சமூகம் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு அமைப்பை “சிஸ்டம்” என்கிற பெயரில் வைத்திருக்கும். அந்த சிஸ்டம் உற்பத்தியும், பொருளாதாரமும், அறிவியலும் மாறிக்கொண்டே இருக்கும். அளவாக மாறிக்கொண்டே இருக்கும் சிஸ்டம், ஒரு நேரத்தில் பண்பு மாற்றம் அடைந்துவிடும். கிராமங்கள் நகரங்கள் ஆவதும், நகரங்கள் பெருநகரங்கள் ஆவதும் இப்படித்தான். சாதிகள் உடைந்துகொண்டே இருப்பதும் இப்படித்தான். ஒரு நேரத்தில் சாதிகள் இல்லாமல் மாறப்போவதும் இப்படித்தான். இந்த சிஸ்டம் என்ற ஒரு வார்த்தையை சமூகத்தில் எந்த ஒரு அமைப்புடனும் பொருத்திக்கொள்ளலாம். பழைய அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி புதிய அமைப்பாக மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது.
அமைப்பு என்ற சிஸ்டமில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. தன் வர்க்க நலனுக்காக அந்த அமைப்பை தக்கவைப்பவர்கள் ஒருபுறம், அதற்கு நேரெதிராக அந்த அமைப்பை கேள்விக்கு உட்படுத்தி மாற்றத்துக்கு உட்படுத்துபவர்கள் மறுபுறம். இப்படி புரிந்துகொள்வோம்: சாதி என்ற சிஸ்டமை தக்கவைக்க ஒரு கூட்டம் போராடிக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம், சாதி மறுப்புத் திருமணங்களை முன்னிறுத்தி காதல் செய்து, அந்த சாதியை தகர்த்துக்கொண்டே இருக்கும். சாதியை பாதுகாப்பதில் சாதிப்பற்று என்பதைத் தாண்டி, வர்க்கநலன்கள் மற்றும் பொருளாதார நலன்கள் உண்டு. ஒரு சிஸ்டம் முற்றிலுமாக தகர்க்கப்படும் இடமொன்று வருமல்லவா. அப்படி வரும்போது அதற்கு பெயரே “புரட்சி” என்று சொல்லலாம்.
“குடும்பஸ்தன்” படத்தில் வரும் நவீன் என்ற பிரதானப் பாத்திரம் கெட்டித்தட்டி இருக்கும் அமைப்புகளைக் கேள்வி கேட்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்கிறார். ஆதிக்க சாதியில் பிறந்த நவீன், பட்டியலினத்தைச் சேர்ந்தவரைக் காதலித்துத் திருமணம் செய்கிறார். இந்தக் காட்சிகள், சாதியம் கெட்டித்தட்டி இருக்கும் கொங்குப்பகுதி பின்னணியில் நடக்கிறது என்னும்போது கதை சூடுபிடிக்கிறது.
அந்த மருமகள் குடும்ப விழாக்களில் சாதியின் பெயரால் கிண்டல் செய்யப்படுகிறாள். தென்மாவட்டங்களில் இருக்கும் சாதியப் பிரச்சினைகளில் இரத்த நெடி இருப்பதைப் போல கொங்குப்பகுதியில் இருப்பதில்லை. அவர்களது அருவாள் நாக்கில் நக்கலில் உள்ளது. மனதையும் நம்பிக்கையையும் உடைக்க சிறுசொற்கள் போதுமல்லவா? குடும்ப விழாக்கள் தங்களது பொருளாதார வளத்தைக் காட்டிக்கொள்ளும் விழாக்களாகவும், தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்தும் விழாவாகவும் உள்ளது. சீராகப் போடும் செயினும் மோதிரமுமே தாய் மாமன் இடத்தை உறுதி செய்கின்றன. படம் நிலவுடைமை காதுகுத்துக்களை ஊமைக்குத்து குத்துகிறது. மருமகளின் பாத்திரத்தின் திருப்பிக்கொடுக்கும் வார்த்தைகள் சாதியத்தை சுட்டெரிக்கிறது. இவ்வளவு தீவிரமான படம் பிரச்சாரம் போல் அல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவைக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. தேனுடன் மருந்தைக் கலந்து கசப்பில்லாமல் கொடுக்கும் வித்தை இயக்குநருக்குத் தெரிந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இருக்கும் நடுத்தர வீட்டிலும் ஒரு நவீன் இருக்கவே செய்வார். நவீன் வேலைக்குப்போகும் ஒரு நடுத்தர வயது இளைஞன். “வேலை” என்ற இன்னொரு அமைப்பு இருக்கிறது. அதில் மேலே இருப்பவர்கள் சொல்வதை அப்படியே கேட்கவேண்டுமா? அவர்களைத் தாண்டி கருத்து சொன்னால் அடுத்தகட்டத்துக்கு நகர விடுவார்களா? சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது அவர்களிடம் கேள்வி கேட்டால் வேலை போய்விடுமா? இல்லை, ஊதிய உயர்வு என்னும்போது அந்த இடத்தில் அரசியல் செய்யப்படுமா? நாளை ஈ.எம்.ஐ. செலவுகளுக்கு என்ன செய்வது?
எந்த ஒரு சிஸ்டமும், யாரை மேலே வளர அனுமதிக்கும், கீழே குனிந்து அடக்கத்துடன் சில நேரங்களில் கள்ள மௌனம் சாதிப்பவரை மேலே அனுமதிக்கும் என்ற உண்மையை படம் போகிற போக்கில் சொல்கிறது. இங்கு சுயமரியாதையுடன் ஒரு ஏழை இருந்துவிட முடியுமா? அலுவலகத்தில் ஒரு டீமில் பொருளாதார பலம் படைத்தவரும், பொருளாதார பின்னணி இல்லாதவரும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பொருளாதாரப் பின்னணி இல்லாதவர் அந்த டீமில் அநியாயம் நடக்கும்போது மேலே இருப்பவரைக் கேள்வி கேட்கத் துணியமாட்டார். ஏனென்றால் அவர் இந்த மாதச் சம்பளத்தை நம்பி இருப்பவர். ஒருவேளை அப்படியே கேள்வி கேட்டாலும், அது ஒப்பீட்டளவில் குறைவு தானே.
படத்தில் சுயமரியாதையாக இருக்கும் பிரதானப் பாத்திரம் நவீன், அந்த சுயமரியாதையால் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகிறார். எந்த சுயமரியாதைக்காக, தான் பார்த்த வேலையிலிருந்து நீக்கப்படுகிறாரோ, அந்த விடயம் அவரது சுயமரியாதையை பாதிக்கும் விடயத்துக்கு கொண்டு செல்கிறது. கடைசியாக அவரால் சுயமரியாதையைக் கூட காக்க முடியவில்லை.
“சுயமரியாதை” ஒரு தனித்தச் சொல்லாக பார்க்கப்படுகிறது. ஒரு பணக்காரர், சுயமரியாதையாக இருப்பதென்பது, பொருளாதார ரீதியாக யாரையும் நம்பி இல்லாமல் அவர் இருக்கும்போது அவரது சுயமரியாதை சோதிக்கப்படாது. அதனால், வேலை செய்யுமிடத்தில் அவமானம் நடக்கும் போது, ஒரு பணக்காரர் சுயமரியாதையுடன் வெளியே வருவதைப் போல ஒரு ஏழை வரமுடியுமா? அப்படியென்றால் சுயமரியாதை என்பது தனித்தச் சொல் அல்ல. அது பொருளாதாரத்தைச் சார்ந்தது.
ஒரு சாமானிய மனிதன் சுயமரியாதையுடன் இருப்பதை இந்த சிஸ்டம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை நகைச்சுவையுடன் கேட்கிறது. நகைச்சுவை என்பது ஒருவிதத்தில் அவலச்சுவை. அதை சார்லி சாப்ளின் படங்களில் உணர முடியும். அந்த உணர்வை நவீன் பாத்திரம் ஏற்படுத்துகிறது. நவீன் புரட்சிகர வசனமெல்லாம் பேசவில்லை. சாப்ளின் போலவே ‘தனக்கு உலகம் புரியவில்லை’ என்ற அப்பாவியாகவே நடிக்கிறார். அவர் பொருளாதாரத்தில் கஷ்டப்படுகிறார், அவமானப்படுகிறார், தொழில் தொடங்குகிறார், நசுக்கப்படுகிறார். அதெல்லாம் நமக்கு நகைச்சுவையாகவே காட்டப்பட்டாலும், புரட்சிகர வசனம் இல்லாமலேயே அதன் அரசியல் நமக்குள் உணர்த்தப்படுகிறது.
நவீனின் அக்கா வீட்டுக்காரர் ராஜேந்திரன் நவீனுக்கு அப்படியே நேரெதிர் பாத்திரம். ராஜேந்திரன் மிடுக்காக இருக்கும் அதிகாரவர்க்க நபர். தனக்கு வேலை ஆகவேண்டும் என்றால் எந்த அளவுக்கும் இறங்கிப்போகும் நபர். படம் முழுவதும் ராஜேந்திரன், நவீனை அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இந்த சிஸ்டம் நீங்கள் திறமையானவர்களா இல்லையா என்பதைப் பார்ப்பதில்லை. நீங்கள் அந்த சிஸ்டத்திற்கு பொருந்திப் போகிறீர்களா இல்லையா என்பதே முக்கியம். சாக்கடைக்கு பொருத்தமானதாக கொசுக்கள் இருக்கும், பூக்கள் இருக்க முடியுமா? நீங்கள் கொசுவாக மாறினாலே சாக்கடைகளை பொறுத்துக்கொள்ள முடியும். ராஜேந்திரன் கொசு, நவீன் வாசமான பூ.
ராஜேந்திரன், நவீன் உரையாடல் முக்கியமானது. படம் முழுவதும் ராஜேந்திரன் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார், நவீன் தோற்றுகொண்டே இருக்கிறார். இந்த முரணியக்கமே படத்தை முன்நகர்த்துகிறது. குடும்பஸ்தன் வெறும் பொருளாதாரப் பிரச்சனையை மட்டும் பேசும் படமல்ல. அதைத் தாண்டி பெரிய விடயங்களை அலசுவதாகவே எனக்குப் பட்டது.
இதை வீ.சேகர் படங்களுடன் ஒப்பிடுகிறார்கள். வீ.சேகர் படங்கள் பொருளாதார பிரச்சனைகளைப் பேசும், நகைச்சுவையாக இருக்கும், சாமானிய மனிதர்கள் படத்தின் பிரதானமாகக் காட்டப்படுவார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால் குடும்பஸ்தன் இதிலிருந்து எங்கு மாறுபடுகிறது என்றால், தத்துவத் தளத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தி அடுத்தகட்டத்திற்கு நம்மை சிந்திக்க வைப்பதாக உள்ளது. படம் மிகப்பெரிய தத்துவ விடயத்தை போகிற போக்கில் நகைச்சுவையாக சொல்லிவிட்டுப் போகிறது. படத்தின் பலமும் இதுதான், பலவீனமும் இதுதான்.
படம் நம்பிக்கையைக் குலைப்பதாக இன்னொரு விமர்சனமும் கண்ணில் பட்டது. சாப்ளின் ‘மாடர்ன் டைம்ஸ்’ படம் நம்பிக்கையை குலைக்கும் படமா? இல்லையென்றால், பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் படமா? ஒரு கலை மக்களிடம் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்ட வேண்டும், உணர்த்த வேண்டும், அதை இந்தப் படம் சிறப்பாக செய்திருக்கிறது.
படத்தில் சில விமர்சனங்களும் உண்டு. சாதி மறுப்புத் திருமணம் செய்துவைக்கும் சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏன் வேலை வெட்டி இல்லாமல் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். குடியை இயல்பானதாக மாற்றுவதை செய்யாமல் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக ‘நக்கலைட்ஸ்’ குழு அரசியலாக மேம்பட்ட குழு. அந்தக் குழு இதனைத் தவிர்க்கலாம்.
தோழர் ஜென்சன் திவாகர் முற்போக்கான தோழர். எம்.ஆர். ராதா அளவுக்கு வளர வேண்டிய திறமையும் அரசியலும் இருக்கும் தோழர். லப்பர் பந்து, அயலி, குரங்கு பெடல் போன்ற முற்போக்குப் படங்களில் அவர் நடித்தாலும், அவருக்குக் கொடுக்கப்படும் பாத்திரம் குடிகார பாத்திரமாகவே உள்ளது. இனிவரும் படங்களில் அதைத் தவிர்க்கலாம் என்பது எங்களது அன்பான கோரிக்கை.
படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சிங்காநல்லூருக்கே நம்மைக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். குறிப்பாக, வெண்ணிலாவாக நடித்த மேக்னா, நவீன் அம்மாவாக நடித்த கனகம், அக்காவாக நடித்த நிவேதிதா ஆகியோர் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார்கள். மணிகண்டன், குருசோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், தோழர் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், இயக்குநர் பாலாஜி சக்திவேல் என அனைவரும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
படம் நாடகம் போலவோ ஒரு யூட்யூப் வீடியோவைப் போலவோ இருந்துவிடுமோ என்ற கேள்வியை முதல் காட்சியிலேயே உடைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித். பிரசன்னா பாலச்சந்திரன் தோழரின் வசனமும், ராஜேஸ்வர் அவர்களின் இயக்கமும் சிறப்பு.
சாமானிய மனிதர்களின் கதையை ஆழமாகவும், அதேநேரம் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள். மலையாளப் படங்களில் சாத்தியமான விடயத்தை தமிழ்ப்படங்களிலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். அதற்குத் தேவை ஆழமான எழுத்துக்களும் புரிதல்களும்தான். அந்த எழுத்துக்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை, மக்களிடமிருந்தே வருகின்றன. அந்த மக்களிடமிருந்து வரும் கலைஞர்களே, அந்த வாழ்வைப் புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு அற்புதமான கதைகளைச் செய்ய முடியும், அற்புதமான படங்களை உருவாக்க முடியும். அதைச் செய்திருக்கிறார்கள் “குடும்பஸ்தன்” படக்குழுவினர்.
– வெண்ணிற இரவுகள் கார்த்திக்