– தோழர் பரணிதரன் (தலைவர் UNITE)
முதல் பகுதி: https://maattru.in/2024/12/sangam-eathuku-bro-1/
இரண்டாவது பகுதி: https://maattru.in/2025/01/sangam-eathuku-bro-2/
2014ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு எழுச்சி, 2015ஆம் ஆண்டின் முதல் பாதி முழுவதும் எதிரொலித்தது. அதன் விளைவாக, முதல் முறையாக ஊழியர்கள் வேலை இழப்பு பிரச்சினையை ஒட்டி, ஒரு ஐடி நிறுவனம் பதிலளிக்க நேரிட்டது. அதில் அவர்கள் வெளிப்படையாக, “நாங்கள் வெறும் 2,000 பேரை மட்டுமே வெளியேற்றினோம்” என்றும், “25,000 பேர் அல்ல” என்றும் தெளிவுபடுத்தினர். ஆனால் அந்த செய்தி உண்மைக்கு மாறாக இருந்தது. சென்னை மட்டுமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த இயக்கம் விரிவடைந்தது. பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் துறையிடம் பல டிசிஎஸ் ஊழியர்கள் முறையிட்டனர். தொழிற்சங்கத்திற்கான ஒரு பெரிய வாய்ப்பை இது உருவாக்கிக் கொடுத்தது.
2015ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக ஐடி ஊழியர்கள் சார்ந்த பிரச்சினை, அதுவும் டிசிஎஸ் இல் வேலையை விட்டு அனுப்பப்பட்டவர்கள் பற்றிய கேள்வியை சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது சிபிஐ(எம்) கட்சியின் எம்பியான கே.என்.பாலகோபாலன் நாடாளுமன்றத்தில் மிக விரிவாக அப்பிரச்சினையை சுட்டிக்காட்டினார்.
“2014ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை எந்த நடைமுறைகளுக்கும் பணியாளர் உரிமைகளுக்கும் கவனம் செலுத்தாமல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் பணிநீக்கம் செய்து வருகிறது. அப்போது 25,000 பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், பொதுமக்களின் எதிர்ப்பினால் நிறுவனம் அதனைத் தற்காலிகமாக பாதியில் நிறுத்தியது. இதற்கான விளக்கம் கேட்டபோது, இதை சாதாரண பணியாளர் மறுசீரமைப்பாகக் கூறி, அந்தக் கேள்விக்கு பெரிதாக எந்த முக்கியத்துவத்தையும் நிறுவனம் தரவில்லை.
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டு, வேறு வேலை தேடுவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்த விதமான சட்ட திட்டங்களும் ஐடி நிறுவனங்களுக்கு இல்லை. மேலும், இத்தகைய பணிநீக்கங்களை கண்காணிக்க அரசாங்கத்திடம் எந்தவொரு கட்டுப்பாட்டு முறையும் இல்லை. தற்போது எந்த தீர்வளிக்கும் வழியும் (Grievance Redressal Mechanism) அரசிடம் இல்லை.
எட்டு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட பணியாளர்கள், தற்போதைய ஐடி துறையில் எதிர்காலம் அற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏனெனில், மற்ற பெரிய ஐடி நிறுவனங்கள் இவர்களை எடுக்காமல் தவிர்க்கின்றன. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்து, பயத்தில் தவிக்கின்றனர்.
இது டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல. அதே காலகட்டத்தில், ஐகேட் (IGATE) என்னும் ஹைதராபாத்தில் உள்ள பெரிய ஐடி நிறுவனமும் 3,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது. நேற்று நோக்கியா நிறுவன சம்பவமும் இங்கே விவாதிக்கப்பட்டது. அங்கேயும் 25,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது ஐடி துறையில் மட்டும் அல்லாமல், பல புதிய தலைமுறை தொழிலாளர்களுக்கும் நடக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தில் இதற்கு எதிராக வேலைநிறுத்தம், போராட்டம் நடத்தப்பட்டது. கொச்சியில் மாவட்ட தொழிலாளர் அலுவலர் (DLO), பணியாளர்களை கலந்துரையாடலுக்கு அழைத்தார். ஆனால், டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மட்டத்திலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், 25,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய வர்த்தக அறிக்கையின்படி, அதன் வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. மேலும், இந்த நிதியாண்டில் 55,000 பேரை வேலைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், இத்தகைய திடீர் பணிநீக்கம் முற்றிலும் மனிதாபிமானமற்றதும் சட்டவிரோதமானதுமாகும். உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்றாகும். எனவே, நஷ்டம் என்பதெல்லாம் அவர்களுக்கு இல்லை.
ஊடகங்களில் கிடைத்த தகவலின்படி, இந்த நிலை தொடரும் என்றே தெரிகிறது. எனவே, அரசாங்கம் இதற்கு ஒரு முறையான தீர்வை ஏற்படுத்த வேண்டும். ஐடி மற்றும் புதிய தொழில்துறைகள் தொடர்பாக தனி சட்டங்கள் இருந்தாலும், அரசாங்கம் இதைப் பொருட்படுத்த வேண்டும். இன்று வளர்ச்சி மிகுந்ததாக சொல்லப்படும் நாடாக நாம் இருக்கும்போது, இளைய தலைமுறைத் தொழிலாளர்கள் டிசிஎஸ் மற்றும் இதர நிறுவனங்களில் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் இந்த நிலையை சந்திக்க நேர்ந்தால், புதிய தலைமுறை நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான பணியாளர்களை எப்படி பாதுகாக்க முடியும்?”
என்று சிபிஐ(எம்) கட்சியின் எம்பியான கே.என்.பாலகோபாலன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அவர் கருத்தை ஆதரித்துப் பேசிய சிபிஎம் எம்பி பி.ராஜிவ்,
”நான் நேரில் சென்று கொச்சியில் டிசிஎஸ் பணியாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டேன். இது ஐடி துறையில் உருவாகிவரும் புதிய போக்காகத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நீக்கிவிட்டு, குறைந்த ஊதியத்தில் புதியவர்களை நியமிக்கின்றனர். இதனால், அதிக இலாபம் அடைகின்றனர். அவர்கள் நாட்டின் தொழிலாளர் நல சட்டங்களைப் பின்பற்றுவதற்குக் கொஞ்சமும் தயாராக இல்லை. தொழிலாளர் அலுவலரை பணியாளர்கள் அணுகினர். தொழிலாளர் அலுவலரோ மேலாண்மைக்கு அறிவிப்பு அனுப்பினார். ஆனால் மேலாண்மை அலுவலர்களோ நேரில் வர மறுக்கின்றனர். இது மிகவும் மோசமான பிரச்சினை.”
என்றார்.
பின்னர், சிஐடியூ அகில இந்திய செயலாளரும் எம்பியுமான தபன் சென் பேசினார்.
“இந்த மாதிரியான மனிதாபிமானமற்ற பணிநீக்கம் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, மற்ற ஐடி நிறுவனங்களை விடவும் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள டிசிஎஸ் நிறுவனம், இந்த நேரத்தில் இப்படிச் செய்வது ஏற்கமுடியாதது. இதைப் பார்க்கும் போது, ‘கடைசியாக வந்தவர் முதலில் செல்ல வேண்டும்’ என்ற பொதுவாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகூட பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது. அதனால், அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். இந்த நிறுவனங்கள் மக்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் முறையில் தொழில் செய்கின்றன. அரசாங்கம் இதற்கும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்றார் தபன் சென்.
அப்போது சபையின் துறைத் தலைவர், சட்ட அமைச்சரைப் பார்த்து “அவர்கள் தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறார்களா?” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் சாதன கவுடா, “நான் இதனை கவனத்தில் எடுத்துள்ளேன். நான் இதைப் பார்ப்பேன்” என்றார்.
சுமார் 25 ஆண்டுகளாக இந்தியாவில் காலடி வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களும், அவுட்சோர்சிங் நிறுவனங்களும், அவற்றில் பணிபுரியும் பல இலட்சம் ஊழியர்களும் எந்த சட்டத்தில் வருவார்கள் என்பதிலேயே குழப்பம் நீடித்தது. அது மிகப்பெரிய விவாத பொருளாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதே காலகட்டத்தில் இன்று சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை ஒட்டி, தொலைக்காட்சி விவாதங்களில் பல வலதுசாரிகளும் பல ஆளுங்கட்சி ஆட்களும் “சிஐடியு வந்தாலே அந்த நிறுவனம் திவால். சிஐடியு வந்தாலே வேலைவாய்ப்பு கெட்டுவிடும். சங்கம் வந்தால் எல்லாம் போய்விடும். குழப்பத்தை உருவாக்க வேண்டுமென்றே சங்கத்தை சிஐடியு உருவாக்குகிறது” என்று பல கருத்துகளைக் கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் சிஐடியின் அணுகுமுறை, பொதுவாக இப்படியாக உருவாக்கப்படும் பிம்பத்திலிருந்து மாறுபட்டது. அதற்கு உதாரணம், கடந்த 14 ஆண்டுகளாக ஐடி துறையில் சங்கம் கட்டுவதிலும் பல தொழிலாளர்களின் பிரச்சினை பிரதிபலிப்பதிலும் அவர்களுக்கான கோரிக்கைகளை முன் வைப்பதிலும் சிறப்பான அணுகுமுறையை சிஐடியூ கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
2014இல் 25 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, 2015ஆம் ஆண்டின் முதலாம் பகுதியில் பரவலான விவாதங்கள் சங்கத்தைப் பற்றியும், ஐடி ஊழியர்களின் பிரச்சினைகளைப் பற்றியும், அவர்களின் கோரிக்கைகள் பற்றியும், உரையாடல்கள் எழுந்த வேளையில், மார்ச் மாதம் பெங்களூரில் ஒரு கூட்டத்துக்கு சிஐடியு தலைமை அழைத்தது. இதில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பல பெயர்களில் செயல்படும் ஐடி அமைப்புகளின் நிர்வாகிகளும் மற்றும் அமைப்பாக உருவாகாமல் செயல்படும் தனிநபர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்காக தமிழ்நாட்டின் சார்பாக தோழர் சீதாராமனும் நானும் சென்றிருந்தோம். தமிழ்நாடு சிஐடியுவின் சார்பாக அதன் மாநில செயலாளராக இருந்த தோழர் கண்ணன் அவர்கள் எங்களுடன் வந்திருந்தார். முதல் முறையாக சிஐடியு இதைப் போன்ற ஒரு அகில இந்திய கலந்துரையாடலை அழைத்திருந்தது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட ஐடி துறை பரவி இருக்கும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் தலைமை தாங்கி இருந்தார். முதலில் அந்தக் கூட்டத்தின் மைய நோக்கத்தை விளக்கினார். அதாவது, இன்றைய சூழலில் பொதுவாக ஐடி துறையில் சங்கம் உருவாக்குவது பற்றி ஊழியர்களிடம் இருக்கும் எண்ண ஓட்டம் பற்றியும், டிசிஎஸ் இல் 25000 பேரை அந்நிறுவனம் வெளியேற்றும் சூழலில் சங்கம் உருவாக்கும் வாய்ப்புகள் பற்றியுமான ஒரு கலந்துரையாடல் தான் இந்த கூட்டத்தின் மையப் பொருளென்று அறிவித்தார். இதில் பல மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள், அதுவும் ஐடியில் வேலை செய்பவர்கள், தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையானவர் சொன்ன பதில்கள் ஒரே மாதிரியாக இருந்தன.
“ஐடி ஊழியர்களுக்கு சங்கம் அமைப்பதில் அச்சம் இருக்கிறது. சங்கத்திற்கு வந்தால் வேலை போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது. நாஸ்காம் என்கிற ஐடி நிறுவன முதலாளிகளின் தொழிலாளர் ப்ளாக் லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்களோ என்கிற பயம் இருக்கிறது” என்றனர். அதனால், தொழிலாளர்கள் நிரந்தரமான தீர்வைத் தேடாமல் உடனடித் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அரசியல் சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்றும், போராட்ட குணம் குறைந்தே உள்ளது என்றும் பதிவு செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பேசிய தபன் சென், “இன்றைய சூழலில் ஐடி ஊழியர்கள் வெளியே வந்து வெளிப்படையாக அவர்களது பிரச்சனைகளை சொன்னதே கவனிக்கத்தக்க மாற்றம்தான். இந்த நிலையில் சங்க செயல்பாட்டாளர்களாகிய நாம், அவர்களுக்கு சங்கம் மீது நம்பிக்கை தரும் வகையில் முதலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வோம். இப்போதைக்கு, அவர்களது பிரச்சினைகளைப் பரவலாக்குவோம். பின்னர், சங்கம் அமைப்பதைப் பற்றி பேசிக்கொள்ளலாம்” என்று கூறி கூட்டத்தை முடித்தார்.
பயணம் தொடரும் ப்ரோ…
– தோழர் பரணிதரன் (தலைவர் UNITE)