விஜய் சேதுபதி படங்கள் மாதிரி மணிகண்டன் படமும் ஒரு எதிர்பார்ப்பைக் கொடுக்குது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் நடப்பதை நகைச்சுவையாகக் காட்டியிருக்கிறார்கள்.
தன்னந்தனியாகப் பேசுவதை நண்பர் கிண்டல் பண்ணும் போது, தான் கழிவறையில் உரையாடியதை நினைத்துப் பார்த்து வக்காலத்து வாங்கும் காட்சி அல்டிமேட். அக்காவிற்கு அம்மா விதவிதமாக சமைக்கச் சொல்லும் போது, அக்காளுக்கு அரிசி பருப்பு சாதம் தான் பிடிக்கும்னு சொல்லிட்டு, கழிவறையில் போய் சாரி அக்கான்னு சொல்றதுலாம் ரொம்ப நெருடல்.
மனைவியை சாதி வைத்தும், பரீட்சை எழுதுவதை கிண்டல் செய்வதையும் பொறுக்க முடியாமல் மனைவியை கடிந்து கொள்ளும் போது, மனைவி ரொம்ப இயல்பாய் கர்ப்பமாய் இருப்பதைச் சொல்வதும் அழகு. சக்திக்கு மீறி முறைசெய்வதும், அவர்கள் முகத்தில் வரும் பெருமையும், மற்றவர்கள் வாயைப் பிளந்து பார்க்கும் காட்சியும், பெரும்பாலான விசேஷங்களை நினைவு கூறச் செய்தது.
அக்கா கணவனாய் வரும் ஆளைப் பல குடும்பங்களில் பார்த்து எரிச்சலாகி இருப்போம். பெருமை பீத்தகலயம், அடுத்தவர்களை ஒரு நெருக்கடியிலேயே வைத்து இருப்பார்கள். அவர்கள் எந்த அளவுக்கும் வளைந்து போவார்கள். அவர்களுக்கு காசு மட்டுமே பிரதானம். கடைசியில் வாங்கும் அடி ரொம்ப ரொம்பப் பிடித்து இருந்தது.
‘முதலாளிகளுக்குப் பணம் மட்டுமே பிரதானம்’ என்று பொட்டில் அறைகிற மாதிரி காட்சிகள் அமைந்த விதம் உள்ளபடியே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. முதலாளி ஆகிவிட்டால், மானம், மரியாதை, நாணயம், நியாய தர்மம், பழகிய பழக்கத்தை நினைவில் கொள்வது என எதுவுமே இல்லாமல் போய்விடும் போல. நாயகனைத் திரும்பவும் வேலைக்கு சேர்த்திருந்தார். அது கதாநாயகனின் புது ஐடியாவுக்காகத்தான். இலாபமும் பார்த்துவிடுவார். வேலைக்குக் கூப்பிடும் போது, ‘பிச்சை போடுறவங்க பெருந்தன்மையாகத்தான் இருப்பாங்க’ என்று மனைவியிடம் சொல்லும்போது, வளைந்து பழக்கமில்லாதவர்களின் வார்த்தை இப்படித்தான் இருக்கும் என்று தோண வைக்கும்.
அக்கா பகட்டு வாழ்க்கை பிடிக்காமல் விலக நினைக்கும் போது, கணவரின் சறுக்கலுக்காக முடிவை மாற்றியிருப்பது சராசரிப் பெண்களின் நிலையைக் காட்டுகிறது.
நண்பர்கள் தவறுதலாய் உதவி செய்தாலும் கூடவே பயணிப்பது போலக் காட்டுவது, படத்திலாவது நண்பர்கள் மாறாமல் இருக்கிறார்களே என்று எண்ண வைத்தது.
‘மனைவி என்பவள் என்ன ஆனாலும் கூடவே இருப்பா’ என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. இந்தப் படத்தில் காண்பித்தது போல, மாமியார் நாள்தோறும் குட்டிக் கொண்டே இருப்பார், இருந்தாலும் சுயத்தை மறந்து கணவனுக்காக கூடவே இருப்பாள். ஒரு கட்டத்தில் கணவனை சாப்பிட விடாமல் பேசியதற்காகத்தான் பழைய முதலாளியிடம் வேலைக்கு பேசிருப்பாள். ஆனால் அதைக் கூட புரிந்துக் கொள்ளாமல் அப்பா, அம்மா, அக்கா வரிசையில் மனைவியையும் சேர்த்து, பணத்தை நோக்கி வெளிநாடு செல்ல முடிவெடுப்பது போலக் காண்பித்ததை என்னால் ஏற்கவே முடியவில்லை.
கணவனின் நிலையை யோசித்துத்தான் முதல் குழந்தையையே கலைக்கலாம் என்று அவள் கேட்பாள். தன்னுடைய ஆசையைக் கைவிடாமல் படித்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவாள்.
ஒவ்வொரு முறையும் சாதியை வைத்து வசைப்பாடும் போதும் அவள் அவனுக்காகத்தானே கூடவே இருந்தாள்.
குடும்பஸ்தனைத் தாங்குவதே அவள்தான். இது என்னுடைய பார்வை.
குடும்பஸ்தனுக்கு பல வடிகால் உண்டு. அதைப் படத்திலும் காண்பித்து இருப்பார்கள்.
ஆனால், அவளுக்கு வடிகால் என்ன???
– பாரதி