– களப்பிரன்
ஞானவாபி மசூதியும் அதன் மீதான புனைவும்
1991 ஆம் ஆண்டில், சில இந்துத்துவ அமைப்புகள் காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் பெரும்பகுதி விஸ்வேஷ்வரின் கோவிலின் மீது கட்டப்பட்டதாகவும், பல ‘கண்ணுக்குத் தெரியும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத’ தெய்வச் சிலைகள் அந்த மசூதி வளாகத்தில் இருப்பதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தனர். அங்கிருந்த விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி ஔரங்கசீப் ஆட்சியின்போது அழிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்தனர். இதில், அந்தப் பகுதிகளை இந்து தெய்வத்தின் சொத்தாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், கோவிலை புனரமைத்து வழிபட இந்துக்களுக்கு உரிமை உண்டு என்று கோரிவந்தனர். மசூதியில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
சட்டம் என்ற கவசம்
ஏற்கனவே 1949 முதல் பாபர் மசூதி இருந்த இடத்தை இராமர் பிறந்த இடம் என்று திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட அமைப்புகளால் உருவாக்கப்பட்ட சர்ச்சையால் நாடு கொந்தளிப்பில் இருந்த நேரமது. ஆகவே இந்தச் சூழலில் இதுபோல் மேலும் சில பிரச்சனைகளை நாடு சந்திக்கக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அன்றைய அரசு 18.09.1991 அன்று, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாஜக மற்றும் சிவசேனாவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடைசெய்யும் நோக்கத்துடனும், எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் “மதப் பண்பு” 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி எப்படி இருந்ததோ அதைப் போலவே பராமரிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடன் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதில் பாபர் மசூதி இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அதற்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட்டது. அதோடு இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இப்படி ஒரு சட்டம் மதச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் போதே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்துத்துவ அமைப்புகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதோடு, நீதிமன்றங்களையும் தங்கள் தேவைக்கு எப்படியெல்லாம் வளைத்து பயன்படுத்தி வந்தனர் என்பதை ஞானவாபி மசூதியின் இந்த ஒரு வழக்கை கால வரிசையோடு பார்த்தாலே புரியும். இந்தச் சட்டப்பாதுகாப்பு இது நாள் வரை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு பொய்களை பரப்பியிருப்பார்கள் என்றே சொல்ல இயலாது.
ஞானவாபி மசூதி வழக்கின் கதை
பண்டிட் சோம்நாத் வியாஸ், டாக்டர் ராம்ரங் சர்மா மற்றும் பலர் வாரணாசி 15.10.1991 அன்று, மாவட்ட நீதிமன்றத்தில் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு புதிய கோயிலைக் கட்டுவதற்கும், வழிபடுவதற்கான உரிமைக்கும் வழக்குத் தொடர்ந்தனர். 1998ல் முதன் முறையாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் விழித்துக்கொண்ட இஸ்லாமியர்கள், அவ்வழக்கை எதிர்த்து அதே 1998ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், அஞ்சுமன் இன்சானியா குழு மற்றும் உத்தரப் பிரதேச சன்னி வக்ஃப் வாரியம் சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே இவ்வழக்கை இந்துத்துவ அமைப்புகளின் சார்பாக தொடுத்தவர்களில் ஒருவரான பண்டிட் சோம்நாத் வியாஸ் 7.10.2000 அன்று இறந்துவிட்டார். அதோடு அவ்வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட காலம் பதுங்கியே இருந்தது. 2004ல் பாஜக அதிகாரத்திலிருந்து துடைத்தெறியப்பட்டது.
2014ல் மிருக பலத்தோடு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் தங்கள் கரங்களை விரித்துவந்த மதவாதிகள், உத்தரப் பிரதேசத்தில் 19.10.2017ல் யோகி தலைமையில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பிறகு மேலும் உக்கிரமாக செயல்படத் தொடங்கினர். அடுத்த ஒராண்டில் இவ்வழக்கில் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவரை 11.10.2018 அன்று வழக்கறிஞராக நியமித்தனர். அதன் பின்னர்தான் வழக்கு இந்துத்துவ அமைப்புகளுக்கு சாதகமாக வேகமெடுக்கத் தொடங்கியது. ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் வீடியோ எடுத்து தொல்லியல் களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று 08.04.2021 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் சென்ற இஸ்லாமியர்கள் மனுவில், இவ்வழக்கை நீண்ட அனுபவம் வாய்ந்த வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க வேண்டும் என 20.05.2022 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தொடர்ந்து பள்ளிவாசலில் தொழுகையை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதோடு 1991ஆம் ஆண்டில் வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மைகளை ஆய்வு செய்ய தடுக்கவில்லை என்ற தேவையற்ற தனது கருத்து ஒன்றை உச்சநீதிமன்றம் உதிர்த்தது.
உச்சநீதிமன்றம் கொடுத்த கிரீன் சிக்னல் கீழமை நீதிமன்றங்களில் அதன்பின் வேலை செய்யத் தொடங்கியது. ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் மாதா சிருங்கார் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்யவும், வழிபடவும், பூஜைகள் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி 5 இந்துப் பெண்கள் 20.05.2022 அன்று தொடர்ந்த வழக்கை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கத் தகுதி உடையதே எனத் தீர்ப்பு வழங்கியது. அதோடு அலகாபாத் உயர் நீதிமன்றம், 19.10.2022 அன்று ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் இந்தியத் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வுகள் குறித்த காணொலிகள் மற்றும் புகைப்படங்களின் அசல் பதிவுகளின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஞானவாபி பள்ளிவாசலில் தொழுகைக்கு முன்பு கை, கால்களை கழுவும் நீர் ஊற்றை, சிவலிங்கம் என்று தவறாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அவ்விடம் மூடி முத்திரைப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகம் மாற்று வசதியை ஏற்படுத்தித் தர ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு இடையில் அவசர அவசரமாக 12.05.2023 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி பள்ளிவாசலில் சிவலிங்கம் அமைப்பு இருப்பதாக கருதப்படும் அமைப்பை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்து அறிக்கை அனுப்ப இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அடுத்த ஆறு நாட்களில் உச்சநீதிமன்றம் சென்ற பள்ளிவாசல் குழு அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு 18.05.2023 அன்று இடைக்கால தடை பெற்றது. அடுத்த 13 நாளில் 31.05.2023 அன்று ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் உள்ள சிருங்கார கௌரி உள்ளிட்ட தெய்வத் திருமேனிகளை இந்துக்கள் அன்றாடம் வழிபட அனுமதி கோரிய வழக்கில், முஸ்லிம் தரப்பின் ஆட்சேபனை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஞானவாபி பள்ளிவாசலில் இருந்த நீர் ஊற்றை சிவலிங்கம் என்று பரப்பப்பட்ட பொய் செய்தியை ஆதாரமாகக் கொண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆய்வு செய்துகொண்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து பள்ளிவாசல் நிர்வாகம் உச்சநீதி மன்றத்தில் 24.07.2023 அன்று தொடர்ந்த வழக்கில், 26.07.2023 வரை ஆய்வை நிறுத்த ஆணையிட்டதுடன், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அடுத்த ஒரு வாரத்தில் 03.08.2023 அன்று ஞானவாபி பள்ளிவாசலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மீண்டும் ஒரு மாதம் கழித்து 02.09.2023 அன்று ஞானவாபி பள்ளிவாசலில் மேலும் ஆய்வுத் தொடர, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேலும் 8 வாரங்களுக்கு அனுமதி நீட்டிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. உயர்நீதிமன்றம் உடனே அனுமதி வழங்கியது. ஆனால் அதே வேளையில் 19.12.2023 அன்று ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் அமைந்த சிருங்கார கௌரி கோவிலை புனரமைக்க அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 5 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வாரணாசி நீதிமன்றத்தில் இது குறித்த சிவில் வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் இவ்வளவு வேகமாக கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி இரண்டு ஆண்டுகளில் இறுதித் தீர்ப்பு வரை சென்றுள்ள ஒரு வழக்காவது உள்ளதா என்றால் ஒன்றைக்கூட சொல்லிவிட முடியாது.
மடைமாற்றும் அரசியல் தொடர்கிறது
பாஜக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்கவே இது போன்ற தேவையற்ற மதம் சார்ந்த உரையாடல்களை அரசியலின் மையம் போல் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. முதலில் பாபர் மசூதி இடம் என்று பேசி வந்த நம்மை, அதன் பின் சர்ச்சைக்குரிய இடம் என்று பேசவைத்தார்கள், முடிவில் அது இராம ஜென்ம பூமி என்று சொல்ல வைத்துவிட்டார்கள். அதே போல் ஞானவாபி மசூதியையும் விஸ்வநாதர் கோவிலின் புதுப்பிக்கப் பட்ட இடம் என்று சொல்ல வைப்பார்கள். இவர்களின் திட்டம் இதோடு முடியாது. ஞானவாபியை தொடர்ந்து, மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததாகக் கூறப்படும் கிருஷ்ண ஜென்மஸ்தான்- ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் ஷாஹிஜமா மசூதி- ஹரிஹர ஆலயம், டில்லியில் கவாத் உல்-இஸ்லாம் மசூதி-ரிஷப கீர்த்தங்கரர் ஆலயம், மத்திய பிரதேசம் தாரில் உள்ள கமால் மௌலானா மசூதி பூஜை சாலை கோயில், அஜ்மீர் ஷெரிப் தர்கா சங்கட மோட்ச மகா தேவர் கோயில், உத்தரப் பிரதேசத்தில் புதாவுனில் உள்ள உள்ள சாஹிஜமா மசூதி போன்றவை உள்ளன. இந்தப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்ல வைப்பது தான் இவர்களை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் செய்யும் மடைமாற்று அரசியல்.
உச்சநீதிமன்றம் – தேவை உறுதி
இதற்கு இடையே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்ய வலியுறுத்திச் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சில இந்து அமைப்புகளும், இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடுத்திருந்தன. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களை இணைத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தில் கோரி இணைந்துகொண்டனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட சிறப்பு அமர்வு, சர்ச்சைக்குரிய இந்தப் பிரச்சனைகள் தொடர்பான எல்லா வழக்குகளையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் வழிபாடு மற்றும் சர்ச்சைகள் உள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளையும் இறுதி தீர்ப்புக்களையும் பிறப்பிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை நாட்டின் அமைதியை விரும்பும் ஒவ்வொரு வரும் வரவேற்கிறார்கள்.
கோவிலுக்கு அடியில் தோண்டலாமா..?
”என்ன சார் ஓவரா நியாயம் பேசுரீங்க. ஒரு காலத்துல இஸ்லாமியர் ஆட்சியில கோவிலை இடுச்சு மசூதி கட்டினாங்க. இப்போ இந்துக்கள் ஆட்சி. கோவில் இருந்த இடத்தை மட்டும் தானே கேட்கிறோம். எல்லா மசூதியையுமா கேடுகிறோம்” என்று வெள்ளந்தியாக ஒரு குரல் நம் மத்தியில் எழும். அவர்களுக்கு நாம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்.
முதல் கேள்வி: இந்தியாவில் கோவில்களை அதிகம் இடித்தது இஸ்லாமிய மன்னர்களா? இந்து மன்னர்களா?
இரண்டாவது கேள்வி: மசூதிக்குக் கீழ் கோவில் இருக்குமென்றால் கோவிலுக்குக் கீழ் என்ன இருந்தது?
இந்த இரண்டிற்கும் பதில் தெரிந்துகொள்ள கொஞ்சம் இந்தியாவின் உண்மையான அரசியல், மற்றும் மத வரலாற்றை படிக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ”ஆயிரம் கோவில்களின் மாநகரம்” என்றே அதற்கு பெயர் உண்டு. ஆனால் கி.பி.640ல் காஞ்சிக்கு வந்த சீனப்பயணி யுவான்சுவாங், தனது பயணக் குறிப்பில் காஞ்சியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும், இந்நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த மடங்கள் இருந்தன, அவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறார். அதோடு எண்பதுக்கும் மேற்பட்ட சமண மடங்களும் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது, காஞ்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் மட்டுமே உள்ளன. காஞ்சியில் வாழ்ந்த பௌத்த மடங்களோ தூண்களோ, பௌத்த துறவிகளோ எங்கும் இல்லையே. அனைத்து பௌத்த அடையாளங்களும் இந்துக்களால் அழிக்கப்பட்டது என்று இப்போது சொல்ல முடியுமா. அதற்காக இந்துக் கோவில்களை தோண்டிப் பார்த்துவிட்டு பௌத்த சமணர்களுக்கு அக்கோவில்களை வழங்கிவிடுவோமா. காஞ்சிபுரம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பாலான சைவ வைணவக் கோவில்கள் இங்கிருந்த பூர்வ சமய வழிபாட்டுத் தலங்களின் மீது அதை அழித்து எழுப்பப்பட்டது என்று நூற்றுக்கணக்கான ஆய்வுகள் சான்றுகளோடு உள்ளன.
அதோடு முதல் கேள்விக்கான பதிலாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில் அழிப்பில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களை காட்டிலும் இந்து மன்னர்களே அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கோவில்கள் அழிக்கப்பட்டதற்கு மதவிரோதம் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு நாட்டின் பெரும் செல்வங்கள் அவ்வூரில் உள்ள கோவில்களில் வைத்தே பாதுகாத்தார்கள். ஆகவே படையெடுத்து வரும் மன்னன் அவன் இந்துவாக இருந்தாலும் கோவிலை அழித்தால் தான் அவனால் அந்நாட்டின் செல்வத்தை கொண்டு செல்ல முடியும் என்ரால் அவன் அவ்வூரில் உள்ள பெரும் கோவில்களை அழிக்கவே செய்தான். அதன் மூலம் கொள்ளையில் ஈடுபட்டார்கள். இவ்வாறு பல நூறு கோவில்களை இந்து மன்னர்களே அழித்தார்கள் என்கிறது வரலாறு.
ஆகவே இனியேனும் மசூதியைத் தோண்டுவோம், கோவிலைத் தோண்டுவோம் என்று பேசிக்கொண்டிருக்காமல், இந்திய மக்களுடைய மனங்களின் அடியாழத்தில் இருக்கும் ஈரமான அன்பைத் தோண்டி எடுப்போம். சமத்துவம், சகோதரத்துவம் எனும் இந்திய மரபின் தத்துவத்தைத் தோண்டி எடுப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தின் வேரான மதச்சார்பின்மையைத் தோண்டி எடுத்து நமது அடையாளமாக உயர்த்திப் பிடிப்போம்.
– களப்பிரன்
அவசியமான அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. கட்டுரையாளரின் மெனக்கெடலுக்கும் மாற்றுக்கும் வாழ்த்துகள்
தோழர் களப்பிரனின் “கோவிலுக்கு அடியில்
என்ன இருந்தது” கட்டுரை ஓர் ஒப்பு உயர்வற்றச்
சிறப்பான, மேலும் சிந்தனையைக் தூண்டும்
கட்டுரை. வாழ்த்துகள் தோழர் களப்பிரன்.
கே.ஆர்.பன்னீர் செல்வம்
94431 40199