தமிழில்: சேதுசிவன்
இந்தோ-பசிபிக் கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கையின் முக்கியத்துவம்
இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்த சிறிது காலத்திற்குப் பிறகு, அப்போதைய அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி தலைமையிலான அமெரிக்க செனட் குழு, “இலங்கை: போருக்குப் பிறகு அமெரிக்காவின் வியூகத்தை மறுசீரமைத்தல்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையானது, அமெரிக்காவின் கொள்கையை வகுக்கும் குழு “இலங்கையின் புவிசார் அரசியலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது” என வாதிட்டது. மேலும், “அமெரிக்கா இலங்கையை இழக்கக் கூடாது” என வலியுறுத்தியது. அதாவது, பிரிவினைவாதக் குழுவான (தனி ஈழம் கோரிய) தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இலங்கையில் நடத்தி வந்த உள்நாட்டுப் போரை மேற்கு நாடுகள் கையாண்ட விதத்தை விமர்சிப்பதற்காக, அவ்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
அமெரிக்காவின் ஆயுதத் தடை உட்பட, சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் லிபியாவுடன் நெருக்கமான உறவுகளை இலங்கை ஏற்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியைப் பெறத் தேவையான ஆயுதங்களையும் நிதியுதவியையும் இந்த நாடுகள் வழங்கின. போரின் இறுதி ஆண்டுகளில், விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமற்றது என வலியுறுத்தி, மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் ஜன விமுக்தி பெரமுனா (ஜேவிபி) முக்கியப் பங்கு வகித்தது. மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்தங்களின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஜேவிபியின் இந்த நடவடிக்கை போரால் சோர்வடைந்திருந்த பல இலங்கை மக்களுக்கு ஏற்கத்தக்க வாதமாக இருந்தது.
அதேபோல், “இலங்கையை இழந்துவிடுவோம்” என்ற அமெரிக்காவின் பயம், பிரிவினைவாதத்திற்கு எதிராக இலங்கையின் உள்நாட்டுத் தேசியவாத எழுச்சி (இனவாத அரசியல்) மற்றும் தெற்குலக நாடுகளை நோக்கி மாறிய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் பின்னணியில் இதனைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
2015 தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை
2015 தேர்தலுக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கை வலதுசாரி கொள்கையை நோக்கி நகர்ந்தது. தேசியவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பிளவுபட்டது. ஒரு பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டணி அமைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். இலங்கையில் மோசமாக இருந்த மனித உரிமையின் நிலை சர்வதேச அரங்குகளில் விமர்சிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க அரசு இலங்கை ராணுவத்துடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக, அந்நாட்டுக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் போர் பயிற்சி மேற்கொள்வது, அமெரிக்க கடற்படைக் கப்பல்களை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். அமெரிக்கா இலங்கை அரசை மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட அழுத்தம் கொடுத்தது. அப்போது, இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதி என்றும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இலங்கையின் இறையாண்மை மீறப்படும் என்றும், நமது நாடு சொந்த விருப்பமில்லாத ஒரு போருக்குள் இழுத்துச் செல்லப்படும் என்றும் இலங்கைத் தூதர் தமரா குணநாயகம் எச்சரித்தார்.
அந்த ஒப்பந்தங்கள்:
1. Millennium Challenge Corporation (MCC):
அரசியல் பொருளாதார நிபுணர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் (இவர் 2019-2021 வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றியவர்) பொதுச் சொத்துக்களாக உள்ள நிலங்களைத் தனியார் மயமாக்குவதற்கான MCC ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் நில அபகரிப்புக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆய்வின் முடிவாக, இந்த ஒப்பந்தம் பன்னாட்டு நிறுவனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக இருக்கும் என்று அந்தக் குழு நிபந்தனை இன்றி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தது.
2. 2007 இல் அமெரிக்க-இலங்கைக்கு இடையே “கொள்முதல் மற்றும் நாடுகளுக்கு இடையிலான சேவை ஒப்பந்தம்” (ACSA):
இடதுசாரிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. இதன் பிறகு, 2017 இல் இந்த ஒப்பந்தம் அவசரமாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் புதிய ஒப்பந்தம் கால வரம்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. முந்தைய ஒப்பந்தத்தை விட பத்து மடங்கு நீளமானது. (அதாவது, அமெரிக்க-இலங்கைக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் எப்போது முடியும் என்றே தெரியாது.)
3. இராணுவ நிலை ஒப்பந்தம் (SOFA):
முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கையெழுத்திடப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட புதிய வரைவு ஒப்பந்தம் 2018 இல் அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஒப்பந்தம் கசிந்த போது, அதில் அமெரிக்க பாதுகாப்புப் படைகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு இணையான சட்டரீதியான விலக்குகளை அனுபவிப்பார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது. (அதாவது, அமெரிக்க ராணுவ வீரர்கள் இலங்கையில் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனை விளைவுகளைத் தவிர்க்க முடியும்.)
ஜேவிபி (JVP) இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பின் பக்கம் நின்றது. உதாரணமாக, 2020 இல் திசாநாயக்க கொடுத்த ஒரு பேட்டியில் (AKD), எம்சிசி (MCC) ஒப்பந்தத்தை ஏற்கவில்லை எனவும், முற்றிலும் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் நிலங்கள் தனியார்மயமாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். இவ்வாறு, நவீன காலனியாக்கக் கோரிக்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை மிகவும் திறம்படப் பயன்படுத்த, சிங்கள தேசியவாதிகள் மற்றும் பழைய இடதுசாரிக் கட்சிகள் உள்ளடக்கிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே அமைத்த பெரிய கூட்டணியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உதவியது. அக்கூட்டணியில் இருந்த ஜேவிபி, கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய எதிர்ப்பைக் கட்டமைத்தது. இதன் விளைவாக, 2019 ஜனாதிபதி தேர்தலில் அக்கூட்டணியின் வேட்பாளரான கோத்தபய ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் சகோதரர்) ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தத் தேர்தல் இலங்கையின் பொருளாதாரக் குறைகள், இறையாண்மை அழிவு பற்றிய கவலை ஆகியவற்றின் கலவையாக இருந்தது.
2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு
2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்தது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட MCC ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என இலங்கை அரசுக்குப் பரிந்துரை செய்தது. 2022 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையின் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்குத் தடை விதித்தது. அதே ஆண்டு, அமெரிக்காவின் செயலர் மைக் பொம்பியோ 12 மணி நேரப் பயணமாக இலங்கைக்குச் சென்றார். அப்போது அவர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்டைக்காரன்” (இலங்கையை வேட்டையாடுகிறது என்ற அர்த்தத்தில்) என்று கூறினார். பொம்பியோவின் இத்தகைய வெளிப்படையான வெறுப்புக் கருத்து, இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டத்திற்கு இலங்கை எவ்வளவு அவசியமாக உள்ளது என்பதையும், சீனாவுக்கு எதிரான புதிய பனிப்போரில் இலங்கை அமெரிக்காவிற்கு முக்கியமாகத் தேவைப்படுகின்றது என்பதையும் தெளிவுபடுத்தியது.
அமெரிக்க அரசு ஆவணங்கள் படி, ஆண்டுதோறும் 60,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இலங்கைக் கடல் பகுதி வழியாகத்தான் செல்கின்றன. இதில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு கடல் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள், சரக்கு ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் கப்பல்கள் 50 சதவீதம், மற்றும் அமெரிக்க கடற்படையின் 5 மற்றும் 7 ஆவது கடற்படைப் பிரிவுகளுக்கு இடையே செல்லும் அனைத்துக் கப்பல்களும் இலங்கைக் கடல் பகுதி வழியாகத்தான் செல்கின்றன.
மார்ச் 2022 இல் ஜனாதிபதி ராஜபக்சேவைப் பதவி நீக்கம் செய்ய அடித்தளமிட்ட போராட்டங்கள்
மார்ச் 2022 இல் ஜனாதிபதி ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய அடித்தளமிட்ட போராட்டங்கள் தீவிரமடைவதற்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட், இலங்கையின் குடிமைச் சமூகத்தைச் சந்திக்க இலங்கைக்குச் சென்றார். ராஜபக்சேவின் பதவியை விட்டுத் தூக்கியெறிந்த போராட்டமானது, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவைப் பதவி நீக்கம் செய்ய வைத்த போராட்டங்களுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தது. அரசு நிர்வாகத்தின் தோல்விகள், நாட்டின் பொருளாதார நிலைமை என உள் காரணிகளின் கலவையாக இருந்தது. இந்த நெருக்கடிகளின் மூலமாகத் தங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா மற்றும் அதனுடைய பல அமைப்புகள் கொண்ட வலையமைப்பின் கலந்துபட்ட தாக்குதல் தந்திரங்களை அமெரிக்கா பயன்படுத்தியது. இது போல பல சந்தர்ப்பங்களில், வெளிச் சக்திகள் (அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் மற்றும் அமைப்புகள்) சொந்த நலன்களுக்காக இலங்கையின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டன.
ராஜபக்சேவைப் பதவியை விட்டுத் துரத்திய பிறகு, வலதுசாரித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், அமெரிக்கா இலங்கை ராணுவத்திற்கு அதிகளவு சிறிய ரகக் கடற்படைப் படகுகளை நன்கொடையாக வழங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு, ஏமனில் உள்ள அன்சாருல்லாவின் அரசுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவுவதற்காக, இலங்கை தனது சொந்த கடற்படைக் கப்பல் ஒன்றைச் செங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இதன் மூலம், இலங்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மேலும் அடிபணிந்ததைக் காட்டியது.
தொடரும்…
தமிழில்: சேதுசிவன்