புத்தக அறிமுகம்

அர்புத்நாட் வங்கி வீழ்ச்சியும், மறைக்கப்பட்ட வரலாறும் – அ.மு.நெருடா

549 20250309 044527 0000

அர்புத்நாட் வங்கி வீழ்ச்சியும் – இன்றும் நீளும் நூல் வலையும்.

இந்நாவல், வரலாற்றின் மறைக்கப்பட்ட பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுடன், அவற்றின் பின்னணி அரசியலை வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறது. 1906 ஆம் ஆண்டு அர்புத்நாட் வங்கியின் வீழ்ச்சியானது, வரலாற்றில் பெரிதாகப் பேசப்படாத ஒரு சம்பவம். ஆனால், இது வெறும் வங்கியின் வீழ்ச்சியாக இல்லாமல், தமிழகத்தின் சுதேசி இயக்கத்திலும், குறிப்பாக வ.உ.சி. போன்ற விடுதலைப் போராளிகளின் முயற்சிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த நாவல் கோடிட்டுக் காட்டுகிறது.

வ.உ.சி.யின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்பது ஆங்கிலேயர்களின் கடற்போக்குவரத்து ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த ஒரு பொருளாதாரப் புரட்சி. பிரிட்டிஷ் இந்தியாவில் கடல் வணிகத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த வெள்ளையர்களுக்கு எதிராக, வ.உ.சி. கப்பல்களை வாங்கி, மக்களின் ஆதரவுடன் ஒரு சுதேசி நிறுவனத்தை நடத்தினார். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறுவதற்கு முன்பே அர்புத்நாட் வங்கி வீழ்ச்சி நிகழ்கிறது. இந்த வங்கி வீழ்ச்சியால், வ.உ.சி.யும் அவரது ஆதரவாளர்களும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சம்பவம், சுதேசி இயக்கத்தின் பொருளாதாரத் தளத்தை உடைத்தெறிந்ததோடு, வ.உ.சி.யின் அரசியல் வாழ்விலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த வங்கி வீழ்ச்சி தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையையும் பேரழிவுக்குள் தள்ளியது என்பதை நாவல் மிக ஆழமாக எடுத்துக்காட்டுகிறது. அர்புத்நாட் வங்கியில் தங்களது வாழ்வாதாரச் சேமிப்புகளை வைத்திருந்த பல நடுத்தர மற்றும் உயர்மட்ட குடும்பங்கள், ஒரே இரவில் நிலையில்லாத வாழ்விற்குத் தள்ளப்பட்டனர். அந்தக் குடும்பங்களின் மனவேதனைகளை நாவல் புனைவுக் கதாபாத்திரங்களின் வழியாக உணர்த்துகிறது.

முதலாளித்துவ ஆட்சியின் விளைவாக, பெரும்பாலான மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்து தெருவோரம் நிற்கும்போது, அதிகாரத்தில் இருந்தவர்கள் அதனைச் சாதாரணப் பொருளாதாரச் சம்பவமாகவே பார்த்தனர். இதனை முஹம்மது யூசுப் தனது நாவலின் கதாபாத்திரங்களின் மூலம் வெளிக்கொணர்கிறார்.

இந்த நாவல், விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு மறைமுக உண்மையையும் வெளிக்காட்டுகிறது — இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு பிரிவினரின் மோதல். ஒருபுறம் மிதவாதிகள், இன்னொரு புறம் தீவிரவாதிகள் என இரண்டாக உடைந்த காங்கிரஸ், உண்மையில் கொள்கைச் சண்டையை மட்டுமே பிரதிபலிக்கவில்லை. அது ஆழமாகச் சென்று, தனிப்பட்ட சூழ்ச்சிகளாக வடிவமெடுத்தது என்பதையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது.

மிதவாதிகள், பிரிட்டிஷாருடனான சமரச வழிகளைக் கொண்டு விடுதலைக்கான பாதையை அமைக்க விரும்பினார்கள். ஆனால், வ.உ.சி. உள்ளிட்ட தீவிரவாத காங்கிரஸார், பொருளாதாரச் சுதந்திரம், சுதேசி இயக்கம், தனியுரிமை ஆகியவற்றை முன்னிறுத்தினர். இதனால், வ.உ.சி. தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரது முயற்சிகள் பலவீனமடைய, ஒரு வகையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களும், மிதவாத பிரிவினரும் காரணமாக இருந்தனர்.

முஹம்மது யூசுப் இந்த வரலாற்றுப் பின்னணியில், புனைவுக் கதாபாத்திரங்களைச் சேர்த்து, வாசகர்களை வரலாற்றின் மறைமுக வெளிச்சத்தில் சிந்திக்க வைக்கிறார். கடந்த காலத்தை மட்டும் அல்ல, தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டுக் காட்டும் அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

அர்புத்நாட் வங்கி வீழ்ச்சியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்கள் ஆழமான ஆய்வுகளின் மூலமே நாவலுக்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திரட்டிய அனைத்தையும் ஒரே நாவலில் சொல்லிவிட வேண்டும் என்கிற நாவலாசிரியரின் அவசரம் கதையின் ஓட்டத்தைச் சில பகுதிகளில் சிதறச் செய்கிறது. குறிப்பிட்ட இடங்களில் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வடிவமைத்திருக்கலாம்.

கதைமாந்தர்களின் உரையாடல், உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்கள் அனைத்தும் நாவலைச் சுவாரஸ்யமாக நகர்த்த உதவுகிறது. ஆனால், சில இடங்களில் அதீத சினிமாத்தனம் கதையின் உண்மைத் தளத்தைப் பறித்துவிடுகிறது. வரலாற்றுப் பின்னணியில் கோட்பாடுகளின் குவியல் இருந்தாலும், சலிப்பு ஏற்படாமல் கதையை நகர்த்தி வைத்திருக்கிறார். அதே நேரத்தில், சில புனைவுக் காட்சிகள் தேவையில்லாமல் நீள்கின்றன என்பது உண்மை.

மொழி நடை தெளிவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. ஆனால், வட இந்திய சேட்டு பேசும் இடங்களில் ஒரே வசனத்தைத் தமிழிலும் ஹிந்தியிலும் மீண்டும் இடுவது, வாசிக்கக் கடினமாகிறது. இது கதையின் ஓட்டத்தைத் தடுக்கிறது. வாசகர்கள் அந்தக் கதாபாத்திரம் அதன் மொழியில் பேசுவதை ஏற்கனவே புரிந்துகொள்கிறார்கள் என்பதால், ஒரே வசனத்தை இருமுறை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மாயச் சதுகரம் வெறும் வரலாற்றை விவரிக்கும் ஆவண நாவல் அல்ல. மறைக்கப்பட்ட வரலாற்றை, வாசகர்களின் சிந்தனைக்குக் கொண்டு வந்து, அதை விளக்குவதற்காக மட்டுமல்ல, “நாம் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும், எதை நாம் மறக்கச் சொல்லப்படுகிறது?” என்பதையும் கேள்வி எழுப்புகிறது.

வரலாற்றை யார் எழுதுகிறார்கள்? வரலாற்றை யார் மறைக்கிறார்கள்? எதற்காகச் சில விஷயங்கள் பேசப்படுகின்றன, ஏன் சில விஷயங்கள் சுடச்சுட மறைக்கப்படுகின்றன? — இந்தக் கேள்விகளை வாசகரின் உள்ளத்தில் விதைக்கிறது.

வ.உ.சி.யின் போராட்டங்கள், அர்புத்நாட் வங்கியின் வீழ்ச்சி, சுதேசி இயக்கத்துக்கான பின்னடைவு, காங்கிரசின் உள்நாட்டுப் பிளவுகள், மற்றும் வழிவழியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனைகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, வரலாற்று உண்மைகளுக்கு ஆழமான குரலைக் கொடுக்கும் மாயச் சதுகரம் — உண்மைகளை வெளிக்கொணரும் புனைவின் வலிமையை நிரூபிக்கும் அற்புதமான முயற்சி.

நூல்: மாயச் சதுகரம்

எழுதியவர்: முஹம்மது யூசுப்

வெளியீடு: யாவரும் பதிப்பகம்

விலை: 399

அ. மு. நெருடா

2 Comments

  • அருமையான அலசல். விமர்சனம் சிறப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply