இலக்கியம்தொடர்கள்

நமது எழுத்தில் நமக்கே ஒரு மரியாதை (சுவையாக எழுதுவது சுகம் – 15) – அ.குமரேசன்

1

“ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்ற வாக்கியத்தில் ஒரு துப்பு வைத்து முந்தைய கட்டுரையை முடித்திருந்தேன். ஒரே ஒரு பதில் வாட்ஸ்ஆப் வழியாக வந்திருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன் இந்தக் கேள்வியை முதலில் விசாரித்துவிடுவோம்.

ஒற்றை மேற்கோள் குறிகளை வாக்கியத்தில் தனித்துத் தெரிய வேண்டிய பெயர், புதிய பொருள் உள்ளிட்ட தூக்கிக் காட்ட வேண்டிய சொற்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஒரு நிறுவனத்தின் பெயர், ஒரு புத்தகத்தின் தலைப்பு, ஒரு திரைப்படம் ஆகியவற்றுக்கும் இவற்றைப் போன்ற இதர சில சொல்லாடல்களை ஒற்றை மேற்கோள் குறிகளுக்கிடையே வைத்தால், வாசகர்களுக்கு அவற்றைக் கவனிப்பதும் நினைவில் கொள்வதும் எளிதாக இருக்கும்.

‘கரிப்பு மணிகள்’  முதலிய பல நாவல்கள் தொழிலாளர் போராட்டங்களைச் சித்தரிக்கின்றன. தமிழ் இலக்கிய வரிகளை எடுத்துக்கொண்டு இசையோடு பரப்பியதற்கு எடுத்துக்காட்டாக ‘இருவர்’ படத்தின் “நறுமுகையே நறுமுகையே” பாடலைச் சொல்லலாம். தகவல் அறிவு ஒரு வலிமை என்பதால் 2005ஆம் ஆண்டின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’  முக்கியத்துவம் பெறுகிறது… 

மேற்படி வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள நாவல்,  திரைப்படம், சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் ஒற்றை மேற்கோள் குறிகளுக்கு இடையே அமைந்துள்ளன. அந்தக் குறிகள் இல்லாமல் எழுதியிருந்தால் எப்படி இருநதிருக்கும்?

நீக்கப்பட்ட குறிகளோடு

கரிப்பு மணிகள் முதலிய பல நாவல்கள் தொழிலாளர் போராட்டங்களைச் சித்தரிக்கின்றன. தமிழ் இலக்கிய வரிகளை எடுத்துக்கொண்டு இசையோடு பரப்பியதற்கு எடுத்துக்காட்டாக இருவர் படத்தின நறுமுகையே நறுமுகையே பாடலைச் சொல்லலாம். தகவல் அறிவு ஒரு வலிமை என்பதால் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  முக்கியத்துவம் பெறுகிறது… 

இதைப் படிக்கிற ஒருவருக்கு, அவர் ‘கரிப்பு மணிகள்’ என்றொரு நாவல் வந்திருப்பதை அறியாதவர் என்றால் கரிப்பு என்றும் மணிகள் என்றும் இரண்டு நாவல்கள் வந்திருப்பதாக எண்ணம் ஏற்படலாம். ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் இரண்டு சொற்களும் காட்டப்படுகிறபோது இரண்டும் சேர்ந்து ஒரே நாவலின் தலைப்பைக் குறிக்கின்றன என்ற புரிதல் இயல்பாக ஏற்பட்டுவிடும். அதே போல், இசையோடு பரப்பியதற்கு எடுத்துக்காட்டாக இருவர் படத்தின் நறுமுகையே நறுமுகையே பாடலைச் சொல்லலாம் என்ற வாக்கியத்தைப் படிக்கிறபோது, அந்த இருவர் என்ற சொல் இரண்டு மனிதர்களைக் குறிப்பிடுகிறது என்ற நொடி நேரக் குழப்பம் ஏற்படலாம். சட்டத்தின் பெயரை மேற்கோள் குறிகளுக்கிடையே வைக்காமல் விட்டால், 2005ஆம் ஆண்டு பற்றிய தகவல்களை அறிவதற்காக ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் போல என்று நினைக்க வைக்கலாம்.

அத்துடன், ஒற்றை மேற்கோள் குறிகள் இல்லாமல் இப்படிப்பட்ட பெயர்களைக் குறிப்பிடுகிறபோது, தொடர்ந்து “என்ற”  எனச் சேர்த்தால்தான் குழப்பமின்றிப் புரியும். “…. தமிழ் இலக்கிய வரிகளை எடுத்துக்கொண்டு இசையோடு பரப்பியதற்கு எடுத்துக்காட்டாக இருவர் என்ற படத்தின நறுமுகையே நறுமுகையே பாடலைச் சொல்லலாம். தகவல் அறிவு ஒரு வலிமை என்பதால் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற சட்டம்  முக்கியத்துவம் பெறுகிறது… ” இப்படியாக. ஒற்றை மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறபோது அந்த “என்ற” தேவையில்லாமல் போய்விடும், வாக்கிய அளவு நீளாமல் கச்சிதமான உடற்கட்டு அமைந்தது போலாகும்.

இதெல்லாம் எளிதானதுதான். ஆனால் நுட்பமானது. இவற்றில் கவனம் செலுத்தி எழுதுவது, நம் எழுத்தின் மீது நமக்கே மரியாதை இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அமையும். நம் எழுத்தை நாமே மதிப்பது ஓர் அடிப்படையான தேவையல்லவா?

‘முதலிய’

இதிலேயே இன்னொரு குறிப்பும் இருக்கிறது. “… கரிப்பு மணிகள் முதலிய பல நாவல்கள் …” என்று எழுதுகிற போது, அந்த முதலிய என்ற சொல், அது மட்டுமே அல்ல, அதைப் போல வேறு பல படைப்புகளும் வந்திருக்கின்றன  என்று தொடர்ந்து எழுதுவதற்குத் துணையாகிவிடுகிறது. இந்த “முதலிய“ எங்கே  எப்போது வர வேண்டும் என்ற தெளிவும் தேவை. பலரும் இரண்டு மூன்று பொருள்களைக் குறிப்பிட்டுவிட்டு பிறகு முதலிய என்று சேர்க்கிறார்கள். “கரிப்பு மணிகள், சர்க்கரை, சங்கம், தோல், ஏலோ, தேநீர், எரியும் பனிக்காடு முதலிய பல நாவல்கள் தொழிலாளர் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றன” என்பது போன்ற வாக்கியங்களை அடிக்கடி காண முடிகிறது.

முதல் என்ற சொல்லிலிருந்தே முதலிய என்ற சொல் பிறந்திருக்கும் இல்லையா? எளிமையான ஒரு புரிதலில், முதல் என்றால் ஒன்றுதான் இல்லையா? ஓட்டப் போட்டியில் இரண்டு பேர் ஒரே வேகத்தில் ஓடி, ஒரே நேரத்தில் எல்லைக் கோட்டு இழைக்கச்சையைத் தாண்டுவதும், இருவருமே முதல் பரிசுக்கு உரியவர்களாக அறிவிக்கப்படுவதும் மிக மிக அரிதாகத்தான் நிகழும். முதலில் ஒன்று, அப்புறம் அடுத்தடுத்தது என்றுதான் பொதுவாக நிகழ்கிறது. ஆகவே, அத்தனை நாவல்களைக் குறிப்பிட்டுவிட்டு முதலிய என்று சேர்ப்பது பொருத்தமல்ல.

தமிழில் ‘மருதம்’ முதலிய நாவல்கள் உழைப்பாளிகள் பற்றிப் பேசுகின்றன – இவ்வாறு எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

“நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் முதலிய விண்வெளி ஆய்வாளர்கள் நிலவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்,” என எழுதலாம். ஏனெனில் 1969ஆம் ஆண்டில் முதல் முறையாக மனிதர்கள் நிலாவில் கால் பதித்த அறிவியல் வரலாற்று அத்தியாயம் நிகழ்ந்தது. அதன் பிறகு பலரும் அங்கே சென்று ஆராய்ச்சிகளை நடத்தித் திரும்பியிருக்கிறார்கள். இந்த இருவரிலுமே முதலில் கால் வைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங்தான் என்றாலும், தொடர்ச்சியாகப் பலரும் இந்த ஆராய்ச்சிச் சாதனையில் பங்களித்திருக்கிறார்கள் என்ற நிலையில், இருவரையுமே குறிப்பிட்டு முதலிய என்று சேர்க்கலாம். அவ்வாறில்லாமல், குறிப்பாக முதலில் அங்கே இறங்கியது யார் என்று குறிப்பிட வேண்டியிருந்தால், “முதன் முதலில் நிலவில் இறங்கியவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்” என்று கூறலாம்.

சில செய்திகளிலும் கட்டுரைகளிலும் எல்லாப் பெயர்களையும் சொல்லிவிட்டு முதலிய என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். மாதிரிக்கு ஒன்று:  “ஆண்டுவிழாவில் கபடி, கிரிக்கெட், கோகோ, கயிறிழுப்பு, உறியடி, சதுரங்கம், கேரம் முதலிய ஏழு போட்டிகளோடு நாடகம், நடனம், ஓவியம், பேச்சு, கட்டுரை, கதைசொல்லல் முதலிய ஆறு போட்டிகளும் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளன.”

மொத்தமே ஏழு விளையாட்டுப் போட்டிகள்தான், ஆறு கலைப் போட்டிகள்தான் என்றால் எதற்காக முதலிய  என்று போட வேண்டும்?  குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் மட்டுமல்லாமல் வேறு போட்டிகளும் இருக்கின்றன என்கிறபோதுதான் முதலிய என வர வேண்டும். ஆகவே இந்த வாக்கியத்தை. “ஆண்டுவிழாவில் கபடி, கிரிக்கெட், கோகோ, கயிறிழுப்பு, உறியடி, சதுரங்கம், கேரம் ஆகிய ஏழு போட்டிகளோடு நாடகம், நடனம், ஓவியம், பேச்சு, கட்டுரை, கதைசொல்லல் ஆகிய ஆறு போட்டிகளும் இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளன.” என்று எழுதுவது, சொல்லை அறிந்து எழுதுகிறோம் என்று காட்டும். இல்லையேல் சொல்லை அரிந்து எழுதுகிறோம் என்று காட்டிவிடும்.

உள்ளிட்டவும் போன்றவும்

திரும்பத் திரும்ப முதலிய என்று எழுதுவதைத் தவிர்த்து, உள்ளிட்ட என்ற சொல்லை உள்ளிடலாம்: “கரிப்பு மணிகள், சர்க்கரை, சங்கம், தோல், ஏலோ, தேநீர், எரியும் பனிக்காடு உள்ளிட்ட பல நாவல்கள் தொழிலாளர் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றன” இப்படியான வாக்கியங்களை அமைப்பதற்கு உதவும் பணியில் உட்பட என்ற சொல்லும் தன்னை உட்படுத்திக்கொண்டு வருகிறது. 

“தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் முற்போக்கு இயக்கத்தோடு தமிழுக்கும் தொண்டாற்றியிருக்கிறார்கள்,” என்ற வாக்கியத்தில் இடையே உள்ள போன்ற என்ற சொல்லைக் கவனிப்போம். போன்ற என்ற சொல்லின் பொருள், ஒன்றைப் போல இருப்பது, ஒருவரை மாதிரி செயல்படுவது என்றெல்லாம் பொருள்படும். உடனடிப் பார்வையில் வேறுபாடு தெரியவில்லை என்றாலும், நுட்பமாகப் பார்த்தால் யாரைக் குறிப்பிடுகிறோமோ அவர்  நேரடியாகப் பங்களிக்கவில்லை,  அவரைப் போல இருந்த மற்ற பலர் பங்களித்தார்கள் என்ற பொருள் அமைகிறது. அப்படியானால் இதை வேறு எப்படி எழுதலாம்?

““தமிழ் ஒளியும் அவரைப் போன்ற பல கவிஞர்களும்  முற்போக்கு இயக்கத்தோடு தமிழுக்கும் தொண்டாற்றியிருக்கிறார்கள்.” –இந்த வாக்கியம் தமிழ் ஒளியின் சிறப்பையும் உயர்த்திப் பிடிக்கிறது, அவர் வழியில் பயணிக்கும் மற்ற கவிஞர்களின் பணியையும் போற்றுகிறது.  

முதலியவை, ஆகியவை, உள்ளிட்டவை, போன்றவை, முதலியோர், ஆகியோர், உள்ளிட்டோர், போன்றோர் என இடம் பார்த்துப் பயன்படுத்துவது வாக்கிய நயத்திற்கு உதவும். எதிலே கவனமாக இருக்க வேண்டும் என்றால், முதலியோர் என்று எழுதுகிறபோது காலை எடுத்துவிட்டு முதலியார் என்று சாதி விவகாரமாக மாற்றிவிடக் கூடாது!

ஒட்டு ஒன்று, பொருள் மூன்று

முன்னால் கண்ட பத்திகளில் “காணலாம்”, “கூறலாம்” ஆகிய இரண்டு சொற்கள் “ஆம்” என்ற ஒலியில் முடிகின்றன. “காணலாம்” என்ற சொல் “லாம்” (காணல் + ஆம்) என்று முடிகிறபோது, அவ்வாறு காண முடியும் என்ற பொருள் அமைகிறது.  “கூறலாம்” என்ற சொல்  “லாம்” என்று (கூறல் + ஆம்) என்று முடிகிறபோது, அவ்வாறு கூறுவது ஏற்புடையது என்ற பொருள் அமைந்துவிடுகிறது. ஆனால், சென்ற கட்டுரையில், ஒரு சொல்லை “ராம்” என்று முடிக்கிறபோது அது நாம் ஏற்கவில்லை என்ற பொருளைத் தருகிறது என்று பார்த்தோம். “…. மதச்சார்பின்மைக் கொள்கை மீது மரியாதை வைத்திருக்கிறாராம்…” என்று அந்த முடிப்புச் சொல்லை அமைக்கிறபோது, அப்படிச் சொன்னவர் அவ்வாறு சொன்னதை நாம் நம்பவில்லை, ஏற்கவில்லை என்ற உணர்வு பதிந்துவிடும்.

“வைத்திருக்கிறாராம்” என்ற சொல்லை “வைத்திருக்கிறார் + ஆம்” என்று பிரித்து எழுதுவோம் இல்லையா? இந்த “ஆம்”  என்ற ஒட்டு “காணலாம்” என்ற சொல்லில் குறிப்பிட்ட செயலை உறுதிப்படுத்துவதாகவும், “சொல்லலாம்” என்ற சொல்லில் நேர்மறையாகவும், “வைத்திருக்கிறாராம்” என்ற சொல்லில் எதிர்மறையாகவும் பொருள் தருகிறது பாருங்கள்! இது மொழியின் வரலாற்றுப் பயணத்தில் சேர்ந்த தனித்துவமான, சுவையான கூறுகள். தமிழ் இலக்கணத்தில், சொற்களின் பின்னால் இணையும் இத்தகைய ஒட்டுகளுக்கு “விகுதி” என்றே பெயர் இருக்கிறது. தேடல் உள்ளவர்கள் அதைத் தேடித் தெரிந்துகொள்வது மொழியறிவை வளர்ப்பதோடு எழுதும் சுகத்தைக் கூட்டும்.

அந்தத் துப்பு

இப்போது முதல் பத்திக்குத் திரும்புவோம். “ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்.”  இந்த வாக்கியத்தில் இருக்கிற துப்பு என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

வாட்ஸ்ஆப் வழியாக பதிலனுப்பியுள்ள நண்பர், “அந்த வாக்கியத்தில் “……. எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என்பது தவறு. கேள்விக்குறி ஒரு வாக்கியத்தின் முடிவில் வரும் அல்லது கேள்விக்குறி இருந்தால் அங்கே வாக்கியம் முடிந்துவிட்டதாக அர்த்தம். இதில் ‘பார்த்துவிடுவோம்’ என்ற வார்த்தையோடுதான் வாக்கியம் முடிகிறது. எனவே, “…… எங்கே கையாள்வது என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” என நடுவில் கேள்விக்குறியை அகற்றிவிட்டு எழுதுவதுதான் சரி,” என்று தட்டிவிட்டிருக்கிறார். நானும் என் இருக்கையிலிருந்தே தட்டினேன், கைகளை.

கேள்விக்குறி, வியப்புக்குறி ஆகிய இரண்டும் முற்றுப் புள்ளியின் வேறு வடிவங்கள்தான். ஆகவே நடுவில் இக்குறிகள் வருமானால் அந்த இடத்தில் வாக்கியம் முடிவதாகவே பொருள். ஒருவேளை கேள்விக்குறி வந்தாக வேண்டுமென்று நினைத்தால், இப்படி எழுதலாம்: “எங்கே கையாள்வது? இதற்கான விடையை அடுத்துப் பார்த்துவிடுவோம்,” என எழுதலாம். “எங்கே கையாள்வது? அடுத்து அதையும் பார்த்துவிடுவோம்,” எனவும் எழுதலாம். இவற்றில் அந்த “என்று” என்ற சொல் நீக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். நடுவில் வியப்புக்குறியை வைக்க விரும்பினாலும் இதே வழிதான்.

மேலே உள்ள பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன? ஒரு பத்தியில்  எத்தனை வாக்கியங்கள் இருக்கலாம்? ஒரு வாக்கியத்தில் எத்தனை சொற்கள் சேரலாம்? ஒரு பத்தியிலோ, வாக்கியத்திலோ ஒரே சொல் எத்தனை முறை வரலாம்? ஒரு வாக்கியத்தில் தொடர்ச்சியாக வரும் சொற்களின் முடிவில் “இன்” ஒட்டு சேர்க்க வேண்டியிருந்தால் அதை  எப்படி சமாளிப்பது? இந்தக் கேள்விகளை அடுத்த அமர்வில் சமாளிப்போம். 

– அ.குமரேசன்

Leave a Reply