வரலாறு

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விடுபட்ட  மகளிர் தினம் – களப்பிரன்

549 (1)

மகளிர் தினம் வந்துவிட்டால், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் ஒன்று கூடி ஒரே மாதிரியான உடை அணிவதற்கு ஊக்கப்படுத்தப்படுவது தொடங்கி, அழகுசாதனப் பொருட்களின் தள்ளுபடி வரை, முழுக்க முழுக்க அந்நாள் பெண்களைச் சுற்றி பின்னப்படும் வணிகம் சார்ந்த நாளாகவே சுருக்கப்பட்டுள்ளது. சில குடியிருப்புகள் மற்றும் அமைப்புகள் கோலப்போட்டிகள் மற்றும் சமையல் போட்டிகள் நடத்தி, மீண்டும் மீண்டும் சமையற்கூடத்திற்கான நாளாக அந்நாளை ஆக்கிவிடுகின்றன. அன்றைய தினத்தில் ஆண்கள் பங்கேற்காத மகளிர் தினக் கருத்தரங்குகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. அந்தக் கருத்தரங்குகளில் பேசும் பேச்சாளர்கள், “பெண்களுக்கான சில உரிமைகள் கோரும் தினம்” மட்டுமே என்பது போல் அத்தினத்தை சுருக்கிவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், “ஆண்கள் தினத்தின் தேவை” குறித்து சிலர் கண்ணீர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கு, கணவரோ அல்லது குழந்தைகளோ சொல்லும் மகளிர் தின வாழ்த்துகளோடு சரி. அதைத் தாண்டி அவர்களுக்கு எந்தக் கொண்டாட்டங்களும் இருப்பதில்லை. ஏன், ஒரு நாள் சமையற்கூட விடுமுறை கூட கிடையாது. ஆனால், மகளிர் தினத்தின் உண்மையான வரலாறு அப்படியானது அல்ல. மகளிர் தினம், மகளிருக்கான சில உரிமைகள் கோரும் தினம் மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் விடுதலைக்கு வித்திட்ட தினம் ஆகும்.

மகளிர் தினத்தின் வரலாறு

1908ஆம் ஆண்டு, ‘மே தினம்’ உருவாகக் காரணமான அதே சிக்காகோ நகரில், சோசியலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு முதல் முறையாக மகளிர் தினத்தைக் கொண்டாடியது. அது நகர அளவிலானது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையான மே 3ஆம் தேதி. அதன் பின்னர், 1909 முதல் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று “பெண்களுக்கான வாக்குரிமை” கோரும் தினமாக முடிவு செய்தார்கள். அது அமெரிக்க அளவிலானது.

1910ஆம் ஆண்டு, டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சோசியலிச இரண்டாம் அகிலத்தின் மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்பாக, ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகளில், சர்வதேச சோசியலிச மகளிர் மாநாடு கூடியது. 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட அம்மாநாட்டிற்கு தோழர் கிளாரா ஜெட்கின் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில், “பெண்களுக்கான வாக்குரிமை, சோசியலிசத்திற்கான போராட்டத்தில் நமது வாக்குரிமையை அதிகரிக்கும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் “மகளிர் தினம்” என்கிற நாளைக் கொண்டாட முடிவு செய்தார்கள். ஆனால், தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேட வேண்டும் என்பதால், நாளைக் குறிக்காமல் கலைந்தார்கள்.

1911ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாட முடிவு செய்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், 1848ஆம் ஆண்டு அதே மார்ச் 19ஆம் நாளன்று, பெர்ஷிய (ஜெர்மனி) மன்னர், ஆயுதமேந்திய அந்நாட்டு மக்களின் போராட்டத்திற்குப் பணிந்து பல வாக்குறுதிகளை வழங்கிய தினம். அதில் பெண்களுக்கான வாக்குரிமையும் அடங்கியிருந்தது. இது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியக் காரணம், மார்ச் 19 அந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. இந்த மகளிர் தினம் தான் உலக அளவில் நடைபெற்ற முதல் மகளிர் தினம். அந்த ஆண்டில், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, டென்மார்க் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீதிகளில் இறங்கி, தங்களின் கோரிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி, உலக அளவில் முதல் மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

1912ஆம் ஆண்டு, மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த ஆண்டு, மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1913ஆம் ஆண்டு, மார்ச் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் அது தொடர்ந்தது. அவ்வாறு, 1914ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வந்து சேர்ந்தது தான் ‘மார்ச் 8’ என்னும் நாளாகும். வழக்கத்தை விட, அந்த ஆண்டு மகளிர் தினக் கொண்டாட்டங்கள் (போராட்டங்கள்) முன்பைவிட சிறப்பாகவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. இரஷ்ய நாட்டுப் பெண்கள் அத்தினத்தைக் கொண்டாட பல்வேறு திட்டமிடல்களை செய்துகொண்டிருந்தார்கள். “ரபோட்னிட்சா” (பெண் தொழிலாளி) எனும் இதழை அன்றைய தினத்தில் வெளிக்கொண்டுவர முடிவு செய்தார்கள். அன்றைக்கு இரஷ்யாவை ஆண்டு கொண்டிருந்த ஜார் மன்னருக்கு இது பிடிக்கவில்லை. மார்ச் 8க்கு முன்பாக, அவ்விதழின் ஆசிரியர் குழு கூடி, கடைசி நேர இதழ் கோர்ப்புப் பணிகளை செய்துகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் புகுந்து, அங்கிருந்த அத்தனை பெண்களையும் கைது செய்தார்கள் ஜார் மன்னரின் காவலர்கள். மறுநாள், அமைப்பின் பல பெண் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும், மார்ச் 8ஆம் தேதி சிறைக்கு வெளியே இருந்த பெண்களின் முயற்சியால், அந்த இதழ் வெற்றிகரமாக வெளியானது. அன்றைக்கு மட்டும் 12 ஆயிரம் பிரதிகள் அவ்விதழ் விற்றுத் தீர்ந்தது. மார்ச் 8 மகளிர் தினத்தில், பல தலைவர்கள் சிறையில் இருந்த போதும், தடைகள் பலவற்றை மீறி வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள் இரஷ்யப் பெண்கள்.

அடுத்த சில மாதங்களில், 1914ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி முதல், உலகப்போர் தொடங்கிவிட்டது. பெரும்பாலான நாடுகள் உலகப்போரில் மூழ்கிப்போயின. கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், பல நாடுகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. எந்த நாடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எந்த நாட்டிற்கும் தெரியாத சூழல் நிலவியது. கொடுமையான வறுமை உலகைச் சூழ்ந்துகொண்டிருந்தது. ஒரு வேளை உணவுக்காக மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில், 1915ஆம் ஆண்டு, மகளிர் தினம் சிறிய அளவில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. அந்தப் போர்ச்சூழலிலும், அது மார்ச் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தான் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “உங்கள் கணவர்கள் எங்கே? உங்கள் மகன்கள் எங்கே?” என்று உலகின் பெண்களைப் பார்த்து அக்கூட்டம் குரல் கொடுத்தது. உலகின் பல நாடுகளில், போருக்கு எதிரான முதல் குரலை ஒலித்தவர்கள் பெண்கள். இரஷ்யாவில் ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்புகள் அதிகம். அந்நாட்டுப் பெண்களை அது வீதிக்கு வரவழைத்தது.

1917ஆம் ஆண்டு, ரஷ்யப் பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வெற்றிகரமாக மகளிர் தினத்தை நடத்திய அதே மார்ச் 8ஆம் தேதி வீதிக்கு வந்தார்கள். 1917ஆம் ஆண்டு மார்ச் 8 ஒரு வியாழக்கிழமையாக இருந்தது. முதல் முறையாக, ஒரு ஞாயிறு அல்லாத தினத்தில் பெண்கள் வீதிக்கு வந்தது அப்போது தான். இரஷ்யத் தலைநகரின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் பெண்கள், போருக்கு எதிராக வீதிக்கு வந்தார்கள். வீதியில் நின்ற அப்பெண்களின் கோரிக்கை, இம்முறை பெண்களுக்கானது அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கானது. உலகின் ஆண்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மக்களைப் பட்டினிக்கொடுஞ்சிறையில் தள்ளிக்கொண்டிருந்த உலகப் போரின் போது, இரஷ்யப் பெண்கள் வீதிக்கு வந்து வைத்த கோரிக்கை, “எங்களுக்கு வேண்டியது ரொட்டியும் சமாதானமும் தான் (பிரட் அண்ட் பீஸ்)” என்கிற மகத்தான முழக்கமாகும். ஒவ்வொரு தொழிற்சாலையாகப் பெண்கள் போனார்கள். அங்கு வேலை செய்யும் ஆண்களை வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அழைத்தார்கள். பல தொழிற்சாலைகளில், ஆண்கள் அப்போராட்டங்களில் பங்கேற்க பெண்களோடு இணைந்தார்கள். ஆனால், சில தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஆண்கள் வெளியே வரத் தயங்கினார்கள். தயக்கம் இருந்த தொழிற்சாலை வாசல்களில் கூடிய பெண்கள், சாலையில் கொட்டிக்கிடந்த பனிக்கட்டிகளை எடுத்து தொழிற்சாலைக்குள் வீசி எறிந்தார்கள். தொழிற்சாலைகளின் கண்ணாடிகளை உடைத்தார்கள். வேறு வழியின்றி, தயங்கி நின்ற மீதமுள்ள ஆண் தொழிலாளர்களும் வீதிக்கு வந்தார்கள். காவல் துறையினரை அழைத்தார்கள், இராணுவத்தினரின் குடியிருப்புகளுக்குச் சென்று, அவர்கள் வீட்டுப் பெண்களைப் போராட்டத்தில் இணைத்தார்கள். துப்பாக்கிசூடு, அடக்குறை என்று பலவற்றை மீறி, மாணவர்கள், இளைஞர்கள் என்று ஒட்டுமொத்த ரஷ்ய சமூகமும் பெண்கள் விடுத்த அறைகூவலால் வீதிக்கு வந்தது. மார்ச் 8 முதல் மார்ச் 16 வரை நீடித்த அந்தப் போராட்டத்தால், ரஷ்யாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த ஜார் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு முதல் ஜனநாயக ஆட்சி அரங்கேறியது.

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்  

கடைக்கண் வைத்தால்”

என்று அப்போதைய புரட்சி குறித்து பாரதி தன் பாடலில் பாடினார். பாரதி பாடிய அந்த மாகாளி கடவுள் அல்ல. அது இரஷ்ய நாட்டின் பெண்கள். அதன் பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அதே ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, லெனின் தலைமையில் நடைபெற்ற சோசியலிசப் புரட்சிக்கு முதன் முதலில் வித்திட்ட நாள் மார்ச் 8 ஆகும்.

இரஷ்யாவில் உருவான சோசியலிச அரசுதான், உலகில் முதன் முதலாக பெண்களுக்கு பல உரிமைகளை வழங்கியது. வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை, பெண்களுக்கான அமைச்சர் பொறுப்பு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம வேலை, சம ஊதியம், பெண்களுக்கு நில உரிமை, பேறுகாலத்தில் விடுப்புடன் கூடிய ஊதியம், விவாகரத்து உரிமை, கருக்கலைப்பு உரிமை என்று எண்ணற்ற உரிமைகளை வழங்கியது. தன்பாலின உறவை முதன் முதலாக அங்கீகரித்தது. அதன் உச்சமாக, ஞாயிற்றுக்கிழமையை மகளிர் தினத்திற்காகத் தேடிக்கொண்டிருந்த அந்நாட்களில், 1920 முதல் மார்ச் 8 ஒரு வேலை நாளை உலக மகளிர் தினமாக சட்டப்பூர்வமாகக் கொண்டாடத் தொடங்கியது. அந்நாளைப் பொது விடுமுறை நாளாகவும் அறிவித்தது. 1921 முதல், அது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. நிறைவாக, 55 ஆண்டுகள் கழித்து, 1975ஆம் ஆண்டு தான் ஐநா சபை மார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாக அங்கீகரித்தது. ஆனாலும், இப்போதும் பல நாடுகளில் மகளிர் தினம் பொது விடுமுறை தினமல்ல.

“நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை 

ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை”  

– கவிஞர் கந்தர்வன்

நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, “ஆண்டில் ஓய்வான ஒரு ஞாயிற்றுக்கிழமையேனும் தங்களுக்குக் கிடைக்காதா, அன்றைக்கு மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட மாட்டோமா” என்று ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னால் ஓடும் சூழலில் உலகின் பெண்கள் இருந்தார்கள். சில உரிமைகள் இந்நாட்களில் பெண்களுக்குக் கிடைத்திருந்தாலும், இன்றைக்கும் இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் கூட ஓய்வு நாளாக இருப்பதில்லை. கோவிட் காலத்திலும் கூட, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீட்டில் விடுப்பில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தவர்கள் பெண்கள் மட்டுமே. ஆகவே, மகளிர் தினத்திலாவது அவரவர் வீட்டு சமையற்கூடங்களிலிருந்து பெண்களுக்கு விடுமுறை கொடுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் அன்றைக்கேனும் சமையல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகின் உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட பல நாடுகளில், மகளிர் தினத்திற்கு பொது விடுமுறை உள்ளது. அதில் சிலவற்றில் பெண்களுக்கு மட்டுமே கூட விடுமுறை உள்ளது. நம் நாட்டில் எத்தனையோ பண்டிகைகளுக்கு நாம் பொது விடுமுறை கொடுக்கிறோம். ஆனால், நம்மில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு விடுமுறை கொடுக்கிறோமா? இனி வரும் நாட்களிலாவது நம் அரசுகள் மகளிர் தினத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். குறைந்தது பெண்களுக்கு மட்டுமாவது பொது விடுமுறை கொடுக்க முன்வர வேண்டும். வரலாற்றில் ஆண்களால் கோரப்பட்ட பல விடுதலை முழக்கங்கள் பால், இனம் என்று வேறுபாடின்றி எல்லோருக்குமானதாக இருந்ததில்லை. ஆனால், பெண்கள் முன் வைத்த விடுதலை கோரிக்கைகள் ஒட்டுமொத்த மானிட சமூகத்திற்கானது. ஆகவே, பெண்களின் குரலைக் கேளுங்கள். அது எப்போதுமே நம் எல்லோரையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும்.

– களப்பிரன்

Leave a Reply