அறிவியல்

இயற்கைத்தேர்வும் செயற்கைத்தேர்வும் – ஷோபனா நாராயணன்

549

சுமார் 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு, ஆர்க்கிபாக்டீரியா என்னும் முதல் உயிர்ப்பொருள் பூமியில் தோன்றியதாக நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது. மனித இனம் தோன்றி சுமார் 2.5 மில்லியன் வருடங்கள் மட்டுமே ஆகின்றன. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவிலிருந்து, உயிர் என்னும் இயங்கியல் செவ்வாய் கிரகம் வரை செல்லும் திறன் பெற்ற மனித இனமாக பரிணமிக்க, கோடான கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

சமீபத்திய வான்பொருள் ஆய்வியல், பென்னு என்னும் விண்கல்லில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஆய்வினை மேற்கொண்டபோது, கண்டறியப்பட்ட உண்மைகள் அதிர்ச்சியும் ஆர்வமும் ஊட்டுபவையாக அமைந்தன. உயிர்ப்பொருள் என்னும் இயங்குதன்மை உடைய மூலக்கூறுகள் அடிப்படையில் அமினோ அமிலங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்களால் ஆனவை. அதே மூலக்கூறுகள் பென்னுவிலும் காணப்பட்டுள்ளன. இதுபோல வேறு எந்த வான்பொருட்களிலும் இவை காணப்படலாம் என்னும் கருத்து இதன் மூலம் உருவானது. ஆனால், ஒரே வகை மூலக்கூறுகளே ஆன போதும், பூமியில் மட்டுமே உயிரினங்களாக அவை உருக்கொள்ள, நிறைய காரணங்கள் உண்டு. அவ்வாறு உயிர்கொண்ட போதும் கூட, சிறு பாக்டீரியா முதல் மனிதன், தாவரங்கள், பூஞ்சைகள், கடல்வாழ் உயிரிகள் என கோடிக்கணக்கான சிற்றினங்களாக உயிரானது பன்மயப்பட, விதவிதமான உயிரினங்கள் தோன்ற, மிக முக்கிய காரணம் பரிணாம வளர்ச்சி.

பரிணாமவியலின் தந்தை எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின், தனது வாழ்காலம் முழுவதும் பல்வேறு உயிரினங்களை ஆவணப்படுத்தி ஆராய, கப்பல் பயணம் செய்ததும், ஆய்வுகள் செய்து தனது நூலான “Origin of Species” புத்தகத்தை வெளியிட்டதும், நாம் அனைவரும் பள்ளிகளில் பயின்ற ஒன்று. டார்வின் தனது ஐந்து வாதங்களைக் கருதுகோள்களாக முன்வைக்கிறார். அவை ஐந்தும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் கருதுகோள்கள் எனலாம். அதன் தொடர்ச்சியாக, ரிச்சர்ட் டாக்கின்ஸ், டார்வினின் கொள்கைகளை ஆதரித்ததோடு, “Blind Watchmaker” கொள்கையினை வெளியிடுகிறார். டார்வினின் கொள்கைகளில் மிக முக்கியமானது இயற்கைத் தேர்வு.

அதாவது, எது சூழலின் பொருட்டு வாழத் தகுதியானது என்பதை, கால ஓட்டத்தில் பரிணாமத்தின் வேறுபாட்டில், சந்ததிகளின் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏற்படும் மரபியல் மற்றும் சூழியல் மாற்றங்களின் அடிப்படையில், எந்த மாற்றம் வாழத் தகுதி பெறும், எந்த மாற்றம் வாழுதலில் இருந்து வழக்கொழிந்து போகும் எனத் தீர்மானிக்கும் தன்னிச்சையான நிகழ்வு முறையாகும். இதைச் சற்று எளிமையாகப் பார்ப்போம். பூமத்திய ரேகைப் பகுதிக்கு, தூந்திரப் பகுதியில் இருந்து ஒரு எலி இனம் இடப்பெயர்வு செய்வதாகக் கொள்வோம். வெப்பநிலை மாறுபாட்டால், அதன் உடற்கூறில் மாற்றங்கள் ஏற்படும். தூந்திரப் பகுதியில் குறைவான சூரிய ஒளியால், எலியின் மேற்புறத் தோலில் மெலானின் குறைவாகவோ அல்லது சுரக்காமலோ கூட இருந்திருக்கலாம். ஆனால், பூமத்திய ரேகைப் பகுதியில், தோலின் மேற்புறச் செல்கள், சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து தோலைக் காக்க, மெலானினைச் சுரக்கத் துவங்கும். இதன் காரணமாக, இந்த எலிவகைகளுக்கு பழுப்பு நிறம் ஏற்படும், மேலும் நோய்த்தடுப்பாற்றல் திறன் அதிகரிக்கலாம். அதேவேளை, சில எலிகள் மெலானினைச் சுரப்பதில் தோல்வியுறலாம். இந்த எலிகளால் வெப்பத்தைத் தாங்க இயலாமல், விரைவில் இறந்து போகலாம். இந்த இரு வகை எலிகளும் புதிய சூழலில் தொடர்ந்து குட்டிகளை ஈனும் போது, மெலானின் அதிகம் சுரக்கும் பழுப்பு எலிகள் தொடர்ந்து அதிக காலம் வாழும் வாய்ப்பு அமைந்து, அதிக குட்டிகள் ஈனும். இதனால், மெலானின் உடைய பழுப்பு நிற எலிகள் அதிக எண்ணிக்கையில் பெருகத் துவங்கும். அதே நேரம், மெலானினை உண்டாக்க இயலாத செல்களைப் பெற்ற வெள்ளை நிற எலிகள், நோய்த்தடுப்பாற்றல் காரணமாக விரைவில் இறக்க நேரிடுவதால், அவற்றின் எண்ணிக்கை பூமத்திய ரேகைப் பகுதியில், தூந்திரப் பகுதியைப் போல அதிகரிக்காது. இதனால், காலப்போக்கில் இவை அந்தப் பகுதியிலிருந்து முற்றிலும் அழிந்துவிடும் வாய்ப்புண்டு. இது உடனே நிகழ்ந்துவிடாது. அடுத்தடுத்த தலைமுறைகளாக கடத்தப்படும் பண்புகள்தான், அவற்றின் இருப்பினை, ஆரோக்கியத்தினை, இனப்பெருக்கத்தினைத் தீர்மானிக்கின்றன.

இவ்வாறு, இயற்கையில் சிற்றினங்களின் பண்புகள் தேர்வாகின்றன என்று டார்வின் குறிப்பிடுகிறார். ரிச்சர்ட் டாக்கின்ஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று, “Blind Watchmaker” கொள்கைப்படி, இந்தத் தேர்வுமே தற்செயலானது என்கிறார். அதாவது, இயற்கைத் தேர்விற்கு குறிப்பிட்ட திசை கிடையாது. எவ்வாறு வேண்டுமானாலும் நிகழும். இதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோமேயானால், ஒருவேளை மெலானின் உற்பத்தியாகும் எலிகளுக்கு, மெலானின் உற்பத்தியின் காரணமாக, திடீரென பார்வைக் குறைபாடு ஏற்படுவதாகக் கொள்ளுவோம். அவை அதிக அளவு எதிரிகளுக்கு இரையாகும் வாய்ப்பு உண்டு. இவை இப்போது எண்ணிக்கையில் பெருக வாய்ப்பு மிகக் குறைவு. அதேவேளை, மெலானின் இல்லாத எலிகளில் பார்வை சிறப்பாக இருந்திருக்கும். நோய்த்தடுப்பாற்றல் குறைந்த போதும், இவை மிகச் சிறிய அளவிலாவது வாழ்ந்திருக்கும். அதாவது, ஏற்படும் மாற்றங்களும் அதன் விளைவுகளும் தற்செயலானவை மற்றும் அனுமானிக்க இயலாதவை. சிற்றினங்கள் தன்னிச்சையாகப் பண்புகளைப் பெற்று மேம்பாடு அடைகின்றன. இவையனைத்தும் “Random Events” என்பதுதான் டாக்கின்ஸின் விளக்கம்.

இதுபோன்ற பல லட்சம் கோடிக்கணக்கான பண்பு மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று, பல சிற்றின வகைகள் ஏற்பட்டிருக்கும். அவை சூழலுக்குத் தக்கவாறு மேலும் புதிய பண்புகளை அடைந்து, புதுப்புது சிற்றினங்களாக மாற்றம் பெற்றுத்தான், பாக்டீரியா என்பது டைனோசராக ஆன நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு “இயற்கைத் தேர்வு” என்று பெயர்.

இயற்கைத் தேர்வின் சிறப்பம்சமே, அது தற்செயலானதோடு, மிக மிக அதிக எண்ணிக்கையிலான பன்மயம் மிக்க உயிரினங்களை வழங்குகின்றது என்பதுதான். அத்துடன், அது மிக மிக மெதுவான உயிர்ச் செயல்முறை. உயிரினங்கள் சூழலின் மாறுபாட்டிற்குத் தக்கவாறு தகவமைத்துக்கொள்ள போதிய அவகாசம் கிடைக்கும். இவையனைத்துமே பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், பூவுலகின் உயிர்ப்பன்மையத்திற்கும் நிலைத்தன்மை வழங்கக் கூடியவை.

செயற்கைத் தேர்வு என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில், பிற உயிரினங்களைப் போலவே, மனித இனமும் தற்செயலாகவே பரிணாம வளர்ச்சியில் பங்கெடுத்து வந்தது. சூழலுக்குத் தக்கவாறு உடல் தொடர்பான மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. உதாரணமாக, நிமிர்ந்து நடக்கத் துவங்கியது, அவனுக்கு ஓடும் வேகத்தைக் கூட்டியதால், வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிப்பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. உயரம், மூளையின் அளவு உள்ளிட்ட பண்புகள் மாற்றம் கண்டன. இவையனைத்தும் மனித இனத்தின் கட்டுப்பாடின்றி மனித இனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.

ஆனால், விரைவில் மனித இனம் சூழலைத் தனக்குத் தக்கவாறு மாற்றக் கற்றுக்கொண்டது. குளிர் என்றால் நெருப்பு மூட்டத் தெரிந்தது. ஆயுதங்கள் செய்யக் கற்றுக்கொண்டது. இப்படி உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மனித இனம் செயற்கைத் தேர்வுகளுக்கு வழிகோலியது. கிடைத்ததை உண்டது போய், நெருப்பின் கண்டுபிடிப்பு காரணமாக, தானிய வகைகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டதால், நிறைய தாவர வகைகளை மனித இனமானது உண்ணத் துவங்கியது. சுவை மிகுந்த, சத்து மிகுந்த தானிய வகைகளைப் பயிர் செய்யத் துவங்கியதே, செயற்கைத் தேர்வின் முதல் படி எனலாம். அதுவரை தன்னிச்சையாக வளர்ந்து வந்த தாவர வகைகளில், மனித இனத்தின் தலையீடால் மாற்றம் உருவாகத் துவங்கியது. வேளாண்மைதான் முதல் செயற்கைத் தேர்வு.

தொடர்ந்து, மனித இனத்தின் வேட்டைத்திறன் அதிகரித்தது. குட்டிகளைப் பாதுகாக்கும் சமூக வாழ்வு முறையால், குட்டிகளின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கத் துவங்கியது. கூட்டாக வாழத் துவங்கிய போது, மொழி பிறந்தது. அது மனித இனம் இன்னும் ஒத்திசைவுடன் செயல்பட வழிவகுத்தது. அதனால், மனித இனத்திற்கு ஆபத்திலிருந்து தப்பும் வாய்ப்பும், கூட்டுத்தாக்குதல்கள் நிகழ்த்தி எதிரியினை வீழ்த்தும் திறனும் அதிகரித்தன. சமூக வாழ்வு துவங்கியது. இதன் காரணமாக, கலைகள் பிறந்தன, ராஜ்ஜியங்கள் பிறந்தன. அறிவியல் வளர்ந்தது. இன்று, மனிதக் கண்கள் பாக்டீரியங்களை நுண்ணோக்கி மூலம் பார்க்க இயலும். நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தின் மரபுப்பொருளின் வடிவத்தையும் மாற்றி, தனக்குத் தேவைப்படும் அனைத்து வித உயிரினங்களையும் உருவாக்க இயலும். இதுதான் செயற்கைத் தேர்வின் அடுத்த நிலை. இது ஒட்டுமொத்தமாக, பரிணாம வளர்ச்சியின் போக்கில், நிகழ்வுகளில் மனித இனம் குறுக்கிட்டு, முழுக்க முழுக்க அதன் திசையைத் தனக்குத் தக்கவாறு மாற்றிய செயலாகும்.

இயற்கைத் தேர்விற்கும் செயற்கைத் தேர்விற்குமான மிகப்பெரிய யுத்தகாலத்தின் யுகசந்தியில் நிற்கின்றோம். இயற்கைத் தேர்வில், எல்லா சிற்றினங்களுக்கும் இடமுண்டு. செயற்கைத் தேர்வில், மனிதனுக்குப் பலன் தரும் சிற்றினத்திற்கான தேர்வுகளுக்கு மட்டுமே இடம் உண்டு. உதாரணமாக, எருக்கு, மாமரம் இரண்டுமே ஒரு நிலத்தில் இயற்கைத் தேர்வுப்படி வாழும். செயற்கைத் தேர்வில், மனித இனம் எருக்கினை வளர்க்காது. காரணம், அதன் பலன் மனித இனத்திற்குப் பெருமளவில் இல்லை. ஆனால், மாமரம் பெருகும். காரணம், வெளிப்படையான அதன் பலன். மனிதன் கவனிக்கத் தவறும் இடமும் கூட இதுதான். எருக்கினால் சூழலுக்கு, உணவு சங்கிலிக்கு என்ன பலன் என்பதை மனித இனம் கூராய்வு செய்யத் தவறுகின்றது. ஒன்று தொட்டு ஒன்றாக பல சிற்றினங்களை அழிக்க, மனித இனம் அதை அறியாமல் வைத்த ஆதிப்புள்ளி எனலாம்.

இன்னும் ஒரு படி மேலே சொன்னால், மாமரத்திலேயே குட்டையான, மிகவிரைவாக காய்க்கத் துவங்கும் ரகங்களை மனித இனம் உருவாக்கிய பிறகு, அது நீண்ட ஆண்டுகள் வளர்ந்து காய்க்கும் ரக மரங்களின் அழிவிற்கே கூட காரணமாகலாம்.

செயற்கைத் தேர்வில் பன்மயத்திற்கு இடமில்லை. பன்மயமற்ற வளர்ச்சி என்பது பூவுலகின் நிலைத்தன்மைக்கு எதிரானது. மேலும், செயற்கைத் தேர்வில் தகவமைப்பிற்கு வாய்ப்போ அனுமதியோ இல்லை.

செயற்கைத் தேர்வென்பது மனிதன் சிந்திக்கத் துவங்கிய பின் உருவானது. அது பலாபலன்களின் அடிப்படையில் இயங்கும். ஆனால், இயற்கைத் தேர்வென்பது சிந்தனையற்ற, முற்றிலும் தற்செயல் அடிப்படையிலான நிகழ்வு.

ஆயினும், செயற்கைத் தேர்வு என்பது அசுரத்தனமான மானுட இனவளர்ச்சிக்கு ஒருவகையில் அவசியமானதும், தவிர்க்க இயலாத ஒன்றும் ஆகும். செயற்கைத் தேர்வென்பது மனிதன் சூழலைத் தனக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவுடன் துவங்கியது. ஆனால், அது மனித இனம் சூழலை வென்ற பின் துவங்கியது என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது.

சூழலையும் பரிணாமத்தையும் மனிதன் மட்டுமல்ல, எந்த ஒரு உயிரினமும் வென்றடுக்க முடியாது. இவ்விடத்தில், செயற்கைத் தேர்வென்பது ஒரு பலனை, ஒரு உறுதியான முடிவினை எதிர்பார்த்தே நிகழ்த்தப்படுவது. மாமரங்களின் வகைகளைப் போல. ஆனால், நாம் மறப்பது “Blind Watchmaker” கோட்பாட்டின் அடிப்படையைத்தான். குருட்டுத்தனமான நிகழ்வுகளின் நகர்வு, பலன், ஆகியவற்றின் நிகழ்தகவுகளை நாம் கணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. செயற்கைத் தேர்வினையும் இயற்கைத் தேர்வே கட்டுப்படுத்தும் என்னும் மறுக்கவியலாத உண்மையினை நாம் புரிந்துகொள்வதும், இயற்கையோடு குறைந்தபட்ச ஒத்திசைவோடேனும் வாழத் துவங்குவதும், பூவுலகிற்கு நாம் செய்யும் மிகச்சிறிய நன்மை எனலாம்.

– ஷோபனா நாராயணன்

5 Comments

  • சுவாரஸ்யமாக அறிவியல் உண்மைகளை எளிமையாக விளக்கும் அருமையான கட்டுரை.

  • எளிமையான மொழிநடையில் அமைந்த ஆழமான கட்டுரை. நன்றி…

  • செயற்கைத் தேர்வினையும் இயற்கைத் தேர்வே கட்டுப்படுத்தும் என்பதற்கான உதாரணங்களை வழங்கினால் உதவிகரமாக இருக்கும்

Comments are closed.