இலக்கியம்தொடர்கள்

கலாச்சாரம், பண்பாடு – எதைப் பின்பற்றுவது, எதைக் கடைப்பிடிப்பது? (சுவையாக எழுதுவது சுகம் – 12) – அ.குமரேசன்

549

சொற்களின் அரசியல் பற்றியே நிறைய சொற்களால் எழுத முடியும். எவ்வளவு சொன்னாலும் பழைய,  பழகிய சொற்களை மாற்றிக்கொள்ள “மறுக்கும் நபர்கள் இருக்கிறார்கள்,  ஆனால்…“  என்று, முந்தைய கட்டுரை முடிகிறது. அந்த வாக்கியத்தில் ஏதாவது துப்புக் கிடைக்கிறதா என்று யோசித்திருப்பீர்கள். அந்த ‘நபர்கள்’ என்ற சொல்தான் துப்பு.

ஒரு விழாவின் அமைப்பாளர் சிறப்பு விருந்தினரை, “இவர் தமிழ் ஆராய்ச்சியில் ஒரு புகழ்பெற்ற நபர்,” என்று அறிமுகப்படுத்துகிறார். “பணமதிப்பு ஒழிக்கப்பட்ட நாளில் ஏடிஎம் கூண்டுகளுக்கு முன்பாக ஏராளமான நபர்கள் காத்திருந்தார்கள்,” என்று செய்திகளில் சொன்னார்கள். இப்படி இந்தச் சொல் வெகு சரளமாகப் புழக்கத்தில் இருக்கிறது. 

இது தமிழ்ச் சொல் அல்ல, அரபு மொழியிலிருந்து வந்தது. அதற்காக மட்டுமின்றி, வேறொரு கண்ணோட்டத்திலும் இதைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். நபர் என்கிறபோது நம்மையறியாமலே, உள்நோக்கம் இல்லாமலே, யாரைப் பற்றிச் சொல்கிறோமோ அவரின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுகிறோம். புகழ்பெற்ற ஒருவரை, அடையாளமற்ற நபர்களில் ஒருவராக்கிவிடுகிறோம். பணமதிப்பொழிப்பின் பொருளாதார அரசியலால் ஏடிஎம் கூண்டுகளுக்கு அலையவிடப்பட்ட எளிய மக்களை நபர்கள் என்று குறிப்பிட்டு மேலுமொரு அடையாளமழிப்பைச் செய்கிறோம். “தமிழ் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற மனிதர்” என்றோ, “புகழ்பெற்ற ஓர் ஆளுமை” என்றோ சிறப்புச் சேர்த்துக் கூறலாமே? “புகழ்பெற்றவர்” என்றும் சுருக்கமாகக் குறிப்பிடலாமே? கூண்டுகளுக்கு முன்பாக நிற்கவிடப்பட்ட ஏராளமான மக்களை, மக்கள் என்றே குறிப்பிட்டு அவர்களுக்கு நாமாவது மரியாதை செய்யலாமே? ‘ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள் என்றாவது சொல்லலாமே?

மாதர் சீற்றத்தால்…

மாற்றிக்கொள்ள மறுக்கப்படும் மேலும் பல சொற்களில் ஒன்று ‘கற்பழிப்பு’. மாதர் இயக்கங்கள் தங்களது அறிக்கைகள், உரைகள், நேரடிச் சந்திப்புகள் வாயிலாக ஊடகவியலாளர்களிடம், அந்தச் சொல்லைப் பயன்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். கற்பு என்பது உடல் சார்ந்ததல்ல, பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல, அதிலும் ‘ரேப்’ செய்யப்பட்ட பெண் ஏதோ மனம் விரும்பி அதை ஏற்றுக்கொண்டவள் போல ‘கற்பிழந்த பெண்’ என்று குறிப்பிடுவது ஆணாதிக்கத் திமிர் என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், வேறு சொற்களால் குறிப்பிட்டால் வாசகர்களுக்குப் புரியாமல் போய்விடும் என்று பல ஊடக நிறுவன நிர்வாகிகள் மாற மறுத்தார்கள், வாசகர்களையும் குறைத்து மதிப்பிட்டார்கள். 

பெண்ணுரிமை அமைப்புகள் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக எழுப்பிய குரலால் அசைவு ஏற்படத் தொடங்கியது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண், பாலியல் பலாத்தகாரம், பாலியல் வன்கொடுமை என்ற சொற்கள் அறிமுகமாகின. பின்னர் படிப்படியாக, வன்புணர்ச்சி, வன்வுணர்வு, வல்லுறவு ஆகிய சொற்கள் வந்தன. இந்தச் சொற்களுக்கு முன்பாக பாலியல் என்று போடப்பட்டது – பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு என்று. உடல் அரிப்புடனும் ஆண் அகந்தையுடனும் தொடர்கிற இந்த வன்மச் செயல்கள் பாலியல் சார்ந்த நிகழ்வைத்தான் குறிப்பிடுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. இன்று வன்புணர்ச்சி, வன்புணர்வு, வல்லுறவு என்ற சொற்கள் பெரிதும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. இப்போதும் மாற மாட்டோமென்று அடம் பிடித்துச் சொற்களைக் கற்பழிக்கிறவர்கள் இருக்கிறார்கள்தான். பெண்களின் எழுச்சி அவர்களையும் மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

பேங்க் நிறுவனத்தை பாங்கு என்றும் பாங்கி என்றும் நீண்ட காலமாகக் குறிப்பிட்டு வந்தார்கள். அப்படிச் சொன்னால்தான் புரியும் என்று வாசகர்கள் மேல் பழி போட்டு வந்தார்கள். அந்த நிறுவனங்களே தங்களின் தமிழ் அறிக்கைகளிலும் ஆவணங்களிலும் வங்கி என்று குறிப்பிடத் தொடங்கின. அதன் பிறகும் கூட பத்திரிகைகளில் பாங்கி என்றே வந்துகொண்டிருந்தது. இப்போது ‘வங்கி’ என மாறிவிட்டது. 

யுத்தம், போர், தந்திரம்

சரியான சொற்களுக்காக மெனக்கிடுவது ஒரு போராட்டம்தான். அதில் தோற்றாலும் கூட சுகமானதுதான். மதுரை நகரில்  ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் ஊழியராக நுழைந்திருந்த தொடக்கக் காலம். ஆவணம் ஒன்றின் தமிழாக்கத்தை, ஆங்கிலப் படியுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதில் சில பத்திகளில் யுத்த தந்திரம், போர்த்தந்திரம் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. அரசியல் வகுப்புகளில் அடிக்கடி கேட்கிற சொற்கள்தான். பல கட்டுரைகளிலும் ஆவணங்களிலும் பார்க்கிற சொற்கள்தான். ஆனாலும் எனக்கு, யுத்தம், போர் என்ற இரண்டுமே ஒரே பொருள் தருகிற சொற்கள்தானே, ஒன்று வடமொழியிலிருந்து வந்தது போர் தமிழிலேயே இருந்துவருவது, ஒரே பொருளுள்ள இரண்டு சொற்களை எதற்காக வேறு வேறு பொருள் தருகிற இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கூடவே, ‘தந்திரம்’ என்ற சொல்லும், ஏதோ  ஏமாற்றுத் திட்டம்  போன்ற பொருளைத் தருகிறதே என்றும் யோசித்தேன்.

ஆசிரியர் கே. முத்தையா அறைக்குச் சென்று அவரிடம் அந்த எண்ணங்களை வெளிப்படுத்தினேன். அவர் புன்னகைத்துக்கொண்டே, “ஆரம்பத்தில் ஸ்ட்ரேட்டஜி, டேக்டிக்ஸ் – இந்த இரண்டு இங்கிலீஷ் வார்த்தைகளையும் மொழிபெயர்த்த தோழர்கள் அன்று அவர்களுக்குத் தெரிந்திருநத அளவில்  இப்படி யுத்த தந்திரம், போர்த்தந்திரம் என்று கொண்டுவந்துவிட்டார்கள். இயக்க நிகழ்ச்சிகளிலெல்லாம் இப்படியே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுப் பழகிவிட்டது. புதிய தலைமுறைகள் பொருத்தமான சொற்களை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அவர்கள் இப்படிச் செய்தார்கள். புதிய சொற்கள் தேவை.  நீங்கள் முயன்று பாருங்களேன்,” என்று கூறினார். அந்த இரண்டு சொற்களுக்கான விளக்கங்களையும் அளித்தார், அது ஒரு சிறிய மொழி வகுப்பாகவும், அரசியல் வகுப்பாகவும் கூட அமைந்தது.

யோசித்து உருவாக்கிய புதிய சொற்களுடன் அவரிடம் மறுபடியும் சென்றேன். “ஸ்ட்ரேட்டஜி – இலக்குத் திட்டம், டேக்டிக்ஸ் – நடைமுறைத் திட்டம்,” என்று வாசித்துக் காட்டினேன். இருக்கையிலிருந்து எழுந்து அப்படியே என்னை அணைத்துக்கொண்டார் கே.எம். உணர்ச்சிவசப்பட்டு நின்றவனிடம்,  “உங்களுடைய எழுத்துகளில் இப்படியே தொடர்ந்து பயன்படுத்துங்கள். உடனே எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். ஆனால் படிப்படியாக மாறும்,” என்றார். அதே நம்பிக்கையுடன், இன்னும் பொருத்தமான சொல்லாக்கங்களைத் தோழர்கள் தருவார்கள் என்ற இலக்குத் திட்டத்துடன், இந்த இரண்டு சொற்களையும் நான் நடைமுறைத் திட்டமாகப் பயன்படுத்தி வருகிறேன்.

கலையும் சாரமும்

இப்படிப்பட்ட சொற்கள் மக்களின் கலாச்சாரத்தோடு கலக்கிறபோது,  பண்பாட்டு வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள கலாச்சாரம், பண்பாடு ஆகிய இரண்டு சொற்களையும் கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழாக்கமாகப் பயன்படுத்துகிறோம். முன்னரே குறிப்பிட்டது போல, கூடியவரையில் எளிய, இனிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது வாசிப்பவர், எழுதுகிறவர் இருவருக்குமே சுகமான அனுபவத்தைத் தரும். அவ்வகையில் ‘கலாச்சார்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் ஒலிப்பாகிய கலாச்சாரம் இங்கே கலந்துவிட்டிருக்கிறது.

“கலை + ஆச்சாரம் இரண்டின் கலவைதான், கலாச்சார் என்று சமஸ்கிருதத்துக்குப் போய், அங்கிருந்து கல்ச்சர் என்று ஆங்கிலத்திற்கும் போனது,  கலாச்சாரம் என்று தமிழுக்கே திரும்பி வந்தது. ஆகவே கலாச்சாரம் எனத்  தொடரலாம்,” என்றொரு கருத்தை இணையவழிக் கலந்துரையாடல் ஒருவர் முன்வைத்தார். ஆனால் கலை என்ற சொல் ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், திரைப்படம் உள்ளிட்ட கலைச் செயல்பாடுகளைக் குறிக்கிறது. கலாச்சாரமோ வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. “நம்ம கலாச்சாரப்படி பொண்டாட்டிதான் புருசன் வீட்டில் குடியேறணும்,” என்று பேசப்படுவதைக் கேட்கிறோம் அல்லவா?

பண்பு என்ற சொல்லை வளர்த்து உருவாக்கப்பட்டது பண்பாடு. குணநலன், தன்மை, இயல்பு, முறை எனப் பல பொருள்களைக் கொண்டது பண்பு. வாழ்க்கை முறை என்ற விளக்கம் இந்தச் சொல்லில் இயல்பாகவே உறைந்திருக்கிறது.

பெண் ஆணின் வீட்டில் புகுவதோ, ஆண் பெண்ணின் வீட்டில் குடியேறுவதோ, இருவருமே தனியாக வீடெடுத்துக் குடிபுகுவதோ அவர்களின் தேவைகளையும் வாய்ப்புகளையும் பொறுத்து அவர்களே சுதந்திரமாக  மேற்கொள்ள வேண்டிய பண்பு. அப்படிப்பட்ட பண்பை மதிப்பதுதான் பண்பாடு. பண்பு என்றாலே நல்லதுதான். கெட்ட பண்பு என்று இருக்க முடியாது. ஆகவே பண்பாடும் நல்லதுதான். எனவே, ஆணாதிக்க சமூகக் கலாச்சாரப்படி மனைவியைக் கணவனின் வீட்டுக்கு அனுப்புகிறவர்கள் அனுப்பிக்கொள்ளட்டும். முற்போக்குப் பண்பாட்டின் படி இணையர்கள் எங்கே வாழ்வது என அவர்களே முடிவு செய்யட்டும். அந்த உரிமையை மதிப்பதே பண்பாடு.

இப்படியொரு சொந்தப் புரிதலோடு, எதிர்க்க  வேண்டியவற்றைக் குறிப்பிட கலாச்சாரம் என்றும், வளர்க்க வேண்டியவற்றைக் குறிப்பிட பண்பாடு என்றும் எழுதுகிற, எனக்கான சொல்லரசியல் ஒன்றைக் கடைப்பிடித்து வருகிறேன். இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்:: “வஞ்சகமான மொழித்திணிப்புக் கலாச்சாரத்தை எதிர்ப்போம், இயற்கையான மொழிக்கலப்புப் பண்பாட்டை ஆதரிப்போம்.” “திருப்பரங்குன்றத்தில் புகுத்தப்படும் வெறுப்பரசியல் கலாச்சாரம் ஒழியட்டும், மக்களிடையே புகட்டப்பட்ட  நல்லிணக்கப் பண்பாடு ஒளிரட்டும்.”

இவ்வாறான சொல்லரசியலை நான் கடைப்பிடித்து வருவதைப் பகிர்வதன் நோக்கம் எல்லோரும் அதையே பின்பற்ற  அறிவுறுத்துவதல்ல; சொற்களின் அரசியல் என ஒன்றிருப்பதைப் புரிந்துகொள்ளக் கேட்டுக்கொள்வதுதான். சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவு, அறிவியல் மனப்பாங்கு, மனித உரிமை, மக்கள் நல்லிணக்கம் இன்னபிற முற்போக்கான லட்சியப் பயணங்களில் துணைவரும் சொற்களை எல்லோருமாகப் படைப்போம், பயன்படுத்துவோம்.

அதென்ன கடைப்பிடித்து வருவது? அதென்ன பின்பற்றுவது? மேலே உள்ள பத்தியில் இந்த இரண்டு சொற்களும் உள்ளன. ஏற்கெனவே ஒருவர் சென்ற பாதையில் மற்றவர்கள் அவரைப் பின்பற்றிச் செல்லலாம். இங்கே பாதை என்ற இடத்தில் கொள்கை, வழிகாட்டல், ஆலோசனை, அறிவுரை என்ற சொற்களையும் சூழலுக்குப் பொருத்தமாகப் போட்டுக்கொள்ளலாம். ஒருவர் சொன்னதற்காக அல்லாமல், குறிப்பிட்ட கொள்கை அல்லது வழிமுறைதான் நியாயமானது என்று நமக்குள் ஆராய்ந்து உறுதியான முடிவுக்கு வந்து அதைக் கைக்கொள்வது கடைப்பிடிப்பதாகும். பொதுவாகப் பார்த்தால் பெரிய வேறுபாடு எதுவுமில்லை, புரிந்துகொள்வதில் குழப்பம் ஏதுமில்லை. ஆயினும், சொற்களின் நுட்பமான கூறுகளை உள்வாங்கி வெளிப்படுத்துகையில் அந்த எழுத்தாக்கம் நயமாக அமையும்.

சொற்களின் அரசியல் பற்றிய முந்தைய கட்டுரையைப் படித்த ஒரு அன்பர், “முன்பெல்லாம் எழுத்துகளில் ஒரு  நாகரிகம் இருந்தது. இப்போது சில பேர் கதைகளிலும் கட்டுரைகளிலும் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பற்றி எழுதுங்கள்,” என்று வாட்ஸ்ஆப்  பண்ணியிருக்கிறார். அடுத்து அது பற்றி எழுதிவிட வேண்டியதுதான். 

– அ. குமரேசன்