அரசியல்உலகம்

இலங்கை – புதிய அரசு உருவானவிதமும், எதிர்கொள்ளப் போகும் சவால்களும்… பகுதி – 3

4

தமிழில்: சேதுசிவன்

சர்வதேச இறையாண்மை, பத்திரம், கடன் வலையில் இலங்கை

சீனக் கடன் வலை பற்றிய கட்டுக்கதைக்கான உண்மையான சாட்சியாக இலங்கை இருந்தது. (இங்கு “கடன் வலை” அல்லது “கடன் பொறி” (Debt Trap) என கட்டுரையாளர்கள் குறிப்பிடுவது, சீனா இலங்கைக்குக் கடன் கொடுத்து இலங்கையைத் தன்னிடம் சிக்கவைத்துக்கொண்டு, அதன் இறையாண்மையைப் பறித்துவிட்டது என அமெரிக்கா பரப்பிவந்த கட்டுக்கதைகளைக் குறிப்பிடுகிறார்கள்). கடன் வலை பற்றிய கதைகள் சீனாவிற்கு எதிரான கட்டுக்கதைகள் என இலங்கை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களால் இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மேலும், இலங்கையின் பொருளாதாரமானது காலனித்துவக் காலம் முதல் பெருந்தோட்டம் சார்ந்த பொருளாதாரத்தையும், சுற்றுலா, பணம் அனுப்புவது (வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு) மற்றும் குறைந்த மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் மீது மட்டும் சார்ந்திருப்பதே இலங்கையின் கடன் சுமைக்கு உண்மையான காரணம் எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேசியவாத மற்றும் இடதுசாரி அரசாங்கங்கள் முயற்சித்த போதும் கூட, இலங்கை உணவு மற்றும் ஆற்றல் தன்னிறைவை அடைவதில் தோல்வியடைந்துள்ளது அல்லது தொழில்மயமாக்கலின் சுய-விரிவாக்க செயல்முறையை அமைக்கத் தவறிவிட்டது என்பதைப் பார்க்க முடிகின்றது.  

(பெருந்தோட்ட பொருளாதாரம் என்பது டீ எஸ்டேட் உள்ளிட்ட எஸ்டேட் வகையான தோட்டங்களின் விளைச்சல் சார்ந்தது.)

2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுற்ற நேரம்

2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுற்ற நேரம், உலகளாவிய நிதி நெருக்கடி (GFC) மற்றும் பெரும் மந்தநிலையும் ஏற்பட்டது. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு ஒரு நல்ல காலச் சூழலை (Honeymoon Period) அனுபவித்தது. உள்நாட்டுப் போரின் முடிவுக்கு வந்த பிறகு நிலவிய இந்தச் சூழல் காரணமாக, அந்நாட்டின் சுற்றுலாத் துறை, சொத்து முதலீட்டுத் துறைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இது இலங்கையைப் பொருளாதார மந்தநிலையில் இருந்து ஒரளவு பாதுகாத்தது. ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், வங்கிகளில் குவாண்டிடேட்டிவ் ஈஸிங் (Quantitative Easing – QE) முறையை இலங்கை உட்பட உலகம் முழுவதும் தெற்குலக நாடுகளில் திணித்து, ஊக முதலீடுகளைக் கட்டவிழ்த்துவிட்டது.  

(Quantitative Easing என்பதற்குக் கடன் வழங்கும் அளவுகளைத் தளர்த்தல் எனப் பொருள். அதாவது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்டிவிடுவதற்காக அதிகக் கடன்கள் கொடுக்க மத்திய வங்கி பின்பற்றும் கொள்கை எனக் கூறப்படுகின்றது. இந்த Quantitative Easing என்பது வழக்கத்திற்கு மாறான பணக் கொள்கை ஆகும். அதாவது, அமெரிக்காவின் இந்தத் திட்டத்தால் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணப்புழக்கம் அதிகரித்தபோது, அந்நாடுகளில் இருந்து அதிக இலாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கையில் ஊக முதலீடுகள் அதிகரித்தது. விரைவான லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை, அபாயகரமான முதலீடுகளாக இருந்திருக்கலாம்.)

சீனாவின் முதலீடுகள்

அமெரிக்கா இவ்வாறு இருக்க, உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து எழுந்த சீனா, உடனடியாக இலங்கையின் ஒரு சில துறைகள் மட்டுமல்லாமல், சாலைகள், துறைமுகங்கள், எரிசக்தித் துறை என முக்கியத் துறைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு லட்சியத் திட்டத்தின் மூலம் நிதி முதலீட்டை அதிகரிக்க இலங்கை அரசாங்கத்தை அனுமதித்தது. எப்படியாயினும், சீன வளர்ச்சி நிதியை இலங்கை பயன்படுத்திய விதத்தில் உள்ள குறைபாடுகளுக்கு, அந்நாட்டின் சொந்தத் திட்டமிடலில் இருந்த குறைபாடுகள் மற்றும் தெளிவான தொழில்துறைக் கொள்கை இல்லாததால் ஏற்பட்டதே தவிர, சீனாவின் தீய எண்ணத்தால் (கடன் வலையால்) அல்ல. சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி சொல்வது போல, அனைத்துத் திட்டங்களும் இலங்கை அரசின் வேண்டுகோள்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டன. மேலும், திட்டங்களைத் திறமையாக நிர்வகிக்க இலங்கையில் திறன் பற்றாக்குறை இருப்பதால் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

தனியார் கடன்களின் விளைவுகள்

சர்வதேச நிறுவனங்களிலிருந்து மலிவான கடன்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை அரசு, கடனுதவிக்காகத் தனியார் கடன் நிறுவனங்களை நோக்கிச் சென்றது. 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு, இந்தப் போக்கு தீவிரமடைந்தது. இதன் விளைவாக, சர்வதேச அரசாங்கப் பத்திரங்கள் (ISB) மூலமாக சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை இலங்கை கடன் வாங்கியது. இதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டில் இலங்கை கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் விழுந்தது. அப்போது, அதன் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவிடம் பட்டிருந்த கடன் தொகை வெறும் 13.67% சதவீதம் மட்டுமே. ஆனால், அதே நேரத்தில் சுமார் 42.43% சதவீதம் தனியார் கடன்களைப் பெற்றிருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சீனாவிலிருந்து பெறப்பட்ட கடன்களை விட இந்தத் தனியார் கடன்கள் மிக அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, 2021 இல் செலுத்தப்பட்ட மொத்த வட்டித் தொகையில் 70% சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தத் தனியார் கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்காகச் செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றுநோயின் தாக்கம்

கொரோனா தொற்றுநோய் பரவிய போது, இலங்கை பொருளாதாரத்தின் பலவீனம் வெளியே தெரிந்தது. இலங்கைக்கான சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் (Remittances) மூலம் பெற்றுவந்த வருவாய் ஆகியவை கடுமையாகச் சரிந்தன. அதே நேரத்தில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட முடக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்தது. இந்தப் பொருளாதார நெருக்கடி, 2022 இல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவதற்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியவில்லை (Pre-emptive Default) என முன்கூட்டியே அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசும், அதிர்ச்சி சிகிச்சை என்ற முறையில் சில பல விதமான தீவிரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியது.

சீர்திருத்த நடவடிக்கைகள்

இலங்கை அரசு கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, எரிபொருள் மானியங்களை வெட்டியது, எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது இலங்கை மக்களை வறுமைக்குள் தள்ளியது. நாடு முழுவதும் பரவலாக மின்தடை ஏற்பட்டது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதில் முதன்மையாக, தொழிலாளி வர்க்கத்தினரின் தலையில் கை வைக்கப்பட்டது. இதனால், தொழிலாளர்களின் ஓய்வூதியங்களில் தாக்கம் உருவானது. (அவர்களுக்கு முறையாக ஓய்வூதியம் கொடுப்பது நிறுத்தப்பட்டது). ஆனால், அதே நேரத்தில் உள்ளூர் பணக்காரர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் (பெருநிறுவனங்கள்) இத்தகைய பண இழப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்துவிட்டனர்.

மத்திய வங்கிக்கு சுதந்திரம்

இலங்கை அரசு மத்திய வங்கிக்கு சுதந்திரம் வழங்கும் சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்தச் சட்டம் மூலமாக, மத்திய வங்கி அரசாங்கக் கடன்களுக்குப் பொறுப்பாவது தடுக்கப்பட்டது. (மத்திய வங்கிக்குக் கொடுக்கும் சுதந்திரம் என்பது, வங்கி மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் குறைப்பது அல்லது நீக்குவது ஆகும்). இது, பொருளாதார நெருக்கடியின் போது அரசு அதிக முதலீடுகள் செய்வதன் மூலம் நெருக்கடியைச் சமாளிக்கும் திறனைக் கட்டுப்படுத்தியது. அதேபோல, அரசாங்கம் வங்கிகளின் வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பலவீனப்படுத்தியது. இந்தக் கொள்கை மாற்றம், அரசின் பணம் சார்ந்த கொள்கை (வங்கி) மீதான கட்டுப்பாட்டை இழக்கச் செய்தது. மேலும், இந்தக் கொள்கை அரசாங்கம் செய்ய வேண்டிய முதலீடுகளுக்கு முழுமையாகத் தனியார் கடன் வழங்கும் நபர்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு

இலங்கை அரசு தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் இலங்கையின் பொருளாதார நலனுக்கு எதிரானது எனக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இந்தக் கடன் ஒப்பந்தமானது, ஏற்கனவே உள்ள கடன் பத்திரங்களைப் புதிய கடன் பத்திரங்களுடன் மாற்றுவதை உள்ளடக்கியது. மேலும், இவற்றில் சில புதுமையான நிதிசார் திட்டங்களும் அடங்கும்.

பெரிய அளவில் இணைக்கப்பட்ட பத்திரங்கள்

இந்தப் பத்திரங்களைப் பொறுத்தவரை, இவற்றின் வட்டி விகிதங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்திருக்கும். பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் அதிகரிக்கும் போது, பத்திரத்திற்குக் கொடுக்க வேண்டிய வட்டி அதிகரிக்கும். இதனால், இலங்கை வேகமாக வளர, அதற்குக் கடன் கொடுத்தவர்களுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டும்.

நிர்வாகத்துடன் இணைந்த பத்திரங்கள்

இந்தப் பத்திரங்களின் வட்டி விகிதம், அரசாங்கம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை எவ்வளவு திறம்பட அமல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இந்தப் பத்திரங்கள் மூலம், இறையாண்மை கொண்ட ஒரு அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, சர்வதேச நிதியின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கப்படக்கூடிய ஒரு வகையான அச்சுறுத்தல் உருவாகும் என்ற கவலை உள்ளது.

தொடரும்…

தமிழில்: சேதுசிவன்

Leave a Reply