சினிமாதமிழ் சினிமா

பட்டிதொட்டியெங்கும் செல்லவேண்டிய ‘பாட்டல் ராதா’ – வசந்தன்

549

‘குடி’ இன்றும் எத்தனையோ குடும்பங்கள் மீளமுடியாத ஆழத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு பிரதான காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தக் குழியில் விழுந்த ஒருவர் எழுந்து மீள முடியுமா? அது தனிநபர் பொறுப்பு மட்டும்தானா? சமூகத்திற்கும் அதற்கும் தொடர்பே இல்லையா? அதிலிருந்து மீள்வதைச் சாத்தியமாக்க இந்தச் சமூகம் என்ன செய்ய வேண்டும்? போன்ற பல கேள்விகளை நோக்கி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இத்திரைப்படம்.

தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள முதல் திரைப்படம் ‘பாட்டல் ராதா’. தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு கதைக்கருவை எடுத்து, மிகச் சிறந்த படைப்பாக வழங்கியுள்ளார் இயக்குநர். குடிப்பழக்கம் உள்ளவர்களைக் காலங்காலமாகக் கேளிக்கைக் கதாபாத்திரங்களாகவும், வில்லன்களாகவுமே சித்தரித்து வந்த தமிழ் சினிமாவில், கதாநாயகனாகக் காட்சிப்படுத்தி அதனை வெற்றியடையச் செய்துள்ள இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

“வாரத்திற்கு மூன்று முறை, ஒரு நாளைக்கு ஒரு முறை, இரு முறை என தங்களுக்குள்ளாகவே கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டுதான் குடிக்கிறோம்” என்று சொல்லும் பலரையும் நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், அவர்கள் அனைவரும் ஏதோவொரு புள்ளியில் தங்களை அறியாமலேயே அந்தக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். அதிலிருந்து தப்பித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். குறிப்பாக, பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களே இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்களில் ‘குடிநோயாளிகள்’ என்று ஒரு வகை இருப்பதை நாம் அறிந்திருக்கக்கூட மாட்டோம். அத்தகைய சூழலில் வாழும் ஒரு சாமானியன்தான் இந்தப் ‘பாட்டல் ராதா’!

பாட்டல் ராதாவால் குடி இல்லாமல் இருக்க முடியாது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதையெல்லாம் நாம் படத்தின் முன்னோட்டத்திலேயே பார்த்துவிட்டோம். சரி, அப்படியென்றால் படத்தில் என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களுக்காகவே, அருமையான காட்சி அடுக்குகளால் நம்மை வேறொரு அனுபவத்திற்குக் கூட்டிச் செல்கிறார் இயக்குநர்.

குடி-போதை மறுவாழ்வு மையம் என்று ஒன்று இருப்பதை நாம் வெறும் செய்தியாக மட்டுமே கடந்து சென்றிருப்போம். அங்கு நடக்கும் அத்தனை விஷயங்களையும் முடிந்தளவிற்குப் படமாக்கியுள்ளார் இயக்குநர். இப்படத்தில் வரும் குடி-போதை மறுவாழ்வு மையத்திற்கு ‘தி புத்தா’ என்று பெயர் வைத்திருப்பது, இஸ்லாமியர் வீட்டில் கதாநாயகி குடியேறுவது போன்ற காட்சிகள், சிறுபான்மை மதத்தினர் மீது தூண்டப்படும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிரான தெளிவான அரசியலையும் முன்னெடுக்கின்றன.

ஆண் பெயரைக் கொண்ட டைட்டில், பெரும்பான்மையாக ஆண்களே அடிமையாகும் குடிப்பழக்கம், ஆண் நடத்தும் குடி-போதை மறுவாழ்வு மையம் எனத் தொடங்கினாலும், பெண்ணின் பார்வையிலிருந்து இந்தப் பிரச்சனையைப் பார்ப்பதைத் தவறாமல் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. குடிக்கு அடிமையான கணவன்களின் கொடுமைகள் தாங்காமல், குழந்தைகளுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளன. அப்படிப்பட்ட அஞ்சலத்தின் (சஞ்சனா) அன்பு, கோபம், சண்டை, எதிர்பார்ப்பு, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகி.

திரைப்படத்தில் சில குறைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், இந்தக் கதைக்கருவைத் துணிந்து படமாக்கியிருப்பதைப் பாராட்டிக் கொண்டாட வேண்டியது நம் கடமை என்றே கருதுகிறேன்.

நடிகர் குரு சோமசுந்தரம், பாட்டல் ராதாவாக வாழ்ந்திருக்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. அசோகன் கதாபாத்திரம் நம்மை ஈர்க்கிறது. ஜான் விஜய் அதற்குச் செய்திருக்கும் நியாயம் நம்மை ரசிக்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனியின் கதாபாத்திரம், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் உடன் இருப்பவர்களை நினைவூட்டுகிறது. இவர்கள் மட்டுமல்லாது, கருணா பிரசாத், அன்பரசி, சந்தோஷ் உள்ளிட்ட சக கலைஞர்கள் அனைவரும் படத்தைத் தாங்குகின்றனர்.

ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு, படம் முழுவதும் நம்மை ரசிக்க வைக்கிறது. காட்சிகளுக்கேற்ற கச்சிதமான இடத்தேர்வுகள், ஃப்ரேம்கள் நம்மை மேலும் ஈர்க்கின்றன. ஷான் ரோல்டனின் இசை மிகப் பெரிய பலமாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களும் நம் மனதில் நிற்கும்படியாக உள்ளன. பாக்கியம் சங்கர் எழுதிய ‘யோவ் பாட்டிலு’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது. அறிவு எழுதிய ‘நானா குடிகாரன்’ மிக நேர்த்தியாக படத்துடன் பொருந்துகிறது. உமாதேவி எழுதிய ‘என் வானம் நீ’ பாடல் ஒரு காவியம். ரமேஷ் வைத்யா எழுதிய ‘தண்ணியில கிறுக்கு’ பாடல், பாட்டல் ராதாவின் மனநிலையுடன் நம்மையும் இணைக்கிறது. இறுதியாக, தனிக்கொடி எழுதிய ‘புன்னகை காலம்’ பாடல், ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறது. அது கொடுக்கும் அன்பும் நம்பிக்கையும் காலத்திற்கும் நிலைத்திருக்கும்.

அந்த நம்பிக்கை, பாட்டல் ராதாக்களுக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற கணவன்களின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டே வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அத்தனை அஞ்சலங்களுக்கும் சென்று சேர்வதற்குத்தான். சொல்கிறேன், பட்டிதொட்டியெங்கும் செல்லவேண்டிய ‘பாட்டல் ராதா’ என்று திரும்பத் திரும்ப…

– வசந்தன்