ஊடகம்: நாம் தவிர்க்க முடியாத ஆயுதம்
ஊடகம் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒரு ஆயுதம். சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்குப் பின்னரும் மக்களை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆயுதம் இதுவே. ஆனால், இந்த ஆயுதம் யாரின் கையில் உள்ளது என்பதைப் பொறுத்து, அது மக்களுக்கு ஆதரவானதாகவோ அல்லது எதிரானதாகவோ மாறுகிறது.
மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் என்று அழைக்கப்படும் பல வெகுமக்கள் ஊடகங்கள் முதலாளித்துவ ஆதரவில் செயல்படுகின்றன. எளிய மக்களின் பிரச்சனைகள், வாழ்க்கை, அவர்களின் விருப்பங்கள், கருத்துகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் ஊடகத் துறை தோல்வியடைந்துள்ளது. மக்களுக்கான செய்திகள் எப்போதாவது ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, பிரபல தமிழ் ஊடகமான விகடன், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களைப் பற்றி கவனம் செலுத்தாமல், அமைதியைக் காத்த பிரதமரை விமர்சிக்கும் ஒரு கார்டூனை வெளியிட்டது. தனக்கு எதிரான கருத்துகள் வெளிவருவதை விரும்பாத மோடி அரசு, விகடன் இணையதளத்தை முடக்கியது. இதற்கு எதிரான போராட்டங்களும் கண்டனங்களும் தொடர்ந்தாலும், இன்று வரை விகடன் இணையதளம் மீண்டும் செயல்படவில்லை. இந்தியாவின் கருத்துரிமை என்பது ஆளும் வர்க்கத்தால் நசுக்கப்படுவதன் தொடர்ச்சியே ஒன்றிய அரசின் செயல்பாடு.
உலக அரங்கில் கேலிக்குள்ளாகும் இந்தியாவின் கருத்துரிமை:
இந்தியாவில் 900 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 1,40,000 பத்திரிக்கைகளும் உள்ளன. ஆனால், இந்தியாவில் ஆளும் வர்க்கத்தால் ஊடகங்கள் ஜனநாயகத் தன்மையை இழந்து வருகின்றன. 2024-ம் ஆண்டு, Reporters Without Borders என்ற உலகளாவிய அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியா ஊடக சுதந்திரத்தில் 159-வது இடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது. இந்தியா, பாலஸ்தீனை (157-வது இடம்) விட பின்தங்கியுள்ளது. சியோனிச இஸ்ரேலால் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனே, இந்தியாவை விட பத்திரிக்கை சுதந்திரத்தில் முன்னேறி இருப்பது, நாட்டின் ஜனநாயகத்திற்கும் கருத்துரிமைக்கும் சாபக்கேடாகும்.
கடந்த பத்தாண்டுகளாக, ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசால் கருத்துரிமை சவக்குழியில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், சில ஊடகங்கள் வெளிப்படையாக வெறுப்பை உமிழ்வதும், அதிகரித்திருப்பதும் நம்மால் உணர முடிகிறது. ஊடகத்தின் இறையாண்மையைக் காப்பதற்கு, மாற்று ஊடகங்களான நியூஸ்கிளிக், பாரி, நியூஸ்லாண்டரி, தி ஒயர் போன்றவை உயிர்த்தெழுந்துள்ளன. ஆனால், சுயேட்சையான ஊடகங்களையும் தன்னுடைய கொடூரக் கரங்களால் நசுக்க மோடி அரசு முயற்சிக்கிறது.
2023-ம் ஆண்டு, சுயேட்சையான மின்னிதழான நியூஸ்கிளிக்கின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அனைத்து பத்திரிக்கையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த அமலாக்கத் துறை ஏவப்பட்டது. பீரபீர் புரஸ்காயர் கைது செய்யப்பட்டார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நியூஸ்கிளிக் முக்கிய செய்தியாக்கியதே, அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்குக் காரணம். இவையெல்லாம் பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை விவரிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் பெருமுதலாளிகளின் கையில் இருக்கிறதென்றால், ஊடகத்தின் முக்கியப் பொறுப்புகளோ ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் வசமே உள்ளன.
முடிவெடுக்கும் உரிமைகொண்ட பதவிகளில் பட்டியலினத்தவருக்கு இடமில்லை:
“தீண்டப்படாதவர்களுக்கு ஊடகம் என்றுமே சொந்தமில்லை” என்று அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் 1938-ல் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. ஊடக நிறுவனங்களில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது.
2019-ல் ஆக்ஸ்பாம் மற்றும் நியூஸ்லாண்டரி நடத்திய ஆய்வில், 121 செய்தி நிறுவனங்களில் 106 இடங்களில் தலைமைப் பதவிகளை ஆதிக்க சாதியினர்தான் வகிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு தொகுப்பாளர்களில் மூன்று பேர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆங்கிலப் பத்திரிக்கைகளில், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் வெறும் 5% மட்டுமே வெளியாகின்றன. இந்தி பத்திரிக்கைகளில், சாதிப் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகளில் 50%க்கும் மேல் ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் பத்திரிக்கையாளர்களில்தான் எழுதப்பட்டுள்ளன. இதனால், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகள், அவர்களது பார்வையில் ஊடகங்களில் முதன்மை பெறுவதில்லை.
உயர் வர்க்கத்தையும் ஆதிக்க சாதியையும் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், ஏழை எளிய மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, காலை உணவுத் திட்டம் பற்றி தினமலரில் வெளியான ஒரு கட்டுரை, பிஞ்சு குழந்தைகளின் பசியை நிவர்த்தி செய்யும் திட்டத்தைக் கீழ்தரமாகக் குறைத்து மதிப்பிட்டது.
இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் சாய்நாத், தனது “இறுதி நாயகர்கள்” புத்தகத்தில், “ஏழை எளிய மக்களின் உணர்வுகளை உயர் வர்க்கப் பத்திரிக்கையாளர்கள் பொருட்படுத்துவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, தெமத்தி தெய் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் கௌரவ சான்றிதழை இரண்டு பத்திரிக்கையாளர்கள் ஆவணம் சரிபார்த்து தருவதாகக் கூறி எடுத்துச் சென்று, திருப்பித் தரவே இல்லை. தெமத்தி தெய்யின் குடும்பத்திற்கு அந்த ஆவனம் எந்தளவு முக்கியமானது என்று உணர்ந்திருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். பாமர மக்களின் வலி உணராத ஓரளவு வசதி படைத்தவர்களால் பத்திரிக்கைத்துறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது விளிம்புநிலை மக்களின் உணர்வுகளுக்கு அவர்களின் எழுத்துகளிலும், அவர்களிடத்திலும் இடம் இருப்பது இல்லை. இது போன்ற நிகழ்வுகள், பத்திரிக்கைத் துறையில் உயர் வர்க்கத்தினரின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
கருத்துரிமை: வேலை இழப்பால் பறிபோகலாமா?
ஊடகத் துறையின் கட்டமைப்பே ஆதிக்க வர்க்கத்திற்காக இயங்கும் போது, பொதுமக்கள் மட்டுமல்ல, ஊடகவியலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வேலை இழப்பு, கொலை மிரட்டல், பெண் பத்திரிக்கையாளர்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் போன்ற கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள்.
ஊடக நிறுவனங்களில் வேலை இழப்பு ஒரு தொடர் கதையாக உள்ளது. ஊடகவியலாளர்கள் பணிப்பாதுகாப்புடன் இருந்தால் மட்டுமே, அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். ஆனால், பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை.
மேலும், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சியால், முதலில் வேலையை இழப்பவர்கள் தலித் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்களே. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினாலேயே, கொலை, பாலியல் அச்சுறுத்தல், கைது போன்ற நடவடிக்கைகளுக்கு ஊடகவியலாளர்கள் உள்ளாகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். குஜராத் கோப்புகளை வெளியிட்ட இளம் பத்திரிக்கையாளர் ரானா அய்யூப், இன்று வரை சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார். மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுத்ததால், ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, பொய்குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் பத்திரிக்கையாளரும் கூட அரசியல் பிரமுகர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னிடம் பெண் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவியது. இவ்வாறு ஊடகவியலாளர் அவமதிக்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வளவு ஏன், குறைந்தபட்சமாக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஊடவியலாளரின் உயிருக்கும் சுயமரியாதைக்கும் உரிய நிறுவனங்கள் பொறுப்பேற்காத போது கருத்துரிமை எப்படி ஜனநாயக நாட்டில் நிலைக்கும்?
ஊடக நிறுவனங்கள் மீதான ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரத்தை ஒழிப்பது, ஊடகவியலாளர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரத்தைத் தளர்த்துவது, விளிம்புநிலையில் உள்ளவர்களை ஊடகத் துறையில் உள்ளடக்குவது ஆகியவை ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாதவை.
– கு. சௌமியா