தமிழில் – சேதுசிவன்
இலங்கையின் புதிய அரசு, இந்தோ-பசிபிக் கடன் வலை, 21 ஆம் நூற்றாண்டுக்கான போராட்டம்
2024 செப்டம்பர் 23 அன்று, AKD என அழைக்கப்படும் அனுரா குமார திசாநாயக்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 1950 களில் இருந்து மாறி மாறி இலங்கையை ஆண்ட தேசியவாத இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அவற்றின் கிளை அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லாத முதல் இலங்கை ஜனாதிபதியாக திசாநாயக்க உள்ளார்.
2023 இல் இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகளுடன் நடைபெற்ற முதல் தேர்தலில் திசாநாயக்க 42.31% மக்கள் வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில், அவரை எதிர்த்த வலதுசாரி போட்டியாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முறையே 32.76% மற்றும் 17.27% வாக்குகளை மட்டுமே பெற்றனர். ஒரு மாதம் கழித்து, 2024 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திசாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP) சுமார் 61.56% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன், காலங்காலமாக அரசியல்வாதிகள் செய்து வந்த ஊழல் குறித்து திசாநாயக்க கடுமையாக விமர்சித்து வந்தார். ஜனாதிபதியான பிறகு, திசாநாயக்க தனது முதல் உரையில் நிதானமான தொனியை வெளிப்படுத்தினார். தனது அரசாங்கத்திற்கு முன்னால் உள்ள குறிப்பிடத்தக்க சவால்களை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கை எதிர்கொள்ளும் ‘ஆழமான நெருக்கடியை’ ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ தீர்த்துவிட முடியாது என்று கூறினார்.
“நான் ஒரு மந்திரவாதி அல்ல. நானும் பலம், வரம்புகள், அறிவு, இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய தன்மைகளுடன் கூடிய இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகன்” என்று பேசினார். இப்போது பதவியில் இருக்கும் திசாநாயக்க, தன்னை ஒரு மீட்பராக (Messianic) கருதாமல், தனக்கு வழங்கப்பட்ட சூழ்நிலைகளில் ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறார். இவை அனைத்திற்கும் மேலாக, அரசாங்கத்தை நடத்துவதில் குறைந்த அனுபவமுள்ள ஒரு கட்சியை அவர் வழிநடத்த வேண்டும். இது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் இலங்கைக்குள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் ஏகாதிபத்தியத்தின் வெறுப்புப் பிரச்சார எதிர்ப்பும் ஒருபுறம் இருக்க வேண்டும்.
இந்தத் தேர்தல்களைத் தொடர்ந்து, பிரதான ஊடகங்கள் திசாநாயக்கவையும் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தையும் ‘மார்க்சிஸ்ட் சார்பு கொண்டது’ அல்லது ‘நியோ-மார்க்சிஸ்ட்’ என பொறுப்பற்ற முறையில் அடையாளப்படுத்த முயன்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள முக்கியக் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி – JVP) என்பது உண்மைதான். திசாநாயக்க இக்கட்சியின் தலைவர். ஆனால், இந்த அரசாங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். 2023 இல், தேசிய மக்கள் சக்தியை ஒரு தேசிய விடுதலை இயக்கத்துடன் ஒப்பிட்டனர். தேர்தலுக்கு முன், இது மிகவும் நடுநிலையாக ‘தேசிய மறுமலர்ச்சி’ என மெல்லிய தன்மையுடன் அடையாளப்படுத்தப்பட்டது. அக்கட்சிக்கு நெருக்கமான சில அறிவுஜீவிகள், தேசிய மக்கள் சக்தியை ‘இடது-ஜனரஞ்சகவாதி’ என்று வர்ணித்தனர். மேலும், சமீபத்தில் ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “எங்கள் அரசாங்கம் இடதுசாரி அரசாங்கம் அல்ல, இடதுசாரிகள், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் உள்ளடக்கியது” என்று பேசியுள்ளார். (தேர்தலுக்குப் பின் அவர் கூறியது).
தேசிய மக்கள் சக்தி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்குக் காட்டும் எச்சரிக்கையான செயல், கட்சிக்குள்ளும், இலங்கையில் உள்ள அரசியல் சக்திகளின் நுட்பமான சமநிலையைக் குறிக்கிறது. வளர்ந்து வரும் அரசாங்கம் ஏற்கனவே அதன் விருப்பங்களையும் வரம்புகளையும் சொல்லிவிட்டது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், வெளியுறவுக் கொள்கையில், அரசாங்கம் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இடம் பெற முறையாக விண்ணப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடையே நடத்திய முதல் உரையில், காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான இலங்கையின் வெளியுறவுத்துறை கொள்கை முடிவை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், சுதந்திர பாலஸ்தீனத்தை அமைப்பதற்கான ஆதரவை உறுதிப்படுத்தினார். அதேபோல், இலங்கைக்குள் திசாநாயக்க முன்னெடுத்த முதல் செயல்களில் ஒன்று, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மானியம் வழங்க கருவூலத்திற்குக் கொடுத்த வழிகாட்டுதல். இலங்கை அரசின் பொதுச் சொத்துக்களாக உள்ள விமானத்துறை மற்றும் மின் உற்பத்தித் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்தது.
இருப்பினும், நவதாராளமய கொள்கைகளால் அரசை நடத்த முடியாத ஒரு நெருக்கடிக்குள் மீண்டும் செல்லும் அபாயம் எப்போதும் உள்ளது. நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி மற்றும் பல புதிய முகங்கள் இருக்கலாம் என்றாலும், இலங்கை கருவூலம் மற்றும் மத்திய வங்கிக்குப் பொறுப்பான அதிகாரிகள் மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறார்கள். தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் மற்றும் அதன் நிதி ஒருங்கிணைப்பு பாதையைத் தொடரலாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது, முந்தைய அரசாங்கத்தின் பேரழிவை உருவாக்கிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துடன் தொடர்கிறது. இலங்கை அதிகாரிகள் தங்கள் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் நிலைத்து நின்று, பொருளாதாரத்தை நிலையான மற்றும் உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையையும், புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இலங்கையின் கடந்த காலம் பற்றிய ஆழமான பகுப்பாய்வு தேவை. அதாவது, இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் அரசியல் திட்டத்திற்கு இலங்கையின் புவிசார் அரசியலின் முக்கியத்துவம் என்ன? காலனித்துவத்தால் இலங்கையில் ஏற்பட்ட வளர்ச்சிக் குறைபாடு, இலங்கையின் கடன் சுமை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு குறித்த பகுப்பாய்வு வேண்டும்.
தமிழில் – சேதுசிவன்