அரசியல்இந்தியா

மும்மொழி எனும் மோடி வித்தை – களப்பிரன்

549

தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் மும்மொழிக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலம் இன்று திடீரென மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுவதைப் போல நாம் உணர்கிறோம். 1968ல் வெளியான கோத்தாரி தலைமையிலான முதல் தேசியக் கல்விக் கொள்கை தொடங்கி, எல்லா கல்விக் கொள்கைகளுமே இந்தியை முன்னிறுத்தியே வந்துள்ளன. ஆனால் மற்ற கல்விக் கொள்கைகள் மாநில அரசுகளின் முடிவுகளில் தலையிட்டு இந்தியை திணிக்கவில்லை. ஏனெனில், இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த நாள் தொடங்கி இன்று வரை கல்வி மத்தியப் பட்டியலில் இல்லை. எனவே, மாநிலங்களின் முடிவுகளில் அவர்கள் தலையிட முடியாது. ஆனால், இப்போது உள்ள அரசு பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கு தாங்கள் மட்டுமே ஏகபோகம் என்பது போல, மாநில உரிமைகளை மறுக்கும் வகையில் பேசிவருகிறது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தாவிட்டால், அம்மாநிலத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதிப்பங்கை தரமுடியாது என்று ஆணவமாக பேசிவருகிறது. எனவே, இப்போது உள்ள சிக்கல் மொழித்திணிப்பு மட்டுமல்ல, அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் ஆகும்.

ஒன்றிய அரசின் வாதம்

ஒன்றிய அரசு, ”நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்கவேண்டும் என்று தான் சொல்கிறோம்” என்கிறார்கள். அதோடு, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை வட இந்திய மக்கள் தங்கள் மூன்றாவது மொழியாக படிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் நடைமுறையில் என்ன நடந்திருக்கிறது.? இந்தியாவின் இந்தி பெல்ட் என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், இராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக்கு பதில் இந்தி மட்டுமே பாடமொழியாக்கப்பட்டது. அங்கிருந்த 80க்கும் மேற்பட்ட அவர்களின் தாய் மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய மக்கள் மொழியியல் ஆய்வின் தலைவர் முனைவர் கணேஷ் தேவி கூறுகையில், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 65க்கும் அதிகமான மொழிகளை இந்தி மொழி பேசுவோரின் கீழ் கொண்டுவந்துள்ளோம். அதில் 5 கோடி மக்களின் தாய்மொழியான போஜ்பூரியும் ஒன்று” என்று சொல்கிறார். இதன் மூலம், 43.63% பேர் இந்தியை தாய்மொழியாக கொண்டுள்ளார்கள் என்கிற தவறான புள்ளிவிவரம் தற்போது சொல்லப்படுகிறது. போஜ்பூரி உள்ளிட்ட இந்த 65 மொழி பேசுவோரின் தாய்மொழிகளை இந்தி பேசுவோர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால், இந்தியை தாய்மொழியாக கொண்டோர் எண்ணிக்கை சொற்ப சதவிகிதமாகவே இருக்கும். தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவில் 43.63% மக்களின் தாய்மொழி இந்தி தான் என்று தவறாக வரையறுப்பதோடு, அவர்களின் உண்மையான தாய்மொழியை கற்கவும் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

இந்தி பெல்ட்டில் மூன்றாவது மொழியின் நிலை

ஆங்கிலம் தவிர, இந்த இந்தி பெல்ட் மாநிலங்களில் சொல்லித்தரப்படும் மூன்றாவது மொழிகள் இரண்டே இரண்டு மட்டுமே. அதில் ஒன்று சமஸ்கிருதம், மற்றொன்று உருது. ஆனால், இந்த இரண்டு மொழிகளுக்கும் அந்த மாநிலங்களில் பெரும்பாலும் ஆசிரியர்களே கிடையாது. சமஸ்கிருதத்தை இந்தி ஆசிரியர்களே சொல்லித்தருகிறார்கள். உருது அருகில் உள்ள மதரசாக்களுக்கு (மசூதிகளில் உள்ள கல்விக் கூடம்) அனுப்பி சொல்லித் தருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 2014க்கு பிறகு மோடி ஆட்சியில் நூறு பேர் கூட தாய்மொழியாக பேசாத சமஸ்கிருதத்திற்கு சுமார் 2000 கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எட்டுகோடிக்கும் அதிகமான மக்களின் தாய்மொழியான தமிழ் மொழிக்கு வெறும் 51 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கே இதுவரை ஆசிரியர்கள் நியமிக்காதவர்கள், தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளுக்கு அதுவும் வடநாட்டில் ஆசிரியர் நியமனம் செய்வார்கள் என்பது பேச்சுக்குக்கூட ஒத்துவராது. முடிவில், அங்கு என்ன நடந்திருக்கிறது என்றால், இந்தி பெல்ட்டில் உள்ள மாநிலங்கள் தங்கள் தாய் மொழியை மறந்ததோடு, மூன்றாவது மொழியாக சொல்லித்தரப்படும் சமஸ்கிருதம், உருதுவிலும் புலமை இல்லாமல், ஆங்கிலமும் கற்றுக்கொள்ளாமல் இந்தியை மட்டுமே சுமந்து திரியும் அவலம் நீடிக்கிறது. இதில் நகை முரண் என்னவென்றால், இந்தியாவில் இந்தியில் தோல்வியுறும் மாணவர்கள் சதவிகிதம் இந்த இந்தி பெல்டிலும் கனிசமாக உள்ளது.

மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டின் எதிர்ப்பு

அடுத்து அவர்கள் வைக்கும் வாதம், ”இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன, தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது” என்பதாகும். இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி ஏற்பட்டுள்ள அனுபவத்தை பார்ப்போம். மராத்தியம், ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தி பேசாத எல்லா மாநிலங்களிலும் மூன்றாவது மொழி என்றால் அது இந்தி மட்டுமே என்ற நிலை உள்ளது. இந்த மாநிலங்கள் தங்கள் மொழி இந்தியால் சிதைக்கப்படுகிறது என்று தற்போது இந்திக்கு எதிராக கொடிபிடித்து வருகிறார்கள். ”சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு” என்று பாரதி தம் பாடலில் பாடிய மராத்தியத்தின் நிலைமை அதில் சோகமான ஒன்று. மராத்தியத்தில் தலை சிறந்த திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு இந்தி மொழி சினிமாவான பாலிவுட்டின் (பம்பாய்) தலை நகரம் மராத்தியத்தில் உள்ள மும்பை என்றாகும் அளவிற்கு அம்மாநிலம் இந்திமயமாகியுள்ளது. தெலுங்கானா அரசு தெலுங்கு படிக்காமல் யாரும் அம்மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பது போல் இந்தி எழுத்துக்களை அழிக்கும் இயக்கங்கள் கர்நாடகா முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது.

இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் சுற்றலாம்?

அடுத்து பரப்பப்படும் பொய் ஒன்று உள்ளது. ”இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் சுற்றலாம்” என்பதாகும். உண்மையில், இந்தியா முழுவதும் இந்தி பேசுவதில்லை. மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தி பெரும்பாலும் தெரியாது. உருது பேசும் அளவிற்கு கூட இந்தி தெரியாத பல மக்கள் வட இந்தியாவில் வாழ்கிறார்கள். தென்னிந்தியாவில் பரவலாக இந்தி தேவைப்படுவதில்லை. அதோடு, தென்னிந்திய மாநிலங்களில் சொல்லித்தரப்படும் இந்தி பாடத்தை படித்தவர்களும், இந்தியே பாடமாக படிக்காதவர்களும் வட இந்தியாவில் பணி வாய்ப்பு கிடைத்து செல்லுகையில் கிட்டத்தட்ட ஒரே உணர்வை தான் பெறுகிறார்கள். இந்தியை கற்றுக்கொண்ட தென்னிந்தியர் ஒருவர் பேசும் இந்தி, இங்கு வரும் இந்திக்காரர்கள் பேசும் தமிழ் போல் இருக்கும். ஆகவே, இந்தியே படித்திருந்தாலும், அவர்களை பொருத்த வரையில் தொடக்கத்தில் நாம் அவர்களுக்கு அந்நியர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். அந்த ஊரின் இந்தியைப் போல பேசுவதற்கு இந்தி படித்த தென்னிந்தியருக்கு சில மாதங்கள் முதல் ஆண்டுகள் கூட தேவைப்படுகிறது. இந்தியே தெரியாமல் வட இந்தியாவிற்கு பணிக்கு செல்வோருக்கும், அம்மக்கள் பேசும் இந்தி போல் பேச அதே காலமே தேவைப்படுகிறது. அதோடு, வட இந்தியா முழுவதும் ஒரே வகையான இந்தி பேசப்படுவது போல் நாம் நினைக்கிறோம். அது தவறு. இராஜஸ்தானில் பேசும் இந்தியும், பீகாரிகள் பேசும் இந்தியும் வேறு வேறானது. இது புரியாமல், “இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்” என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. வட இந்தியாவில் பயணிக்க இந்தியில் சில சொற்களை தேவைக்கு ஏற்ப தெரிந்து கொண்டாலே போதுமானது. வட இந்தியர்கள் தென்னிந்திய மொழிகளை அவ்வாறு தான் முதலில் தெரிந்துகொண்டு இங்கு வருகிறார்கள். இன்றைய நவீன உலகில் கூகுள் மொழியாக்க மென்பொருட்கள் இன்னும் இவைகளை எளிமையாக்கியுள்ளன.

வேலைவாய்ப்புகளும் இந்தியும்

இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் வேலை கிடக்கும் என்று ஒரு வகை உருட்டு நீண்டகாலமாக உருட்டப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2023 – 2024ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடே முதல் இடத்தில் உள்ளது. இதில் இந்தி பேசும் மாநிலங்கள் மிகவும் பிந்தங்கியே உள்ளது. படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும், அதிக ஊதியத்தில் தரும் வேலைகளையும் தென்னிந்திய மாநிலங்களே அதிக அளவில் தருகின்றன. அதற்காக வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை படித்துவிட்டா வேலைக்கு வருகிறார்கள்? அது போல் நம்மாநிலத்தை சேர்ந்த சொற்ப நபர்கள் வேலைக்காக வட இந்தியாவிற்கு சென்றால் அங்கு பேசும் மொழிகளை கற்றுக்கொள்ள போகிறார்கள். தமிழர்கள் உலகின் 188 நாடுகளில் வேலை காரணமாக புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்தந்த நாடுகளுக்கு சென்ற பின்பு, அல்லது செல்வதற்கு ஒரு ஆறு மாதம் முன்போ அந்த மொழியை கற்றுக்கொள்கிறார்கள்.

உலகளாவிய தமிழ்

உலகின் வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும் உரிய அங்கீகாரம் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் ஏற்கனவே தமிழ் படிக்க உரிய வாய்ப்புகள் நன்றாகவே இருக்கிறது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் கூட சமீபத்தில் தமிழுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளது. நார்வேயில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயில்வதற்கு 18 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அதில் 2000க்கும் அதிகமானோர் பயில்கிறார்கள். ஜெர்மனியில் 110க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. ஃபின்லாந்திலும் தமிழுக்கென்று அரசுப்பள்ளிகள் இயங்கின்றன. டென்மார்க்கில் 1980கள் தொடங்கியே அரசுப் பள்ளிகளில் தமிழில் படிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்காவின், ”சீல் ஆஃப் பைலிட்டரஸி” தேர்வின் கீழ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 22 மொழிகளுக்கான பாடத் தேர்வுகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. அதே போல் அமெரிக்காவின் ACDFL நடத்தும் 122 மொழிகளுக்கான தேர்விலும் தமிழ் மொழியும் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பாடத்திட்டத்தில், உயர்நிலை வகுப்பு, மேல்நிலை வகுப்புத் தேர்வுகளில் சர்வதேச மொழிப் பிரிவின் கீழ் தமிழுக்கான தேர்வும் நடத்தப்பட்டு, உலகெங்கும் இருக்கும் 25 நாடுகளின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கான நுழைவு மதிப்பீட்டில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், வட இந்தியாவில் இவ்வாறு தமிழ்ப்படிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் இந்திய அரசு செய்து கொடுப்பதில்லை. அதோடு, மேற்கண்ட நாடுகளில் தமிழ் அளவிற்கு இந்திக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. ஏனென்றால், தமிழில் இருப்பது போல் கற்றுக்கொள்ள இந்தி மொழியில் ஒன்றுமில்லை என்பது உலகம் அறிந்தது. ஆகவே, இந்தியை வைத்துக்கொண்டு உலக அளவிலும் பெறுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க துடிப்பது ஏன்?

அப்போது இந்தியை ஏன் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க துடிக்கிறார்கள்? இது ஒரு வகை சனாதன அரசியல் ஆகும். வட இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தி தாய் மொழியாக இருந்ததில்லை. பின்னர் அது எப்படி வளர்ந்தது? தென்னிந்தியாவில் தமிழும், அதிலிருந்து பிறந்த மொழிகளும் பேசப்பட்டு வந்தன. வட இந்தியாவிலோ பாலி, பிராகிரத மொழிகள் பேசப்பட்டு வந்தன. வட மொழி என்று சொல்லப்படும் சமஸ்கிருதம் வைதீகர்களின் ஓதுதல் மொழியாக மட்டுமே இருந்தது. அதிலும் குறிப்பாக சமஸ்கிருத மொழியை பெண்களுக்கு, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொல்லித்தரக்கூடாது என்ற கட்டுப்பாடு வைதீகர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. மீறி சொல்லிக்கொடுத்தால் மொழி தீட்டாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். இஸ்லாம் இந்தியாவிற்கு வந்த போது, இங்கு சிதைந்த நிலையில் இருந்த பிராகிரத மொழியே பெரும்பாலான மக்கள் பேசி வந்தார்கள். அந்தப் பிராகிரத மொழியில் அரபு மற்றும் பாரசீக சொற்களை கலந்து உருது என்ற செம்மையான மொழியை இஸ்லாமிய அரசர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள். அப்போது இந்தி மொழி இங்கு உருவாகவில்லை. அதன் பின் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் வைதீக சனாதானிகள் தங்கள் சமஸ்கிருத மொழியை எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்க முடியாத சூழலில், உருது மொழியில் இருந்த அரபு சொற்களை நீக்கிவிட்டு அதில் சமஸ்கிருத சொற்களை கலந்து தங்கள் சுயநலத்திற்கு உருவாக்கிய மொழி தான் இந்தி. சனாதானிகளால் சமஸ்கிருதத்தை எல்லோருக்கும் சொல்லித்தர தங்களுக்குள்ளே தடை விதித்துக்கொண்டு, அதற்கு மாற்றாக சமஸ்கிருதம் மறைமுகமாக பயணிக்க இவர்கள் அவசரத்தில் உருவாக்கிய ஓடம் தான் இந்தி. ஆகவே, இந்தி மொழியில் பண்டைய இலக்கியங்களோ, இலக்கணங்களோ, வரலாறோ என்று ஒன்றும் கிடையாது. அது செம்மைப்படுத்தப்பட்ட மொழியும் அல்ல. அதனால் தான் பெரும்பாலான சிறந்த வட இந்திய கவிதைகள் இன்றைக்கும் இந்தியை விட உருது மொழியிலேயே காணப்படுகிறது.

தாய்மொழி மூலம் கல்வி மற்றும் தமிழின் முக்கியத்துவம்

ஆகவே, இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கம் இந்தியர்களுக்கு மூன்று மொழியை கற்றுக்கொடுப்பது அல்ல. இந்தியாவில் இருந்த தாய் மொழிகளை ஒழித்து, இவர்களின் சனாதான கருத்துக்களை ஏந்தி வரும் இந்தி மொழியை இந்தியாவின் ஒரே மொழியாக உருவாக்குவது தான். ஆனால், நாம் அதற்கு நேர் எதிராக நமது தாய் மொழியில் கற்பது குறித்து இன்னும் தீவிரமாக பேச வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் இருப்பது போல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எல்லா உயர் படிப்புகளையும் நம் தாய் மொழியான தமிழ் மொழியில் சொல்லித்தர தீவிரமாக முயற்சிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டல் நெறிமுறைகளில், “எந்த ஒரு குழந்தையும் அதன் குடும்பச் சமூகத்தின் முதன் மொழியைக் கற்காமல் இரண்டாவது மொழியைக் கற்கும் நிலை இருக்கக் கூடாது. அது அக்குழந்தையின் இரண்டாவது மொழியைக் கற்கும் திறனையே பாதிக்கும். அதே போல பன்மொழிச் சமூக வாழ்க்கைச் சூழலில், அவரவர் தாய்மொழியை முறையே கற்பது, புலம்பெயர்ந்த நாட்டினுள் நல்லிணக்கத்துடன் வெற்றிகரமாகவும் இருப்பதற்கு அந்தக் குழந்தைக்கு வழி அமைத்துக்கொடுக்கும்” என்று கூறுகிறது. 1968 ஜனவரி 23ஆம் தேதி சட்டமன்றத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள், ”தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நீக்கப்படும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படும்”. என்று நிறுத்திக்கொள்ளவில்லை. ”ஐந்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளும், அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் துரிதப்படுத்தப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அடுத்த ஆண்டே அண்ணா காலமானார். ஆனால், அவர் தீர்மானத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகள் இன்னும் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. மும்மொழிக் கொள்கை என்று இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கும் மோடி மஸ்தான் வித்தைகளுக்கு மாற்று, ”ஒரே பயிற்று மொழி அது தாய் மொழி” என்று நாம் எடுக்கும் உறுதியான நிலைப்பாடே ஆகும், அதுவே நாம் நம் தமிழ்ச்சமூகத்தை பாதுகாக்கவும், வளர்ந்த சமூகமாக உயர்த்துவதற்கும் இருக்கும் ஒரே வழியுமாகும்.

– களப்பிரன்