அறிவியல்

HMS Beagle கப்பலில் டார்வினின் கடற்பயணம் – செ.கா.

549 20250213 075400 0000
a1741.jpg

கப்பலின் கேப்டன் பிட்ஸ்ராயும், அவரது மாலுமிகளும் சேர்ந்து இப்பயணத்தைத் திட்டமிட்டபோது, சர்வேக்கான காலமாக இரண்டு ஆண்டுகளை மட்டுமே மதிப்பிட்டிருந்தனர். இது டார்வினுக்கான பயணம் அல்ல. இந்தப் பயணத்தின் பிரதான இலக்கு முற்றிலும் அன்றைய இங்கிலாந்து அரசின் நலன் சார்ந்ததாகவே இருந்தது. அமெரிக்க நாடுகளின் கடலோரப்பகுதிகளை அளவிடுவதும், அதன் துறைமுகங்களை வரைவதும், ஏற்கனவே கிடைத்த தகவல்களை துல்லியமாக மறுவரையறை செய்வதும் இப்பயணத்தின் மைய இலக்குகளாக இருந்தன. இதற்காக அரசு பெரும் உதவியை அளித்திருந்தது.

HMS பீகிள் கப்பல் 1820 மே 11 அன்று நிர்மாணிக்கப்பட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இதே காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்ட போர்க்கப்பல்கள், அடிமைக் கண்காணிப்புக் கப்பல்கள், கடிதப் போக்குவரத்துக்கான கப்பல்கள் போலல்லாமல், இது முழுக்க முழுக்க நில அளவைக்கான கப்பலாக இருந்தது. தனது முதல் அளவீட்டுப் பணியை இது செப்டம்பர் 1825 – மார்ச் 1826 வரை மெகல்லன் நீரிணைப்பை அளவிடத் தொடங்கியது. 1826ல் அளவீட்டுப் பணியை முடித்துக் கொண்டு திரும்பிய பின், 1830 வரை இக்கப்பல் பயன்படுத்தப்படவில்லை. அதற்குக் காரணம், 1828ல் அதன் கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கேப்டன் பிட்ஸ்ராய் இந்த கப்பலின் கேப்டனாக 1830ல் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும், 1865ல் இவரது மரணமும் தற்கொலையாகவே முடிந்தது.

கப்பலின் அரசுமுறை அலுவல் பயணத்தோடு, டார்வினுக்கு அறிவியல் உற்றுநோக்கல்களை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நங்கூரம் பாய்ச்சி கடலின் ஆழத்தை அளந்துகொண்டிருக்கும் பணியைக் கப்பல் செய்து கொண்டிருக்கையில், டார்வின் கரையில் தமது ஆய்வுகளை செய்து கொண்டிருப்பார். அங்கு கிடைக்கும் உயிரினங்களை சேகரித்துக் கொண்டிருப்பார். அன்றைய நாட்களில், டார்வினின் மூன்றில் இரண்டு பங்கு நேரம் கரைகளில் இவ்வகையான ஆய்வில்தான் கழிந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில், அர்ஜென்டினா, சிலி மற்றும் தொலைதூர தனிமைத்தீவுக் கூட்டங்களான “கலபாகஸ் தீவுகள்” போன்ற இயற்கைச் செறிவு மிகுந்த பகுதிகளில் எல்லாம் டார்வின் தமது நேரத்தைக் கழித்தார். எந்த வகையில் அளவிட்டாலும், டார்வினின் உழைப்பிற்கேற்ற ஊதியம் அதிகமாகவே கிடைத்திருந்ததை அவர் லண்டனுக்குத் திரும்புகையில் உணர முடிந்தது. ஆம்! அவர் கொண்டு வந்த 1500 க்கும் அதிகமான உயிரினச் சேகரிப்புகளில் (மலர்கள், பூச்சிகள், பறவைகள், புதைந்த பழங்கால உயிரின படிவுகள்) நூற்றுக்கணக்கானவற்றை அதுவரை ஐரோப்பிய அறிவுலகம் கண்டதில்லை. இவர் அறிமுகப்படுத்தியவற்றின் மீது பின்வந்த ஆய்வுமரபு, பல கிளைகள் பரப்பி துளிர் விட்டு தழைத்து ஓங்கியது தனி வரலாறு.

HMS பீகிளின் பயணம் – முக்கியமான நிகழ்வுச் சுருக்கம்

ப்ளைமவுத், இங்கிலாந்து (Plymouth, England) – டிசம்பர் 27, 1831
சில மாதங்கள் தாமதங்களுக்குப் பிறகு, பீகிள் தம் பயணத்தைத் தொடங்கியது.
“நான் நினைத்துக் கொண்டிருந்ததை விடவும் அதிகமான கடல் உபாதைகள் அதிக அளவிலான துன்பத்தைக் கொடுத்தன” – டார்வின்.

கானரி தீவுகள் (Canary Islands) – ஜனவரி 1832
கானரி தீவுக்கூட்டங்களுள் ஒன்றான “டேனரிப்” தீவிற்குச் செல்கிற ஆசையை விதைத்தவர் அலெக்சாண்டர் ஹம்போல்ட். அவருக்கு முன்பு அங்கு சென்று வந்த ஐரோப்பிய அறிவியலாளர். டார்வினுடைய ஆசையை, அன்று அங்கு நிலவிய காலரா நிறைவேறவிடவில்லை.

கேப் வெர்டே தீவுக்கூட்டங்கள் (Cape Verde Islands) – ஜனவரி 1832
“பல நாடுகளுக்கும் சென்று வந்த அனுபவத்தின் அடிப்படையில் புவியியலைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இந்த தீவில்தான் உதயமானது. இந்த எண்ணம் எனக்குள் ஒருவிதமான கிளர்ச்சியையும், புத்துணர்வையும் கொடுத்தது” – டார்வின்.

சால்வடோர் (Salvador) – பிப்ரவரி 1832
பிரேசிலிய மழைக்காடுகளுக்கு முதல் முறையாக டார்வின் சென்றார். “இங்குதான் முதன்முதலில் பிரம்மாண்டமான வெப்பமண்டல மழைக்காடுகளைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியில் திளைத்தேன்.”

ரியோ டி ஜெனேரியோ (Rio de Janeiro) – ஏப்ரல் 1832
கரையிலிருந்து 150 மைல் உள்நோக்கிய தரைப்பயணத்தில் அடிமைகளின் அவலத்தைக் காண்கிறார்.

புன்டா அல்டா (Punta Alta) – செப்டம்பர் 1832
“புதைபடிவ எலும்புகளைக் கண்டெடுக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சில விலங்குகள் வேறு பரிமாணத்தில் இருந்திருக்க வேண்டும். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவற்றில் பலவும் புதியன. இன்று இல்லாதன.”

தியரா டெல் புகோ (Tierra del Fuego) – டிசம்பர் 1832
இந்த இடத்திலிருந்து, கேப்டன் பிட்ஸ்ராய் முந்தைய கடற்பயணத்தின் போது கிறித்துவ மதமாற்றத்திற்காக இங்கிலாந்திற்கு அழைத்து வந்த மூன்று பூர்வகுடிகளை, பழக்கப்படுத்த முடியாமல் திரும்ப அனுப்பிவிட்டார்.

பால்க்லாண்டு தீவுகள் (Falkland Islands) – மார்ச் 1833
இங்கு டார்வின் சேகரித்த தனித்துவமான பறவைகள் மற்றும் தொல்லுயிர் எச்சங்கள், தீவுகளின் தலைநிலப்பரப்பு அல்லது கண்டத்தின் பெரும்பரப்பில் (Mainland) கிடைத்த இதே வகை உயிரினங்களிடமிருந்து வேறுபட்டிருந்ததைக் கண்டறிந்தார்.

ரியோ நிக்ரோ (Rio Negro) – ஆகஸ்ட் 1833
எந்த நேரத்திலும் எந்த குதிரையில் வேண்டுமானாலும் சவாரி செய்து, சாதாரணமாக இரவையும், இடங்களையும் கடந்து செல்கிற சுதந்திரமான கவுச்சோகளின் (Gaucho) வாழ்க்கைமுறையைக் கண்டு வியக்கிறார்.

மெகல்லன் நீரிணைப்பு (Strait of Magellan) – ஜூன் 1834
இரண்டரை வருட கடற்பயணத்திற்குப் பிறகு, கப்பலும் டார்வினும் பசிபிக் பெருங்கடலைச் சந்திக்கின்றனர்.

சிலோ (Chiloé) – ஜனவரி 1835
ஒசொர்னோ எரிமலை வெடிப்பைக் காண்கிறார்.

வால்டிவியா (Valdivia) – பிப்ரவரி 1835
கடல் அரிமானத்தால் பல அடிகளுக்குக் கடல் உட்புகுந்திருந்த வால்டிவியா நகரத்தைப் பார்வையிடுகிறார். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் உணர்ந்து பதிவு செய்கிறார்.

வால்பரைசோ (Valparaíso) – மார்ச் 1835
ஆண்டிஸ் மலையேற்றம். கடல் மட்டத்தில் தாம் பார்த்த அதே மரங்கள், இந்த உறைபனிச் சூழலில் தகவமைந்துள்ள விதம் பற்றி ஆய்வு செய்கிறார். இந்த நீண்ட மலைகள்தான், தொடர்ந்து நிகழ்கிற நிலநடுக்கங்களுக்குக் காரணம் என்பதைக் கண்டறிகிறார்.

கலபகஸ் தீவுகள் (Galápagos) – செப்டம்பர் – அக்டோபர் 1835
தலைநிலப்பரப்பில் (Mainland) இருந்து வேறுபட்டிருந்த, தனித்துவமான ஒரே வகைத் தாவரங்கள், பறவைகள், ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்களின் தனித்துவப் பண்புகளின் மீது கவனம் குவித்து பதிவு செய்கிறார்.

சிட்னி (Sydney) – ஜனவரி 1836
பைம்மாவினங்களை (Marsupials) கண்டு ஆச்சரியப்படுகிறார். ஏன் ஆஸ்திரேலியாவின் பாலூட்டிகள் மற்றும் ஏனைய பகுதிகளிடம் இருந்து வேறுபட்டுள்ளன? என அவதானிக்கிறார். முடிவுகளுக்கு நகரவில்லை. (பின்னர், ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russel Wallace) தான் இவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடுகிறார்).

கோகோஸ் தீவுகள் (Cocos Islands @ Keeling Islands) – ஏப்ரல் 1836
பவழப் பாறைகள் (Coral Reef) குறித்த தமது கருதுகோள்களை பரிசோதித்துக் கொள்கிறார். உலகிலேயே உன்னதமான இயற்கை வடிவமைப்பு என்று இங்கு கண்டறிந்த பவழங்கள் பற்றிக் குறிப்பெழுதி வைத்துள்ளார்.

மொரிசியஸ் (Mauritius) – ஏப்ரல் – மே 1836
முழுமையான, மிக அழகான சித்திரம் என்று மொரிசியசைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும், வீட்டு நினைவுகள் கடும் அவதிக்குள்ளாக்குகின்றன என்றும், இந்த அவதியோடு எவற்றின் அழகையும் ரசிக்கும் மனநிலையில் தாங்கள் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கேப் ஆப் குட் ஹோப் (எ) நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) – மே – ஜூன் 1836
ஆங்கில அறிவியலாளரான ஜான் ஹெர்செலை சந்திக்கிறார். டார்வின் கண்டறிந்த புதிய உயிரினங்களை, இவர் “புதிர்களின் புதிர்” என வர்ணிக்கிறார்.

பாஹியா (Bahia) – ஆகஸ்ட் 1836
நன்னம்பிக்கை முனையில் இருந்து லண்டனுக்குப் போவோம் என்று நினைக்கையில், கப்பல் அங்கிருந்து தீர்க்கரேகை அளவீட்டிற்காக மீண்டும் தென் அமெரிக்க நிலப்பரப்பை அடைந்தது. ஏற்கனவே இருந்த வீட்டு ஏக்கமும், கடல் தாக்கமும் டார்வினை மீண்டும் அயர்வுறச் செய்தது.

“அரசாங்க செயல்முறைகளின் திடீர் கோணல்மாணலான வளைவு என்பது கடும் நெருக்கடியைத் தருகிறது. வெறுப்பு, பார்க்கிற எல்லாவற்றின் மீதும் வெறுப்பு! சக மாலுமிகள் மீதும் வெறுப்பு! அதோ! கடலின் மீது பயணிக்கிற எல்லா கப்பல்களையும் நான் வெறுப்புடனே பார்க்கின்றேன்.”

பால்மவுத், இங்கிலாந்து (Falmouth, England) – அக்டோபர் 2, 1836
“நான் நேற்று இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அளவுக்கதிகமான மகிழ்ச்சியுடன் கடும் குழப்பத்தில் என் சிந்தனை போராடிக்கொண்டிருக்கிறது.”