சமீபத்தில், கல்வி அமைச்சகம் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளின் பள்ளிக் கல்வி சார்ந்த அறிக்கையை வெளியிட்டது. இது தாமதமாக வெளியிடப்பட்ட அறிக்கை. இதற்கு முன்பு, தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக அமைப்பு (NIEPA – National Institute of Educational Planning and Administration) இதுபோன்ற கல்வி அறிக்கைகளைத் தொகுத்து வெளியிட்டு வந்தது. ஆனால் 2018-19 முதல், இந்தப் பொறுப்பை கல்வி அமைச்சகம் நேரடியாக எடுத்துக்கொண்டு வெளியிட்டு வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின் முழு விவரம் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி அமைப்பின் (UDISE+) இணையதளத்தில் கிடைக்கிறது. அத்துடன், பள்ளி வாரியான விவரங்கள் “உங்கள் பள்ளியை அறிந்து கொள்ளுங்கள்” (Know Your School – KYS) என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது. இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் பள்ளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி அறிக்கைகளை கடந்த டிசம்பர் 30, 2024 அன்று ஒன்றாக வெளியிட்டது. 2023-24ல் கிட்டத்தட்ட 23.5 கோடி (235 மில்லியன்) குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு, உலகிலேயே மிகப் பெரிய பள்ளி அமைப்பாக இந்தியா திகழ்ந்தது. ஆனால் சமீபத்திய அரசின் அறிக்கைகள் இந்தப் பெருமித நிலையைத் தகர்க்கும் வகையில் உள்ளது. 2020-21 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளுக்கு இடையே, 14.72 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிர்ச்சியூட்டும் வகையில் சுமார் 2 கோடி என்ற அளவிற்கு குறைந்துள்ளது. அதற்கு முந்தைய 2020-21 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 25.38 கோடி குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-24ல் 23.5 கோடியாகக் குறைந்துள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான எந்த விளக்கமும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
பள்ளிகளில் பல மாணவர்கள் போலியாக சேர்க்கப்பட்டனர் என்றும் அல்லது கடந்த ஆண்டு கணக்கில் வந்த பதிவுகள் காலாவதியானவையாக இருக்கலாம் என்பதும் இந்தச் சேர்க்கை குறைவுக்காகக் கொடுக்கப்பட்ட விளக்கங்களாகும். பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுக்காகவும் அல்லது கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகளுக்கு அதிக நிதியைப் பெறுவதற்காகவும், ஒருவேளை சேர்க்கையின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் அதிகரித்துச் சொல்லப்பட்டிருக்கலாம் என்பதாகக் குறிப்பிடுகிறது. இதற்காக, ஒன்றிய அரசின் மாணவர் தரவுத்தள மேலாண்மை அமைப்பு (SDMS – Student Database Management System) எனப்படும் டிஜிட்டல் தரவுத்தள அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், போலியாக இணைக்கப்பட்ட மாணவர்களைக் களையெடுக்கலாம் என்றும், மேலும் உண்மையான பதிவுகளையும் உண்மையான நிலையையும் வெளிப்படுத்த உதவும் என்றும் சொல்லப்பட்டது. இது மிகச் சாதாரணமான தாக்கத்தையே ஏற்படுத்தும். 2022-23 ஆம் ஆண்டில் 1.41 கோடி மாணவர்களின் சேர்க்கை குறைந்தது மிகப்பெரிய சரிவு. ஆனால் அடுத்த 2024 ஆம் ஆண்டில் அது ஏன் 67 லட்சம் என்ற அளவில் மீண்டும் சரிகிறது. அது எப்படி என்ற கேள்வி எழுகிறது?
தரவுகள் திருத்தம் செய்யப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும், சேர்க்கைக் குறைவை மறைக்க அரசாங்கங்களுக்கு இது ஒரு வசதியான காரணமாகிவிட்டது. 2015-16ல் இதுவரை இல்லாத அளவுக்கு 26.1 கோடி சேர்க்கை பதிவாகியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், அடுத்ததாக 2016-17 ஆண்டின் தரவு சேகரிப்பின் போது, UDISE உடன் இணைக்கப்பட்ட மாணவர்களின் தரவு சேகரிப்பு காரணமாக, அது வெகுவாகக் குறைந்திருக்கலாம் என்று முன்னணிக் கல்வியாளரும் பேராசிரியரும் பள்ளிக் கல்வி புள்ளியியல் அமைப்புகளின் நிறுவனருமான அருண் சி. மேத்தா கூறினார். மற்ற கல்வி நிபுணர்களும் சரிவுக்கான மற்ற நம்பத்தகுந்த காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை கொரோனா தொற்றுநோய் காலத்திலும், குடும்ப வருமானத்தில் ஏற்பட்ட பரவலான இடையூறுகள், பொருளாதார நெருக்கடிகள் ஆகிய காரணங்களாலும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழலைப் பெற்றோர்களுக்கு உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இது 2021-22 உடன் ஒப்பிடும்போது, 2022-23 இல் மேலும் கடுமையான வீழ்ச்சி அடைந்திருப்பதையே காட்டுகிறது. ஆனாலும், கொரோனா தொற்றின் காரணமாக, கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த முந்தைய ஆண்டில் (2020-21), இந்தளவிற்கான வீழ்ச்சி ஏற்படவில்லை ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. பொதுக் கல்வியின் வளர்ச்சிக்கு அரசின் முயற்சிகள் போதுமானவையாக இல்லை என்பது முக்கிய காரணம். அதன் ஒரு பகுதியாகத்தான் பட்டியல் மற்றும் பழங்குடியின, சிறுபான்மையின மாணவர்களுக்குச் சில காலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதும், மாணவர் சேர்க்கை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கல்வியாளர்களால் கூறப்படுகிறது.
அட்டவணை
மாணவர்களின் எண்ணிக்கை கோடிகளில்
2020-2021 | 2021-2022 | 2022-2023 | 2023-2024 | மாற்றங்கள்2020-21 – 2023-24 | சதவீதம் | |
தொடக்கநிலை | 18.79 | 18.86 | 17.59 | 17.10 | -1.77 | -9.37 |
இடைநிலை | 3.90 | 3.85 | 3.79 | 3.69 | -0.17 | -4.32 |
உயர்நிலை | 2.69 | 2.86 | 2.78 | 2.71 | -0.14 | -5.05 |
மொத்தம்-1-12 | 25.38 | 25.57 | 24.16 | 23.50 | -2.08 | -8.12 |
மேலும், அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி, கல்விக்காக செய்யப்படும் செலவுகள், குறிப்பாக தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிக கட்டணங்கள், அரசுப் பள்ளிகளின் நிதிப் பற்றாக்குறை, அதன் விளைவாகக் கல்வியின் தரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு மற்றும் அரசுப் பள்ளிகள் மூடப்படுதல், இவை அனைத்தும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைப் பாதித்துள்ளன. இதனால், ஏழை எளிய மக்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் அறிக்கைகள் இதைப் பதிவு செய்கின்றன. ஆனால் அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. அவர்களுக்கு காரணம் தெரியவில்லையா? அல்லது அவர்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லையா? மிக முக்கியமாக, இந்த எண்ணிக்கை குறைவாகியிருப்பது குறித்து எவ்விதக் கவலையும் இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஆபத்து எப்படி சரி செய்யப்படும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த சுமார் 2 கோடி குழந்தைகள், தற்போது பள்ளிகளில் இல்லையெனில், அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்கள் வயல்களிலும் தெருக்களிலும் வேலை செய்கிறார்களா? 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமீறல் இல்லையா இது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கூட பதில் சொல்லாமல், அரசு தரப்பிலும் அதன் ஆதரவாளர்களிடமும் பெரும் மௌனம்தான் நிலவுகிறது.
சேர்க்கை விகிதங்களின் வீழ்ச்சி – இடைநிற்றல் அதிகரிப்பு
அரசாங்க கணக்கெடுப்புப்படி, ஏற்கனவே செயல்பட்ட மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், பல்வேறு வயதுகளில் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி ஏற்படுகிறது என்று வாதிடலாம். ஆனால் மொத்த மற்றும் நிகர பதிவு விகிதங்கள் (GER – NER) இந்த வாதங்களை பொய்யாக்குகின்றன.
மொத்தப் பதிவு விகிதம் (Gross Enrolment Ratio – GER) என்பது, எந்த ஒரு குறிப்பிட்ட கல்வி நிலையிலும், அதாவது தொடக்க நிலை, இடைநிலை, உயர்நிலையில் பதிவுசெய்யப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், அந்த எண்ணிக்கையில் படிக்கத் தகுதியான வயதில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதமாகும். தொடக்க நிலையைப் (1-5 வகுப்புகள்) பொறுத்தவரை, GER 2020-21 இல் 99.1 சதவீதத்திலிருந்து 2023-24 இல் 91.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைக்கு (6-8), அதே காலகட்டத்தில் GER 79.8 சதவீதத்திலிருந்து 77.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளிக்கு 53.8 சதவீதத்தில் இருந்து 56.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் மட்டும்தான் சரிவு இல்லை.
நிகர சேர்க்கை விகிதம் (Net Enrolment Ratio – NER) என்பது, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கும், அந்த வயதுக்கு ஏற்றவாறு கல்வியில் பதிவுசெய்யப்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும். GER மற்றும் NER ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் கணக்கிடப்படுகின்றனர். குறிப்பிட்ட வயதைக் காட்டிலும் அதிக வயதானவர்கள் உட்பட அனைவரும் மொத்தமாக பதிவுக்குள் வந்துவிடுவார்கள். NER இல் குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள். NER 2020-21 மற்றும் 2023-24 ஆண்டுக்கு இடையில் தொடக்கநிலை (1-5 வகுப்புகள்), இடைநிலை (6-8), உயர்நிலை (9-12 வகுப்புகள்) என மூன்று நிலைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. தொடக்க நிலையில், NER 92.1 சதவீதத்திலிருந்து 83.3 சதவீதமாகக் குறைந்தது; இடைநிலையில் அது 52.5 சதவீதத்திலிருந்து 48.3 சதவீதமாகக் குறைந்தது; மற்றும் அதற்கு அடுத்த உயர்நிலை கட்டத்தில் அது 34.7 சதவீதத்திலிருந்து 33.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் பொருள் என்ன? வயதுக்கு ஏற்றவாறு பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் பங்கு மூன்று நிலைகளிலும் குறைந்துள்ளது என்று புரிந்துகொள்ளமுடியும். மற்றொரு பரிமாணத்தை இந்த NER புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
83 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர் சேர்க்கை தொடக்க நிலையில் இருந்தாலும், அது குறையத் தொடங்கி இடைநிலைக்கு வருவதற்குள் சுமார் 48 சதவீதமாகக் குறைகிறது. உயர்நிலையில் பள்ளி சேர்க்கையை நிறுத்தும் மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை விகிதங்களின் அதிகரிப்பால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, இடைநிற்றல் விகிதம் தொடக்க நிலைப் பிரிவுகளில் (வகுப்பு 1-5) மிகக் குறைவாகவும், இடைநிலைப் பிரிவுகளில் (வகுப்பு 6-8) ஓரளவு குறைவாகவும் இருக்கும். ஆனால் இந்த விகிதங்கள் 2022-23 இல் அதிகரித்தன. முந்தைய ஆண்டில் வெறும் 0.8 சதவீதத்தில் இருந்த தொடக்கநிலை பிரிவுகளுக்கான சரிவு, அதற்கு அடுத்த ஆண்டு 7.8 சதவீதத்தை எட்டியது. இதேபோல், இடைநிலைப் பிரிவுகளுக்கு முந்தைய ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2022-23ல் 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து, தொடக்கநிலை பிரிவுகளில் இடைநிற்றல் விகிதம் 2023-24ல் 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட அதிகம். இருப்பினும், தொடக்கநிலைப் பிரிவுகளில், இடைநிற்றல் விகிதம் 2023-24ல் 5.2 சதவீதமாக உயர்ந்திருந்தது. உயர்நிலை (9-10 வகுப்பு), இடைநிற்றல் விகிதம் 2019-20ல் 16.1 சதவீதமாகவும், 2020-21ல் 14.6 சதவீதமாகவும் இருந்தது. இது 2022-23ல் 16.4 சதவீதமாக உயர்ந்திருந்து, அடுத்த ஆண்டு 14.1 சதவீதமாக இருக்கிறது.
இந்த சதவீத வித்தியாசங்கள் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் இதை எண்ணிக்கையாக மாற்றினால் அவற்றின் பிரம்மாண்டமான அளவு வெளிப்படும். 2021-22 மற்றும் 2022-23 க்கு இடையில், பல்வேறு நிலைகளில் (விகிதங்கள் மற்றும் மொத்த சேர்க்கை எண்கள் மூலம் கணக்கிடப்படும்) அனைத்து இடைநிற்றல்களையும் சேர்த்தால், 1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளிலும் ஏறக்குறைய 2.14 கோடி குழந்தைகள் வெளியேறியதாகத் தெரிகிறது. இதேபோல், 2022-23க்கு இடையிலும் 2023-24 லும் மேலும் 1.08 கோடி மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இரண்டு காலகட்டங்களுக்கு இடையில் இடைநிற்றல் விகிதங்கள் குறைந்திருந்தாலும், படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சில மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் மோசமான நிலையில் இருப்பதாக மாநில அளவிலான தரவு காட்டுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் இடைநிலை (6-8 வகுப்புகள்) அளவில், பீகாரில் கிட்டத்தட்ட 26 சதவிகிதம், அசாமில் 25 சதவிகிதம், ஹரியானா 13.8 சதவிகிதம், ராஜஸ்தானில் 11 சதவிகிதம், உ.பி.யில் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் மற்றும் ஜார்கண்ட் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
கல்விக்குக் குறைவான நிதி ஒதுக்கீடு செய்வதுதான் முதல் குற்றம்:
மாணவர் சேர்க்கை குறைவது மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அதன் மிகக் கடுமையான தாக்கம் ஏற்படுபவதற்கு பின்னணியில் பள்ளிக் கல்வித் துறைக்கு விவாதிக்க வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, போதிய தகுதிகள் இல்லாமை, ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமை, குறைபாடுள்ள மோசமான உள்கட்டமைப்பு, காலாவதியான கற்பித்தல் கருவிகள், ஆய்வகங்கள், கணினிகள், இணைய இணைப்புகள், மின்சாரம் கூட இல்லாமை போன்றவை இதில் அடங்கும். பள்ளிக் கல்வியின் பல முக்கிய அம்சங்களைத் தனது திட்டங்களின் மூலம் நிதியுதவி செய்து நிர்வகிக்கும் ஒன்றிய அரசு கல்விக்கு குறைவான நிதியுதவியே செய்கிறது. இதுதான் இந்த துயரமான நிலைக்கு மூலக் காரணம். கடந்த சில வருடங்களாக, பட்ஜெட் ஒதுக்கீடுகள் மொத்த ஒன்றிய பட்ஜெட்டில் 2 முதல் 3 சதவீதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.34 முதல் 0.44 சதவீதம் என்ற அளவில் இருப்பதைக் காட்டுகிறது. இது பொதுக் கல்வியை சீரழிப்பதும் மற்றும் மேல்தட்டு பிரிவினருக்கு அதிக விலையுள்ள தனியார் கல்வியை வழங்குவது உள்ளிட்ட சமத்துவமற்ற நிலை, நாட்டின் கல்வி முறையை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. அந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே சமீபத்திய அறிக்கைகள் இருக்கின்றன.
முக்கியப் புள்ளிகள்:
- மாணவர் சேர்க்கை குறைவு: 2020-21 முதல் 2023-24 வரை, மாணவர் சேர்க்கை 25.38 கோடியிலிருந்து 23.5 கோடியாகக் குறைந்துள்ளது.
- இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு: 2022-23ல் தொடக்கநிலை மற்றும் இடைநிலைப் பிரிவுகளில் இடைநிற்றல் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
- நிதி ஒதுக்கீடு குறைவு: கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மொத்த பட்ஜெட்டில் 2-3% மட்டுமே.
- பொருளாதார நெருக்கடியின் தாக்கம்: கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.
- அரசின் பொறுப்பற்றதன்மை: மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் இல்லை.
– சவேரா
– தமிழில்: மோசஸ் பிரபு