இலக்கியம்தொடர்கள்

நிறுத்தற்குறிகள் இல்லாமல் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாமே (சுவையாக எழுதுவது சுகம் – 14) – அ. குமரேசன்

549

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க

“இப்படிப்பட்ட கருத்துகளை நான் 7 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதற்கு மொத்தம் ₹ 3,500 சன்மானம் கிடைத்திருக்கிறது,” என்று சக எழுத்தாளர் ஒருவர் கூறினார். -இந்த வசனத்தில், தவிர்க்க வேண்டிய சங்கதி ஒன்று இருப்பதை எளிதாக ஊகித்திருப்பீர்கள் என்று சென்ற கட்டுரையில் நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.

உங்கள் ஊகம் சரியே. கட்டுரையாகட்டும், கதையாகட்டும் மேற்கொள் குறிகளுக்கிடையே உரையாடலாக எழுதும் வரிகளில் கூடிய வரையில் எண்களை  எண்ணால் எழுதாமல் எழுத்தால் எழுதுவது வாசிப்பு சுகத்தைக் கூட்டும். உரையாடல் தொடங்குவதற்கு முன் அல்லது முடிந்த பின் எழுதுகிறவரின் உரையாக வருகிற வரிகளில் எண்கள் இடம் பெறலாம்.

விடுதலைப் போராட்டத்தின்போது அவர் 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள்ளேயே அவர் கைதிகளைத் திரட்டி அடிப்படை உரிமைகளுக்காக 30 நாட்கள் போராட்டம் நடத்தினார். போராட்டத்தை ஒடுக்க ஆயுதந்தாங்கிய 100 காவலர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.

–கட்டுரையாளரின் உரையாக வருகிற ,இந்த வரிகளில் 9, 30, 100 என்ற எண்கள் இருக்கின்றன. இந்த எண்கள் அந்தப் போராளி சிறையில் இருந்த காலத்தையும், உள்ளேயே போராட்டம் நடத்திய நாட்களையும், குவிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையையும் வாசகர் மனதில் பதித்துவிடும். இதையே, உரையாடலாக மாற்றி எழுதிப் பார்ப்போம்:

எண்ணும் எழுத்தும்

போராளியின் நினைவு நாளில் சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்றிய வரலாற்று ஆய்வாளர், ”அவர் 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள்ளேயே அவர் 30 நாட்கள் போராட்டம் நடத்தினார். போராட்டத்தை ஒடுக்க 100 காவலர்கள் கொண்டுவரப்பட்டார்கள்,” என்று கூறினார்.

–மேற்கோள் குறிகளுக்கிடையே இருக்கும் வரிகளில் இடம் பெறும் எண்கள் சரியான செய்தியைத்தான் தெரிவிக்கின்றன. ஆயினும் ஓர் உரையாடலைக் கேட்கிற உணர்வு அந்த எண்களால் தடைப்படும் இதையே இப்படி மாற்றி எழுதிப் பார்ப்போம்:

போராளியின் நினைவு நாளில் சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்றிய வரலாற்று ஆய்வாளர், ”அவர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்குள்ளேயே அவர் முப்பது நாட்கள் போராட்டம் நடத்தினார். போராட்டத்தை ஒடுக்க நூறு காவலர்கள் கொண்டுவரப்பட்டார்கள்,” என்று கூறினார்.

இதில், அந்த எண்ணிக்கைகள் எழுத்தாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு எழுதப்பட்டதைப் படிக்கிறபோது உரையைக் கேட்கிற உணர்வும் ஏற்படும். அதே வேளையில், உரையாடலுக்குள் ஆண்டு, சட்டத்தின் வரிசை உள்ளிட்டவற்றைக் குறிப்பிடுகிறபோது எண்ணாலேயே குறிப்பிடலாம்: 

தொடர்ந்து உரையாற்றிய சொற்பொழிவாளர், “சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பதாண்டு காலத்தில், 1941ஆம் ஆண்டின் மே மாதத்தில் முப்பது நாட்கள் போராட்டம் நடத்தினார். சிறைச் சட்டம் 193 ஏ(1) பிரிவின் கீழ் அவர் மீது கலவரத்தைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது,” என்றும் சொற்பொழிவாளர் தமது உரையில் தெரிவித்தார்.

ஆக, உரையாடலில் எண்களைத் தவிர்ப்பது ஒரு சுவையைத் தரும். பொருத்தமான இடங்களில் மட்டும் எண்ணால் எழுதுவது அந்தச் சுவைக்கு மணத்தைச் சேர்க்கும்.

குறிப்பாக, சிறுகதை, நாவல் என்று புனைவெழுத்துகளில் முனைகிறபோது, இதை நினைவில் கொண்டு பயன்படுத்துவது, அந்தப் படைப்பின் அழகியலுக்குத் துணை செய்யும். பல எழுத்தாளர்களின் புனைவுகளில், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வருகிற இடங்களில், எண்ணிக்கைகளை எண்களாலேயே குறிப்பிடுகிறார்கள். அவற்றைப் படிக்கிறபோது ஒரு மாதிரியாக இடறுகிறதே என்ற எண்ணம் ஏற்படும். அந்த எண்ணம் எனக்கு மட்டும்தான் ஏற்படுகிறதா என்று அறிவதற்காக, வாசிப்பில் ஊறித் திளைத்தவர்களிடமும் புதிதாக வாசிப்பு வாசலுக்கு வந்தவர்களிடமும் விசாரித்திருக்கிறேன். அவர்களும் அந்த இடறலை அனுபவித்ததாகத் தெரிவித்தார்கள்.

மேற்கோள் குறிகள்

உரையாடல் அல்லது பேச்சு என்று காட்டுவதற்கான மேற்கோள் குறிகள் பற்றிப் பேசுவதற்கு இதுவே சரியான இடம். கட்டுரையாளர் தன்னுடைய சித்தரிப்பாக மட்டும் எழுதிக்கொண்டு போகிறபோது மேற்கோள் குறிகள் தேவைப்படுவதில்லை. அதிலேயே ஒருவரது பேச்சையோ கருத்தையோ படித்த செய்தியையோ பகிர்ந்துகொள்கிறபோது மேற்கோள் குறிகள் நிச்சயமாகத் தேவை. 

தேவி கோபத்துடன் பேசியபோது கண்ணன் குறுக்கிடாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் பேசி முடித்த பிறகு தேவி உன் கோபத்தில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லோருமே புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறினான். அதற்கு நாம் என்ன செய்ய முடியுமென்று கேட்டாள். அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.. உண்மைதான் கண்ணா ஆனால் அவர்களுக்கெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று புரியவில்லையே என்று என்றாள் தேவி. அது ஒன்றும் சாத்தியமில்லாத விசயமில்லை. முதலில் உடனே கோபமாகப் பேசுவதையும் கோபத்தில் திட்டுகிற மாதிரியான வார்த்தைகளைப் போடுவதையும் நிறுத்து என்றபோது அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அப்போதுதான் அவர்கள் உன்னுடன் பேசுவதற்கு முன்வருவார்கள் என்று அவன் கூறினான். அவனுடைய அனுபவ வார்த்தைகள் அவளுக்கு வியப்பையும் அவன் மீது மதிப்பையும் ஏற்படுத்த சரி கண்ணா இதைப் பின்பற்ற முயல்கிறேன் என்றாள் தேவி.

மேற்படிப் பத்தியில் எங்கே எழுத்தாளர் பேசுகிறார், எங்கே தேவி பேசுகிறாள், எங்கே கண்ணன் பேசுகிறான் என்று, வாசிக்கிற நேரத்திலேயே புரிந்துகொள்வது சற்றுக் கடினமாக இருக்கும். பேச்சு என்று பிரித்துக் காட்டுவதற்காகத்தான் மேற்கோள் குறிகள் இருக்கின்றன. காற்புள்ளி (கமா), அரைப்புள்ளி (செமிகோலன்), முக்கா;ற்புள்ளி (கோலன்), முற்றுப் புள்ளி (ஃபுல்ஸ்டாப்) ஆகியவை உள்ளிட்ட நிறுத்தற்குறிகள் பயன்படுகின்றன. தொடக்கத்தில் தமிழ் இலக்கியத்தில் இப்படிப்பட்ட அடையாளக் குறிகள் கையாளப்படவில்லை. செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டதால், புலவர்கள் அந்த நடையிலேயே பேச்சைப் பிரித்துக்காட்டுவதற்கான சொற்களையும் பயன்படுத்தினார்கள். உரைநடை இலக்கியம் மேற்குலகிலிருந்து வந்தபோது இந்த நிறுத்தற்குறிகளும் சேர்ந்து வந்து நின்றுகொண்டன, தமிழ் அவற்றை உவந்து ஏற்றுக்கொண்டது.

அந்தப் பத்தியை இப்போது நிறுத்தற்குறிகளுடன் பார்ப்போம்:

தேவி கோபத்துடன் பேசியபோது கண்ணன் குறுக்கிடாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் பேசி முடித்த பிறகு, “தேவி உன் கோபத்தில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லோருமே புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது,” என்று கூறினான். “அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,” என்று கேட்டாள். “அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்..” “உண்மைதான் கண்ணா. ஆனால் அவர்களுக்கெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று புரியவில்லையே,” என்றாள் தேவி. “அது ஒன்றும் சாத்தியமில்லாத விசயமில்லை. முதலில் உடனே கோபமாகப் பேசுவதையும் கோபத்தில் திட்டுகிற மாதிரியான வார்த்தைகளைப் போடுவதையும் நிறுத்து,” என்றபோது அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “அப்போதுதான் அவர்கள் உன்னுடன் பேசுவதற்கு முன்வருவார்கள்,” என்று அவன் கூறினான். அவனுடைய அனுபவ வார்த்தைகள் அவளுக்கு வியப்பையும், அவன் மீது மதிப்பையும் ஏற்படுத்த, “சரி கண்ணா, இதைப் பின்பற்ற முயல்கிறேன்,” என்றாள் தேவி.

இப்போது, முதலில் இருந்ததை விட எழுத்தாளரின் உரை எது, பாத்திரங்களின் உரையாடல் எது என்று புரிந்துகொண்டு படிப்பது இலகுவாகிறது அல்லவா? 

தனித்தனி பத்திகளாக

தமிழ் தேங்கிப்போகாமல் வளர்ந்துகொண்டே இருக்கிற மொழியல்லவா? அந்த வளர்ச்சிப் போக்கில், உரையாடல் வாக்கியங்களை அடுத்தடுத்த பத்திகளாக எழுதுவதும் வெற்றிகரமாக இங்கே புழக்கத்திற்கு வந்து ஊன்றிவிட்டது.

தேவி கோபத்துடன் பேசியபோது கண்ணன் குறுக்கிடாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். 

அவள் பேசி முடித்த பிறகு, “தேவி உன் கோபத்தில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லோருமே புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது,” என்று கூறினான்.

“அதற்கு நாம் என்ன செய்ய முடியும்,” என்று கேட்டாள். 

“அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்..” 

“உண்மைதான் கண்ணா. ஆனால் அவர்களுக்கெல்லாம் எப்படிப் புரிய வைப்பது என்று புரியவில்லையே,” என்றாள் தேவி.

“அது ஒன்றும் சாத்தியமில்லாத விசயமில்லை. முதலில் உடனே கோபமாகப் பேசுவதையும் கோபத்தில் திட்டுகிற மாதிரியான வார்த்தைகளைப் போடுவதையும் நிறுத்து,” என்றபோது அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “அப்போதுதான் அவர்கள் உன்னுடன் பேசுவதற்கு முன்வருவார்கள்,” என்று அவன் கூறினான்.

அவனுடைய அனுபவ வார்த்தைகள் அவளுக்கு வியப்பையும், அவன் மீது மதிப்பையும் ஏற்படுத்த, “சரி கண்ணா, இதைப் பின்பற்ற முயல்கிறேன்,” என்றாள் தேவி.

-இவ்வாறு மேற்கோள் குறிகளையும் நிறுத்தற்குறிகளையும் உரிய இடங்களில் சரியாகப் பயன்படுத்தி, உரையாடல்களைத் தனித்தனிப் பத்திகளாகக் கோர்த்து எழுதினால் வாசிக்கும் சுகம் கூடுதலாக இருப்பதை யாரும் உணர முடியும்.

இரட்டைக்கு இன்னொரு பொருள்

இதில் கவனிக்க வேண்டிய சில அடிப்படைகள்:

அவள் பேசி முடித்த பிறகு, “தேவி உன் கோபத்தில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் எல்லோருமே புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது,” என்று கூறினான்.

மேலே உள்ள பத்தியில், அவள் பேசி முடித்த பிறகு என்று முடிகிற இடத்தில் காற்புள்ளி (,) வருகிறது. பிறகு இடைவெளி விட்டு தொடக்க மேற்கோள் குறி (“) இடப்பட்டிருக்கிறது. அது இரட்டை மேற்கோள் குறி. அதை ஒட்டியபடியே பேச்சு தொடங்குகிறது. உரையாடல் முடிகிற இடத்தில் மறுபடியும் காற்புள்ளி வருகிறது, அதன் பின் இடைவெளி இல்லாமல் முடிப்பு மேற்கோள்குறி (”) வருகிறது, அதுவும் இரட்டையாக இருக்கிறது. அதன் பின் சற்றே இடைவெளி, அதைத் தொடர்ந்து – என்று கூறினான் – என முடிகிறது. கூறினான் என்ற சொல்லுக்குப் பின் முற்றுப்புள்ளி (.) வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு காற்புள்ளி வைக்காமலே மேற்கோள் குறிகளை மட்டும் வைத்தால் என்ன ஆகும்? பழக்கத்தால் படித்துவிடுவோம் என்றாலும், அப்படி மேற்கோள் குறிகளை மட்டும் வைப்பது அந்த வரிக்கு மட்டும் நாம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றாகிவிடும்.

கட்டுரைகளில் இப்படி முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிற சொற்களையும், நமக்கு உடன்பாடு இல்லாத சொற்களையும், இப்படியெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள் பாருங்கள் என்று கிண்டலாகக் குறிப்பிட விரும்புகிற சொற்களையும் இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் வைக்கலாம். எடுத்துக்காட்டு:

கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் தாம் உண்மையான “மதச்சார்பின்மைக் கொள்கை” மீது மரியாதை வைத்திருப்பதாகக் கூறினார்.

இதில், அந்த மதச்சார்பின்மை என்ற சொல் இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையே வருகிறபோது, இவரெல்லாம் மதச்சார்பின்மை பற்றிப் பேசுகிறார் பாருங்கள் என்று நேரடியாகக் கூறாமல், மறைபொருளாகத் தள்ளுபடி செய்கிற பொருள் கிடைக்கிறதல்லவா? மேற்கோள் குறிகளை இடாமல், மதச்சார்பின்மை என தட்டச்சிவிட்டு, உடனே அதையொட்டி அடைப்புக்குறிகளுக்குள் கேள்விக்குறியை வைத்தாலும் இதே போன்ற பொருளை உணர்த்த முடியும். 

கல்லூரி நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் தாம் உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கை(?) மீது மரியாதை வைத்திருப்பதாகக் கூறினார்.

கேள்விக்குறிக்குப் பதிலாக வியப்புக்குறியை (!) வைத்தாலும் அதே விமர்சனத் தொனி வந்துவிடும். மேற்கோள் குறிகளோ, கேள்விக்குறியோ, வியப்புக்குறியோ இல்லாமல்–

மதச்சார்பின்மைக் கொள்கை மீது மரியாதை வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டார்

என ஒரு கொண்டார் சேர்த்து முடித்தாலும்,

மதச்சார்பின்மைக் கொள்கை மீது மரியாதை வைத்திருக்கிறாராம்

என ஒரு ராம் சேர்த்து முடித்தாலும் இதே போன்ற விமர்சன விளையாட்டை நடத்தலாம். இதுவெல்லாம் கூட நாம் ஏற்கெனவே பேசிய சொற்களின் அரசியல் தொடர்பானதுதான்.

இரட்டை மேற்கோள் குறிகளை இவ்வாறு பயன்படுத்துகிறோம் என்றால், ஒற்றை மேற்கோள் குறிகளை எங்கே கையாள்வது? என்று அடுத்து அதையும் பார்த்துவிடுவோம். இந்த வாக்கியத்திலும் ஒரு துப்பு வைத்திருக்கிறேனே!

– அ.குமரேசன்

(தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க)