அரசியல்இந்தியா

பெண் என்பதால் ஐஐஎஸ்சியில் மாணவர் சேர்க்கையை சி.வி.இராமன் மறுத்தபோது…

549

கட்டுரையாளர்: எஸ். தீபிகா

தமிழில்: த.பொன்சங்கர்

இந்தியாவின் முதன்மை அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆரம்பகால பாலின வேறுபாடுகள் குறித்த கதைகள்.

(ஐஐஎஸ்சியின் முதல் மகளிர் விடுதியின் வாசலில், இடமிருந்து வலமாக: இராஜேஸ்வரி சாட்டர்ஜி, ரோஷன் இரானி, எம். பிரேமாபாய், மிரியம் ஜார்ஜ் மற்றும் வயலட் டிசோசா)

இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) மாணவர்களுக்காகத் தனது கதவைத் திறந்த நாட்களில், 1911 ஆண்டறிக்கையின்படி, ஒரு விடுதிக் கட்டிடம் பயன்படுத்துவதற்குத் தயாராக இருந்தது எனக் கூறுகிறது. ஆனால், அந்த ஆண்டறிக்கை குறிப்பிடாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த விடுதி ஆண்களுக்கானது என்று.

1909ல், அலுவலர்களுக்கான குடியிருப்புகள், பணியாளர்கள், துப்புரவாளர்கள், மேஸ்திரிகள் ஆகியோருக்கான குடியிருப்புகள் ஆகியவற்றிற்காகத் திட்டமிடப்பட்டது. காவலர்களுக்கான குடியிருப்புகள் கூட திட்டமிடப்பட்டன. ஆனால், அந்த வளாகத்தில் பெண் மாணவர்களுக்கான விடுதி கட்டுவதற்கு மூன்று தசாப்தங்கள் (30 ஆண்டுகள்) ஆகியது.

இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட முதல் பெண் மாணவி யார் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆவணங்களில் காணப்படவில்லை. 1920 ஆம் ஆண்டின் ஆவணங்களிலிருந்து, செல்வி எம்.எம். மேத்தா என்பவரும், 1922 ஆம் ஆண்டின் ஆவணங்களிலிருந்து, செல்வி ஆர்.கே. கிறிஸ்டி என்பவரும் பெண் மாணவிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் பிறகு, நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, செல்வி கே. பகவத் என்பவர் 1933ல் சேர்க்கப்பட்டுள்ளார்.

கமலா பகவத் (பின்னாளில் கமலா சோஹானி), பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஐஐஎஸ்சியில் (IISc) உயிர்வேதியியல் ஆய்வு மாணவியாகச் சேர விருப்பம் தெரிவித்தார். ஆனால், அந்த நேரத்தில் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சி.வி. இராமன், சோஹானியின் சேர்க்கையை அவமானகரமான முறையில் மறுத்தார். கமலா சோஹானியின் பாலினத்தைக் காரணம் காட்டி இதை மறுத்தார். எனினும், கமலா சோஹானியின் பிடிவாதத்தால், மிகவும் கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுடன் அவர் அங்கு சேர்க்கப்பட அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு, சோஹானியால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக மாறியது.

சி.வி.இராமன்

பல வருடங்களுக்குப் பிறகு, இந்தியப் பெண் விஞ்ஞானிகள் அமைப்பு நடத்திய ஒரு விழாவில் கமலா சோஹானி இதைக் குறிப்பிட்டுப் பேசினார்:


“இராமன் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்த போதிலும், ஒரு குறுகிய மனம் படைத்தவர். நான் ஒரு பெண் என்ற காரணத்தினால், அவர் என்னை நடத்திய விதத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இது எனக்கு நேர்ந்த ஒரு மிகப் பெரிய அவமானம். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் மிகவும் மோசமான முறையில் இருந்தது. நோபல் பரிசு பெற்றவர் கூட இப்படி நடந்து கொள்வாரென்றால், ஒருவர் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?”

சோஹானி ஐஐஎஸ்சியிலிருந்து 1936ல் தனது படிப்பை முடித்து வெளியேறினார். 1939இல், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார். அவர் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்று இப்போதும் எங்கும் குறிப்பிடப்படுகிறார். ஆனால் இது உண்மை அல்ல. தாவரவியலாளரான ஜானகி அம்மாள்தான் இந்தியாவின் முதல் பெண் முனைவர் ஆவார். அவர் 1931 ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் D.Sc (பிஎச்டிக்கு இணையான) பட்டம் பெற்றார். மேலும், கமலா சோஹானி ஐஐஎஸ்சியில் அனுமதிக்கப்பட்ட முதல் மாணவி என்றும் குறிப்பிடப்படுகிறார். ஆனால் எம்.எம். மேத்தா மற்றும் ஆர்.கே. கிறிஸ்டியைப் பற்றிய ஆவணங்கள் இது உண்மையல்ல என்பதைக் காட்டுகின்றன.

பெண்களின் கல்விக்காகப் பொதுவெளியில் போராடியவராக சி.வி. இராமன் இருந்தாலும், அவர் தன்னிடம் படித்த பெண்களின் கல்வி வாழ்க்கையை இலகுவானதாக ஆக்கிவிடவில்லை. இறுதியில், அவர் மூன்று மாணவிகளை ஐஐஎஸ்சியின் தனது ஆய்வகத்தில் சேர்த்துக் கொண்டார். ஆனால், அவரது முன்னாள் மாணவி அன்னமணியின் Dispersed Radiance: Caste, Gender, and Modern Science in India (ஆபா சூர் எழுதிய நூல்) எனும் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் போல, சக ஆண் மாணவர்களுடன் பழகுவதற்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கிறார்.

(இந்தப் புகைப்படம் 1975 ஆம் ஆண்டு இயற்பியல் துறையைச் சேர்ந்தது. இதில் 78 பேர் உள்ளனர், ஆனால் மூன்று பெண்கள் மட்டுமே உள்ளனர்: இடது ஓரத்தில் ‘மிஸ் எஸ். எஸ். குல்கர்னி’, வலது பக்கத்தில் ‘டாக்டர் குமாரி சாந்தோஷ்’, மற்றும் வலது ஓரத்தில் ‘சி. ஆர். வரலட்சுமி’. புகைப்பட கிரெடிட்: ஆர்கைவ்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் செல், ஐஐஎஸ்சி)

1930களின் பிற்பகுதியிலும் 1940களிலும், இன்னும் சில பெண்கள் ஐஐஎஸ்சியில் நுழைந்தனர். இது பெண்களுக்கான தங்குமிடம், கழிப்பறை வசதிகள் போன்ற பெண்களின் தேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உந்துதலாக அமைந்தது. பெண்கள் விடுதிக்கான முதல் குறிப்பு 1942 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில், செலவினங்கள் வகையின் கீழ் குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில் ஐஐஎஸ்சி வளாகத்தின் கோர்ட் தலைவராக இருந்த எம். விஸ்வேஸ்வரய்யா, அந்த ஆண்டின் உரையில் விடுதியைப் பற்றி குறிப்பிடுகிறார்.

இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதல் பெண் ஆசிரியரான டோரத்தி நோரிஸ், 1917இல் பயன்பாட்டு வேதியியல் பிரிவில் ரீடராக நியமிக்கப்பட்டார். பின்னர், அடுத்த வருடம் (1918இல்) அவர் உயிர்வேதியியல் பிரிவில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். (அவர் இந்திய அரக்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர்-இயக்குநராகவும் இருந்தார்.) மேலும், மற்ற இரண்டு பெண் ஆசிரியர்களான முனைவர் எச். காலே மற்றும் ஜி. கிளைரான், ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொடுத்தனர். 1953இல், மின் தகவல் பொறியியல் (Electrical Communication Engineering) துறையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி சட்டர்ஜி, முதல் இந்தியப் பெண் ஆசிரியராக இருந்தார். மேலும், 1979 முதல் 1981 வரை மின் தகவல் பொறியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ஒரு துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும் அவர்தான் இருந்தார். 2000களுக்குப் பிறகுதான் அதிகப்படியான பெண்கள் துறைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.

பாலின அசமத்துவம்

எப்போதும் உயிரியல் துறையின் பிரிவுகளைப் போன்ற சில துறைகளே பெண்களுக்கு ஈர்ப்பான துறைகளாக உள்ளன. பொறியியல் துறை போன்ற சில துறைகள் ஈர்ப்புக் குறைவாகவே இருந்துள்ளன. 1940களில் உருவாக்கப்பட்ட விண்வெளிப் பொறியியல் மற்றும் இயந்திரவியல் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும், கடந்த 10 ஆண்டுகளில்தான் தங்களது முதல் பெண் ஆசிரியர்களை நியமித்துள்ளன. கணிதவியல் துறை தற்போது ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டுமே கொண்டுள்ளது. வளாகத்தில் உள்ள துறைகளில் ஒன்றான உலோகவியல் துறை, எப்போதுமே பெண் ஆசிரியரைக் கொண்டிருக்கவில்லை. இன்றைய நாட்களில் கூட, ஐஐஎஸ்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் அமைப்புகளான கோர்ட் மற்றும் கவுன்சில் போன்ற அமைப்புகளில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஐஐஎஸ்சி மிகவும் குறைவான பெண் முதல்வர்களையே கொண்டுள்ளது. அதில் ஒருபோதும் ஒரு பெண் இயக்குநராக இருந்ததே இல்லை. 2017-18இல் பணியமர்த்தப்பட்ட 42 பேரில், நான்கு பேர் மட்டுமே பெண்கள் என வளாக வெளியீடான கெர்னெல் இதழின் சமீபத்திய இதழ் தெரிவிக்கிறது.

ஐஐஎஸ்சி நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பாக, இரண்டு ஆவணங்களை ஒன்றாக வெளியிட்டது. ஒன்று, 2009இல் முன்னாள் மாணவர்கள் அமைப்பு வெளியிட்ட Down the Memory Lane – Recollections of Alumni. மற்றொன்று, Reminiscences எனும் ஆவணக் காப்பகம் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் (APC) வெளியீடு. இத்தொகுப்புகளின் வழியாக, கல்வி வளாகத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய பார்வையை நாம் பெற முடிகிறது. 1965 முதல் 1975 வரை நிர்வாக மேலாண்மைக் கல்வித் துறையில் இருந்த ஜி.வி. கமலா, விடுதியின் நிலை குறித்து விளக்கும்போது, “அது ஒரே ஒரு அறை கொண்ட சிறிய வீடு போன்ற கட்டிடம். அதில் திருமதி இராமன் அவர்களால், ‘நீங்களே உதவிக் கொள்ளுங்கள்’ என்ற குறிப்புடன் அனுப்பப்பட்ட பழங்களும் பூக்களும் இருந்தன. அறையில் திருமதி இராமன் அவர்களின் புகைப்படமும் மாட்டப்பட்டிருந்தது” என்கிறார்.

டி.கே. பத்மா 1967 முதல் 1994 வரை கனிம மற்றும் இயல் வேதியியல் துறையில் இருந்தவர். அவர் தனது துறைத் தலைவரான எம்.ஆர்.ஏ. ராவ் அவர்களுடனான முதல் சந்திப்பை விவரிக்கிறார். பத்மா தனது கணவருடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். பத்மா அவர்கள் படிப்பை முடிக்கும் 5-6 வருடங்கள் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கப்படுவதாக ராவ் கூறுகிறார். மேலும், பத்மாவுக்குத் தரப்படும் சேர்க்கையின் மூலம், ஒரு பையனின் வாழ்க்கை வளமாவதைத் தடுப்பதாக ராவ் கூறுகிறார்.

1974 முதல் 1979 வரை மூலக்கூறு உயிர்வேதியியல் படித்த ரேவதி நாராயணன், ஆரம்பத்தில் உயர் வேதியியல் துறையில் சேர்வதற்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். அங்கு அவரிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதால், குடும்பத்தை நடத்துவதற்குப் பாதியில் போய்விடுவீர்களா?” என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பதில் அளிக்கும் விதமாக, “பெண்ணுக்கும் ஆணுக்கும் ‘சமமான வாய்ப்பு’ என்பதை வெறுமனே இந்திய அரசியல் அமைப்பு உள்ளிட்ட சட்ட விதிமுறைகளில் மட்டுமே வைத்தால் போதும் என்றும், அதனைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றும் ‘கற்றறிந்த’ பேராசிரியர் முடிவு செய்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை” என்று ரேவதி நாராயணன் குறிப்பிட்டார்.

1960களில் இயற்பியல் துறையில் இருந்த கல்யாணி விஜயன், “அந்தக் காலத்தில் கல்வி வளாகத்தில் பெண்கள் மிகக் குறைவாக இருந்தனர் (சுமார் 30 பேர்), மேலும் இயக்குனரின் மனைவி நளினி தவான் அவர்களுக்குப் பெரும்பாலான பெண்களைத் தனிப்பட்ட முறையில் தெரியும். அவர், விடுதியில் வீட்டுப் பராமரிப்பு மற்றும் மாணவர்களின் துணிகளைக் கூட சலவை செய்த ‘அன்புமிக்க கங்கா’வைப் பற்றியும் பேசுகிறார். கங்கா, வளாகத்தில் வேலை செய்த மற்ற அனைத்துப் பெண்களை நினைவூட்டுகிறார். வளாகப் பராமரிப்பு, தோட்டக்கலை, நிர்வாகம், நிதி, நூலகம் மற்றும் இதர அறிவியல் அல்லாத பணிகள்தான், கல்வி நிறுவனத்தைத் தொடர்ந்து இயங்க உதவி செய்தது. ஆனால் அவர்களின் பெயர்கள் வரலாற்றில் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன”

நன்றி : ஸ்க்ரால்

கட்டுரையாளர்: எஸ். தீபிகா

தமிழில்: த.பொன்சங்கர்

Leave a Reply