போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களின் ஆபத்தான வளர்ச்சி…!
சமீபத்தில் ஆர். சந்திரமௌளி மற்றும் ஆர். சுஜாதா இருவரும் தனியார் பயிற்சி மையங்களால் (Private Coaching Centers) ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரைகள் எழுதியிருந்தனர். அதிலிருந்து சில பகுதிகளைப் பயன்படுத்தி இக்கட்டுரையைத் தமிழில் தொகுத்துள்ளேன்.
உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு, கல்வியில் தனியார் துறையின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. அச்சூழலில் துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ச்சியடைந்து பெரும் லாபத்தை ஈட்டுகின்றன. அனைவருக்கும் இலவசக் கல்வியையும் சமூகப் பாதுகாப்பான வேலையையும் கொடுக்க முடியாத முதலாளித்துவ அமைப்பு, லாபத்தைச் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. தனது உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ள ஏதுவான திட்டங்களுக்குப் பயன்படும் வகையிலும், சுயசிந்தனைக்கு எதிராக “சொல்வதை மட்டுமே” நடைமுறைப்படுத்தும் பண்பாட்டை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டும் இயங்குகிறது. எனவே, பொதுக் கல்விக்கான முதலீட்டைக் குறைப்பதும் தனியார் துறையை வளர்த்தெடுப்பதும் முதலாளித்துவ அமைப்பின் இயல்பான குணாம்சமாக உள்ளது. கல்விமுறையில் ஏற்படும் அனைத்து முரண்பாடுகளுமே இந்த அமைப்பு உருவாக்கும் பாதிப்புகள் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில், கிழக்கு டெல்லியில் உள்ள FIITJEE (Forum for Indian Institute of Technology-Joint Entrance Exam) என்ற தனியார் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள், குடும்பத்தோடு தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினையால் திடீரென பயிற்சி மையத்திலிருந்து வெளியேறியதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையால் நள்ளிரவில் பயிற்சி மையம் மூடப்பட்டதாலும் இதைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றோரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், FIITJEE பயிற்சி மையத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தை மேற்கோள் காட்டி, இதில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க போதுமான நேரத்தையும் அதற்கு ஏற்ப ஊதியத்தையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். ஆனால் இதை இப்பயிற்சி மையம் கடைபிடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். டெல்லியோடு முடியாமல், இப்போராட்டம் நொய்டா, மீரட், காசியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 58% பெற்றோர்கள் இப்பயிற்சி மையங்களால் ஏமாற்றப்பட்டார்கள் என்ற தகவலும் கிடைக்கிறது.
FIITJEE என்ற தனியார் பயிற்சி மையம் ஐஐடியில் படித்த டி.கே.கோயல் என்பவரால் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தராளமயமாக்கல் ஆகிய கொள்கைகள் அமலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இப்பயிற்சி மையத்தின் தற்போதைய வளர்ச்சி, டெல்லி, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 74 மையங்களோடு செயல்படுகிறது. அதனோடு 2 குளோபல் பள்ளிகள், 6 உலகப் பள்ளிகள், 9 ஜூனியர் கல்லூரிகள் உள்ளிட்ட 58 பள்ளிகள் செயல்படுகின்றன. கூடுதலாக, மலேசியா, சிங்கப்பூர், குவைத், கத்தார் உள்ளிட்ட அயல்நாடுகளிலும் இதன் கிளைகள் பரவியுள்ளன. மொத்தம் 3,200 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவ்வாறு கோடிகளில் வருமானம் பார்க்கும் ஒரு பயிற்சி நிறுவனம், முறையான கல்வியை வழங்க முடியாமல் போனதால் கடும் எதிர்ப்புகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறது. ஒரு சில வழக்குகளும் போடப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இது போன்ற பயிற்சி மையங்களால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய கல்விக் கொள்கையால் தேர்வுகளை மையப்படுத்தி கல்வி அமைப்பு மேலும் மோசமான நிலைக்குச் செல்கிறது. இதனால் இது போன்ற பயிற்சி மையங்கள் கூடுதலாக லாபம் பார்க்க வழிவகுக்கிறது. நாட்டின் தனியார் பயிற்சி மையங்களின் வியாபார மதிப்பு ஒரு ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் 1.50 லட்சம் கோடி வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதீத லாபத்தால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. உதாரணமாக, டெல்லியில் கடந்த ஆண்டு ராவுஸ் ஐஏஸ் அகாடமியில் (Rau’s IAS Academy) பயின்ற மூன்று மாணவர்கள் மழைநீர் புகுந்ததால் உள்ளே அதில் மூழ்கி அப்பயிற்சி மையத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது போல் ஏராளமான பிரச்சனைகள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் என்ன நிலை?
போட்டித் தேர்வுகளுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு தன்னை முன்னிறுத்துகிறது. மருத்துவத்திற்கான நீட் தேர்வு எதிர்ப்பில் உறுதியாக இருந்தாலும், லாப நோக்கத்தோடு புற்றீசல் போல் அதிகரிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் குறித்து தமிழ்நாடு அரசு எந்த உறுதியான கொள்கை நிலைப்பாடும் எடுக்கவில்லை.
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வு, மாநில அரசுப் பணியிடங்களுக்கான குரூப் பிரிவு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு, மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை போன்ற தொழில்முறை பட்டப்படிப்புகள் உட்பட பலதரப்பட்ட தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நீட் தேர்வுக்காக நடத்தப்படும் சுமார் 400 பயிற்சி மையங்களால் மட்டுமே சுமார் 6 ஆயிரம் கோடிக்கு வருமானம் ஈட்டுவதாக ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் நுழைய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயமாக்கப்பட்டது. அதன் வரம்பிலிருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்க தமிழக அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற உதவும் வகையில் தனி, இலவச பயிற்சி அமர்வுகளை அரசு சார்பாகத் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக, பொறியியல் தேர்வில் (JEE), இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IITs) மற்றும் பிற மத்திய அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் நிறுவனங்களில் படிப்பதற்கான பயிற்சியை மாநில அரசு வழங்கி வந்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் மாநில அரசு நடத்துகிறது. முதல் சுற்றில் தகுதி பெற்றவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் வழக்கம் உள்ளது. பட்டய கணக்கியல் (Chartered Accountancy) போன்ற பிற தொழில்முறை படிப்புகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் இன்று காளான்கள் போல் முளைத்துள்ளன. இந்த மையங்களின் எண்ணிக்கை அல்லது அதில் சேர்ந்துள்ள மாணவர்கள் பற்றிய தரவுகள் எதுவும் மாநில அரசிடம் இல்லை.
ஒரு தொழில்முறை படிப்பில் மாணவர்கள் விரும்பிய இடத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் கூடுதலாகப் பயிற்சி மையங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பெற்றோர்கள் தனிப்பட்ட கடன்களை (Personal Loan) வங்கியின் மூலமாகவும் அல்லது கந்து வட்டியின் மூலமாகவும் மேலும் பெறத் தயங்குவதில்லை. இதில் பலர் ஏமாற்றமடைகின்றனர். பணத்தை இழந்து பாதிக்கப்படுகின்றனர்.
இணைய வழியில் நடைபெறும் வகுப்புகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைப் பேரிடர்கள் வந்த சமயத்தில் இணைய வழியிலான கல்வி அறிமுகமானது. கல்வியின் வேறொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டியது. மாணவர்களுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டன. கொரோனா தொற்றுநோய்களின் போது அவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. இணைய வழிக் கல்வியில் இணைவது தவிர்க்க முடியாத நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட பல தனியார் பயிற்சி மையங்கள் அதிக லாபம் சம்பாதித்தன. இதில் பலர் ஏமாற்றப்பட்டதாகச் சமீபகாலத்தில் உணர்கிறார்கள்.
திருச்சியில் உள்ள ஒரு பெற்றோர், தனது மகன் பைஜூஸில் (BYJU’S) ஏழாம் வகுப்பில் இருந்து நான்கு வருடங்கள் சேர்ந்தபோது, பயிற்சியை விட, இலவச டேப்லெட் (Tablet) வழங்குவதன் மூலம் அவன் அதிகம் ஈர்க்கப்பட்டான் என்று நினைவு கூர்ந்தார். “முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, அவர்கள் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றினார்கள், ஈர்க்கக்கூடிய வீடியோ பாடங்கள் மற்றும் எனது மகனின் முன்னேற்றத்தை அவ்வப்போது தனிப்பட்ட முறையில் கண்காணிக்க ஒரு ஆசிரியர் என நம்பிக்கையை ஏற்படுத்தினர். ஆனால் அவர் பத்தாம் வகுப்பை அடைந்தபோது, கற்றல் பொருட்கள் அனைத்தும் இணைய வழிப் புத்தகங்களாக மாறிவிட்டன. மேலும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்” என்று அவர் கூறுகிறார். 40,000 ரூபாய் செலுத்தியிருந்தார்கள். அவனைப் பொறியியல் சார்ந்த தொழிலுக்குத் தயார்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர்கள், லாக்டவுன் காலத்தில் முக்கியமாக கணிதத்தில் சரியாகப் பயிற்றுவிக்கப்படாததால், வணிகப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவானது என்று தெரிவித்தார். இப்படிப் பல பெற்றோர்கள் வேதனையோடு தாங்கள் ஏமாற்றம் அடைந்ததைத் தெரிவிக்கின்றனர்.
தேசிய அளவிலான திறமைக்கான தேர்வுகள் மூலம் NEET மற்றும் JEE க்கு ஆர்வமுள்ளவர்கள் நன்கு அறியப்பட்ட தனியார் பயிற்சி மையங்களில் சேர விரும்புகிறார்கள். நல்ல மதிப்பெண்கள் என்றால் உதவித்தொகையும் கிடைக்கும் என அப்பயிற்சி மையங்கள் கொடுக்கும் விளம்பரங்களை நம்புகிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் எப்படி உதவித்தொகை கொடுக்கும்? கட்டணத்தில் கொடுக்கும் சில்லறைத் தள்ளுபடிகள் உதவித்தொகை ஆகாது என்ற சிந்தனை இல்லாமல் போகிறது.
நீட் தேர்வுக்கான பிரபலமான பயிற்சி மையத்தில் தனது மகனைச் சேர்த்த சென்னையைச் சேர்ந்த பெற்றோர், செப்டம்பர் மாதம் நடந்த திறமைக்கான தேர்வில் (Talent Exam) கலந்து கொண்டதாகக் கூறுகிறார். “நாங்கள் எனது மகனை நீட் தேர்வுக்காக இரண்டு வருடங்கள் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளோம். அவர்கள் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தைக் கற்பித்தார்கள். அதற்கு சுமார் 2.5 லட்சம் கட்டணமாக வசூலித்தார்கள். ஆனால் மதிப்பெண் நன்றாக எடுத்தால், ஒருவேளை 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை குறைவாகச் செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் கூறுகிறார். உதவித்தொகைக்கான தேர்வுகள் பத்தாம் வகுப்புப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இது போல் பயிற்சி நிறுவனங்களின் இணையதளங்களில் மாணவர்களுக்கு இப்படிப் பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாமே போலியான தேர்வுகள் எனலாம்.
வட இந்தியாவில் செயல்படும் சில இணையதளங்கள் வகுப்புகளைக் கற்பிக்க இந்தி மொழியைப் பயன்படுத்துகின்றன. Chartered Accountancy படிக்கும் ஆர்வலரான ரேணு என்ற மாணவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இணைய வழிப் பயிற்சியில் சேர்ந்ததாகக் கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான பயிற்சி ஆங்கிலத்தில் நடைபெற்றது. பல பாடங்கள் அவளுக்குத் தெரியாத இந்தி மொழியில் நடத்தப்பட்டன. இது குறித்து விளக்கம் கேட்ட போது, “இந்தப் பயிற்சியில் பெரும்பாலான மாணவர்கள் இந்தி பேசுகிறார்கள், எனவே ஆசிரியர் அந்த மொழியில் பாடம் எடுப்பதாகத் தெரிவிக்கிறார்கள்” என்றார். எனவே ஒவ்வொரு பாடத்திற்கும் மாதம் 6,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி, இரண்டு தனித்தனி இணையதள பயிற்சி நிறுவனங்களின் மூலம் இரண்டு இடைநிலைத் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார். “எல்லா பாடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 60,000 செலவாகும். ஆனால் இந்த ஒருங்கிணைந்த தொகுப்பை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனெனில் சில கல்வி மையங்கள் சில பாடங்களை முறையாக எடுப்பதில்லை. எனவே ஒவ்வொரு பாடத்தையும் வெவ்வேறு கல்வி மையங்கள் மூலம் படிக்க விரும்புகிறேன்” என்றார்.
ஆசிரியர்களை வேட்டையாடுதல்
பயிற்சி மையங்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக உள்ளது. டெல்லியில் உள்ள FIITJEEயில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஆசிரியர்களுக்கிடையேயும் போட்டிகள் நிலவியதுதான். அதிக சம்பளம் மற்றும் சிறந்த சலுகைகளை வழங்கும் பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் மாறுவது அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு இடம் மாறும் ஆசிரியர்களைப் பின் தொடரும் மாணவர்களும் புதிய பயிற்சி மையத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆசிரியர்கள் பொதுவாக தங்கள் மாணவர்களின் தொடர்பு விவரங்களை வைத்திருந்து இதை எளிதாக நிறைவேற்றுகின்றனர்.
சென்னையில் உள்ள FIITJEE கல்வி இயக்குநர் அங்கூர் ஜெயின் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பயிற்சி மையங்களில் பயிலும் ஆயிரம் மாணவர்களில் 250 முதல் 300 மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேருகிறார்கள். FIITJEE நேரடி பயிற்சி மையங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டு படிப்புகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.”
ஆகாஷ்-பைஜூஸ் எனும் பெரு நிறுவனங்கள்
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் சௌதிரி குடும்பத்தால் 1988 ஆம் ஆண்டு 12 மாணவர்களை வைத்துத் துவங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்படத் துவங்கியது. நாடு முழுவதும் பைஜூசுடன் இணைந்து 300க்கும் மேற்பட்ட மையங்களை நடத்தியது. தற்போது ஆகாஷ்-பைஜூஸ் இரண்டு நிறுவனங்களுக்குமான வியாபாரத்தில் முரண்பாடுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 24 மையங்கள் செயல்படுகின்றன. கடந்த வியாழக்கிழமை மேலும் 132 புதிய மையங்களை வரும் காலங்களில் தொடங்கப் போவதாக ஆகாஷின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபக் மெஹ்ரோத்ரா சென்னையில் நடந்த நிகழ்வில் தெரிவித்திருந்தார். “புதிய மையங்களில், அதிகமான பெண்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இரண்டாவதாக, JEE தேர்வு முறை மாறிவிட்டது, ஆனால் பயிற்சி முறை அதற்கு ஏற்றதாக அமைக்க வேண்டும். ஒரு வலுவான பயிற்சி முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மையங்கள் இயங்குகின்றன. விரைவில் மதுரையிலும் மையம் தொடங்கப்படும். 500 ஆசிரியர்களைக் கொண்ட புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை ஐஐடிக்கு அனுப்பிய வரலாறு எங்கள் ஆகாஷ் குழுவுக்கு உண்டு” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பயிற்சி மையங்களில் மாணவர்களின் செயல்திறனைப் பொறுத்தே ஆசிரியர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்கின்றனர் இந்த மையங்களில் உள்ள ஆசிரியர்கள். சேலத்தில் உள்ள பயிற்சி மையத்தின் முன்னாள் ஆசிரியர் எஸ்.சீனிவாசன் கூறுகையில், “நீட் தேர்வு மையங்களில், தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஆசிரியர் பணி அமைகிறது. அதிக மாணவர்களைத் தகுதிபெறச் செய்ய, பதில்களுக்கான குறுக்குவழிகளைக் கண்டறிந்து, வழக்கமான சோதனைகளை நடத்தி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணத்தைத் தனியார் வங்கிகளில் இருந்து பெறுவதற்கும் பயிற்சி மையங்கள் ஏற்பாடு செய்கின்றன. மேலும் கடனை ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நடுத்தர மக்கள் தவிக்கின்றனர். ஒரு மாணவர் தகுதி பெறவில்லை என்றால், அவரது பெற்றோர் வேறொரு பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்காக மேலும் கடன் வாங்குகிறார்கள்” என்று கூறுகிறார்.
“TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, பயிற்சி வழங்க ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் மூடப்படும் போது, குறைந்த சம்பளம் இருந்தபோதிலும், வேறு வழியின்றி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பணியிடங்களைத் தேர்வு செய்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று திரு. சீனிவாசன் கூறுகிறார்.
வணிகமயமாக்கலால் ஏற்படும் பாதிப்புகள்
சில்ட்ரன்ஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிருபர் ஜே. கிறிஸ்டி சுபத்ரா கூறுகையில், “கல்வியின் வணிகமயமாக்கல் நடவடிக்கை அரசுப் பள்ளிகளின் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. பிரபலமான பயிற்சி நிறுவனங்களுடன் பள்ளிக்கு எந்தத் தொடர்பும் இல்லாததால், சில பெற்றோர்கள் அருகிலுள்ள தனியார் பயிற்சி மையங்களை நோக்கிச் செல்கின்றனர். மேல்நிலை வகுப்புகளின் மாணவர்கள் பள்ளி முடிந்தபிறகு பயிற்சி மையங்களுக்குச் செல்கிறார்கள். இரவு 11 மணி வரை படித்துவிட்டு, காலையில் வழக்கமான வகுப்புகளுக்குத் திரும்புகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
திருச்சியில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களில் சிலர் தூக்கமின்மை மற்றும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். மதுரையில் உள்ள அரசு நீட் தேர்வு பயிற்றுவிப்பாளர் கூறுகையில், “அரசு பள்ளிகள் மற்றும் பிரத்யேக மையங்களில் அரசு இலவச பயிற்சி அளித்தாலும், பல மாணவர்கள் அங்கு படிக்காமல் உள்ளனர். தனியார் பயிற்சி மையங்களின் கட்டணத்தைத் தாங்கக்கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறார்கள். பொருளாதார ரீதியாகக் குறைந்த வருமானம் ஈட்டும் பெற்றோர்கள் கூட தனியார் பயிற்சி வகுப்புக் கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்குவதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
கல்வி ஆர்வலர் எஸ்.உமாமகேஸ்வரி கூறுகையில், “கல்வியில் அடுத்த கட்டத்தை எட்டத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் தனியார் பயிற்சி மையங்களின் இலக்காக உள்ளனர். இந்தக் கல்விச் சந்தைகளில் சிக்கிக் கொள்ளாத பல மாணவர்களும் பல்வேறு துறைகளில் வெற்றியடைகிறார்கள்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கோயம்புத்தூரில், NEET மற்றும் JEE ஆகியவற்றுக்கான தனியார் பயிற்சியானது, உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்குடி சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது. அம்மாணவர்களின் பெற்றோர்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1 லட்சத்துக்கும் மேல் செலவழிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள் கட்டணங்களைப் பற்றிப் புகார் செய்வதில்லை. ஏனெனில் அவர்கள் தேடுவது தரமான பயிற்சியை மட்டுமே. தனியார் பயிற்சி மையங்களும் மாதாந்திர தவணை (EMI) முறைகளை வழங்குவதால், மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வகையில் பொருத்தமாக உள்ளது.
தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருக்கும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவிலிருந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி மையங்கள் லாபகரமான ஊதியத்தைக் கொடுத்து வரவழைக்கின்றனர்.
பயிற்சி மைய ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், “அனுபவமிக்க ஆசிரியர்களால் நடத்தப்படும் மையங்களில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் தொழில்துறையினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வாரிசுகள். உள்ளூர் கல்லூரிகளின் ஆசிரியர்களால் நடத்தப்படும் மையங்களில் கல்விச் செலவு மிகவும் குறைவு” என்கிறார் அவர். வார இறுதி நாட்களில் மட்டும் நீட் பயிற்சி பெறும் மகளின் தந்தையான அஜய் கூறும்போது, “கடுமையான பயிற்சி மற்றும் தேர்வுகளின் மூலமாக மற்ற மாணவர்களை விட என் மகள் முன்னணியில் உள்ளார்” என்று கூறுகிறார். சில CBSE பள்ளிகள், NEET மற்றும் JEE க்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்கு அனுப்புகின்றன. அதே வேளையில், சில பெற்றோர்கள் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக பன்னிரண்டாம் வகுப்பை எந்தப் பயிற்சி வகுப்பும் இல்லாமல் முடிக்க அனுமதித்துவிட்டு, அடுத்த ஆண்டு முழுநேரமாக NEET/JEE பயிற்சிக்கு அனுப்புகிறார்கள்.
வேரந்தா கற்றல் மையம் (Veranda Learning Centre) என்ற புதிய பயிற்சி மையம் CA, CMA மற்றும் அரசாங்க வேலைகளுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதன் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான பிரவீன் மேனன் கூறுகையில், “எதிர்மறை மதிப்பெண் (Negative Marks) முறைகளைப் புரிந்துகொண்டு விடையளிக்க, பயிற்சி மையம் உதவுகிறது. சில ஆயிரம் அரசுப் பதவிகளுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டிகள் அதிகம்” என்றார். இந்தப் பயிற்சி மையங்களால் வசதிபடைத்த சிலர் பயன் அடைந்தாலும் பெரும்பாலான மக்களுக்குப் பெரும் பாதிப்புகளை இவை உருவாக்குகின்றன.
தமிழகத்தில் உள்ள போலிப்பள்ளிகள்
வட இந்தியாவில் காணப்படும் போலிப் பள்ளிகளின் கலாச்சாரம் தமிழகத்தில் மெல்ல மெல்லத் தலைதூக்குகிறது என்று புலம்புகிறார் சுதந்திரக் கல்வி ஆலோசகர் (Laments Independent Education Consultant) ஜெயப்பிரகாஷ் காந்தி. “நுழைவுத் தேர்வுகளால் நடுத்தர வகுப்பு மாணவர்கள் எல்லா வாய்ப்பும் வசதியும் பெற்ற உயர் வகுப்பு மாணவர்களோடு போட்டியிடக் கடினமாக இருப்பதாக உணர்கின்றனர். இன்று, தனியார் பயிற்சி மையங்களுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை உள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agency) பெற்றோரின் வருமானம் குறித்த தரவுகளைச் சேகரித்து, மாணவர் பயிற்சி மையங்களுக்குச் சென்றாரா என்ற தகவலையும் சேகரிக்கிறது. இந்த விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும்” என்று ஜெய்பிரகாஷ் கூறுகிறார். எந்த தனியார் பயிற்சி மையங்களும் சேவை செய்வதில்லை. “அவர்களால் எப்படி உதவித்தொகை வழங்க முடியும்? ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்ற கொள்கையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போட்டித் தேர்வில் முதலிடம் பெறுபவரின் புகைப்படம் மூன்று பயிற்சி மையங்களில் இடம் பெறுகிறது. அது எப்படி சாத்தியம்?” என்று கேட்கிறார். பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதும், பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முறையைச் சீர்திருத்துவதும் இதற்குத் தீர்வாகும் என்றும் அவர் கூறுகிறார். மாநிலக் கல்விக் கொள்கை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையில், தனியார் பயிற்சி மையங்களைத் தடைசெய்ய வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளனர். இதைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றச் சட்டம் – தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை
தனியார் பயிற்சி மையங்கள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் கருத்தாக உள்ளது. பயிற்சி மையங்களுக்கு எதிராக அவ்வப்போது நடைபெறும் மாணவர்களின் போராட்டங்கள், கல்வியாளர்களின் தொடர் வலியுறுத்தல்கள், உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2022-2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மக்களவையில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தது. தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வாரியத்தை அமைக்க ‘தனியார் பயிற்சி மையங்கள் ஒழுங்குமுறை வாரிய சட்டம், 2023’ என்பதை முன்மொழிந்தனர். மசோதாவில் உள்ள பரிந்துரைகளை, 2025 ஆம் ஆண்டைத் தொடங்கும் போது கல்வி தொழில்நுட்ப துறையின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தச் சட்டம் திருத்தப்பட்டு அமலாகும் என்று கூறினார்கள்.
இது அமலானால் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறிப்பிடுவதும், ஆசிரியர்களை நியமிக்கும் குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயிக்கவும், வகுப்புகளில் மாணவர்-ஆசிரியர் விகிதத்தை நிர்ணயிக்கவும் வேண்டுமென இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ஆலோசகர், மனநல மருத்துவர் மற்றும் உளவியலாளர் நியமனம் குறித்தும் பேசுகிறது. ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் பற்றியும் குறிப்பிடுமாறு கூறுகிறது. திலீப் சைகியா இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பெறுவதற்கான அழுத்தம் மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று அவர் ஆவணத்தில் சுட்டிக்காட்டினார். ஆனாலும் ஏன் இன்னும் சட்டம் அமலாகவில்லை? எதிர்கட்சிகளைக் கூட ஆலோசிக்காமல் பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் போது, ஒரு முக்கிய சட்டம் ஏன் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க குழந்தைகள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதுதான் தற்கொலைக்குக் காரணம் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
தேர்வு அழுத்தத்தினால் நாட்டில் தினமும் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். குற்றப் பதிவுகளின்படி, 2019-ல் 10,335 மாணவர்களும், 2020-ல் 12,526 மாணவர்களும், 2021-ல் 13,089 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
தேர்வுகளை மையப்படுத்தி அமலாகியுள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்வதும், கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதும், தனியார் பயிற்சி மையங்களின் லாப வெறியைக் கட்டுப்படுத்த அதற்கெனப் பிரத்யேகமான சட்ட அமலாக்கமும், பொதுக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் இப்பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான தீர்வுகளாகும்.
தமிழில்: மோசஸ் பிரபு