சொற்களின் அரசியலைத் தெரிந்துகொள்வதோடு இணைந்ததுதான் கெட்ட வார்த்தைகளின் அரசியல்–சமூகம்–பண்பாடு ஆகிய தளங்களையும் தாக்கங்களையும் புரிந்துகொள்வது. பேசும்போது சரளமாக அந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆத்திரத்துடன் வசை பொழிவதற்காக மட்டுமல்லாமல், சில நேரங்களில் வியப்புடன் பாராட்டைப் பொழிவதற்காகவும் கூட கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. “தூமியைக் குடிக்கி… அவன் நாசமாத்தான் போவான்” என்று வயிறு எரிந்து வைகிறார்கள். “எவ்வளவு பெரிய சாதனையைச் செஞ்சிருக்கா ங்கொம்மாள” என்று மனம் நிறைந்து புகழ்கிறார்கள்.
தந்தையின் வேலை காரணமாக (மின்வாரியத் தொழிலாளி) அவர் பல ஊர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டபோது குடும்பமே புலம்பெயர வேண்டியிருந்தது. அதனால் எந்த ஊரிலுமே நிலையான நண்பர்கள் வாய்த்ததில்லை. ஆனால், அந்த ஊர்களில் மக்களின் வாழ்க்கையோடு வார்த்தைகளையும் கவனிக்கிற வாய்ப்பு வளமாகக் கிடைத்தது. கெட்டவார்த்தைகளை எளிய குடும்பங்களையும் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமூகங்களையும் சேர்ந்தவர்கள்தான் பேசுவார்கள் என்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல வீடுகளில் பெரியவர்கள் அப்படித்தான் கூறுகிறார்கள். சிறுவர்கள் வீட்டுக்குள் சண்டை போடுகிறபோது, கெட்டவை என்று வரையறுக்கப்பட்டிருக்கிற வார்த்தைகளில் ஒன்றைச் சொல்லிவிட்டால், “ஏய், என்ன இந்த வார்த்தையெல்லாம் நீ பேசுற? வெளியே அந்தப் பசங்ககிட்ட கத்துக்கிட்டியா? இதெல்லாம் அவங்கதான் பேசுவாங்க,” என்று சொல்வார்கள்.
ஆனால், நாங்கள் குடிபோன ஊர்களில், நடுத்தரக் குடும்பங்களையும், உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் அந்த வார்த்தைகளை வெகு இயல்பாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஊரின் மரியாதையைப் பெற்ற ஒரு குடும்பத்தின் அரசி போல் ராச்சியம் செய்த, அந்தக் காலத்துப் பள்ளியிறுதி வகுப்பு படித்து முடித்தவரான ஒரு பெண்மணி யாரையாவது திட்டும்போதும், பாராட்டும்போதும் “தாயோளி” என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொள்வார். ‘தாயுடன் உறவுகொள்கிற ஆள்’ என்ற, அந்த வார்த்தையின் பொருளை அறிந்து வேண்டுமென்றேதான் பேசுகிறாரா, அறியாமல் பழக்கத்தின் காரணமாகப் பேசுகிறாரா என்று யோசித்திருக்கிறேன்.
ஹலோ போல
இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு இப்படிப்பட்ட பொருள்கள் இருக்கின்றன என்று அறியாமல் பலரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். நாமே கூட அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். சென்னையில் “ஹலோ” சொல்வது போல சர்வசாதாரணமாக “ங்கோத்தா” புழங்குகிறது. “உன் தாயுடன் உறவுகொள்வேன்” என்ற பொருள் தரும் சொற்களின் சுருக்கம்தான் அது என்று அதைச் சொல்கிற யாருக்குமே தெரியாது என்று சொல்லலாம்.
இத்தோடு, தமிழில் “முட்டாள்” என்று கூறினால் கோபித்துக்கொள்வது, ஆங்கிலத்தில் “இடியட்” என்றால் புன்னகைப்பது என்ற நாகரிகமும் சேர்ந்துகொண்டது!
பேசும்போது இவையெல்லாம் வந்துவிடுகின்றன சரி, எழுதும்போது வரலாமா? அதுதான் இங்கே கேள்வி.
மக்களின் இயல்பான வாழ்க்கையில் பேச்சுமொழியாகப் புழங்குவது மட்டுமல்லாமல், தமிழின் பழைய இலக்கியங்களில் எழுத்துமொழியாகவும் இப்படிப்பட்ட பல சொற்கள், குறிப்பாக உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள், இன்னும் குறிப்பாகப் பெண்களின் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் அந்த இலக்கியங்களைத் தொகுத்த அறிஞர்களும், பள்ளிகளுக்கான பாடநூல்களில் அந்தச் செய்யுள்களைச் சேர்த்த வல்லுநர்களும், அத்தகைய சொற்களை அகற்றியிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் மேல்தட்டுக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும். இதனால், உண்மையான இலக்கியப் பதிவு என்ன என்று தெரியவிடாமல் மறைக்கப்பட்டது, அத்துடன் அத்தகைய சொற்கள் மீதும் அவற்றைப் பேசுகிறவர்கள் மீதும் ஓர் அருவருப்பு உணர்வு வளர்க்கப்பட்டுவிட்டது. இயற்கையாகப் பரிணமித்து வந்த மனித உடலின் எந்த உறுப்பாவது கெட்டதாக இருக்க முடியுமா? அதைக் குறிப்பிடும் சொல்லைக் கெட்டதென்று சொல்லலாமா?
இது பற்றி ஒரு புத்தகம்
இத்தகைய சொற்கள் பற்றியே ஆய்வொன்றை நடத்தி, “கெட்ட வார்த்தை பேசுவோம்” என்று தொடராக எழுதி அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். “மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது,” என்று ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி வரவேற்றுள்ள அந்தப் புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வார்த்தைகளோடு வாழ்க்கையையும் புரிந்துகொள்ள உதவும் இப்படிப்பட்ட புத்தகங்கள் நம் வீட்டு நூலகத்தில் இடம்பெறத் தக்கவை.
நூல் தொகுப்புகள் தவிர்க்கப்பட்டது போலவே, தமிழில் இதழியல் வளர்ந்தபோது, நாளேடுகளிலும் பருவ இதழ்களிலும் அந்தச் சொற்களுக்குச் சல்லடை போடப்பட்டது. ஒரு பக்கம், தமிழகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்கிற பல்வேறு நாடுகளிலும் பொதுத் தமிழ் நடை ஒன்று உருவானதில் இதழ்கள் ஒரு மையமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அதே வேளையில், இயல்பான சொல்லாடல்கள் மீது அருவருப்பை ஏற்படுத்தி, நடுத்தர வர்க்க மனநிலையை வளர்க்கும் கைங்கரியத்தையும் செய்திருக்கின்றன. இன்று அதில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதழ்களில் வெளியாகும் கதைகளில், பாத்திரங்களின் தன்மையை இயல்பாக வெளிப்படுத்தும் வகையிலும், கட்டுரைகளில் நிலைமைகளை நெருக்கமாக உணர்த்தும் வகையிலும் கெட்டவார்த்தைகள் வருகின்றன.
திரைப்படங்களிலும் இந்த நிகழ்வுப் போக்கைக் காணலாம். வெகுநாட்களுக்கு, தோல் நீக்கப்பட்ட மாம்பழம் போல, அந்தச் சொற்கள் இல்லாத வசனங்களுடன்தான் படங்கள் வந்துகொண்டிருநதன. ஏதோவொரு படத்தில் முதல்முறையாக “மயிறு” என்ற சொல் வந்ததே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்புறம் நேரடியாக இல்லாமல் “டுபுக்கு”, “தக்காளி” என்று நகைச்சுவைக் காட்சிகளில் வந்தன. நாயகப் பாத்திரங்கள் ஆவேசத்துடன் பேசுகிறபோது கெட்டவார்த்தைகள் இடம்பெறும் படங்கள், அந்த இடங்களில் மட்டும் ஒலிநீக்கம் செய்யப்பட்டு – வாயசைவை வைத்து என்ன சொல் என்று ஊகிக்கக்கூடிய – வகையில் வரத் தொடங்கின. திரைப்படம் இப்போதும் தணிக்கை வாரியத்திற்குப் போய்வர வேண்டியிருப்பதால், தோல் நீக்குகிற வேலை தொடர்கிறது. தணிக்கை வாரியத்திடம் காட்டத் தேவையில்லாத வலைத்தொடர்களில், காட்சிக்குத் தேவையான அழுத்தத்தைப் பதிக்கும் வகையில் கெட்டவார்த்தைகள் நல்லவிதமாக வருகின்றன.
அந்தப் பெண்ணின் வார்த்தையாய்
‘பாலின சமத்துவத்தை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை, மனித உரிமைகள் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் நடத்தினார்கள். பல்வேறு நாளேடுகள், தொலைக்காட்சிகளின் பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பலரும், பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும், அந்தச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எப்படிப்பட்ட எழுத்துகளையும் செய்திகளையும் வெளியிடலாம் என்றும் பொதுப்படையாகப் பேசினார்கள்.
அதற்குப் பல நாட்கள் முன்பாக, மார்ச் 8 மகளிர் தினத்தன்று, பல பத்திரிகைகளிலும் பெண்கள் வேலைக்குப் போவதையும், கல்லூரிக்குச் செல்வதையும், ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றுவதையும் சித்தரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஒரு நாளேட்டின் முகப்புப் பக்கத்தில், ஒரு பெண் சாராயக் கடை வாசலில் நின்றபடி வாயில் பாக்கெட் சரக்கை ஊற்றிக்கொள்கிற படம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு, “இதற்குத்தான் பெண் விடுதலையா” என்ற தலைப்பும் தரப்பட்டிருந்தது. சற்றே கிழிசலான கசங்கிய சட்டை, இடுப்பில் சுற்றிச் சொருகிய சேலை முந்தானை, தலையில் அள்ளிக் கட்டிய கொண்டையுடன், மீன் கூடைகளைக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வண்டியின் அருகில் நின்றவரைப் பார்த்ததுமே, எளியதொரு பாட்டாளி என்று புரிந்துகொள்ள முடிந்தது.
அந்தப் படத்தையும் தலைப்யையும் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் அந்த நாளேட்டின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வருத்தம் தெரிவிக்கக் கோரும் கடிதத்தையும் அளித்துவிட்டுத் திரும்பினார்கள். இரண்டு நாட்கள் கழித்து, “அந்தப் படம் எந்த உள்நோக்கமுமின்றி வெளியிடப்பட்டது. அது சிலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. சில பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கடிதம் கொடுத்துச் சென்றார்கள். ஆனால் அந்தப் பெண்கள் யார் தெரியுமா? எல்லோரும் சுடிதார் போட்ட, பேண்ட், சட்டை அணிந்த, உதட்டில் லிப்ஸ்டிக் பூசிய,, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிய பெண்களாக இருந்தார்கள். படத்தில் இருந்தது போன்ற பெண்கள் யாரும் வரவில்லை,” என்ற வாசகங்களுடன் விளக்கம் வெளியிடப்பட்டது.
கலந்துரையாடலுக்கு அந்த நாளேட்டின் ஆசிரியரும் வந்திருந்தார். அவருக்கு முன்பாகப் பேசுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். மேற்படி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, “ஒருவேளை அந்தப் பெண்ணே வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் என்றெல்லாம் அவர் முழங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டார். மன்னிக்க வேண்டும், இது என்னுடைய வார்த்தை அல்ல, அந்தப் பெண்ணின் வார்த்தை. அவர் நேராக உள்ளே வந்து “ங்கோத்தா, எவன்டா இப்படிப் படம் போட்டவன்” என்று ரகளை செய்திருப்பார். அதைத் தாங்கிக்கொள்ள முடிந்திருக்குமா,” என்று கேட்டேன். சபை அமைதியானது. கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டோமோ, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாமோ என்ற ஒரு நொடிச் சிந்தனை ஏற்பட்டது. அப்போது “ஹியர் ஹியர்” என்ற குரலும் கைதட்டல் ஒலியும் எழுந்தன. யாரென்று எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். பெண் விடுதலை இயக்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சித் தோழருமான மைதிலி சிவராமன்! அவரையடுத்துக் கைதட்டினார் . அறிவியலாளர் மீனா சுவாமிநாதன். பின்னர் அரங்கமே கைதட்டலால் அங்கீகரித்தது. (நிறைவாகப் பேச அழைக்கப்பட்ட அந்த ஆசிரியர், இதற்குள் போகாமல், பாலின சமத்துவக் கருத்துகளைப் பரப்புவதில் எல்லோருமாகச் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்று சுருக்கமாகக் கூறி முடித்துக்கொண்டார்.)
அவையினரின் அந்த அங்கீகாரம் என் பேச்சுக்கு அல்ல, அந்தப் பெண்ணின் அந்த வார்த்தைக்கு. பின்னர் ஊடகங்கள் தொடர்பாகவே எழுதிய ஒரு கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருந்ததும் வாசகர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது. இன்றைக்கு இப்படிப்பட்ட அங்கீகாரங்கள் அதிகரித்து வருகின்றன. புத்தகங்களில், பத்திரிகைகளில், இணையப் பதிப்புகளில் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுவதை அடிக்கடி காண முடிகிறது. இதுவரையில் புறக்கணிக்கப்பட்டு வந்த மக்கள் பிரிவினரின் வலிகளையும் ஆற்றாமைகளையும் ஆவேசங்களையும் உற்று நோக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறியே இந்த மாற்றம். இந்த மாற்றங்களைச் செரித்துக்கொள்ள மாட்டாமல், “இப்படியெல்லாம் கெட்ட வார்த்தைகளைப் போடுகிறார்களே, தமிழ் எழுத்துலகம் ரொம்பவும் தரம் தாழ்ந்துவிட்டது,” என்று புலம்புகிறவர்களும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நோக்கம் முக்கியம்
ஆக, இந்த மாற்றத்தோடு இணைந்துகொண்டு, நல்ல நோக்கத்துடன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுவது கெட்டதல்ல. அடிபட்டவரின் வேதனையை உணரச் செய்யவும், அவமதிக்கப்பட்டவரின் குமுறலைக் கேட்க வைக்கவும், மாற்றங்களுக்கான பாதையில் பயணிக்கத் தூண்டவும் இந்தச் சொற்களை எடுத்துக்கொள்வதுதான் அந்த நல்ல நோக்கம். படிக்கிறவரின் வக்கிர ரசனையைக் கிளறிவிடும் வகையில் எழுதினால் அது கெட்ட நோக்கம்.
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இலக்கியக் கூட்டங்களில் இவ்வாறு பேசுவதைக் கேட்டிருக்கிறேன்: “முற்போக்கு என்றால் என்ன, பிற்போக்கு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். ஒரு பெண்ணின் ஆடைக் கிழிசல் வழியாக அவளுடைய தேகம் தெரிந்தால் அது பிற்போக்கு. இந்தத் தேசம் தெரிந்தால் அது முற்போக்கு.”
இந்தப் புரிதலுடன், சமுதாயமும் வாழ்க்கையும் தெரிந்திடும் வகையில் கெட்ட வார்த்தைகளைக் கையாள்வது முற்போக்கான எழுத்தாக்கம்தான். சக மனிதர்களை இழிவுபடுத்தவும், பெண்ணின் அசைவுகளை வஞ்சகப் பார்வையுடன் பின்தொடரவும் அந்தச் சொற்களைச் செருகுவது வக்கரிப்புதான்.
இதைச் சொல்கிறபோது, கெட்டவார்த்தைகளின் அரசியலின் இன்னொரு பக்கத்தையும் சொல்லிக்காட்ட வேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் பரவலாக வீசப்படும் கெட்ட வார்த்தைகளில் பெரும்பாலானவை பெண்களை மட்டுமே கீழிறக்குவதாக, பெண்ணின் அங்கங்களைக் கூட வசவுக்குரியவையாக இருக்கின்றன. “ஒரு அப்பனுக்குப் பொறந்தவனா இருந்தா,” என்று யாரையோ தாக்குவதில் கூட அவரது அம்மா அவமானப்படுத்தப்படுகிறார். சில சொற்கள் சமூக அடுக்கில் ஒதுக்கப்பட்ட மக்களின் சாதி அடையாளத்துடன் “பயலே” என்று சேர்த்துக் கொட்டப்படும் வார்த்தைகள் அவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்துகின்றன. உடல் ஊனங்களைக் குறிப்பிடும் சொற்களால் பரிகசிப்பது மாற்றுத் திறனாளிகளை மேலும் முடக்குகிறது. நமது பேனா அல்லது விசைப்பலகை யார் பக்கம் என்ற தெளிவான கண்ணோட்டத்துடன் எழுதுவோம்.
“இப்படிப்பட்ட கருத்துகளை நான் 7 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதற்கு மொத்தம் ₹ 3,500 சன்மானம் கிடைத்திருக்கிறது,” என்று சக எழுத்தாளர் ஒருவர் கூறினார். இத்தனை கூட்டங்க்ளில் பேச முடிந்ததா, இவ்வளவு பணம் கிடைத்ததா என்று யோசிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வசனத்தில், தவிர்க்க வேண்டிய சங்கதி ஒன்று இருப்பதை எளிதாக ஊகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
– அ. குமரேசன்