அரசியல்உலகம்

இலங்கை – புதிய அரசு உருவானவிதமும், எதிர்கொள்ளப் போகும் சவால்களும்… பகுதி – 4

5

தமிழில்: சேதுசிவன்

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் எழுச்சி

தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 21 குடிமைச் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டணியாகும். இந்தக் கூட்டணியை நடத்தக்கூடிய முக்கிய இடத்தில் முதன்மைக் கட்சியாக ஜே.வி.பி உள்ளது. 1964 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவின் ரோகண விஜேவீராவால் 1965 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உருவாக்கப்பட்டது. இது சீன-சோவியத் பிளவைப் பிரதிபலித்தது.

இன்றுவரை, ஜே.வி.பி நோட்டம் விடப்பட்டுக்கொண்டே (கவனிக்கப்படும் அமைப்பாக) உள்ளது. அவர்களின் அமைப்பு இரண்டு முறை அழிக்கப்பட்டது. முதலில் 1971 இல் இளைஞர்களின் எழுச்சியின்போது, அதனைத் தொடர்ந்து 1987-1989 வரை நடைபெற்ற மற்றொரு கிளர்ச்சியின் போது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஜே.வி.பி மீதான இரண்டாவது தாக்குதலில் விஜேவீர உட்பட அனைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். “சோமவன்ச அமரசிங்க” மட்டுமே மிச்சம் இருந்தார். அவர் கட்சியை மீண்டும் அடியில் இருந்து புதிதாகக் கட்டி எழுப்பினார். கட்சியை மறுகட்டமைப்பு செய்து வழி நடத்தியதுடன், ஜே.வி.பி.யைத் தேர்தல் அரசியலுக்குள் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றினார். அமரசிங்கவின் தலைமையில் ஜே.வி.பி தேர்தல் கூட்டணிகளில் ஈடுபட்டது. முதலில் 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசியவாத இலங்கை சுதந்திரக் கட்சியையும் (SLFP), பின்னர் 2005 இல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தேசியவாத இலங்கை சுதந்திரக் கட்சியையும் ஜே.வி.பி ஆதரித்தது. இறுதியாக 2010 இல் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கும் முயற்சிக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது.

ஜே.வி.பி.யின் புதிய தலைவராக ஏ.கே.டி தெரிவு செய்யப்பட்ட பிறகு, 2014 இல் அடுத்த பெரிய மாற்றம் வந்தது. அவர் தலைமையிலான கட்சி பாரம்பரியமான தேசியவாத அரசியல் கட்சிகள் மற்றும் பிரமுகர்களுடனான கூட்டணிகளை நிராகரித்து, ஜே.வி.பி கட்சிக்கு மிகவும் சுதந்திரமான மற்றும் மையவாத பாதையை உருவாக்க முயற்சித்தார். 2017 இல் ஜே.வி.பி.யின் 7வது தேசிய காங்கிரஸைத் தொடர்ந்து, கட்சி “நவீனமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்மயமான இலங்கையை” உருவாக்குவதற்கான தேசியக் கொள்கைக் கட்டமைப்பை முன்மொழிந்த ஆவணத்தை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 இல், ஜே.வி.பி.யைத் தலைமையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி கூட்டணி தொடங்கப்பட்டது. இந்தப் பரந்த கூட்டணியானது, பாரம்பரியமாக ஜே.வி.பி.யின் பயங்கரவாத நடவடிக்கைகளின் வரலாறு காரணமாக விலகியே இருந்த நடுத்தர வர்க்கத்தினரிடம் சென்று சேருவதற்கான கதவுகளைத் திறந்தது. இதில் தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், பொது அறிவுஜீவிகள் மற்றும் வர்த்தகர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களும் அடங்குவர்.

இந்தப் பரந்த கூட்டணியின் வெற்றிக்குக் காரணம், ஜே.வி.பி.யின் கடந்த காலக் குறுங்குழுவாதத்தை முறியடித்து வர்க்க சக்திகளின் பரந்த கூட்டணிகளை இணைத்ததால் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இலங்கையில் பாரம்பரியமாக உள்ள தேசியவாத கட்சிகளுடன் இணையாமல் தனித்து சுய அடையாளத்தை வளர்த்தது. இவற்றுடன் மிக முக்கியமாக, சமீபத்திய தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரம் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்/நவதாராளமய பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை மட்டுமே பிரதான எதிரியாக முன் வைத்து நிற்கவில்லை. பிரதான பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது. அதாவது ஊழல் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தியது. இது நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரிடையே நன்றாக எடுபட்டது. ஏனெனில் அவர்களின் பொருளாதாரப் பிரச்சனைக்கு அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமே காரணம் என அவர்கள் உணர்ந்தனர். அதேபோல, இலங்கையின் பிரதான தேசியவாத கட்சிகளின் ஆதரவு பெற்ற இடைத்தரகர்கள் மூலமாகவே அரசாங்கத்தைச் சிறு முதலாளிகள் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையைத் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கண்டறிந்தது.

இவ்வாறு, இலங்கையின் சிறு முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு அந்நாட்டின் பிரதான தேசிய கட்சிகள் மீது இருந்த அதிருப்தியைத் தேசிய மக்கள் சக்தி முக்கியமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதாவது, அந்நாட்டின் சிறு முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தது. இவ்வாறு, இக்கூட்டணி நடுத்தர வர்க்கத்தில் வரும் சிறு முதலாளிகள் பிரிவின் விரக்தி உணர்வைத் தூண்டிவிட்டுத் தாங்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியிடம் தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லை என வலது மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. மின்னுற்பத்தி உள்ளிட்ட எரிசக்தித் துறை, நிதித்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பொதுச் சொத்துக்களைத் தக்கவைப்பதுடன் பலப்படுத்துவோம் என அக்கூட்டணி வெளிப்படையாக அறிவித்தது. இருந்தாலும், அக்கூட்டணியின் கொள்கை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது பெரும்பாலும் ஊழல் ஒழிப்பு மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. எனினும், அக்கூட்டணியின் பிரதான பொருளாதார வாக்குறுதி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) முன்னுரிமை அளிப்பது, உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதாக இருந்தது. மேலும், இக்கூட்டணி மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்காக வளர்ச்சி வங்கியை நிறுவவும், பொருளாதாரத்தை நவீனமயமாக்க ஒரு விரிவான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்குவதற்கும், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பத்திரதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை நடத்தித் தளர்த்துவதற்காக உறுதியளித்தது.

இக்கூட்டணியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பெண்களை அணிதிரட்டிய நடவடிக்கை. இப்பெண்கள் கட்சியின் ஆண் உறுப்பினர்களின் மூலமாகத் திரட்டப்படவில்லை. பெண் கட்சி ஊழியர்களால் பெரும் அளவிலான பெண்கள் அணி திரட்டப்பட்டார்கள். கிராமப்புறங்களில் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெண் கட்சி ஊழியர்கள், பொருளாதாரக் கஷ்டங்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி விளக்கிப் பேசினர். இது மக்களின் பொருளாதாரக் கஷ்டங்கள் மீதான கட்சியின் அக்கறையை வெளிப்படுத்தியதுடன், காலங்காலமாக இலங்கையை ஆண்ட தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் செய்த ஊழல் குறித்துப் பேசி மக்களின் கோபத்தைத் தூண்டி, உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரத்தைக் கட்டமைக்க உதவியது. இந்தப் பிரச்சாரங்களில் பங்கேற்ற பெண்கள் இக்கருத்துக்களை வீட்டில் எடுத்துப் பேசி, கருத்துக்களைத் தங்கள் பிள்ளைகளிடம் கொண்டு சேர்த்தனர். பலரும் டிக் டாக் உள்ளிட்ட பல சமூக ஊடகத் தளங்களில் இக்கூட்டணியைப் பிரபலப்படுத்தத் துவங்கினர். இலங்கையில், பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு (FLFPR) 29.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பெண்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். அதேபோல, வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் பொதுத்துறை, தோட்டத் தொழிலாளர்கள் அல்லது ஏற்றுமதிச் சார்ந்த துறைகளில் பணிபுரிகின்றனர். இவை அனைத்தும் பெண்களை அரசியல் உணர்வுள்ள நபர்களாகவும், பொருளாதார நெருக்கடிகளை மிகவும் துல்லியமாக உணரும் நபர்களாகவும் மாற்றுகின்றது. இவர்களை அமைப்பாகத் திரட்டும் போது, இந்த உணர்வுகள் அவர்களை மிகவும் சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக மாற்றுகின்றன.

21ஆம் நூற்றாண்டுக்கான போராட்டம்

நவதாராளமயக் கொள்கையால் உருவாகியுள்ள கடன் சுமை, அமெரிக்காவின் சுயநலமான இராணுவமயமாக்கல் ஆகிய இரண்டுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை இலங்கையின் தற்போதைய மோசமான நிலைமை தெளிவாகக் காட்டுகிறது. இதனை வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், இலங்கையின் இறையாண்மை மற்றும் வளர்ச்சிக்கான போராட்டம் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவத் திட்டங்களை உள்ளடக்கியது. கடந்த காலத்தில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் அமெரிக்காவுடன் சமரச முயற்சிகளை மேற்கொண்டன. அதாவது, ஒரு சிலவற்றை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிறவற்றில் முன்னேறிவிடலாம் என நினைத்துக்கொண்டன. ஆனால் உண்மையான நிலையோ வேறு. மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியம் மிகக் குறைவு.

தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) எதிர்கொள்ளும் சவால்கள்

உண்மையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) வலதுசாரிகளுக்குச் சாதகமாக நிகழும் காலச் சூழலில் ஆட்சியை நடத்திக்கொண்டுள்ளது. அதாவது, இக்கூட்டணி மேற்கத்திய நிதி மூலதனத்திற்கு அதிகமாகக் கடன் கொடுக்க வேண்டிய ஒரு அரசையும், அமெரிக்காவால் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றப்பட்டுள்ள ராணுவத்தையும் வைத்துக்கொண்டு பாராட்டு மற்றும் கண்டிப்பு (carrot and stick method) முறையைப் பயன்படுத்திக் கையாளும் அரசாங்கத்தை வழி நடத்துகின்றது.

இலங்கையில் அறிவு உற்பத்தியும், பொருளாதார விநியோக வலைப்பின்னல்களும் ஏகபோக மூலதனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஜே.வி.பி (JVP) கட்சிக்கூட தனது கடந்த காலத்தில் தீவிரமாக எழுப்பி வந்த சோசலிசம், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோஷங்களைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டே ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதாவது, தற்போதைய நிலையிலிருந்து இலங்கை சமூகத்தை ஒரு புரட்சிகரமான மாற்றத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு மக்களின் உத்தரவை (சம்மதத்தை) பெற்றே ஆக வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. இருந்தாலும், ஏகாதிபத்தியத்துடன் நேரடி மோதலையும் முரண்பாட்டையும் வளர்த்துக்கொள்ளாமல், சமூக நலனை மேம்படுத்துவது மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை உற்பத்தி சார்ந்ததாக மாற்றுவது எனத் தேசிய மக்கள் சக்தி எடுத்துள்ள ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மென்மையான போக்கு இருந்தாலும், இலங்கையின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை எல்லா வகைகளிலும் முடக்க முயற்சித்து வருகின்ற ஏகாதிபத்தியத்துடனான மோதலைத் தவிர்க்க முடியாது.

21ஆம் நூற்றாண்டின் போராட்டம் – இலங்கையின் பங்கு

அமெரிக்க வெளியுறவுத் துறையின் பார்வையில் சொன்னால், 21ஆம் நூற்றாண்டின் போராட்டத்தின் மையப்பகுதியாக இன்று இலங்கை உள்ளது. இது அமைதியான வளர்ச்சிக்கும், ராணுவ மயமாக்கப்பட்ட வளர்ச்சிக் குறைபாட்டிற்கும் இடையிலான போராட்டம். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலனுக்காக உற்பத்தி மற்றும் முதலீடு செய்வது, அல்லது ஆளும் சிறுபான்மை முதலாளிகளின் நலனுக்காகக் கடன் அடிமைத்தனத்தில் கிடப்பது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் இலங்கை அனைத்துப் பக்கங்களிலும் சிக்கிக்கொண்டது. இதற்கு மாற்று வழிகள் இல்லை. இந்த நிலையில் அவர்கள் இருப்பதைக் கூறுவது விரக்தியாக உள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளையும் அதன் திட்டங்களையும் எதிர்த்து ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் நடைபெறும் இத்தகைய போராட்டம் இலங்கை மட்டுமின்றி, இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்கா, பொலிவேரிய நாடுகள், ஆப்பிரிக்காவின் சஹேல் பிரதேசம், மேற்கு ஆசியாவில் பாலஸ்தீனம் வரை நடைபெற்று வருகிறது. இலங்கை மக்களின் போராட்டமும் இந்த நூற்றாண்டின் போக்கை வரையறுப்பதில் தனது பங்கை வகிக்கும்.

முற்றும்

தமிழில்: சேதுசிவன்

Leave a Reply