இலக்கியம்தொடர்கள்

நம் எழுத்துக்காக ஊற்றெடுத்துக் காத்திருக்கும் வாழ்க்கை நடப்புகள் (இறுதிப் பகுதி) – அ.குமரேசன்

549

(தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க…)

கட்டுரைகளுக்கான கருப்பொருள்கள் கடலாக விரிந்திருக்கின்றன. கரையில் கணுக்கால் நனைகிற அளவு முதல், எவரெஸ்ட் சிகரத்தை விடவும் உயரமான மலைகள் மூழ்கியிருக்கிற நடுக்கடல் வரையில் ஆழங்கள் இருக்கின்றன. கருப்பொருள்களைக் கட்டுரையாக்குவதிலும், உடனடியாக சுவை தருவது முதல் ஆழ்ந்து சிந்திக்க வைப்பது வரையில் பலவகை வடிவங்கள் இருக்கின்றன. யாருடன் உரையாடுகிறோம் என்பதைப் பொறுத்து பேச்சை அமைத்துக்கொள்வது போல, எந்த வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து எழுத்து நடையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

ஒரே கருப்பொருள் – இரண்டு வெவ்வேறு அவையினர் என்றால் அதற்கேற்ப அமையும் பேச்சுகள் வெற்றியடையும். மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாகப் பேச வேண்டியிருக்கிறது என்றால், மாநில சுயாட்சி – ஒன்றியத்தில் கூட்டாட்சி என்ற கொள்கை குறித்து நன்கறிந்தவர்கள் நம் முன்னால் இருக்கிறபோது,  நிலைமைகளும் தேவைகளும் அவர்களுக்குத் தெரியும் என்ற புரிதலோடு, தொடக்க நிலைத் தகவல்களைத் தவிர்த்துவிட்டு நேரடி விளக்கங்களுக்குள் போகலாம். 

பொதுக்கூட்டம் என்றால், பெரிய அளவுக்கு அறிந்திராத மக்கள் கூடியிருக்கிறபோது, ஒரே நாடு – பல மாநிலங்கள் என்ற இணைப்பையும், பண்பாட்டு வேறுபாடுகளையும், அதற்கேற்ப மாறுபடும் தேவைகளையும் சொல்ல வேண்டியிருக்கும். மாநில உரிமைகள் உறுதிப்படுவதுதான் நாட்டின் தன்னாளுமைக்கே வலிமை சேர்க்கும் என்று விளக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் எளிய நடையில், மக்களுக்குப் பழக்கமான காட்சிகளை முன்வைத்து, குட்டிக் கதைகளோடும் நகைச்சுவைத் தெறிப்புகளோடும் பேசுகிறவருக்கு கைதட்டல்களே மாலைகளாகக் குவியும். இறுதியில் மாநில சுயாட்சிக்கான கனத்த அறைகூவலை விடுத்து முடிக்கிறபோது, அதில் தங்களுடைய குரலையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கும்.

அறிந்தோர் அவையில் இப்படிப்பட்ட எளிய உரை எடுபடாமல் போகக்கூடும், பொது அரங்கில் கனத்த உரை மக்களைத் தொடாமலே போய்விடும். இரண்டு இடங்களிலுமே கலகலப்பான பேச்சாக அமைவது கூடுதல் வரவேற்பைப் பெறும்.

Penning 1

கருத்தாழமும் கலகலப்பும்

இதை அப்படியே எழுத்தாக்கத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆழ்ந்த விவாதங்களுக்கென்றே வெளியாகிற ஏடுகளிலும் மின்னிதழ்களிலும் ஆய்வுரையாகவே எழுதலாம். அரசியல், சமூகம், அறிவியல், திரைப்படம் என்று கலந்து வருகிற பல்சுவைப் பதிப்புகளில் எளிய நடையில் சுவைபட எழுதுவது பலரிடமும் கொண்டு சேர்க்கும். ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழில் ஆழமான தத்துவ விவாதங்களை நடத்தலாம். அந்த விவாதங்களும் சுவைபட அமைவதை அதன் ஆசிரியர் குழுவும் வாசக வட்டமும் வரவேற்கும். ‘மாற்று’ தளத்தில் இயல்பாக எளிமையும் கலகலப்புமான எழுத்துநடை தேவைப்படும். அந்த எழுத்தாக்கம் கருத்தாழத்துடன் அமைவதை ஆசிரியர் குழுவினரோடு வாசகர்களும் வரவேற்பார்கள்.

ஒரு வீட்டின் வாசல் போன்றது கட்டுரையின் தலைப்பு. கதை, கவிதை எழுதிவிட்டுத் தலைப்புக்காக வெகு நேரம் யோசிக்கிற படைப்பாளிகள் இருக்கிறார்கள்! மாற்றுவதற்குத் தேவை ஏற்படாத வண்ணம் தலைப்புச் சூட்டுகிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இதழாசிரியர்கள் பல நேரங்களில் தங்களுக்கு வந்த கட்டுரையின் தலைப்பை ஈர்க்கும் வகையில் மாற்றுவதற்குக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதை எழுத்தாளரும் அங்கீகரிப்பார். எங்களுக்கு வந்த கட்டுரைகளின் தலைப்புகளை இவ்வாறு பொருத்தமாக மாற்றியமைத்தது, எனது கட்டுரைத் தலைப்புகள் மாறாமல் வந்தது, சிறப்பாக மாற்றப்பட்டு வெளியானது ஆகிய மூன்று அனுபவங்களும் எனக்கு வாய்த்திருக்கின்றன.

சிறைச்சாலைகளுக்குள் நிலவும் சாதிப் பாகுபாடுகள் தொடர்பாக எழுதிய ஒரு கட்டுரைக்கு, “சாதிக் கொட்டடிகளிலிருந்து சிறைகளை விடுவிக்க…” என்று தலைப்பிட்டிருந்தேன். சிறையையும் விடுதலையையும் மாறுபட்ட கோணத்தில் இணைத்த அந்தத் தலைப்புடனேயே கட்டுரை ‘தீக்கதிர்’ நாளேட்டில் வந்தது.  நாசா ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் இருவரும் சென்ற விண் ஓடத்தில் ஏற்பட்ட கோளாறு, அவர்கள் திரும்பி வருவார்களா என்று உலகத்துக்கே ஏற்பட்ட பதைப்பு பற்றிய கட்டுரைக்கு “கடலில் விழுந்த விண் ஓடக்கூடு, தெறிக்கும் கேள்வித் துளிகள்” என்று தலைப்பிட்டிருந்தேன். கட்டுரையை அப்படியே வைத்துக்கொண்டு, தலைப்பை “சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் புளுகிய டிரம்ப், களமிறங்கிய எலான் மஸ்க்! நாசாவில் தனியார் ஆதிக்கம்?,” என்று மாற்றி வெளியிட்டது ‘டிஜிட்டல் விகடன்’. மாற்றப்பட்ட தலைப்பு ஏராளமானவர்களைப் படிக்க வைத்தது.

Penning 2

தலைப்பின் நீளம்

எழுதியதற்குத் தலைப்பிடுவது பற்றிய வினாவுக்கான விடைப் பெட்டியைத் திறந்தால் அதற்குள் இதெல்லாம் இருக்கிறது.  சுவையான தலைப்பு சுருக்கமானதாகத்தான் இருக்க வேண்டுமா? கொஞ்சம்  நீளமாக இருக்கக்கூடாதா? இது அடுத்த வினா. இதையும் கட்டுரையின் தன்மையைப் பொறுத்து முடிவு செய்யலாம். முன்பு படித்த ஒரு கட்டுரையின் தலைப்பு இதை விடவும் சுருக்கமாக இருக்க முடியுமா என்று கேட்க வைத்தது. ? –இதுதான் அந்தத் தலைப்பு, ஒற்றைக் கேள்விக்குறி!

நீளமான தலைப்புகள் மட்டுமல்ல, மிக நீளமான தலைப்புகளுடனும் கூட கட்டுரைகள் வந்திருக்கின்றன. குறிப்பாக ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு அப்படிப்பட்ட தலைப்புகள் வைக்கப்படுவதுண்டு.  சினோரிடியம் டுமோசம் (நட்டல்) ஹூக்கர் எஃப்.: பஜா கலிபோர்னியா, மெக்சிகோ, செர்ரோ கெமாசோனில் (சுமார் 1450 மீட்டர் உயரத்தில்) 1960 மார்ச் 26 இல் சேகரிப்புடன் தென்கிழக்கில் கண்டறியப்பட்ட சுமார் 140 மைல்கள் இனப்பரவல் விரிவாக்கம்”. விக்கிபீடியா தொகுப்பில் ஒரு தாவர ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைக்குத் தரப்பட்டுள்ள தலைப்பின் தமிழாக்கம் இது.  அந்தக் கட்டுரையைப் படிக்கக்கூடியவர்கள் தாவரவியலில் ஈடுபாடுள்ளவர்களாக இருப்பார்கள். ஆகவே இந்த நீளத் தலைப்பு பொருத்தமானதாக இருந்திருக்கக்கூடும். தேடிப் பார்த்தால் உலகில் எங்கேனும் இதை விடவும் நீளமான தலைப்புகள் கிடைக்கக்கூடும். 

Penning 3

தமிழிலும் கூட, இந்த அளவுக்கு இல்லையென்றாலும், நீளமான தலைப்புகளுடன் கட்டுரைகள் அவ்வப்போது வரவே செய்கின்றன.  “தற்காப்புக் கலையைப் பயில்வதன் நன்மைகளும் உடற்பயிற்சி செய்வதன் பலன்களும் உடலும் மனமும் ஒருங்கிணைந்த செயலின் ஆதாயங்களும் எனக்குப் பிடித்த விளையாட்டுக் கலையும்” –இணையத்தில் இப்படியொரு தமிழ்த் தலைப்பைக் காண முடிந்தது. அது ஒரு பள்ளி மாணவர் எழுதிய கட்டுரையாக இருக்கலாம். வாசகரை வசப்படுத்தக்கூடிய வகையில் தலைப்பை நீளமாக அமைக்கலாம். புத்தகக் கடைகளுக்குள் நுழைந்தால் வழக்கத்தை விட நீளமான தலைப்புகள் கொண்ட புத்தகங்களைக் காண முடியும்.

செய்திகள் எழுதுவது தொடர்பாக அளிக்கப்படும் பயிற்சிகளில் ஒன்று தலைப்பிடுவது.  தலைப்பு முடிந்தவரை சுருக்கமாகவும், செய்தியின் மையக் கருத்தை தெளிவாகவும் தெரிவிப்பதாக இருக்க வேண்டும். மிக நீளமான தலைப்புகளால் வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. வாசகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும் வகையில் தலைப்பை அமைப்பது முக்கியம். வியப்பு, கேள்வி, வலிமை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பது அதற்கு உதவியாக அமையும். யார், என்ன, எங்கே, எப்போது போன்ற கேள்விகளுக்கு தலைப்பில் ஒரு இணைப்பு இருக்க வேண்டும். செய்தியின் தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு சோகமான செய்திக்குக் கனமான உணர்வைத் தரும் தலைப்பு தேவை. “நடனமாடும்போது காலமானார்” என்பதற்கு மாறாக, “திடீர் மாரடைப்பால் மரணம் – நடன நிகழ்ச்சியில் சோகம்” என்ற தலைப்பு அந்த உணர்வைத் தரும். தலைப்பில் கடந்த கால வினைச்சொற்களைப் பயன்படுத்துவதை விட, நிகழ்கால வினைச்சொற்களைப் பயன்படுத்துவது செய்திக்கான உடனடி உணர்வை ஏற்படுத்தும். இதையெல்லாம் கவனித்து எழுதுகிறபோது, தலைப்பே செய்தியின் முதல் பத்தி போல மாறிவிடக்கூடாது. தலைப்பிலேயே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு அடுத்த செய்திக்குப் போய்விடாமல் முழுமையாகப் படிக்க வைக்கும் வகையில் இருக்க வேண்டும். செய்தித் தலைப்புகளுக்கான இந்த வேண்டும்கள் கட்டுரைகளுக்கும் பொருந்தும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.

Penning 4

வேறு சில வழிகள்

கட்டுரையாக்கத்தில் வாசகருக்கு நெருக்கமான உணர்வைத் தரும் வேறு சில வழிகளையும் பார்க்கலாம்:  இயல்பான பேச்சு நடையில் சிறிய வாக்கியங்களை உருவாக்குவது; வாசகருக்கு நாம் அவருடன் நேரடியாகப் பேசுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது (“பாருங்களேன்”, “தெரியுமா”, “என்ன சொல்கிறீர்கள்”, “நீங்களே அறிந்ததுதான்”  –இவை போல); கடினமான சொல்லாடல்களையும் இலக்கிய நயமிக்க சொற்களையும் தவிர்த்து, எல்லோருக்கும் புரியும் எளிய சொற்களைக் கையாள்வது (துறை வல்லுநர்களான வாசகர்களை அப்படிப்பட்ட சொற்கள் ஈர்க்கக்கூடும்தான். ஆனால், அவர்களிலும் கூட பெரும்பாலோர் சிக்கலற்ற நடையில் எழுதப்பட்டிருப்பதைத்தான் விரும்புவார்கள். இதுவோர் அடிப்படையான உணர்வு. பல முன்னணிப் பத்திரிகைகள் இதைப் பிடித்துக்கொண்டதால்தான் வெற்றி பெற்றிருக்கின்றன). 

துணைத் தலைப்புகள் தேவையா? நிச்சயமாகத் தேவை. கட்டுரையின் அடுத்தடுத்த வாதங்களுக்குத் துணைத் தலைப்புகள்தான் இட்டுச்செல்லும். தொடர்ச்சியான நீண்ட கட்டுரையைப் படிக்கிறோம் என்ற அயர்ச்சி ஏற்படுவதையும் துணைத் தலைப்புகள் தடுக்கும். இந்தத் தொடரிலும் எல்லாக் கட்டுரைகளிலும் துணைத் தலைப்புகள் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

கட்டிடமா கட்டடமா? துவக்கமா தொடக்கமா? முயற்சிப்பதா, முயற்சி செய்வதா? –இவையும் இவை போன்ற வேறு சில பொதுவான வினாக்களும் இருக்கின்றன. கட்டிடம் என்றால் கட்டப்படும் இடம் என்று பொருள். வீட்டுமனையைக் குறிக்கிறது என்று எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். கட்டடம் என்றால்தான் கட்டப்பட்ட கட்டுமானத்தைச் சொல்வதாகும். உடனடியாக முடியக்கூடிய ஒரு செயலின் முதல் புள்ளியைத் துவக்கம் என்றும், தொடரக்கூடிய செயலுக்குத் தொடக்கம் என்றும் குறிப்பிடலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆயினும் துவக்கம் நேரடியான தமிழ்ச்சொல் அல்ல. இருந்தபோதிலும், துவக்கம், ஆரம்பம் ஆகியவை நெடுங்காலமாகத் தமிழோடு கலந்து, தமிழாகவே ஏற்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தலாம். முன்பு பார்த்தோமே, அதைப் போல, ஒரே வாக்கியத்தில் அல்லது ஒரே பத்தியில் “தொடங்கலாம்” என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறபோது “துவக்கலாம்“, “ஆரம்பிக்கலாம்”.

Penning 5

பிரச்சினை, விஷயம், சந்தோஷம் என வேறு மொழிகளிலிருந்து வந்து மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்துவிட்ட சொற்கள் இருக்கின்றன. முடிந்த அளவுக்கு அவற்றை சிக்கல், சேதி, மகிழ்ச்சி என்று தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தும் இனிமையை அனுபவிக்கலாம், அல்லது மக்களோடு முரண்பட்டுக்கொண்டிருக்காமல் அந்தச் சொற்களையே பயன்படுத்தலாம்.  

முயற்சிக்கலாமா?

முயல்வது, முயற்சி மேற்கொள்வது, முயற்சி செய்வது என்ற சொற்கள்தான் தமிழில் மூலமானவை. முயற்சிப்பது முயற்சித்தார்கள் என்று எழுதுவது நவீன காலத்தில்தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுடன் “ing” சேர்க்கப்படுகிறது. அதைக் கவனித்த ஆர்வலர்கள் தமிழிலும் வினைச்சொல்லுடன் ஒட்டு சேர்த்து ஒரே சொல்லாக்க முடியுமா (எ.கா.: Try என்ற சொல்லுடன் ing சேர்த்து Trying என்று கூறுவது போல) என்று முயன்றிருக்கிறார்கள். அப்படித்தான் முயற்சியுடன் “தல்” சேர்ந்து “முயற்சித்தல்” என்ற புதிய சொல் வந்திருக்கிறது என்று தமிழறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். “முயற்சிப்பது”, “முயற்சித்தார்கள்” என்று எழுதுவது இந்த வகையில்தான்.

அப்புறம் சாதாரணமாக (இதுவும் வடக்கேயிருந்து வந்து தெற்கே சங்கமமாகிவிட்ட சொல்தான்), வரும்போது என்று சரியாகச் சேர்த்து எழுதுகிறவர்கள், நுழையும் போது, கூறிய போது என்று பிரிக்கிறார்கள். நுழையும்போது, கூறியபோது என்று அவற்றை இணைந்து செல்ல வைப்போம். அதைப்போலத்தான் கடந்து விட்டது என்று விட்டுவிடாமல், கடந்துவிட்டது என்று இணைந்து கடக்க வைப்போம்.

உலக புத்தக தினம், உலகப் புத்தக தினம் இரண்டில் எது சரி? நடுவில் “ப்” சேர்க்காமல் எழுதுவதே சரி. உலக புத்தக தினம் என்றால் உலகளாவிய புத்தக நாள் கொண்டாட்டம் என்ற பொருள் கிடைக்கும். உலகப் புத்தக தினம் என்றால் உலகத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம், அதற்காக ஒரு தினம் என்று பொருளாகிறது. நாம் கொண்டாடுவது உலக அளவில் புத்தகங்களைக் கொண்டாடுகிற நாள்தான், ஆகவே உலக புத்தக தினம் என்றே எழுதுவோம்.

ஒவ்வொரு பூக்களுமே

ஒருமை – பன்மை பற்றி முன்பு  பேசினோமே – அதையொட்டி ஒரு பழைய நினைவு. ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில் சித்ரா பாடி எங்கும் பரவிய “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. “ஒவ்வொரு பூவுமே என்றுதானே வரவேண்டும், ஒவ்வொரு பூக்களுமே என்று வருவது சரிதானா” என்ற கேள்வி சரியாக வந்தது. படைப்பாளிகளுக்கே உரிய கவித்துவ உரிமம் இது! பா.விஜய் அந்த உரிமத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இசைக்கான மெட்டுடனும் சொற்கள் இணைந்தன. “ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே” என்று பாடிப் பாருங்கள், இடறும்.

சொல்லறிவை வளர்த்துக்கொள்வதற்குத் தொடர்ந்து வாசிப்பதில் ஈடுபடுவது பற்றிப் பேசியிருக்கிறோம். இதனை, கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு நாட்டு நடப்புகளை, உலகப் போக்குகளை, சமூக நிகழ்வுகளைக் கவனித்து செய்தியறிவைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது புதிய சொல்லாடல்களும் நமக்கு அறிமுகமாகும். சிந்தித்தோமானால் நாமே கூட சரியான புதிய சொல்லாடல்களை உருவாக்க முடியும். ஆங்கிலத்தில் குரோனி கேப்பிடலிசம் (crony capitalism) என்ற ஆங்கிலச் சொற்களுக்கு நட்பு முதலாளித்துவம், உறவு முதலாளித்துவம், சேக்காளி முதலாளித்துவம் என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஒரு கலந்துரையாடலின்போது, குரோனி கேப்பிடலிசம் பற்றி விளக்கிவிட்டு, அதைக் கூட்டுக் களவானி முதலாளித்துவம் என்று குறிப்பிடலாம் என்றார். சிலர் அவ்வாறு எழுதவும் செய்கிறார்கள். களவானி என்பது ஒரு ஆளைக் குறிப்பிடுகிற சொல்லாக இருக்கிறதே என்று யோசித்தேன், பேராசிரியரின் விளக்கத்துடன் இணைந்ததாக கூட்டுக்களவு முதலாளியம் என்ற சொல்லாக்கத்தை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறேன். இப்படியெல்லாம் நாமும் “சொல் புதிது” செய்யப் பங்களிக்கலாம். அப்போது சுவையும் புதிதாகிவிடும். ஒருவேளை இன்னும் சரியான, அழகான சொற்களை நாளை யாரேனும் அறிமுகப்படுத்துவார்களானால் அவற்றை மனமுவந்து ஏற்கலாம்.

கட்டுரைப் பெருங்காட்டில்

நமக்கென்றும் சில அடையாளச் சொற்களை உருவாக்கலாம். சைவம் – அசைவம் என்று எழுதப்படுகிறதல்லவா, அப்படி ஏன் சைவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் நான் அசைவம்  என்றும் அ–அசைவம் என்றும் எழுதுவதைப் பழக்கமாக்கிக்கொண்டேன். ஆத்திகம் – நாத்திகம் என்று கூறாமல், நாத்திகம் – அநாத்திகம் என்றே குறிப்பிடுவேன். முன்பே சொன்னேனே, சொல்லாடல்களுக்கும் அரசியல் இருக்கிறது, நம் சொல்லாடல்களிலும் அரசியல் இருக்க வேண்டும்.

நபர்கள் என்று சொல்வதைத் தவிர்த்து ஆட்கள், மனிதர்கள் என்று கூறுவது மதிப்பு. விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று செயற்பாட்டுவினையில் கூறுவதற்கு மாறாக விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று செய்வினையில் கூறுவது உயிர்ப்பு. “இன்டர்நேஷனல் புக் ஃபேர்” அறிவிக்கப்பட்டபோது பலர் “சர்வதேச புத்தகக் கண்காட்சி” என்று மொழிபெயர்த்தனர். சர்வம் என்றால் அனைத்து என்று பொருள். இப்படிப்பட்ட இன்டர்நேஷனல் நிகழ்வுகளில் அனைத்து நாடுகளும் அங்கேற்பதில்லை. பல நாடுகள் பங்கேற்கின்றன. “பன்னாட்டுப் புத்தககத் திருவிழா” என்று நுழைவாயில் வரவேற்றது. கிரிக்கெட் போட்டியில் இரண்டே இரண்டு நாடுகள் பங்கேற்றால் கூட அது இன்டர்நேஷனல் மேட்ச் என்றே நடத்தப்படுகிறது. இப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையேயான நிகழ்வாக அமைக்கப்படுகிறபோது “நாடுகளிடை புத்தகத் திருவிழா” “நாடுகளிடை கிரிக்கெட் போட்டி” என்று சொல்வது மிகச் சரியான மொழிபெயர்ப்பு.

இதுவரை பகிர்ந்துகொண்டதெல்லாம் கட்டுரைக் கலையெனும் பெருங்காட்டின் ஒரு மூலையைத்தான். நுழைந்துவிட்டால் உள்ளே எவ்வளவு தொலைவு செல்கிறோமோ அவ்வளவுக்குப் புத்துணர்ச்சி உறுதி. 

ஒரு செய்தியிலிருந்து, ஒரு கவிதையிலிருந்து, ஒரு குட்டிக் கதையிலிருந்து என தொடங்கி, ஒரு விளக்கம், ஒரு விவாதம், ஒரு அழைப்பு, ஒரு அறைகூவல் என எழுதி முடிக்கலாம். நாம் எடுத்துக்கூற விரும்புகிற, விவாதித்தாக வேண்டியிருக்கிற நடப்புகள், கொண்டாட்டங்கள், கொடுமைகள், வலிகள், போராட்டங்கள், மாற்றங்கள் என சமுதாய வாழ்க்கையில் ஊற்றுப் போல், நீரோட்டம் போல், பேரலைகள் போல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன – நமது பேனா / தட்டச்சுப்பலகை  வழியே பேசப்படுவதற்காக.

[0]

நிறைவு

-அ.குமரேசன்

(தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க…)