இலக்கியம்தொடர்கள்

எத்தனை சொற்களில், எத்தனை வாக்கியங்களில் எழுத வேண்டும்? (சுவையாக எழுதுவது சுகம் – 16) – அ.குமரேசன்

549

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க

ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை முறை வரலாம்?

கட்டுரை, கதை என எழுதத் தொடங்குகிறபோது இயல்பாக எழக்கூடிய கேள்விகள் இவை. நிலையான பதில்கள் இல்லாத கேள்விகள். எடுத்துக்கொண்ட கருப்பொருள், அதனை வெளிப்படுத்தும் வாக்கியங்கள், அந்த வாக்கியங்களைக் கொண்ட பத்திகள், பல பத்திகளைக் கொண்ட கட்டுரை அல்லது கதை என்று உருவாகிறபோது தேவையையொட்டி இந்த எண்ணிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுவிடும். எழுதிக்கொண்டிருக்கிறபோது நமக்கே இந்த வாக்கியம் அளவுக்கு மேலே நீள்கிறதே, வாசிக்கிறவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடுமே  என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். சரியான இடத்தில் முற்றுப் புள்ளி வைத்துவிடுவோம். எழுதிக்கொண்டிருக்கிற பத்தி முடியாமல் அடுத்த பக்கத்திற்குப் போய்விடும் போல இருக்கிறதே என்று நமக்கே தோன்றும். அப்போது அந்தப் பத்தியை நிறுத்திக்கொண்டு அடுத்த பத்தியைத் தொடங்கலாம்.

பொதுவாக செய்தி நாளேடுகளில் ஒரு பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது, புதியவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. ஒரு செய்தியை எழுதுகிறபோது பத்து சொற்களைத் தாண்டாமல் ஒரு வாக்கியம், மூன்று அல்லது நான்கு வாக்கியங்களுக்கு மிகாமல் ஒரு பத்தி என்று அமைத்துக்கொள்வதற்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்த முறையில் பழகிக்கொண்ட ஒருவர், பரபரப்பான ஒரு புதிய நிகழ்வு பற்றியோ, முன்னுக்கு வந்துள்ள ஒரு பிரச்சினை குறித்தோ கட்டுரையாக எழுத முற்படும்போது அந்தப் பயிற்சியனுபவம் தானாகவே சேர்ந்துகொள்ளும். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகளில் இவ்வாறு அளவான சொற்களுடன் வாக்கியங்கள், அதிகமாகச் சேர்ந்துவிடாத வாக்கியங்களுடன் பத்திகள் என்று இருப்பதைக் காணலாம். அது வாசகர்கள் அயர்ச்சியின்றி வாசிப்பதற்கு உதவியாக இருக்கும்.

பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் எழுதுகிறபோதும் இதே வழிமுறை பயன்படும். எழுதி முடித்துப் பத்திரிகைக்கு (இணையப் பதிப்புகளுக்கும்) அனுப்பிய பிறகு, அதை வெளியிடலாம் என்று முடிவு செய்யும் ஆசிரியர் குழுவினர் நீண்ட வாக்கியங்களையும் பத்திகளையும், தோட்டச் செடிகளைப் பராமரிப்பது போல, வாசிப்புக்கேற்ற அளவுகளுக்குத் திருத்திவிடுவார்கள். அவர்களுக்கு அந்த வேலையைக் கொடுக்காமல் நமது கட்டுரையை நாமே கச்சிதமாக அமைத்து அனுப்புவது சிறப்பாக இருக்கும். பத்திரிகைகளிலிருந்தே கட்டுரை கேட்டு வேண்டுகோள் வருகிறபோது, எத்தனை சொற்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துவிடுகிறார்கள்.

தொடக்கத்தில் சொன்னது போல இதற்கு நிலையான, வரையறுக்கப்பட்ட விதிகள் இல்லை. கட்டுரையின் கருத்து பரவலாக வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கவனத்துடன் எழுதும்போது இந்த வழிமுறை உதவியாக இருக்கும் அவ்வளவுதான். அடர்த்தியான ஆய்வுக் கட்டுரை, ஆழமான வாதங்கள் என எழுத/தட்டச்சிட  அமர்கிறபோது நீண்ட வாக்கியங்களும், அகன்று விரியும் பத்திகளும் தேடி வந்து உட்கார்ந்துகொள்ளும். அத்தகைய ஆக்கங்களைப் படிக்கிறவர்களின்  வாசிப்புத் திறனும் வேறு மட்டத்தில் இருக்கும் என்பதால் அந்த அடர்த்தியும் ஆழமும் நீளமும் அகலமும் அவர்களுக்கு ஏற்புடையதாகவே இருக்கும். இதில் எது சிறந்தது என்ற வாக்குவாதத்திற்கே இடமில்லை. இருவகை எழுத்து முயற்சிகளும் அதனதன் நோக்கத்திற்கு உண்மையானவையாக, அதனதன் வாசகத்தளத்திற்கு இணக்கமானவையாக இருப்பது சிறந்தது.

ஒரே வாக்கியக் கதை

அண்மையில் ஆங்கிலச் சிறுகதை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இலக்கண நுட்பப்படி கதை ஒரே வாக்கியம்தான். முதல் சொல்லில் தொடங்குவதில் இருந்து கடைசிச் சொல்லில் முடிகிற வரையில் இடையில் எங்குமே முற்றுப்புள்ளி இல்லாமல், காற்புள்ளிகளும் (கமா), அரைப்புள்ளிகளும் (செமிகோலன்) இடப்பட்டிருக்கும். இணையத்தில் தேடியபோது அந்தக் கதை கிடைத்தது. ஜமைக்கா  கின்காயிட் என்ற ஆன்டிகுவான்–அமெரிக்க எழுத்தாளர் (தற்போது 75 வயது) 1978ல் எழுதி ‘நியூயார்க்கர்’ என்ற பத்திரிகையில் ‘கேர்ள்’ என்ற தலைப்பில் அந்தக் கதை வெளியானது.

Jamaica kincaid
ஜமைக்கா கின்காயிட்

நடுவில் முற்றுப்புள்ளி இல்லாத ஒரே நீண்ட வாக்கியம் என்ற புதிய வடிவத்திற்காக மட்டுமல்லாமல், சமுதாயம் எவ்வாறு தனது ஓயாத போதனைகளால் பெண்களின் அன்றாட வாழ்க்கையை எந்திரத்தனமானதாக, குறிப்பிட்ட வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்வதாக வடிவமைக்கிறது, அவர்களுடைய படைப்பாக்கத் திறன்களை உலர்ந்து போகச் செய்கிறது, தலைமுறை தலைமுறையாக இப்படியே தொடர்கிறது என்று உணர்த்தும் சமூக விமர்சனத்திற்காகவும் பாராட்டுப் பெற்றது. பெண்ணின் அன்றாட உழைப்பிற்கும், வீட்டிலும் வெளியிலும் அவள் அடக்க ஒடுக்கமாக “நல்ல பெண்” என்ற பெயருடன் இருக்க வேண்டியிருப்பதற்கும் முற்றுப்புள்ளியே கிடையாது என்ற செய்தியும் கூட அந்த உத்தியில் பொதிந்திருக்கிறது. உலகம் முழுவதும் இவ்வாறு வார்க்கப்படுகிற சக பெண்களுக்காக, அவர்களைப் பற்றி உலகம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக  ஜமைக்கா கின்காயிட்  உருவாக்கிய படைப்பு அது.

Girl
கேர்ள் – ஒரே வரி சிறுகதை

உலகின் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ள இக்கதை, தமிழில் ‘பொண்ணு’ என்ற தலைப்பில், எனது மொழிபெயர்ப்பில் ‘செம்மலர்’ இலக்கிய ஏட்டின் இந்த மாத (மார்ச் 2025) இதழில் வெளியாகியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பகிர்வின் நோக்கம், ஒரே நீண்ட வாக்கியமாகவும் ஒரு படைப்பு இருக்க முடியும் என்று காட்டுவதே.

கவிஞர் வைரமுத்து, ஒரு நீண்ட வாழ்த்துரையை, இடையில் காற்புள்ளிகளை மட்டுமே வைத்து எழுதி, ஒரு மேடையில் வாசித்தார். அவருக்கே உரிய கவித்துவச்  சொற்களோடு அமைந்த அந்த உரை இணையத்தில் உலா வந்தது.

65 பக்க சிறுகதை!

சிறுகதை இலக்கியத்தில் உலகப்புகழ் பெற்ற படைப்பாளி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான மாப்பசான். முந்நூறுக்கு மேற்கட்ட சிறுகதைகளையும் சில நாவல்களையும் வழங்கியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டவரான அவருடைய முழுப் பெயர் ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான். தன்னுடைய பெயரைப் போலவே நீளமான  சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். (இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “வழங்கியிருக்கிறார்“, “எழுதியிருக்கிறார்” என்று நிகழ்கால வினைமுற்று வரலாமா? வழங்கினார், எழுதினார் என்று கடந்தகாலத்தில்தானே எழுத வேண்டும்? அவர் காலமாகிவிட்டாலும், தன் படைப்புகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். ஆகவே “வழங்கியிருக்கிறார்”, “எழுதியிருக்கிறார்” என்று எழுதுவதில் தவறில்லை. இது பற்றி இத்தொடரில் ஏற்கெனவே ‘இறந்தவர் எப்படி இருக்க முடியும்’ என்ற கட்டுரையில் பேசியிருக்கிறோம்.)

Mopasa
மாப்பசான்

அவர் எழுதிய ‘பியர் எ ஜேன்’ என்ற சிறுகதை 65 பக்கங்களுக்குப் போகும். பதிப்பகம் எப்படி புத்தகத்தைத் தயாரிக்கிறது  என்பதைப் பொறுத்துப் பக்கங்கள் கொஞ்சம் கூடலாம், குறையலாம். இரண்டு சகோதரர்களின் ஒரு வாழ்க்கை நிகழ்வைச் சித்தரிக்கும் அந்தக் கதையை அத்தனை பக்கங்களில் எழுதியிருந்தாலும், அதனை நாவல் அல்லது குறுநாவல் என்ற வரிசையில் சேர்க்காமல், சிறுகதை வரிசையிலேயே வைத்திருக்கிறது இலக்கிய உலகம். நாவலா,  சிறுகதையா என்று தீர்மானிப்பது பக்கங்களின் எண்ணிக்கை அல்ல, எடுத்துக்கொள்ளப்பட்ட கரு எவ்வாறு முன்வைக்கப்படுகிறது, எத்தனை காட்சிகளில், எத்தகைய வாழ்க்கை/சமூகப் பின்னணிகளைக் காட்டும் வகையில் சித்தரிக்கப்படுகிறது என்பதே அதை முடிவு செய்கிறது. அவ்வகையில் இது ஒரு சிறுகதை.

மாப்பசானே இப்படி நிறையப் பக்கங்கள் எழுதியிருக்கிறார் என்று நாமும், தேவையே இல்லாமல் பக்கங்களை இழுத்துக்கொண்டு போனால் என்ன ஆகும்? நமக்கு இலக்கியம் பற்றிய ஞானமோ, எழுத்தாக்குவது பற்றிய பயிற்சியோ இல்லை என்பது  அம்பலமாகும். ஈடுபாட்டுடன் முயல்வோமானால் நாம் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கமும், அதன் வெளிப்பாடும் எத்தனை சொற்கள், எத்தனை வாக்கியங்கள், எத்தனை பத்திகள், எத்தனை பக்கங்கள் என்று முடிவு செய்துகொள்ளும். அதெப்படி தானாகவே முடிவு செய்யும்? ஈடுபாட்டுடன் முயன்றால் தெரியும்.

மிகக்குறுகிய சிறுகதை

விற்பனைக்கு தயார்: சிசு காலணிகள், ஒருபோதும் அணியப்படாதவை”. இது ஒரு சிறுகதை என்றால் வியப்படைவீர்கள்.  உண்மையிலேயே இது, ஆறே ஆறு சொற்களில் எழுதப்பட்ட சிறுகதை! எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆங்கிலத்தில் (“ஃபார் சேல்: பேபி ஷூஸ், நெவர் வொர்ன்“) எழுதி, 1906ஆம் ஆண்டில் வெளியானது. உலகத்திலேயே மிகக்குறுகிய சிறுகதை என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். கதை என்ன என்று முதலில் புரியவில்லை என்றாலும், தொடர்ந்து யோசித்ததில், ஒரு குடும்பத்திற்குப் புதிய வரவாகப் பிறக்கவிருந்த சிசுவுக்கென வாங்கி வைத்திருந்த குட்டிக் காலணிகள் விற்பனைக்கு வருகின்றன. அந்தக் காலனிகள் ஒரு முறை கூடப் பயன்படுத்தப்படாமல் புத்தம் புதிதாக விற்கப்படுகின்றன என்றால் என்ன பொருள்? ஆம், கர்ப்பத்திலேயே கரு கலைந்துவிட்டது, அல்லது இறந்தே பிறந்தது, அல்லது பிறந்தவுடன் இறந்துவிட்டது.  உலகத்தின் மிகச்சிறிய சோகக்கதை என்றும் இதனை ஆங்கில இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்தக் கதையைத் தொடர்ந்து இத்தகைய சுருக்கப் படைப்புகள் “மின்னல் புனைவு” (ஃபிளாஷ் ஃபிக்‘ஷன்) என ஒரு இலக்கியப் பிரிவாகவே அடையாளம் பெற்றன.

Ernest hemingway
எர்னஸ்ட் ஹெமிங்வே

தமிழ் இதழ்களில், ‘குமுதம்’ ஏடு, பல ஆண்டுகளாக ஒரு பக்கக் கதை என்றே வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதில் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆக்கங்கள், மேலோட்டமான நிகழ்வுச் சித்தரிப்புகள் இரண்டுமே இடம் பெறுகின்றன. இரண்டுக்குமே வாசகர்கள் இருக்கிறார்கள்.    

ஆக, எத்தனை சொற்களில் வேண்டுமானாலும் வாக்கியத்தை அமைக்க முடியும்  –அது நீண்ட பத்திகளில் பல பக்கங்களுக்கு விரிவதாகவும் இருக்கலாம், ஒரே வரியில் முடிவதாகவும் இருக்கலாம். வாசிப்பு சுகத்தைத் தருகிற, ஆழ்ந்து சிந்திக்க வைக்கிற எழுத்துகள் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடும்.

கட்டுரையாக்கத்திலும் அப்படிப்பட்ட மாறுபட்ட  முயற்சிகளைச் செய்து பார்த்தால் என்ன என்று மனதில் தோன்றுகிறது.

இன் ஒட்டு

“வாசிப்பு சுகத்தின் அனுபவத்தின் வெளிப்பாடுகளை புத்தகத்தின் செழுமைக்கான  திறனாய்வின் பதிவுகளில் காண முடியும். சொற்களின் எண்ணிக்கையின் பெருக்கத்தால் மட்டும் அந்த அனுபவத்தின் உணர்வு எழுச்சியின் விளைவைக் காண இயலாது.”

எத்தனை சொற்கள், எத்தனை வாக்கியங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிற இடத்தில் இதென்ன தொடர்பில்லாமல் இரண்டு வாக்கியங்கள்? சென்ற கட்டுரையை முடித்த இடத்தில், “… ஒரு வாக்கியத்தில் தொடர்ச்சியாக வரும் சொற்களின் முடிவில் “இன்” ஒட்டு சேர்க்க வேண்டியிருந்தால் அதை  எப்படி சமாளிப்பது? இந்தக் கேள்விகளை அடுத்த அமர்வில் சமாளிப்போம்,” என்று கூறியிருந்தேன்.

மேலே உள்ள இரண்டு வாக்கியங்களில் “சுகத்தின்”, அதற்கடுத்து “அனுபவத்தின்” என்று இரண்டு சொற்கள் “இன்” என்ற ஒலியில் முடிகின்றன. அதைத் தொடர்ந்து, “புத்தகத்தின்”, “திறனாய்வின்” ஆகிய இரண்டு “இன்” ஒலிச் சொற்களை “செழுமைக்கான” என்ற சொல் பிரிக்கிறது.  அதே போல் “சொற்களின்”, “எண்ணிக்கையின்” என்ற இரண்டு சொற்கள் அடுத்தடுத்து “இன்” ஒலியோடு வருகின்றன. மறுபடியும்  ‘அனுபவத்தின் உணர்வு எழுச்சியின்” என இரண்டு இன் ஒலிச் சொற்களுக்கு நடுவே வேறொரு சொல் வருகிறது. மாதிரிக்காக எடுத்துக்காட்டுவதால் எளிமையான வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை விடப் பின்னலான, அடுத்தடுத்து “இன்” என்ற ஒலியில் முடியும் சொற்களைக் கோர்த்து எழுதப்பட்ட வாக்கியங்களோடு கட்டுரைகள் எழுதப்படுவதைக் காணலாம்.

இது வாசிப்பதற்குத் தோதாக இதமான நிலையை ஏற்படுத்துவதில்லை. இந்த இன்னொட்டுச் சிக்கலைச் சமாளிப்பதற்கு என்ன செய்யலாம்? ஒரு சொல்லில் “இன்” வைத்துக்கொண்டு, அடுத்த சொல்லி அதை எடுத்துவிடலாம், வேறு மாற்று ஒட்டு பயன்படுத்தலாம். இதோ அப்படி சமாளிக்கப்பட்ட உரை:

“வாசிப்பு சுகத்தின் அனுபவ வெளிப்பாடுகளை புத்தகத்தின் செழுமையைக் காட்டும்  திறனாய்வுப் பதிவுகளில் காண முடியும். சொற்களுடைய எண்ணிக்கையின் பெருக்கத்தால் மட்டும் அந்த அனுபவத்திலிருந்து ஏற்படும் உணர்வு எழுச்சியின் விளைவைக் காண இயலாது.”

கண்ணால் வாசிக்கும்போதாவது இந்த இன்களின் தொந்தரவைக் கொஞ்சம் சமாளித்துவிட முடியும. சிலர் இவ்வாறு நிறைய இன்களுடன் எழுதி வைத்த அறிக்கைகளை மேடையில் உரக்க வாசிப்பார்கள். சில அமைப்புகளில் உறுப்பினர்கள் சுற்றியமர்ந்துகொணடு அறிக்கைகளை ஒருவர் மாற்றி ஒருவர் வாசித்துக் காட்டுவார்கள். அப்போது ஒவ்வொரு இன் கலந்த சொல்லையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்வது கேட்பவர்களுக்கு சமாளிக்க முடியாத சவாலாகிவிடும்.

இதிலேயே, வெளிநாட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பெயர்களுடன் இன், உடைய போன்ற ஒட்டுகளைச் சேர்ப்பதும் வாசகர்களிடம் “எங்கே, எளிதாக வாசித்துவிடு பார்க்கலாம்” என்று கேட்பது போன்ற செயல்தான். ஒரு வாக்கியத்தில், ஒரு பத்தியில் ஒரு சொல் எத்தனை முறை திரும்பத் திரும்ப வரலாம் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியிருக்கிறது. அடுத்த சந்திப்பில் இவ ற்றையும் பார்க்கலாம்.

– அ.குமரேசன்

(தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க)

Leave a Reply