண்டே இருக்கிறதே. சரி “சதி” என்ற ஒன்றை வில்லியம் பென்டிக் ஒழித்தார் என்பது வரலாறு. “சதி” என்பது உடன்கட்டை ஏறுவது, பெண்களை உடமைப்பொருளாக பார்த்ததன் விளைவு. கணவன் இறந்தவுடன் பெண்களும் இறக்கவேண்டும் என்ற அத்தகைய கொடூர வழக்கமானது இந்தியச்சமூகத்தில் இருந்தது. அதை ஒழிக்க அக்பர் காலம் முதற்கொண்டு முகலாய மன்னர்கள் பாடுபட்டார்கள். அதில் முக்கியமானவர் அவுரங்கசீப் என்று வரலாறு சொல்கிறது. எல்லாக்கால கட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது போல அவர் காலகட்டத்திலும் நடந்திருக்கிறது. அதைத்தாண்டி சில நல்ல பக்கங்களும் அவுரங்கசீப்புக்கு இருக்கவே செய்கிறது.

படத்தில் சம்பாஜி எப்படிக்காட்டப்படுகிறார், சம்பாஜி கவிதைகளை ரசிக்கிறார், கலாஷ் என்ற கவிஞர் அவருக்கு நண்பராக இருக்கிறார். ஆனால் இந்தப் பக்கம் அவுரங்கசீப் மோசமானவராகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அவரது இளகிய பக்கங்களைப் இத்திரைப்படம் காட்டவே இல்லை. அவரது இளகிய பக்கங்களைக் காட்டிவிட்டால், மக்களுக்கு அவர் மீதும் அன்பு வரத்தானே செய்யும். அவுரங்கசீப் இசையில் நுட்பமானவர், வீணையை நன்றாக வாசிக்கக்கூடியவர். அவருக்கென்று காதல் பக்கங்களும் உண்டு என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ஒருவரை ரொம்ப நல்லவராக காட்டிவிட்டு அப்படியே நேரெதிராக இன்னொருவரை கட்டமைக்கும் சினிமாத்தனத்தை இயக்குநர் செய்துள்ளார். அது வெறும் சினிமாத்தனமாக இல்லாமல் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. ஒரு பக்கம் இளகிய ஒருவர் இன்னொருபக்கம் எந்த ஒரு விழுமியங்களும் இல்லாமல் அதிகார வெறிகொண்ட இன்னொருவர் என்று கதையின் கட்டமைப்பே தவறாக இருக்கிறது. வரலாறு என்பது கருப்பு, வெள்ளை அல்ல அது இரண்டுக்கும் நடுவே சாம்பல் நிறத்தினால் ஆனது. அதை அப்படியே காவி நிறமாக மாற்றியுள்ளார் இயக்குநர். காவி நிறமோ, சிவப்பு நிற இரத்தமாக மாறுகிறது.

அவுரங்காசீப் இந்துக் கோவில்களை இடித்ததால் இந்துக்களால் வெறுக்கப்படுகிறார் என்ற பொதுவான தவறான கருத்து நிலவுகிறது. வரலாற்றாளர் ரிச்சர்ட் ஈட்டன் தமது ஆய்வுகளில், அவுரங்கசீப்பின் இந்த நடவடிக்கைகள் அரசியல் காரணங்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன, மத வெறுப்பு காரணமல்ல என்று தெளிவாக்கியுள்ளார். 1659 இல் பனாரசில் சில பார்ப்பனர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது, அவுரங்கசீப் கோவில்களை பாதுகாத்தது மட்டுமல்லாமல், பல கோவில்களை கட்டுவதற்கு நிலங்களும் மானியங்களும் வழங்கினார் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

திரைப்படத்தில் சம்பாஜி எதிரியின் குழந்தையைக் கூட காப்பாற்றுபவராக காட்டப்படுகிறார், அதே வேளை அவுரங்கசீப் தனது சொந்த ஆதரவாளர்களைக் கூட கொன்றுவிடுபவராக சித்தரிக்கப்படுகிறார். அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தை ‘தேனும் பாலும் ஓடிய காலம்’ என்று சொல்ல வேண்டியதில்லை, ஆனால் பக்கச்சார்பற்ற வரலாற்று உண்மைகளை மட்டுமே சித்தரித்திருந்தால், பார்வையாளர்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருப்பார்கள். இங்கு வரலாறு புரிதலுக்காக காட்டப்படுவதை விட பிரித்தலுக்குக்காக காட்டப்படுகிறது, ஒரு பக்கம் தூக்கியும் இன்னொரு பக்கம் இறக்கியும் காட்டப்படுகிறது. கடைசியாக அவுரங்கசீப்பின் சமாதியை உடைக்கவேண்டும் என்னும் அளவுக்குச் செல்கிறது.

இந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த படமாக 800 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்று உணர்வு இல்லாத பலர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியுமா? உண்மையான வரலாறு ஒருபுறம் இருக்க, ‘வாட்ஸ்அப் வரலாறு’ என்ற புதிய வடிவம் இங்கு உருவாக்கப்படுகிறது. இந்த அவதூறுகளுக்கு பதில் சொல்வது இப்போது ஒரு தனி பணியாக மாறியுள்ளது. இந்தப் பணி மிகவும் முக்கியமானது – அவர்கள் தவறான கருத்துகளை வரலாறு என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், நாம் உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கதைகள், திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் மூலம் வரலாற்றை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இன்று முக்கியமாக உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்யும் புதினங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் புலியூர் முருகேசன் எழுதிய “ஆலம்கிர் ஒளரங்கசீப்” புதினம் முக்கியமானதாக எனக்குப் படுகிறது. அவர் ஏன் இந்துக்களால் அப்படி வெறுக்கப்பட்டார் என்பதற்கு வரலாற்று ரீதியான ஆவணங்களுடன் படைக்கப்பட்ட புதினம்.அவர் சனாதனத்துக்கு எதிராக இருந்தார் என்ற பார்வையை புதினத்தின் மூலம் நிறுவுகிறார் புலியூர் முருகேசன். எனக்கு என்னமோ அந்தப் பார்வை சரியாகப்படுகிறது.

இடதுசாரித் தளத்திலிருந்து இப்படியான புதினங்களும், படைப்புகளும் தேவைப்படுகின்றன. வன்முறைத் தீயையும் மதவாதத் தீயையும் அணைக்க நிறைய தண்ணீராக இத்தகைய படைப்புகள் அவசியமாகிறது. கலை என்பது மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இருக்கவேண்டும். ‘சாவா’ போன்ற படங்களெல்லாம், கலை கொலைக்கருவியாக மாற்றுகின்றன. மக்களைப் பிரித்தெடுக்கும் பிரச்சாரத்தை ஆளும் வர்க்கத்திற்கு உதவும் வகையில் செய்கின்றன. அதற்கு எதிர் அரசியல் செயல்பாடாக முற்போக்கு ஜனநாயகப் பரப்பிலிருந்தும், மக்களை ஒருங்கிணைப்பதற்குத் தேவையான கலைச் செயல்பாடுகளை செய்தே ஆகவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

– வெண்ணிற இரவுகள் கார்த்திக்

Leave a Reply