“சாமானிய மக்களுக்குக் கிடைக்குமா குடிமனைப்பட்டா?”
இந்தத் தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நான்கு சுவர்களுக்கு நடுவே ஓர் அரங்கில் அல்லாமல் பொதுக்கூட்டமாக அந்தக் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றது. ஆகவே கருத்தரங்கில் பேசப்படும் சாமானிய மக்கள், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறவர்கள், நிறையப்பேர் கூடியிருந்தார்கள். முதலில் பேசுகிறவர்கள் வட்டாரம் தொடர்பான குறிப்பான பிரச்சினைகளை முன்வைத்தார்கள். நிறைவுரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்.
நீண்டகாலமாகக் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க மறுப்பதற்குக் கூறப்படும், குளமும் ஏரியும் அமைந்த இடங்கள் என்ற காரணங்களின் போலித்தனத்தை உரித்துக் காட்டிய அவர், சென்னையில், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் குளங்களை மேடுபடுத்திக் கட்டப்பட்டுள்ள அரசுக் கட்டடங்களைப் பற்றிச் சொன்னார். பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஏன் இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றங்களே கூட குளங்களின் மேல்தான் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினார். சென்னையில் விட்டுவைக்கப்பட்டிருக்கிற கோயில் குளங்களைக் குறிப்பிட்டார்.
“மயிலாப்பூர் குளத்தின் மேலே வீடு கட்டுவதற்கா பட்டா கேட்கிறோம்? திருவல்லிக்கேணி குளத்திலா பட்டா கேட்கிறோம்?”
என்று அவர் கேட்டபோது, என் அருகில் அமர்ந்திருந்தவர் இல்லை என்று தலையை ஆட்டினார்.

“சென்னை ஒரு மாநகரமாக வளர்வதற்குப் பங்களித்த அடித்தட்டு உழைக்கும் மக்கள், பத்துக்குப் பத்தடி இடத்தில் நான்கு ஓலைத்தட்டிகளே சுவர்களாக, தொங்கவிடப்பட்ட கோணித் துணியே கதவாக, பெரிய கட்சிகளின் விளம்பர ஃப்ளெக்ஸ் திரைகளே கூரையாக வாழ்ந்துகொண்டிருக்கிற இடங்கள், ஏதோவொரு காலத்தில் குளமாக இருந்தவை, நீர்வழிப்பாதைகள் மறிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மேடாகிவிட்டன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளாவே இல்லாத, இனிமேல் ஒருபோதும் அப்படி மறுபடியும் மாற முடியாத அந்த இடங்களில் வாழ்கிறவர்களுக்குத்தான் பட்டா கோருகிறோம். குளப் பகுதி என்று ஆவணங்களில் இருப்பதைப் புறம்போக்கு என்று மாற்றினால் அந்த வாழ்விடங்களை அவர்களுக்கு உறுதிப்படுத்த முடியும். அப்படி வகைமாற்றம் செய்வதற்கு என்ன கேடு?”
“திடீர்த்திடீரென்று அதிகாரிகள் இயற்கை ஆர்வலர்களாக அவதாரம் எடுப்பது அதிசயமாகத்தான் இருக்கிறது” என்று அவர் கூறியவர், “அரசு இந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்குமானால், இவர்களை வெளியேற்ற புல்டோசர்கள் வருமானால், முன்பு அவற்றைத் தடுத்து நிறுத்தியது போன்ற போராட்டங்களைக் கட்சி முன்னெடுக்கும்,” என்று அறிவித்தார். அந்தப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம், பக்கத்து இருக்கைக்காரர் உள்பட அங்கே வந்திருந்த கட்சிக்காரர்கள் அல்லாத மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என உணர முடிந்தது.
எ.கா. இல்லாமல் போனால்
கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட வாதத்தைக் கட்டுரையாக்குகிறபோது நேரடியாகப் பேசினால் போதாதா, அதிலே எடுத்துக்காட்டுகள் தேவையா என்ற வினாவுக்கு விடையளிக்க அமர்ந்தபோது இந்த உரை உடனடியாக நினைவுக்கு வந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியல்லாத மக்களுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை பேசப்பட்டதால் மட்டுமே அல்ல. எளிமையான பேச்சில் இடம்பெற்ற எடுத்துக்காட்டுகள் முக்கியமான காரணம். சொல்லாடல்கள் முன்னே பின்னே அமையக்கூடிய உரைக்கு எடுத்துக்காட்டுகள் தேவைப்படுகின்றன என்றால், பேசப்படும் உரையை எழுதப்படும் உரையாகக் கட்டமைக்கும் கட்டுரைக்கு அவை தேவை என்று மேற்கொண்டு விளக்க வேண்டியதில்லை.

எடுத்துக்காட்டுகள் தேவையா எனும் இந்தக் கட்டுரைக்கே கூட, ஏன் தேவைப்படுகின்றன என்பதற்குள் நேரடியாகச் செல்லாமல், அந்தப் பொதுக் கருத்தரங்கத்தையும் அதன் நிறைவுரையையும் எடுத்துக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இனி ஏன் தேவை என்றும் அதன் பலன்களையும் பார்ப்போம்.
கட்டுரை எழுத்துகளில் எடுத்துக்காட்டுகளையும் நேர்வுகளையும் பயன்படுத்துகிறபோது முன்வைக்கும் கருத்து தெளிவாகிறது, அந்தக் கருத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது, வாசிக்கிறவர்களுக்கு அந்தக் கருத்துகளில் ஈடுபாடு ஏற்படுகிறது. பல முக்கியமான கட்டுரைகள் எடுத்துக்கொண்ட கருப்பொருளை ஆழ்ந்த அக்கறையோடு வலுவாக முன்வைக்கின்றன, ஆனால் வாசக மனதிலிருந்து பின்வாங்கி நிற்கின்றன. அதற்கு அடிப்படையான ஒரு காரணம், எ.கா. இல்லாமல் போவதுதான். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, அடைப்புக் குறிகளுக்குள் எ.கா. என்று குறிப்பிட்டு ஒரு செய்தியை, நிகழ்வைப் பதிவு செய்யலாம். அடைப்புக் குறிகளுக்குள் போகாமல், “எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்,” என்று குறிப்பிட்டுவிட்டு, எழுதப்படும் பத்திக்கு உள்ளேயோ, தனிப் பத்தியாகவோ எடுத்துக்காட்டு நிகழ்வைச் சேர்க்கலாம்.
காட்சியாய் விரியும் கருத்து
பள்ளிப் புத்தகங்களில் பாடக்குறிப்புகளோடு படங்கள் வைக்கப்படுகின்றன. நாம் பள்ளியில் படித்தபோது புத்தகங்களில் இருந்த சித்திரங்களின் வழியாகவே பாடங்களை உள்வாங்கினோம். ஆகவேதான் இத்தனை ஆண்டுகளாக அவற்றை மறக்காமல் இருக்கிறோம். அந்தச் சித்திரங்களைப் போன்றுதான், கட்டுரையில் சித்தரிக்கப்படும் எடுத்துக்காட்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். வாசிக்கிறவர், முன்வைக்கப்படும் வாதத்தை மனதில் காட்சியாகக் காண்கிறார். உள்ளடக்கத்தோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். கருத்தைப் புரிந்துகொள்கிறார். அந்தக் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் அவருடைய உரிமை ஆனால் புரிந்துகொண்டதன் அடிப்படையில் ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதற்கு எடுத்துக்காட்டுகள் உதவுகின்றன.
தெளிவையும் புரிதலையும் தருவதோடு, நம் கருத்துக்கு ஒரு நம்பகத்தன்மை எடுத்துக்காட்டுகளால் அமைகிறது. உலக நடப்புகளும் வாழ்க்கை உண்மைகளும் வரலாற்றுச் சான்றுகளும் வல்லுநர் கருத்துகளும் எடுத்துக்காட்டப்படுகிறபோது கட்டுரைக்கு வலுவான ஆதாரமும், ஓர் உறுதியான ஆளுமைத்தன்மையும் கிடைத்துவிடுகிறது. அந்த எடுத்துக்காட்டுகள் சரியானவையாக, பொருத்தமானவையாக இருப்பது ஒரு முக்கியத் தேவை. சும்மா வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிரப்பட்டதை அப்படியே நம்பி ‘ஜெராக்ஸ்’ எடுப்பதாக இருக்கக்கூடாது. அதன் உண்மைத்தன்மையை உரியவர்களிடம் விசாரித்து, அல்லது தொடர்புள்ள நூல்களைப் புரட்டி, அல்லது தரவுத் தளங்களில் மேற்கொண்டு தேடி சரிபார்த்து நிச்சயப்படுத்திய பிறகே நம் கட்டுரையில் இணைக்க வேண்டும். இல்லையேல், ஒருவேளை அது தவறான தகவலாக இருக்குமானால், அது வெளிப்பட்டுவிடும் எழுதியவரைக் காட்டிக் கொடுத்துவிடும், அவர் எழுதியிருக்கக்கூடிய மற்ற கருத்துகள் நியாயமாக இருந்தாலும் நிராகரிக்க வைத்துவிடும்.
பண்பாட்டுப் பொருத்தம்
இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. தமிழில் எழுதுகிறோம், தமிழ் வாசகர்களை நோக்கி எழுதுகிறோம் என்கிறபோது, பண்பாட்டுப் பொருத்தத்துடன் எடுத்துக்காட்டுகள் இருப்பது பரவலாகச் சென்றடைய உதவும். நாம் ஏற்கெனவே படித்த ஒரு புத்தகத்தில், செய்தியில், கட்டுரையில் மேற்கத்தியப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம். இங்கே பெரிய அளவுக்குத் தெரியவராத வட மாநிலப் பழக்கவழக்கங்கள் சார்ந்த தகவலாகவும் இருக்கலாம். விளக்கம் ஏதுமின்றி அந்த நிகழ்வையும் தகவலையும் அப்படியே பொருத்துவது, வாசகரை நம் கட்டுரைக்கு நெருங்கவிடாமல் தடுத்துவிடக்கூடும்.
ஒருவேளை, அந்த மேற்கத்தியப் பண்பாட்டு நிகழ்வு சுவையானதாக இருக்கிறது என்றால், வடமாநிலப் பண்பாட்டுத் தகவல் விரிவான புரிதலுக்கு உதவும் என்றால், அவற்றை உரிய விளக்கங்களுடன் பயன்படுத்தலாம். கட்டுரையில் அந்த நிகழ்வையோ தகவலையோ எந்த இடத்தில் பயன்படுத்துகிறோமோ அதே பத்தியில் நம் விளக்கமும் இடம்பெற்றுவிட வேண்டும்.
அனோராவும் அலிகார்ச்சும்
இதற்கோர் எடுத்துக்காட்டு: இந்த ஆண்டு ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘அனோரா’ பற்றி எழுத வேண்டியிருந்தது. அதில், அமெரிக்காவில் ரஷ்ய மொழி அறிந்தவளான பாலியல் தொழில் பெண்ணைக் காதலித்து மணந்துகொள்கிறான் ஒரு பணக்கார ரஷ்ய வாலிபன். அவனுடைய பெற்றோர் அந்தத் திருமணத்தை முறித்துக் காதலியை விரட்டிவிட முயல்கிறார்கள். அவர்கள் யாரென்றால் ரஷ்யாவில் ‘அலிகார்ச்’ என்று அடையாளப்படுத்தப்படும் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள கும்பல் என்று சொல்லிவிட்டுக் கட்டுரையைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் ஏன் அந்தச் சொல் வருகிறது என்று தேடியபோது ஒரு பின்னணி தெரியவந்தது. அதாவது, 1990களின் தொடக்கத்தில் சோசலிச சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார்மய வேட்டைகள் தொடங்கின அல்லவா? அப்போது அரசாங்கத்தின் சொத்துகளைக் கைப்பற்றிப் பெரும் பணக்காரர்களா, அரண்மனை வாழ்வு வாழ்கிற செல்வாக்கு மிக்க கும்பல் ‘அலிகார்ச்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறது. கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருப்பது அந்த நாட்டின் இனறைய சமூகப் பொருளாதார அரசியலைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது என்று நண்பர்கள் தெரிவித்தார்கள். படத்தின் இயக்குநர் சீன் பேக்கர் இது பற்றிய ஒரு விமர்சனப் பார்வையோடும்தானே அந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பார்?
இந்தத் தொடரின் தொடக்கத்தில், சொந்த அனுபவங்களைக் குறிப்பிடலாமா என்ற வினா பற்றிப் பார்த்தோம். கட்டுரையில் முன்வைக்கும் கருத்துகளுக்கு வலுச் சேர்க்க நம் சொந்த அனுபவத்தைச் சேர்க்கலாம் என்று பேசினோம். எடுத்துக்காட்டுகளாகவும் சொந்த அனுபவங்களைப் பகிர்வது கட்டுரைக்கு ஓர் உயிரோட்டத்தை வழங்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால், கருத்துகளின் தொகுப்பாக மட்டுமே அமைந்து வறட்சியான எழுத்தாகிவிடக்கூடிய ஒரு கட்டுரையாக்கத்தை எடுத்துக்காட்டுகளும் நிகழ்வுகளும் தாக்கத்தை ஏற்படுத்துகிற, ஈடுபட வைக்கிற படைப்பாகப் பரிணமிக்க வைக்கின்றன.
மாணவியின் கற்பனை
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரையாக்கப் பயிலரங்கம் ஒன்றை நடத்திக்கொடுக்க மூன்று பேர் கொண்ட ஒரு குழுவாகச் சென்றிருந்தோம்., “எக்ஸாம்பிள் கொடுக்கிறப்ப நிஜமான சம்பவத்தை மட்டும்தான் எழுதனுமா? இமேஜினரியா ஒரு இன்சிடென்டைச் சேர்க்கலாமா கூடாதா,” என்ற கேள்வி ஒரு மாணவியிடமிருந்து வந்தது.

“தாராளமா கற்பனை நிகழ்வை எடுத்துக்காட்டாகச் சேர்க்கலாம். அது சுவையாகவும், நீங்கள் சொல்ல வந்த கருத்துக்குத் துணையாகவும் இருக்க வேண்டும், அவ்வளவுதான்,” என்று நாங்கள் பதிலளித்தோம்.
”அது இமேஜினேஷன்தான்னு கட்டுரையிலேயே மென்ஷன் பண்ணனுமா?” இந்த வினா ஒரு மாணவனிடமிருந்து வந்தது.
“கற்பனைதான் என்று குறிப்பிடவும் செய்யலாம், கற்பனை என்று தெரிந்தால் ஒதுக்கிவிடுவார்கள் என்று நினைத்தால் குறிப்பிடாமலும் விடலாம். அந்தக் கற்பனை உண்மை போலவும் தெரிய வேண்டும், யாரையும் வம்புக்கு இழுக்காததாகவும் இருக்க வேண்டும். இனிமையான கற்பனை வேறு, தீங்கான பொய் வேறு,” என்று கூறினோம்.
“ரியல் இன்சிடென்டைச் சொல்றப்ப அதை எப்படித் தெரிஞ்சிக்கிட்டோம்னு சொல்லிடனுமா?”
“ஆம். உண்மையான நிகழ்வைக் குறிப்பிடும்போது அந்தத் தகவலை எங்கேயிருந்து எடுத்தோம் என்று கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்., அதே மாதிரி, வேறு ஒருவரின் கருத்தைப் பயன்படுத்துகிறபோது அவருடைய கருத்துதான் இது என்று தெரிவித்துவிட வேண்டும். அது ஏதோ நம்முடை சொந்தக் கருத்து என்ற போலியான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது, அது அறம் ஆகாது,” என்று சொன்னோம்.
உரைகள், விளக்கங்களுக்குப் பிறகு செயல்முறைப் பயிற்சிக்கு வந்தபோது பங்கேற்ற எல்லோரும் பல வகைகளில் கட்டுரைகளை எழுதியிருந்தார்கள். முதல் கேள்வியைக் கேட்ட மாணவியின் கட்டுரையில் இந்தக் கதை இருந்தது: “ரவி என்ற மாணவன், இனிமேல் தனது வீட்டுப் பாடத்தை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டமிடுவான். ஆனால் தொடர்ந்து அதைத் தள்ளிப் போடுவான். ஒரு நாள் மாலை, அவனுக்குப்பிடித்தமான தொலைக்காட்சித் தொடரின் ஒரு அத்தியாயத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுப் பாடத்தைத் தொடங்கலாம் என்று முடிவு செய்தான். அது மூன்று அத்தியாயங்களாக மாறின, அதை அவன் உணர்ந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. பதற்றம் ஆட்கொள்ள, அவன் அவசர அவசரமாக வேலையை முடிக்கிறான், இதன் விளைவாக மறுநாள் வகுப்பிலேயே அவனுடைய வீட்டுப்பாடம்தான் அவசரமாகவும் மோசமாகவும் எழுதப்பட்டதாக இருந்தது. குறைந்த மதிப்பெண்களைப் பார்த்து ரவி தனது முடிவுக்காக வருந்தினான்.
நேர மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரைக்கு இந்தக் கற்பனையான எடுத்துக்காட்டு பொருத்தமாக இருந்தது. நிறைவாக பயிற்சி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட மாணவர்களில் பலர் அந்தக் கதை தங்களுடைய சொந்த அனுபவம் போல இருக்கிறது என்று தெரிவித்தார்கள். மாணவியைப் பாரட்டிவிட்டு, எதிர்கால எழுத்தாளர்கள் பற்றிய நம்பிக்கையோடு விடைபெற்றோம்.
பயிற்சியளிக்கச் சென்றிருந்த குழுவின் பதில்களை மறுபடி பாருங்கள். ஒரு பதிலின் முடிவில் “கூறினோம்” என்று இருக்கிறது. மற்றொரு பதில் “சொன்னோம்” என்று முடிகிறது. இது பற்றி அடுத்த கட்டுரையில் பேசுவோம்.
– அ. குமரேசன்