அமெரிக்காவுக்கு புலம்பெயரும் குஜராத் மக்கள்: நிலைமையும் காரணங்களும்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது சமீபத்தில் பரவலாகப் பேசப்படும் செய்தியாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 67,391 இந்தியர்களில் 41,330 பேர் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருந்தனர்.
இத்தகைய புலம்பெயர்ந்தவர்கள் எடுக்கும் அபாயகரமான முயற்சிகள் அசாதாரணமானவை. கடந்த 2022-ம் ஆண்டு, டிங்குச்சா கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பட்டேல், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அமெரிக்கா-கனடா எல்லையைப் பனிப்புயலின் போது கடக்க முயற்சி செய்து பனியில் உறைந்து மரணித்தனர்.
வரலாற்றுப் பின்னணி
பல நூற்றாண்டுகளாக குஜராத் மக்கள் ஆப்பிரிக்காவிற்கும், பின்னர் அங்கிருந்து பிற மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக செல்லவில்லை. இன்று குஜராத் ஒரு வளர்ந்த வசதிபடைத்த மாநிலமாகவும், “முன்மாதிரி மாநிலம்” என்று கருதப்படுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது.
குஜராத் அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும், அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. கடந்த 2022-23-இல் மாநில உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கணக்கிடப்படும் தனிநபர் வருமானம் குஜராத்தில் ரூ. 1,81,963 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான ரூ. 99,404-ஐ விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம்.
முரண்பாடு: ஏன் மக்கள் வெளியேறுகிறார்கள்?
குஜராத் ஒரு வளர்ந்த மாநிலமாக இருந்தும், ஏன் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வெளியேறுகிறார்கள்? இதற்கான பதில் எளிமையானது: குஜராத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் உள்ளனர், ஆனால் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. பல ஆண்டுகளாக புதிய மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம்.
தொடரும் பெரும்பான்மையான மக்களின் வறுமை
குஜராத்தின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ற அளவில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி விகிதம் இல்லை. மேலும், உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் தரமும் உயரவில்லை. இது வேலைச் சந்தையில் “முறைசாரா பணிமயமாக்கல்” மூலம் தெளிவாகத் தெரிகிறது.
முறைசாரா பணிகளின் அதிகரிப்பு
கடந்த 2022-ஆம் ஆண்டின் தொழிலாளர் ஆய்வின்படி (Periodic Labour Force Survey), குஜராத்தில் 74% தொழிலாளர்களுக்கு எழுத்துப்பூர்வமான பணி ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஒப்பீட்டளவில் இது பிற மாநிலங்களை விட மிக அதிகமாக உள்ளது:
- கர்நாடகத்தில் 41%
- தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா 53%
- மத்திய பிரதேசத்தில் 57%
- அரியானாவில் 64%
- மகாராட்டிரத்தில் 65%
- பீகாரில் 68%
குறைந்த கூலி
மிக முக்கியமாக, இத்தகைய ‘முறைசாரா பணிமயமாக்கல்’ குறைந்த கூலிக்கு வழிவகுக்கிறது. கடந்த 2024 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், முறைசாரா பணிக்கான கூலியாக நாளொன்றுக்கு குஜராத்தில் ரூ. 375 மட்டுமே இருந்தது. இது தேசிய சராசரியான ரூ. 433-ஐ விட குறைவாகும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவானது:
- கேரளம்: ரூ. 836
- தமிழ்நாடு: ரூ. 584
- அரியானா: ரூ. 486
- பஞ்சாப்: ரூ. 449
- கர்நாடகம்: ரூ. 447
- இராஜஸ்தான்: ரூ. 442
- உத்தரப்பிரதேசம்: ரூ. 432
பீகாரில் கூட இந்த சராசரி ரூ. 426 ஆக இருந்தது. முறைசாரா பணிக்கான சராசரி நாள் கூலியில் சட்டீஸ்கர் (ரூ. 295) மட்டுமே குஜராத்திற்கு பின்னால் இருந்தது.
முறையான பணிகளிலும் குறைந்த ஊதியம்
குஜராத்தில் முறையான ஊதியத்துடன் கூடிய பணிகளின் சராசரி மாத வருவாய் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், குஜராத்தில் இந்த சராசரி ரூ. 17,503 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான ரூ. 21,103-ஐ விட குறைவாகும். பெரிய மாநிலங்களில் பஞ்சாப் (ரூ. 16,161) மட்டுமே குஜராத்தை விட பின்தங்கியுள்ளது.
குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள்:
- கர்நாடகம்: ரூ. 25,621
- அரியானா: ரூ. 25,015
- மகாராட்டிரம்: ரூ. 23,723
- கேரளம்: ரூ. 22,287
- ஆந்திரப் பிரதேசம்: ரூ. 21,459
- தமிழ்நாடு: ரூ. 21,266
- உத்தரப்பிரதேசம்: ரூ. 19,203
- இராஜஸ்தான்: ரூ. 19,105
- மத்தியப் பிரதேசம்: ரூ. 18,918
- மேற்கு வங்கம்: ரூ. 17,559
குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் நிலையான மாதாந்திர ஊதியம் பெறுபவர்களாக இல்லாமல் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் ஏழை விவசாயிகள் வாழும் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
விவசாய மற்றும் கிராமப்புற வேலைகளில் குறைந்த கூலி
கடந்த 2023-ஆம் ஆண்டில், குஜராத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கான சராசரி தினசரிக் கூலி ரூ. 242 ஆக இருந்தது. இது இந்தியாவிலேயே குறைவானதாகும். இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான பீகாரை விடக்கூட குஜராத் பின்தங்கியுள்ளது.
வயல் வேலை அல்லாத கிராமப்புற வேலைகளில் ஈடுபடுபவர்களின் (கைவினைஞர்கள்) சராசரி தினக்கூலியில், குஜராத் இந்தியாவிலேயே கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் (ரூ. 273) உள்ளது. இது கடைசி இடத்தில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தின் (ரூ. 246) சராசரியை விட சிறிது முன்னால் உள்ளது, ஆனால் பீகாரின் (ரூ. 313) சராசரியை விட கணிசமாகப் பின்தங்கியுள்ளது.
கட்டிட வேலைத் தொழிலாளர்களுக்கான தினசரி சராசரிக் கூலியில், குஜராத் கடைசியிலிருந்து மூன்றாவது இடத்தில் (ரூ. 323) உள்ளது. மத்தியப் பிரதேசம் (ரூ. 278) மற்றும் திரிபுரா (ரூ. 286) கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
வறுமையை அளவிடும் குறியீடுகள்
வறுமையை அளவிடுவதற்கு ஊதியம் மட்டுமே குறியீடு அல்ல. மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற மக்களின் மாதாந்திர தனிநபர் செலவினங்களும் (MPCE) இதை வெளிப்படுத்துகின்றன. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணக்குப்படி, கடந்த 2022-23-ம் ஆண்டில் குஜராத்தின் MPCE, நகர்ப்புறங்களில் ரூ. 6,621 ஆகவும், கிராமப்புறங்களில் ரூ. 3,798 ஆகவும் இருந்தது. இது பின்வரும் மாநிலங்களை விட குறைவாக உள்ளது:
- தமிழ்நாடு: ரூ. 7,630 (நகர்ப்புறம்), ரூ. 5,310 (கிராமப்புறம்)
- கேரளம்: ரூ. 7,078 (நகர்ப்புறம்), ரூ. 5,924 (கிராமப்புறம்)
- கர்நாடகம்: ரூ. 7,666 (நகர்ப்புறம்), ரூ. 4,397 (கிராமப்புறம்)
- ஆந்திரப் பிரதேசம்: ரூ. 6,782 (நகர்ப்புறம்), ரூ. 4,870 (கிராமப்புறம்)
- அரியானா: ரூ. 7,911 (நகர்ப்புறம்), ரூ. 4,859 (கிராமப்புறம்)
- மகாராட்டிரம்: ரூ. 6,657 (நகர்ப்புறம்), ரூ. 4,010 (கிராமப்புறம்)
பன்முக வறுமை அளவீடு (MPI)
வறுமையை அளவிடுவதற்கு வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற பல காரணிகளைக் கணக்கில் கொள்ளும் “பன்முக வறுமை அளவீடு” (MPI) எனும் ஐ.நா.வின் கணக்கீட்டு முறை மிகவும் பயனுள்ளது. ஏனெனில், இது வெறுமனே பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிற விசயங்களையும் கருத்தில் கொள்கிறது. இந்த வகையில் பார்க்கும்போது குஜராத் இந்தப் பட்டியலின் நடுவில் உள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான இந்தக் கணக்கீட்டில் குஜராத்தில் 11.66% பேர் வறுமையில் உள்ளனர். இது மேற்கு வங்கத்தின் (11.89%) வறுமை விகிதத்தை விட சற்றுக் குறைவாக உள்ளது.
எனினும், பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குஜராத்தில் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மகாராட்டிரம், கர்நாடகம், அரியானா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களை விட குஜராத்தில் அதிகமானோர் வறுமையில் உள்ளனர்.
உணவு பெறுவதற்கான வாய்ப்புகளில் குஜராத் மோசமான நிலையில் உள்ளது. குஜராத்தில் 38% பேருக்கு தங்களது தேவைக்கான உணவைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. இப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள பீகார் (42%) மற்றும் ஜார்க்கண்ட் (40%) போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கொண்ட மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருந்தும், நல்ல வருமானத்தைத் தரும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருப்பதையும் மேற்கு நாடுகளை நோக்கி அதிகப்படியான மக்களைத் தள்ளும் வறுமையை குஜராத்தில் பரவலாக இருப்பதையும் நாம் எப்படி விளக்குவது?
நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள்
நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் பின்பற்றத் துவங்கிய பாதையில்தான் இந்த முரணான சூழலுக்கான விளக்கம் அமைந்துள்ளது. கடந்த 2001-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், குஜராத் அரசு உட்கட்டமைப்பு செயல்திட்டங்களுக்கு (மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவை) மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சமூகச் செலவினங்களுக்கான நிதி மட்டுமல்லாது, சுகாதாரம் மற்றும் கல்வியோடு நில்லாமல் தொழிலாளர் செயல்பாடுகளுக்கான நிதியையும் வைத்துதான் மேற்கூறிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து மாற்றம்
இந்த செயல்தந்திரம், இதற்கு முந்தைய காலகட்டத்தில் குஜராத்தின் அரசியல் பொருளாதாரத் தன்மையில் இருந்து முரண்பட்டது. உண்மையில், தொழில்முனைவர்களுக்கான மாநிலமாகவே குஜராத் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உதவி செய்த மாநிலமாகவும், சிறு அளவிலான தொழில்முனைவர்கள் மீது அக்கறை செலுத்திய மாநிலமாகவும் இருந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசாங்கத்தின் தொழில்துறைக் கொள்கை, பெரு நிறுவனங்களை விட சராசரியாக நான்கு மடங்கு அதிக தொழிலாளர்களைக் கொண்ட சிறு குறு மத்திய தொழில்நிறுவனங்களின் மீதே கவனம் செலுத்தியது.
மோடியின் புதிய தொழில்துறைக் கொள்கை
நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய தொழிற்துறைக் கொள்கை-2003 இந்த பாரம்பரியத்திலிருந்து உடைப்பை ஏற்படுத்தியது. 2009 இல் உருவாக்கப்பட்ட கொள்கை இன்னும் பெருமளவில் இந்த உடைப்பை ஏற்படுத்தியது. சிறு நிறுவனங்கள் கலையிழந்தன. ‘மீப்பெரும் முதலீட்டு மண்டலங்கள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை’ மாநிலத்தில் உருவாக்குவதை சாத்தியமாக்குவதற்கான சட்ட அமைப்பை ஏற்படுத்த, குஜராத் சிறப்பு முதலீட்டு மண்டலச் சட்டம் இயற்றப்பட்டது. உலகத் தரத்திலான உள்கட்டமைப்பை ஆதாரமாகக் கொண்ட உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளுக்கான உலகளாவிய குவியங்களை உருவாக்குவதே அதன் உச்சகட்ட நோக்கமாக இருந்தது. “இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்திலேயே மிகவும் ஈர்க்கத்தக்க முதலீட்டு இலக்காக குஜராத்தை உருவாக்குவதற்காக” அப்பட்டமாக வடிவமைக்கப்பட்ட “2009 தொழில்துறைக் கொள்கையின்” முக்கியமான அம்சமாக இச்சட்டம் இருந்தது.
இது ‘மதிப்புமிக்க நிறுவனங்களை’ (ரூ. 300 கோடிக்கு அதிகமான மூலதனம் கொண்டவை) மட்டுமல்லாமல் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான மூலதனத்தை குறியாகக் கொண்ட “மிகப்பெரும் செயல்திட்டங்களையும்” குறிவைத்தது. ஆனால் நேரடி வேலைவாய்ப்பில் 2000 பேரை மட்டுமே இலக்காக வைத்ததன் மூலம், ரூ. 5,00,000 முதலீட்டுக்கு ஒரு நேரடி வேலை என்ற விகிதத்தையே கொண்டிருந்தது. இது மூலதனத் தீவிரத்தின் அறிகுறியாகும்.
நிலம் மற்றும் தொழிலாளர் தொடர்பான சரத்துகள்
கடந்த 2009 ஆம் ஆண்டில், பெரும் நிறுவனங்களை ஈர்க்க, நிலத்தை அணுகுவது மிகவும் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, தொழிற்துறையினருக்கு விற்பனை செய்வதற்காகவும், சில சந்தர்ப்பங்களில் 99 ஆண்டு குத்தகைக்காக அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக, குஜராத் தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (GIDC) நிலம் கையகப்படுத்துதலைத் துவங்கியது.
புதிய தொழில்துறைக் கொள்கை, அதன் நிலம் தொடர்பான சரத்துகளால், வெறுமனே விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை, உழைப்பாளர்களையும் பாதித்தது. கடந்த 1990கள் வரையில் தொழில்நிறுவனங்கள் புதிய முதலீடுகளின் பொருட்டு மாநிலத்தின் மானியங்கள் அல்லது ஊக்கத்தொகை பெறுவதெனில் 100 நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்த நிபந்தனை படிப்படியாக 100 தொடர்ச்சியான தொழிலாளர்கள் என்று மாறி, கடந்த 2000 ஆம் ஆண்டில் வெறுமனே 100 தொழிலாளர்கள் என்பதாக மாறியது.
விளைவுகள் மற்றும் தாக்கங்கள்
குஜராத்தின் புதிய தொழில்துறைக் கொள்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான மண்டல அல்லது தேசிய அளவிலான பெரும் முதலாளிகளுக்கு பலனளித்தது. அவர்களது நிறுவனங்கள் முழுக்க முழுக்க பெரும் மூலதனம் சார்ந்தவையாக இருந்தனவே அன்றி அதிக தொழிலாளர்களைக் கொண்டதாக இல்லை. இதன் விளைவாக 2009-10 மற்றும் 2012-13 காலகட்டத்தில், இந்தியாவிலேயே அதிக அளவில் முதலீடுகள் குவியும் மாநிலமாக (மகாராட்டிரம் மற்றும் தமிழ்நாட்டிற்கும் மேலான இடத்தில்) குஜராத் இருந்தது. ஆனால் இந்தச் சாதனை, அதிக உழைப்பாளர்களைக் கொண்ட சிறு நிறுவனங்களைக் கொண்டிருக்கும் இதர மாநிலங்களின் அளவிற்கு பணி உருவாக்கமாக மாறவில்லை.
தமிழ்நாட்டுடன் ஒப்பீடு
குஜராத் மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான ஒப்பீடு இவ்விவகாரத்தில் ஒளியூட்டுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய நிலையான மூலதனத்தில் 17.7% ஐ குஜராத் தொழிற்துறைப் பிரிவு தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் தொழிற்சாலைப் பணிகளில் வெறுமனே 9.8% ஐ மட்டுமே கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் நிலையான மூலதனம் 9.8% ஆகவும் தொழிற்சாலைப் பணிகள் 16% ஆகவும் இருந்தது.
சிறு குறு நிறுவனங்களின் வீழ்ச்சி
பெரும் நிறுவனங்கள் அதிக தொழிலாளர்கள் தேவைப்படாத தொழில்களில் முதலீடு செய்ததோடு நின்றுவிடவில்லை. அவர்கள் தங்களுக்கான முக்கிய பொருள்களை வாங்கும் குஜராத்தின் சிறு குறு நிறுவனங்களின் சரிவுக்கும் பங்களிப்பு செய்தனர் (அந்நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் கொடுப்பதில்லை). ஆற்றல்துறையில் இருந்த அதானி குழுமம் போன்ற ஏகபோக நிறுவனங்கள், மின்சாரத்தை அவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்தன. கடந்த 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே குஜராத்தில் மட்டும் சுமார் 60,000 சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.
இவ்வாறாகத் தான், குறைந்தபட்சம் தலா 1,50,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் ஆறு நிறுவனங்களை ஒப்பிடுகையில், இன்றைய சலுகைசார் முதலாளித்துவத்தை (crony capitalism) காவியமாக்கும் கவுதம் அதானியை தலைமையாகக் கொண்ட அதானி குழுமம் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்களை – வெறுமனே 36,000 ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது.
தமிழில்: விக்னேஷ்
நன்றி The wire : https://thewire.in/author/christophe-jaffrelot